Thursday, November 11, 2021

21ம் நூற்றாண்டின் திறன் மேம்பாட்டிற்கான கல்வி

 


முன்னுரை

 

ஆதி மனிதம் உருவானது பல இலட்சங்கள் ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் குரங்கிலிருந்து முதன் முதலில் தோன்றியது மூதாய் என்று நம் அறிவியல் அருதியிட்டுக்கூறும் பெண் தான் அவள். மனிதரின் பிறப்பு குறித்து திருவாசகம் கூறும் கருத்துகள்,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

என்கிறது சிவபுராணம்.

ஆதியில் பெண்ணே தலைமை வகிப்பவளாகவும், வேட்டையாடி உணவைக் கொண்டுவருபவளாகவும், சமுதாயத்தை வழிநடாத்துபவளாகவும் இருந்தாள் என்கிறது வரலாறு. மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதே வாழ்வியல் மரபுகள் போன்றவை. இவைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதைவுகள் அனைத்தும் வரலாறாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் அவைகள் வாழ்வியலின் புறச்சின்னங்களாக மாறிவிடுகின்றன, இந்த புறச்சின்னங்களின் நீண்ட நெடிய வரலாறு மனித குலத்தின் உடல் வளர்ச்சி, உளவியல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியனவற்றை பல பிரிவுகளைத் தொகுத்து ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு ஒரு தொடர் சங்கிலியாகக் கடத்திச் செல்கிறது.

உலகின் பழமையான சமுதாயங்களில் ஒவ்வொரு தலைமுறையாக தொடரப்பட்டு புதிய தலைமுறைகள் பழமையான கருத்துகளை பாதுகாத்து பயன்படுத்தி வருகிறது. தமிழ் சமுதாயம் போன்ற ஆதி சமூகங்கள் பெண்வழி சமூகங்களாக இருந்த காரணத்தால் பெண்களின் உடல் வளர்ச்சி, உளவியல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றை பல பிரிவுகளாக தொகுத்தும் பகுத்தும் வைத்துள்ளனர். மற்றைய ஆண்வழி சமுதாயங்கள், அது போலவே ஆண்களுக்கு முதன்மையளித்து அவர்களின் உடல் வளர்ச்சி, உளவியல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி போன்று பகுத்து வைத்துள்ளனர்.

பெண்களுக்கான எழுவகைப் பருவப் பெயர்களான, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிகை போன்றவற்றின் அடிப்படையிலேயே பெண்ணியம் வரையறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண் நெறிமுறைப்படுத்தப்பட்ட, அந்தந்த பருவத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வியலை அமைத்துக்கொண்டு அதற்கேற்றவாறே செயல்படவேண்டும். உலகளாவிய பெண்ணியத்திற்கும், இந்திய – குறிப்பாக தமிழ் பெண்ணியத்திற்கும் வாழ்வியல்  நடைமுறைகளிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

அச்சமும் நாணமும் மடனும் முந்தாறுதல்

நிச்சமும் பெண்பாற்குரிய என்ப - என்று தலைமகளுக்குரிய தனி

இலக்கணமாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம், உணவுத் தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மனித குழுக்கள், போகிற போக்கில் ஆங்காங்கே  தங்கி விவசாயம், கருவிகளை உற்பத்தி செய்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு ஆங்காங்கே நதிக்கரைகளில் தங்கிவிட்டனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் காலநிலை, உணவு உள்ளிட்ட புறக்காரணிகள் அவர்களுக்குத் தனித்த அடையாளங்களை உருவாக்கியதோடு அவர்கள் உருவாக்கிய மொழியும் இணைந்த வகையில் தனித்த இனமாக உருவாகினர்.

 

2000 ஆண்டுகட்கு முன்னர் நம் பழந்தமிழ் இலக்கியமான புறநானூறு காட்டும், தமிழனின் வாழ்வியல் நெறிமுறைகள் இதோ ..

 

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் 

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

 

இளமையில் கல் என்கிறது ஆத்திச்சூடி.

 

கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே,

 

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர்

என்கிறது வெற்றிவேற்கை.

இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் தொன்மையான இந்தியாவின் தென்புல, வடபுல சமுதாயங்களில் வழக்கில் இருந்த கல்வி அடிப்படையிலான திறன் மேம்பாட்டு வளங்கள், பயிற்சிக் களங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அளிப்பதே.

மேலைநாட்டின் திறன் மேம்பாட்டு கல்வி

 

மேலைநாட்டில் கல்வி பல நூற்றாண்டுகளாக ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதி காலங்களில், கற்பித்தல் முக்கியமாக விவிலிய நூலை வாசிப்பதற்காக மத குருமார்ள், தீர்க்கதரிசிகள் போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டு, அதுவும் மேட்டுக்குடி மக்கள், செல்வந்தர்களின் குழந்தைகள் மட்டுமே கற்பிக்கப்பட்டனர். தலைவர்களாகவோ, தொழிலதிபர்களோ ஆவது எப்படி என்பதையும், தங்களின் முறை வரும்போது அதனை எப்படி எதிர்கொள்வது என்பதையும் கற்றுக் கொடுப்பார்கள். இறுதியில், ரோமன் கத்தோலிக்க திருச்சபை பிரபுக்களின் குழந்தைகளுக்கு கற்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.த்தகைய கற்றல் மையங்களில் சில இன்றும் உள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தமது முதல் கல்லூரியான செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியை 1284 இல் நிறுவியது.

 

இருப்பினும் சமய நிறுவனங்கள் சாதாரணமான குழந்தைகளுக்கான பள்ளிகளை அமைத்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே சேர்ந்து கொண்டனர். 1880 ஆம் ஆண்டு வரை 5 முதல் 10 வயது குழந்தைகளுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக இந்த நிலை உயர்ந்து 2015இல் 18 வயது வரை கல்வி கட்டாயமாக்கப்பட்டது.

 

பின்னர் இது சமயப் பரப்புரையாக மாற்றம் பெற்று விவிலியக் கருத்துகளை பரப்புவதற்காக ரோமன் கத்தோலிக்க திருச்சபை போன்ற அமைப்புகள் குருமார்களை உருவாக்கி உலகின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 

 கல்வியின் பரிணாமம் என்றால், அது 1836ஆம் ஆண்டில் முறையான பள்ளிக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. இது மேலைநாட்டில் கல்வி வளர்ச்சியின் தொடக்கமாகும். 1856 வாக்கில், தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பள்ளிகளுக்கு மானிய உதவி வழங்குவதற்கான பொறுப்பை வர்த்தக வாரியத்தின் அறிவியல் மற்றும் கலைத்துறை பெற்றுள்ளது. கல்வியின் முன்னேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை மெதுவாக தொடர்ந்தது. அந்த நேரத்தில்  பகல் பள்ளிகள், இரவு பள்ளிகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அமைந்தன. 1902களில் கல்விக்கான பொறுப்பு உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், வணிகக் கல்விப் பள்ளிகள் மேலைநாட்டின் கல்வி முறைமையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட ஆரம்பித்.

இங்கிலாந்தில் விக்டோரியா பேரரசி வந்த பிறகு மறுமலர்ச்சி ஏற்பட்டது.  இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.

 

பிரித்தானிய காலனித்துவவாதிகள் பின்னர் பிரித்தானிய முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையில் ஆங்கிலத்தை கற்பிக்கும் மொழியாக அறிமுகப்படுத்தினர். ஐரோப்பிய அறிவியல் மற்றும் இலக்கியங்களை பரப்பவும், விசுவாசமான ஆங்கிலம் பேசும் பணியாளர்களை வளர்க்கவும் முயன்றது. முக்கியமாக இந்தியாவின் உயர் வகுப்பினரிடமிருந்து அதன் காலனியை நிர்வகிக்க ஆட்சேர்ப்பும் செய்யப்பட்டது. பிரித்தானிய பாடத்திட்டங்களைக் கற்பிக்கும் ஆங்கில மொழிப் பள்ளிகளுக்கு ஆதரவாக பாரபட்சமின்றி நிதிகளை வழங்கி ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கல்வியின் வடிவத்தை மாற்றியிருந்தனர். ஆனாலும் சுதந்திரத்தின் போது 80 சதவிகிதம் முதல் 90 சதவிகித மக்கள் ஆங்கில கல்வியறிவற்றவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் இந்தியா முழுவதும் கல்வி  நிறுவனங்கள் விரைவாகப் பெருகியது. 1950ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் அரசியலமைப்பு, 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து இன்றுவரை கல்விக்கான மகத்தான முன்னேற்றம் நடந்து வருகிறது.

இந்தியாவில் வடபுலத்தில் திறன்சார் மேம்பாட்டுக் கல்வி

 

ஆரம்ப காலங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள பாறை ஓவியங்கள், போன்றவைகள் உள்ளன. கற்றல் வரலாறு தோற்றத்தின் சான்றுகளாக தொன்றுதொட்டு வரும் நம் பாரம்பரியமான வாய்வழி கதைகளும், பதிவுகளும் உள்ளன.  இன்றைய கல்வி முறை பாடத்திட்டங்களில் மதிப்பீடு நடைமுறைகளும் உள்ளன. ஆனால் ஆதி காலத்தில் எப்படி இருந்திருக்கும்?

 

ஆரம்ப காலத்திலிருந்து வடபுலத்தில், தென்புலத்தில் உள்ளவை போன்று வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகொண்ட  பகுதிகள் அல்லாமல், பெரும்பாலும் சமவெளிப் பகுதிகளாகவே உள்ளன. பல்வேறு  பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவின் சில பகுதிகளுக்கு வரத் தொடங்கினர். இந்தியா அவர்களுக்கு ஒரு அதிசய நிலமாக இருந்தது!  இந்தியாவின் புகழ், அதன், செல்வம், மதங்கள், தத்துவங்கள், கலை, கட்டிடக்கலை போன்றவற்றால் உலகளவில் பரவியிருந்தது. அது மட்டுமன்றி இந்தியாவின் தனிப்பட்ட கல்வி நடைமுறைகளும் தொலைதூரம் வரை பரவியிருந்தன. புத்தம் கடல் தாண்டி பரவி அனைத்து மக்களையும் ஒன்றிணையச் செய்தது. சமசுகிருதம் தேவமொழியாக பரப்புரை செய்யப்பட்டது.

 

ஆதிகால கல்வி முறை அறிவு, மரபுகள், நடைமுறைகள் போன்றவைகள் மனித நேயத்தை  வழிகாட்டவும், ஊக்குவிக்கவும் ஆதாரமாகக் கருதப்பட்டன. இந்த முறையின் சிறப்பு அம்சங்கள் என்று எடுத்துக் கொண்டால், ரிக்வேத காலத்திலிருந்து, வடபுல  கல்வி முறை உருவாகி, து தனி நபரின்  அகம், புறம் சார்ந்த முழுமையான  வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. இந்த அமைப்பு தார்மீக, உடல், ஆன்மீகம்,  அறிவு ஆகிய வாழ்க்கையின் அம்சங்களில் கவனம் செலுத்தியது. இது பணிவு, உண்மைத்தன்மை, ஒழுக்கம், தன்னம்பிக்கை, அனைத்து படைப்புகளுக்கும் மரியாதை போன்றவற்றின் மதிப்புகளை வலியுறுத்தியது. மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான சமநிலையைப் பாராட்ட மாணவர்கள் கற்பிக்கப்பட்டனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த கல்வி முறை கற்றல், உடல் வளர்ச்சி ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தியது. அதாவது ஆரோக்கியமான மனதிற்கும், ஆரோக்கியமான உடலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் கல்வி நடைமுறைக்கு ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

 

“இங்குக் கூறிய வித்தைகள் கலைகள் என்ற பாகுபாட்டின்படித் தென்னாட்டு மொழிகள் ஆகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற திராவிட மொழிகளில் பழங்காலத்து ஏட்டுச்சுவடிகள் காணப்படவில்லை. இம்மொழிகளிற் காணும் பழஞ்சுவடிகள் பெரும்பாலும் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், சோதிடம், சமய சாஸ்திரம், காவியப் பிரபந்தங்கள் என்ற பகுப்பு உடையனவாகவே உள்ளன. இப்பாகுபாட்டுடன் நம் தமிழ் மொழிக்குரிய பழைய ஏட்டுச் சுவடிகள் நம்நாட்டுப் பழஞ்சுவடி நூல் நிலையங்களில் ஏறத்தாழ ஆறாயிரமே உள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இத்தொகை இதனினும் சற்று குறைவேயாகும். நம் தமிழ் மொழியில் ஒரே வழி சிற்ப நூல், மனை நூல், கிணற்று நூல், கணிதம் என்பன கேட்கப்படினும் பொதுக் கலை நூல் ஆகிய ‘தோணி செய்தல்’ என்பது வடமொழியுட்போல இதுவரை தமிழின்கண் இருந்த செய்தி கேள்வியில் எய்தியது இல்லை.” – கப்பல் சாஸ்திரம் எனும் பழஞ்சுவடிச் செய்தி கூறுவதும் கவனம் கொள்ளத்தக்கது.

 

வர்ணாசர தர்மம்:

வேதாந்தக் காலத்திற்குப்பின் மனிதனின் வாழ்க்கை நிலை நான்காகப் பிரிக்கப்பட்டது.

7 - 25 வயது - பிரம்மச்சர்யம்,

25 - 50 வயது - கிரகஸ்தம்,

50 முதல் வயது முதல் ஒய்வு காலம்- வனப் பிரஸ்தம் (காடுறை வாழ்வு),

அதன் பின் வாழ்பவர்கள் துறவறம் எனும் சந்நியாச வாழ்க்கை மேற்கொள்ளலாம். துறவறம் கட்டாயமில்லை.

கைவினைஞர் குழுக்கள் கைவினைத் திறன்களைப் பரப்பியதோடு உழைப்பாளர்கள், மேல் சாதியினர் இருவரும் தங்கள் வாய்வழி மரபுகளை தங்கள் தலைமுறையினருக்குப் பரவச் செய்தர். இருப்பினும், கடைநிலை  சாதியினர் என்று கருதப்பட்டவர்களுக்கு கல்வி கற்றல் தடை செய்யப்பட்டது. அதே நேரத்தில் பெண்களின் கல்வி பெரும்பாலும் முறைசாரா கல்வியாக மாறியது.

 

32 வித்தைகள்

 

உலக மாந்தர் வாழ்வில் அறிய வேண்டியவைகள் அளவில்லாதன எனினும் முக்கியமாகக் கற்க வேண்டியது முப்பத்திரண்டு வித்தைகளும், அறுபத்து நான்கு கலைகளும் என்கிறது சுக்கிர நீதி எனும் பழமையான நூல். எந்தக் காரியம் சொல்லளவிலும் முற்றிலும் நன்கு நிறைவேற்றத்தக்கதோ அது வித்தை என்றும், எக்காரியம் பேசும் ஆற்றல் இல்லாத ஊமையென்றாலும் நிறைவேற்றத் தக்கதாக உள்ளதோ அது கலை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வித்தைகளை விரித்துக் கூற வேண்டுமென்றால், அவை இருக்கு முதலிய நான்கு வேதங்கள், ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தருவவேதம், தந்திரங்கள் ஆகிய உப வேதங்கள் நான்கு, சிக்கை, வியாகரணம், கற்பம், நிருக்தம், சோதிடம், சந்தசு ஆகிய வேதாங்கங்கள் ஆறு, மீமாஞ்சை, தருக்கம், சாங்கியம், வேதாந்தம், யோகம், இதிகாசம், புராணம், தருமசாத்திரம், நாத்திகம், அர்த்தசாத்திரம், காமசாத்திரம், சிற்பம், அலங்காரம், காவியம், தேசபாசை, அவசரோக்தி (அமயச்சொல்), யவனமதம், ஒப்புறவறங்கள் ஆகிய பதினெட்டுடன் சேர முப்பத்திரண்டு வித்தைகள் என்கிறது.

 

64 கலைகள்

 

ஆயகலைக ளறுபத்து நாங்கினையும்

வேய அறிவித்த யென்னம்மை

தூய உருப்பளிங்கு வாராமல் உள்ளத்தினுள்ளே

இருப்பளிங்கு வாரா திடர்.

என்கிறது சரசுவதி அந்தாதி

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்பதில், கீதம், வாத்தியம், நிருத்தம் முதலிய காந்தருவக் கலைகள் ஏழும், ஆயுர்வேதக் கலைகள் பத்தும், தநுர்வேதக் கலைகள் ஐந்தும், தந்திரக் கலை ஒன்றும் ஆக, இருபத்துமூன்று கலைகளின் தன்மை என்பதோடு அனைத்து மக்களும் கைக்கொள்வதற்கு தோதான கலைகளாக நாற்பத்தியொரு கலைகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இவற்றுள் தேர்செலுத்துதல், யானை, குதிரை நடை கற்பித்தல், மண், மரம், கல், பொன், வெள்ளிப்பாண்டம் செய்தல், ஓவியம் வரைதல், ஊருணி, வாவிமாளிகை சமைத்தல், நாழிகை வட்டில் கருவி செயல், மிகை, குறை, சமன்விகற்ப வண்ணம் ஆடைக்கு ஏற்றல், நீர் நெருப்புக் காற்றுச் சேர்க்கை, தடைப்படுத்தல், கருவித்தொழில் இவைகளை விவரித்து முப்பத்துநான்காவது கலை வகையாகத் தோணி தேர் முதலிய செய்தல் ஒரு கலை என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தென்புலக் கல்வி

 

வரலாற்று ஆசிரியர்களால் வரையறுத்துக் கூறமுடியாத தொல் பழங்காலம் முதல் தென்னாட்டில் வாழ்ந்து வரும் இனத்தவர் தமிழர்கள். மனித நாகரிகத்தின் முதல்படியென வரலாற்று ஆய்வாளர்களால் கணக்கிடப்படும் கற்காலத்திலேயே தென்னகம் தமிழர் தாயகமாக இருந்ததை வரலாற்று வல்லுநர்கள் பல்வேறு சான்றுகளால் நிலைநாட்டி உள்ளனர். இனக்குழுச் சமுதாயமாக வளர்ந்து வீரயுகக் காலத்தையும் தன்பால் கொண்டு பின்னர் அரசுகளையும் தென்னக மண்ணில் உருவாக்கிவர்கள் தமிழர்கள். நாட்டமைப்பு, உழவு, வாணிபம், தொழில், கல்வி என இன்ன பிறவற்றிலும் முன்னேற்றப் பாதையில் தமிழினம் நடைபெற்றதை இலக்கியம் உள்ளிட்டச் சான்றுகள் நிறுவுகின்றன. தொழில் அடிப்படையிலும் நில அமைப்பின் அடிப்படையில் வேட்டுவர், ஆயர், உழவர், வணிகர், பரணர், கொல்லர் போன்ற குலங்கள் நிலவியிருந்தன.

 

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதவர் கீழ்ப்பிறந்து

கற்றார் அனைத்தியர் பாடு”

ன்பது வள்ளுவர் வாக்கு.

 

அந்த வகையில் நூல் நூற்றல், கயிறு முறுக்கல், நெசவு, சாணை, உலோகம், மணி சோதனம், உலோகக் கலப்பு, போலி மணியாக்கம் (சூதுபவள மணி), அணிகலன் செய்தல், முலாம் பூச்சு, தோல் பதனீடு, பால் கறத்தல், தையல் செய்தல் முதலிய தொழில் வகைகளை போன்று மக்கள் இயல்பாக கைக்கொள்ளுதற்கு உரிய பொதுவான கலைகளும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலமாக பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் இத்தொழில்கள் நடைபெற்று வந்துள்ளதையும் அறிய முடிகின்றது.

 

காவியங்கள் அதாவது கற்பனை, படைப்பு இலக்கியம் கற்றல் ஆதாரங்கள், இதிகாசம் போன்ற துறைகள், தர்க்கம், விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், கால்நடை வளர்ப்பு, வில்வித்தை ஆகியவற்றோடு உடற்கல்வியும் ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள் விளையாட்டுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர். வில்வித்தை பெறுவதற்கு பயிற்சிகள், தற்காப்பு திறன்கள்,  யோகாசனம் கற்பதில் குருக்களும் அவர்களுடைய மாணவர்களும் கற்றலின் அனைத்து அம்சங்களிலும் புலமை பெற ஒன்றாக மனசாட்சியுடன் பணியாற்றினார்கள். சித்தர் வழிக்கல்வி திறம்பட மேற்கொள்ளப்பட்டது.

  .

மாணவர்களின் கற்றலை மதிப்பிடுவதற்காக, கற்றல் குறித்த விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இளைஞர்களுக்கு மேம்பட்ட கற்றல் திறன் வழிகாட்டப்பட்டது. சக மாணவர்களுடன் சேர்ந்து கற்றல் முறையும், குழுவாக இணைந்து செயல்படும் முறையும் இருந்தன. கோயில்களும் கற்றல் மையங்களாக இருந்தன. ஆரம்பகால முறையில் அறிவை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டினர். வடபுலத்தில் மாணவர்கள் நாலந்தா பல்கலைக்கழகம் சென்றதுபோன்று தென்புல மாணவர்கள் விகாரைகள், காஞ்சி பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர். கற்பித்தல் பெரும்பாலும் வாய்வழியாகவும், மாணவர்கள் நினைவில் கொள்ள தியானமும் வகுப்பில் கற்பிக்கப்பட்ட.

 

21ஆம் நூற்றாண்டின் மாணவனை கட்டமைப்பது எங்ஙனம்?

 

நம் மாணவர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளும் ஆற்றல் உடைய குடிமக்களாக இருப்பது அவசியம். சிக்கலான இந்த உலகில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இன்று வேகமாக முன்னேறி வரும் உலகப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு மாணவரும் போட்டிக்குத் தயாராக இருக்க வேண்டியதும் அவசியம். வேலைகளின் தன்மையும், போட்டியின் அளவுகளும்கூட மென்மேலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மென்மேலும் பரந்து விரிந்து வரும் வணிக அமைப்புகளால், இயல்பிற்கு மாறான அதிக அறிவாற்றலின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. நிரந்தரப் பணிகளின் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. இணைய வழி எழுத்துலகம் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் தொழில் முனைவோரின் மொழியியல் திறன்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன.

 

காலச்சூழலால் மேம்பட்ட தொழிலாளர்களின் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் முதலாளிகள் பல்வேறு விதமான பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களையே பணியமர்த்த விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நல்ல பணியில் அமர்வதற்கான முக்கியமான திறன்கள் எவை என்பதன் விழிப்புணர்வு அவசியம். பணி நெறிமுறைகளை முழுமையாக உணர்ந்திருப்பவர்களுக்கு  80% வாய்ப்பும்,  இணைந்து பணியாற்றும் வல்லமை பெற்றவர்களுக்கு 75% வாய்ப்பும், சக மனிதர்களுடன் நல்ல தொடர்பு நிலையில் இருப்பவர்களுக்கு 70% வாய்ப்பும், சமுதாய பொறுப்பில் சிறந்திருப்பவர்களுக்கு 63% வாய்ப்பும், விமர்சன சிந்தையும், சிக்கல் தீர்க்கும் திறனும் உள்ளவர்களுக்கு 58% வாய்ப்பும் சாத்தியமாவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுபவர்களுக்கு குழுப்பணி, பன்முகத்தன்மை, குறைகளைக் கண்டறியும் திறன், தகவல் தொடர்புகள் போன்ற திறன்களில் நல்ல பயிற்சியும் அவசியமாகிறது.

நிபுணத்துவம் பெற்றவர்களின் பணி நெறிமுறைகள் என்றால் அவை: விமர்சன சிந்தை, சிக்கல் தீர்க்கும் திறன், வாய்வழித் தொடர்புகள், சமூக பொறுப்புகள், வாசித்துப் புரிந்துகொள்ளும் ஆற்றல் போன்றவை.

 

21ஆம் நூற்றாண்டின் சிறப்பான திறன் மேம்பாட்டிற்கான கட்டமைப்புகள் எவை?

 

உலகின் இரண்டாவது பழமையான கல்வித் தொழில் இன்று தவிர்க்க முடியாத பெரும் சவாலகளைச் சந்திக்கும் நிலையில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, உயர் கல்வியின் செயல்முறை என்பது கற்பித ஆய்வுக்கு உட்பட்ட மூலோபாயப் பங்கைப் புரிந்துகொள்வதற்கா விமர்சனத் தேர்வுக்கு உட்பட்டது. வருங்கால குடிமக்களை சரியான முறையில் வடிவமைப்பதே உயர்கல்வி நிறுவனங்களின் தலையாயக் கடமை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் பண்பாட்டின் பாதுகாவலராகவும் அறிவின் பாதுகாவலராகவும் கருதப்படுகின்றன. புதிய நூற்றாண்டிற்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களுக்கும், படைப்புகளுக்கும் உள்ள பெரிய இடைவெளியின் காரணமாக இந்த நிறுவனங்களிலிருந்து வெளிவரும் எதிர்கால குடிமக்களான இளைஞர்கள் வாழ்க்கையிலும் பணியிடத்திலும் சரியாகப் பொருந்துவதில்லை என்று வல்லுநர்களிடமும் பொது மக்களிடமும் விமர்சனங்கள் எழுகின்றன. எனவே, திறன் அடிப்படையிலான அறிவுறுத்தல் செயல்முறைகளும், பொருத்தமான கற்பித்தல் உத்திகளும் உயர் கல்வியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

 

உயர்கல்வியில் கற்பிப்பவர்களின் கற்றல் சூழலின் அடிப்படையில் ஏற்பட்ட இந்த திறன் இடைவெளிக்கு விடை காணாமல் உயர் கல்வியில் கற்பிக்கும் செயல்முறை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அசைவற்றும், தேக்கமாகவும் இருப்பதும் கண்கூடு. தொழில் மற்றும் தொழிற்சாலையில் பயிற்சியாளர்களின் கவனத்துடன் ஒப்பிடும்போது, ​​கற்றல் சூழலைப் புரிந்து கொள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் கவனம் போதுமானதாக இல்லை என்றும் கருதப்படுகிறது. நமக்குத் தெரியாததை நாம் அறியவில்லை என்பது நமக்குத் தெரியவில்லை என்பதே உண்மை.

சமூக ஒத்துழைப்பு, பணிக்கான ஒத்துழைப்பு, நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு தேவையான வாழ்க்கைத் திறன்கள், மென்மையான திறன்களும், கல்வித் திறன்களும் ஒரு இடைவெளியைக் கொண்டுள்ளன. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப ஒரு பாலம் தேவை. பல்கலைக்கழகத்திற்கும், பணி நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியும், தொழில் மற்றும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து ஒரு செறிவான முயற்சி இருக்க வேண்டியது அவசியம்.

 

பள்ளியில் சிறு குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையிலேயே கலை மற்றும் அறிவியல் பாடங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் இளைஞர்களுக்கும் கற்பிக்கப்படுகின் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

முதலிடத்தில், சிந்தனையும், கற்றல் திறனும் மேம்படுவது அவசியம். விமர்சன சிந்தையும், சிக்கல் தீர்க்கும் திறனும், படைப்பாற்றல் திறனும், புதுமையை அரவணைக்கும் திறன், தகவல் தொடர்புத் திறன், எளிமையான ஒத்துழைப்புத் திறன், தகவல் மற்றும் ஊடக எழுத்தறிவுத் திறன் போன்ற அனைத்தும் கவனம் பெற வேண்டும்..

 

மேற்கண்ட அனைத்துத் திறன்களும் சாத்தியப்படும் வகையில் இன்றைய மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது என்பதனால் நம் நாட்டின் கல்வி முறைகளில் காலத்திற்கேற்ற  மாற்றம் அவசியமாகிறது. அதாவது கல்வியறிவு என்பது சிந்தனையை நிறைவேற்ற தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் அந்தக் கல்வி அமைய வேண்டும். குறிப்பாக, விமர்சன சிந்தனையும், சிக்கல் தீர்க்கும் திறனும், படைப்பாற்றல் திறனும், புதுமைகளை அரவணைக்கும் திறனும், தொடர்புத் திறனும், ஒத்துழைப்புத் திறன்களும், வாழ்க்கை சார்ந்த திறன்கள், தலைமைத்துவப் பண்பு போன்றவைகள் ஊக்குவிக்கப்பட்ட கல்வியாக இருப்பது அவசியம்.

 

நெறிமுறைகள்:

 

பொறுப்புக்கூறல், தகவமைப்பு, தனிப்பட்ட உற்பத்தித்திறன், தனிப்பட்ட பொறுப்பு, சுய இயக்கம், சமுதாய பொறுப்பு போன்றவைகள் நெறிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். நிதி, பொருளாதார, வணிகம் மற்றும் தொழில் முனைவோர் எழுத்தறிவு, குடிமை எழுத்தறிவு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு போன்றவைகள் உலகளாவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போதைய சூழல் கருதி, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் உலகளாவி மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு காலகட்டமாக இருக்கப்போகும் நிலையில், திறன்கள் மற்றும் பயிற்சி பெறும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

 

இந்த நிலையில் கல்வி முறைமைகள் உலகளாவிய பணி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. வளர்ச்சி உத்தி, செயல்படுத்துவதற்கான உத்திகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். கல்வியாளர்கள், வணிகம் மற்றும் கொள்கை தலைவர்கள் இடையில் குறிப்பிடத்தக்க ஒருமித்த கருத்து உள்ளதை உணர்ந்து அதற்கேற்ப கல்வித் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். கற்பித்தல் முறைமைகளில் விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது.

 

முடிவுரை:

 

உலகமயமாக்கலின் விளைவாக உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் இன்றைய சவால்களை எதிர்கொள்ள மாணவர்களைத் தயாராக்க வேண்டியது அவசியம்.  அந்த வகையில் ஒவ்வொரு மாணவரும், ஒரு விமர்சன சிந்தனையாளராக, சிக்கல் தீர்க்கும் திறன் உடையவராக, புதுமை விரும்பியாக, சிறந்த மக்கள் தொடர்பாளராக, சிறந்த கூட்டுப்பணியாளராக, சுய இயக்கவாதியாக, தகவல் மற்றும் ஊடகப் பயிற்சி பெற்றவராக, உலகளவிலான நாகரிகம், நிதி மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்தும் விழிப்புணர்வு பெற்றவராக மாறும் வகையில் இன்றைய கல்வி அமைதல் வேண்டும்.

 

உசாத்துணை:

 

A., N. S. (1939). Foreign Notices of South India from Megasthenes to Ma Huan.

Collected and edited by K.A. Nilakanta Sastri. Madras BAIERLEIN, E. R. (2016). LAND OF THE TAMULIANS AND ITS MISSIONS. Place of

publication not identified: HANSEBOOKS.

 

Murugavel. (n.d.). பழந்தமிழர்களின் தொழில் மேன்மை. Retrieved from

http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=9074:201

5-03-24-19-34-59&catid=57:2010-01-31-18-23-42&Itemid=78

N., S. P. (1984). The chronology of the early Tamils: Based on the synchronistic tables of

their kings, chieftains, and poets appearing in the Sangam literature. New Delhi:.

பெண் கல்வி – அன்றும் இன்றும் – பவள சங்கரி, 2021

Aiyangar, S. (1995). Pre-Aryan Tamil culture. New Delhi: Asian Educational Services.

BAIERLEIN, E. R., & GRIBBLE, J. D. (1875). The Land of the Tamulians and its

Missions ... Translated ... by J.D.B. Gribble. Higginbotham & Co.: Madras.

Economy 200 BC AD 500. Comparing Globalizations World-Systems Evolution

and Global Futures, 91-117. doi:10.1007/978-3-319-68219-8_5

Karashima, N. (2014). A concise history of South India: Issues and interpretations. New

Delhi, India: Oxford University Press.

Krishnamurthy, G. R. (1972). Megalithic culture in South India. Mysore: Prasaranga,

University of Mysore.

Sivathamby, K. (1974). Early South Indian Society and Economy: The Tinai Concept.

Social Scientist, 3(5), 20. doi:10.2307/3516448

31 BC - AD 305. London ; New York: Routledge Taylor et Francis Group.

தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு

எஃகு தொழில் நுட்ப அறிவு. (2018, November 23). Retrieved from

https://agharam.wordpress.com/2018/11/23/தமிழகத்தின்-இரும்புக்-கா/

 

American Psychological Association 6th edition formatting by BibMe.org.

சூதுபவளமணி – பவள சங்கரி, பேரா. வடிவேல் நாகராஜன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment