Thursday, November 11, 2021

காப்பியங்களில் பெண்ணியம்

 

 

 

காப்பியங்களில் பெண்ணியம்

 

முதலில் பெண்ணியம் பற்றிய வரையறைகள் குறித்து பார்த்தோமானால்,

பெண்ணியம் என்பது பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் பொருள்கொள்ளப்படுகிறது. சமூகத்தில் பெண் தனக்குரிய அங்கீகாரத்தையும், ஆணுக்குச் சமமான உரிமையும், சுதந்திரமும் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து அதை எவ்வகையிலேனும் பெற முயல்வதன் மூலமாக உள்ளக் குமுறல்களிலிருந்து விடுபட்டு தன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும் பெண்ணியக் கோட்பாடுகளாக வரையறுக்கப்படுகின்றன. மனித இனத்தின் வரலாற்றிலேயே ஆண்களின் வெற்றிகள், வீரதீர சாகசங்கள், வீழ்ச்சிகள் போன்றவற்றிற்கு இணையாக பெண்களின் வரலாறு பற்றி அதிகமாகப் பேசப்படவில்லை. தற்போது பெண்ணிய இயக்கங்கள் பெருமளவில் முளைத்து வருவதற்கு அடிப்படையில் உள்ளவை மேலைநாட்டு இயக்கங்களின் போக்கும், அதன் பரவலான சாதனைகளும் என்றாலும் அது மிகையில்லை. மரபை மீறாத வகையிலோ, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை உதாசீனப்படுத்தாத பெண்ணியக் கோட்பாடுகள் என்றும் அனைத்துத் தரப்பினராலும் ஏற்கவல்லது. அவ்வாறு இன்றி தன்னிச்சையாகச் செயல்படும் பெண் மரபை மீறிய நடத்தை கெட்ட பெண்ணாக உருவகப்படுத்தப்படுகிறாள்.

 

ஆங்கிலத்தில் Feminism என்று வழங்கப்படும் சொல்லே தமிழில் பெண்ணியம் என்று வழங்கப்படுகிறது. இலத்தீன் மொழிச்சொல்லாகிய ஃபெமினா என்ற சொல்லிலிருந்து வந்ததே ஃபெமினிசம், அதாவது பெண்ணிண் குணாதிசயங்களைக் கூறும் சொல் எனலாம். 1894ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் இந்தச்சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் Feminism என்பதன் பொருள், A movement for the recognition of the claim of woman for the right equal to those possessed by men" என்பதுதான். womanism என்றே அதுவரை வழங்கப்பட்ட இந்தச்சொல் 1890களுக்குப் பிறகே ஃபெமினிசம் என்று வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பெண்ணுரிமையைக் குறித்தும், பாலின சமத்துவக் கோட்பாடுகளை வெளியிடும் வகையிலும் பெண்ணியம் என்ற இச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெண்ணியம் என்பதற்கு அந்தந்த காலங்களின் அடிப்படையில் பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டாலும் தற்போதைய காலத்தில் பெரும்பாலும் பெண்ணியம் என்ற பெயரில் சில பெண்ணியவாதிகளின் கோட்பாடே எதிர்மறையாகவும், தமிழ் பண்பாடு, தமிழர் கலாச்சார சீர்கேடை வெளிப்படுத்துவதாக உள்ளதும் வருந்தத்தக்கது.

 

மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதே பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் போன்றவை. இவைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதைவுகள் அனைத்தும் வரலாறாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் போன்றவைகளே ஒரு நாட்டின் அடையாளமாகவும் ஆகிவிடுகின்றன.

 

பெண்ணியம் என்பது ‘உலகளவில் அரசியலிலும் பண்பாடு, பொருளாதாரம், ஆன்மீகம் போன்ற அனைத்தின் அடிப்படையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ என்ற சார்லட் அவர்களின் கூற்று நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பொருள் விளங்கச்செய்யத்தக்கது.

 

தனிமனித சுதந்திரம், சமூகச்சூழல், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் பெண்களை 34 வகைகளாகப் பிரித்துள்ளனர். அதில் இன்று நாம் பேசப்போகும் காப்பிய மாந்தர், பழமைவாதக் குடும்பம் சார்ந்த பெண்ணியம், அதாவது பண்பாடு, இல்லறம், ஆன்மிகம் என்ற வகையில் பெண்ணியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அந்த காப்பியக் காலகட்டத்தில் பெண்ணியம் என்ற வார்த்தைக்கான தேவை இருந்திருக்குமா என்பதே ஐயம்தான்.

 

பெண்களுக்கான எழுவகைப் பருவப் பெயர்களான, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிகை போன்றவற்றின் அடிப்படையிலேயே பெண்ணியம் வரையறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண் நெறிமுறைப்படுத்தப்பட்ட, அந்தந்த பருவத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வியலை அமைத்துக்கொண்டு அதற்கேற்றவாறே செயல்படவேண்டும்.

 

உலகளாவிய பெண்ணியத்திற்கும், இந்திய – குறிப்பாக தமிழ் பெண்ணியத்திற்கும் வாழ்வியல் முறையிலும், கலாச்சார நடைமுறைகளிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. இந்தியப் பெண்களைப் பொருத்தவரை பெண்ணிய இயக்கத்தின் செயல்பாடுகள் என்பவைகளை வெகு சமீப காலங்களிலிருந்துதான் காணமுடிகின்றது. காப்பியங்களிலும் பெரும்பாலும் பெண்களின் போராட்டமான வாழ்க்கைச் சூழல்களும், முரண்பாடுகளும், பலவிதமான கோட்பாடுகளும் அதன் தாக்கங்கள் போன்றவைகள் பற்றியே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூல வித்து என்பதை தொல்காப்பியத்தின் வாயிலாக தெளிவாக அறியமுடிகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல் போன்றவற்றின் மூலமே பெண்களின் வாழ்வியல் குறித்த தெளிவான பார்வையைப் பெற முடிகிறது.

 

அச்சமும் நாணமும் மடனும் முந்தாறுதல்

நிச்சமும் பெண்பாற்குரிய என்ப  - என்று தலைமகளுக்குரிய தனி இலக்கணமாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

 

காப்பிய மாந்தர்கள் பெரும்பாலும் அறவழியில், கற்பு நெறியில், கணவனே கண்கண்ட தெய்வம் என்று கருதி, இல்லறம் போற்றி வாழ்ந்தவர்களாகச் சுட்டுவதையேக் காணமுடிகின்றது. கற்பு நெறி என்பது பல்வேறு குடும்பக் கடமைகளையும் உள்ளடக்கிய ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டிய சொல். சிலம்பு, மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களில் இவ்வகை மாந்தர்களையேக் காணமுடிகின்றது.

 

சங்கம் மருவிய காலத்தில், காப்பிய மாந்தர்களின் கற்புக்கரசிகள், ‘பத்தினி’, ‘வீரபத்தினி’ என்றெல்லாம் போற்றப்பட்டுள்ளனர். சிலப்பதிகாரம், ஏழு கற்புக்கரசிகளின் கதையின் மூலம் இதனை விளக்கக் காணலாம்.

 

கணவன் அல்லாத மாற்றான் ஒருவன்  தன் முகத்தைக் கண்டுவிட்டான் என்பதற்காகத் தன் முகத்தையே குரங்கு முகத்தோற்றமாக மாற்றிக்கொண்டவளையும், பொருளீட்டுவதற்காகச் சென்ற கணவன் திரும்பி வரும்வரை தன் மேனியை கல்லாக்கிக் கொண்டாளாம் ஒருத்தி, மற்றொருத்தியோ, தோழியர் விளையாட்டாகச் சொல்லிவிட்டாலும் மணற்பாவைதான் தன் கணவன் என்று ஏற்றுக்கொண்டாளாம். இப்படி அறவாழ்க்கை எனும் பெயரில் அறியாமையையும், அடிமைத்தனத்தையும் விரும்பி ஏற்ற மாந்தரையும் காணமுடிகின்றது.

 

 சிலம்பின் நாயகி கண்ணகியை ஆரம்பத்தில் கணவனுக்கு அடங்கிய சிறுமியாக, கணவன் கணிகையர் குலப்பெண்ணான, ஆடல் மகளுடன் பூம்புகாரில் வாழ்ந்து அவளுடன் உறவு வைத்துக்கொண்டிருந்தபோதும், பேசாமடந்தையாக இல்லத்திலேயே அடங்கிக் கிடக்கும் பெண்ணாக, மேன்மையான, உயர் குணம் மிக்க கற்புடை நங்கையாகவும்  பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் முகமாக அறிமுகம் செய்யும் இளங்கோவடிகள், கணவன் திருந்தி வந்தபின்பு, அரசன் அவனை கள்வன் என்று குற்றம் சாட்டி மரண தண்டனை விதித்தபோது நீதிக்காகப் போராடி ஊரையே எரிக்கும் கோபாவேசமிக்க போராளியாகக் காட்டுகிறார்.

ஏற்றுக்கொள்ள இயலாத இத்தகைய கற்புநிலை பற்றி மறு ஆய்வு செய்யும் வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கண்ணகியின் நிலை குறித்து வெதும்பிப் படைத்துள்ள ஒரு பாடலை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.

 

தொட்டு மாலையிட்டோர் தோகையரைக் கூடியபின்

விட்டுப் பிரிந்து வேறுதிசை போனாலும்

கண்ணீரைத் தினம் சிந்தக் கண்மூடி வாழ்வதுதான்

பெண்டிர்க்குக் கற்பென்று பேசினால் அக்கற்பே

இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும்

என்னும் பகுதியில் பெண்ணடிமைத்தனம் மூலமாக கண்ணீர் சிந்தும் போக்கை கற்புநிலை எனக்கொள்வது தகாது என்று சாடியிருப்பது இன்றைய ஒவ்வொரு பெண்ணின் மனநிலையின் பிரதிபலிப்பாகவே காணமுடிகின்றது.

 

சிலம்பு பல்வேறு புரட்சிகரமான சிந்தைகளை வெளிப்படுத்தும் விதமாக படைக்கப்பட்டிருப்பினும் அக்கால சமுதாயத்தின் பெண்ணடிமைக் கூறுகளையும் அதிகமாகப் பதிவுசெய்திருப்பதையும் உணர முடிகின்றது. வழக்குரைக் காதையில், கண்ணகியின் வாயிலாக பெண்ணிய எழுச்சியின் அடையாளமான சீற்றம், அஞ்சாமை, போர்க்குணம், அறிவுத்திறன் என அனைத்து ஆற்றல்களையும் ஒருசேர இனங்காண முடிவதோடு அதுகாறும் அப்பெண்ணின் ஆற்றல் அனைத்தையும் முடக்கிப்போட்டு வைத்திருந்த ஆணாதிக்க நிலையையும் உணர முடிகின்றது. ஆயினும் அவள் இறுதியாக தெய்வப்பெண்ணாக முற்றுப் பெறுகிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அத்திறம் நிற்கநம் அகனாடு அடைந்தவிப்

பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென

மாலை வெண்குடை மன்னவன் விரும்பி

எனச் செங்குட்டுவன் கண்ணகியைக் கடவுளாகத் துதிக்கவேண்டும் என்று 

கூறுவதாக அமைத்துள்ளதைக் காணலாம்.

 

சிலப்பதிகாரத்தின் கதைப்போக்கில் முக்கியமானதொரு திருப்புமுனை என்றால் அது முடிவை நோக்கிச்செலுத்தும் கருவியான கானல்வரி. கானல்நீரை பொய்கை நீர் என மயங்கி ஏமாறும் மான்களைப்போல கோவலனும் மாதவியும் ஒருவரை ஒருவர் தவறாகப்புரிந்து கொண்டு ஏமாந்த நிலையால் ஏற்பட்ட திருப்பம் அது.

 

அதேபோல் மாதவியின் பாத்திரப்படைப்பின் மூலமாகவும் அக்கால ஆடவரின் ஆணாதிக்கப் போக்கை தெளிவுற விளங்கச்செய்யக் காணலாம்.

பரத்தையரில் காமக்கிழத்தியர், இற்பரத்தையர், சேரிப்பரத்தையர், நயப்புபரத்தையர் என்று குறிக்கப்பெறும் நால்வகைப் பெண்களும், ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்றே வரைமுறைப்படுத்தப்பட்டிருந்துள்ளது. பரத்தையர் குலமகளிரோடு ஒப்பிடும்போது கலை, ஒப்பனை போன்றவற்றில் தகுதியும், திறமையும் உடையவராகத் திகழ்ந்திருக்கின்றனர். பரத்தையிடம் சென்று வரும் தலைவனை அவன் தலைவியின் தாயோ, தமரோ, சான்றோர்களோ, மற்றெவரோ இடித்துரைப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையில் ஆடவனின் பரத்தமை ஒழுக்கம் சமூக அங்கீகாரம் பெற்றுள்ள கொடுமையை உணர முடிகின்றது. இந்த பரத்தையரும் ஆடவனின் அதிகாரத்திற்கு உட்பட்டே இருந்திருப்பதையும் காணமுடிகின்றது.

 

மாதவி, கோவலனுக்கு வாய்த்த நல் துணைவி. கோவலன் மாதவியைச் சேரும்பொழுது குற்றங்கள் உடையவனாக இருந்தான். தென்றல் பல மலர்களை நுகர்ந்து வருவதைப்போல் கோவலன் சுற்றித் திரிந்தான் என்று இளங்கோவடிகள் கூறுவார். மாதவியைச் சென்று சேர்ந்த கோவலன் பரத்தமை ஒழுக்கத்திலிருந்து முற்றாக விடுதலை பெற மாதவியின் காதலொழுக்கம் துணை செய்திருக்கிறது. எந்த வழியிலும் கோவலனைப் பிரிந்தால் தன்னைப் பரத்தமையாக்கத் தன் சுற்றத்தார் முயல்வர் என்று எண்ணிய மாதவி, கோவலன் எந்தவொரு குறையாலும் தன்னைப் பிரியாமல் பேணிப் பாதுகாக்க முயன்றது அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கைத்திறம்.

ஆயினும் இங்கும் ஊழ்வினை விளையாட கோவலன் பிரிந்து சென்றபோதும் அவள் தன் முயற்சியை விடாமல், திருமுகம் மூலமாக தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.

 

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும், குலப்பிறப்புஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!’
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து,
தன் தீது இலள்’ என, தளர்ச்சி நீங்கி,
என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து--

 

அங்கு கோவலனை ’அடிகள்’ என்று விளித்து எழுதுகிறாள் மாதவி; தன்னை அடியவளாக்கிக் கொண்டு வணக்கத்தைப் புலப்படுத்துகிறாள். மாதவி தன் இரண்டாவது திருமுகத்தைத் தேர்ந்து தெளிந்து எழுதுகிறாள். அதுமட்டுமல்லாமல் கோவலனின் மன நிலையைப் போற்றிப் பாதுகாக்குமாறும் ஆற்றுப்படுத்துகிறாள். கோவலன், அதை அப்படியே தன் பெற்றோருக்கு அனுப்பும் அளவிற்கு சிறப்பான மடலாகக் காணமுடிகின்றது.

 

கணிகையர் குலத்தில் மாதவியின் மகளாகப் பிறந்த மணிமேகலை துறவறம் மேற்கொள்கிறாள். மணிமேகலையில் ‘பிறர் நெஞ்சு புகாகற்பு’ என்பதை மருதி என்ற மணமான பெண்ணின்மீது மன்னன் மகன் ஆசைகொண்டதால் அவள் கற்பிழந்தவளாகக் கருதப்படுகிறாள். ஆக தவறு செய்தவர் எவராக இருப்பினும் அதன் பழி, பாவத்தை அந்தப் பெண் மட்டுமே சுமக்க வேண்டும் என்ற அர்த்தமற்ற கோட்பாடு வருத்தத்திற்குரியதாகவே உள்ளது.

 

“மண்டினி ஞாலத்து மழைவளம் தரூஉம்

பெண்டீராயின் மறந்தும் பிறநெஞ்சு புகாஅர்” என்றுரைக்கிறது மணிமேகலை.

 

ஆடல் மகளாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் கோவலனுக்காகவே வாழ்ந்து, தம் குலத்தொழிலாள் அவனுக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்  தன்மகளைத் துறவியாக்கிய குணவதியாக மாதவியும்  பெருமைப்படுத்தப்படுகிறாள்.

சிறப்பில் குன்றாச் செய்கையோடு பொருந்திய

பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை

தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை

ஆடலும் பாடலும் அழகும் என்றிக்

கூறிய மூன்றின் ஒன்று குறைவு படாமல்

ஏழாண்டு இயற்றி

என்று மாதவியின் சிறப்பை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்

.. 

மணிமேகலை தனது தாய் மாதவியின் குலத்தொழில் செய்யாது, குடும்ப வாழ்க்கையைத் துறந்து நாட்டு மக்களின் பசி தீர்த்தும் மக்களுக்கு அறமொழிகளை எடுத்துரைத்தும் பல நல்லறங்களையும் செய்து பௌத்த நெறியின்படி ‘முத்தி’ பெற்று அறச் செல்வியாக தோற்றமளிக்கிறாள்.

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

 மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்

 உண்டியும் உடையும், உறையும் அல்லது

 கண்டதில்லை.”

இந்த காப்பியத்தில் பெண்ணியம் மணிமேகலை வாயிலாகப் பேசப்பட்டது அறியலாம்.

அதேபோன்று, விசாகை என்ற பெண், தன்னை ‘கன்னிமை’ தவறியவளாக மக்கள் தூற்றுவதை உணர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் மணம் புரியாமல் கன்னியாகவே வாழ்ந்தாள் என்றும் மேகலை காட்டுகின்றது.

 

ஆபுத்திரனின் தாயின் வாழ்க்கை சரிதை மூலம் கற்பு நெறி தவறிய பெண்ணுக்கு சமூகம் அளித்த பெயர்களை அறியலாம். அவை, கொண்டோன் பிழைத்தவள், காப்புக்கடை கழிந்தவள், மனையறம் பிழைத்தவள் என்று பெயர் சூட்டப்பட்டு குற்றமும் சாட்டப்பட்டு மன்னனின் தண்டனைக்கு உள்ளாகிறாள்.

 

பெண்ணிய ஆய்வாளர்கள் பல்வேறு காப்பியப்பாத்திரங்களின் அடிப்படையிலான பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆய்வு செய்வதற்கான சூழல்கள் உருவாகியுள்ளதும் மறுப்பதற்கில்லை.

 

புகார்க் காண்டத்தில் கண்ணகி பழமைவாதத்தின் குறியீடாகக் காட்சியளிக்கிறாள். பெருவணிகக் குடும்பத்தின் செல்வமகள், “உயர்ந்தோர் ஏத்தும் உரைசால் பத்தினி”யாக (சிலப்பதிகாரம் பதிகம் 56)  இருந்தபோதும், “மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாளாக”  சிறப்புற்றிருந்த போதும், தனது காதலைத் தற்காத்துக் கொள்ள இயலாதவளாக உள்ளாள்.  பலவீனமான கலாச்சாரங்களையும் அடக்குமுறைப் பண்புகள் போன்ற உள்முரண்களைச் சுட்டிக்காட்டுபவளாகவே காட்சியளிக்கிறாள். கண்ணகியின் கோணத்தில் கற்பு எனும் சமூகத் தகவின் சில பண்புகளைக் கூர்ந்து நோக்கும்போது அது ஆணாதிக்கம், சமத்துவமற்ற காதல், பழி, பாவம் போன்ற புறக்கூறுகளைக் கொண்டிருந்தாலும் தூய்மை, நல்லொழுக்கம், புனிதம் போன்ற உளவியல் கூறுகளையும் கொண்டமைகிறது. அதிக ஆற்றல் கொண்ட பண்பாட்டு உளவியல் அடிப்படையில் காட்டப்படுகிறது. ஆனால் பிற்பகுதியில் கற்பு எனும் பண்பாட்டு உளவியல் ண்ணகியின் தூய்மை அல்லது ஒழுக்கம் பற்றிய பிரச்சினை என்பதாக உருமாற்றிவிடுவதால் மனம் வெதும்பித்துடிக்கும் நிலைக்கு ஆளாகும் அப்பெண் சமூகப்பழி எனும் மாபெரும் அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தப்படுகிறாள். செய்வதறியாது மனக்குழப்பம், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் சிதறுண்டுக் கிடந்த இரக்கத்திற்குரிய பெண்ணாகவே  புகார்க் காண்டத்தின் கண்ணகியைக் காணுகிறோம்.
கண்ணகி, மாதவி, மணிமேகலை போன்ற காப்பிய நாயகிகள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களோ அன்றி மகிழ்ச்சியான நாயகிகளோ அல்ல. ஆணாதிக்கம், இயலாமை, ஏமாற்றம், அரசியல் சூழ்ச்சிகள், நேர்மையின்மை என்று தோல்வியின் விளிம்பில் சிதைக்கப்பட்ட நாயகிகளே. சொற்பமான இன்பமும் அதிகமான துன்பமும் கறையாய் படிந்த வாழ்க்கையின் பிரதிபிம்பங்கள்.


சிலப்பதிகாரத்தின் பிற்பகுதியை எடுத்துக்கொண்டால் கோவலன் கொலையுண்டது, கண்ணகி மதுரை நகரை தீயிட்டு எரிப்பது ஆகியவை தொடர்ந்து ஊழ்வினை உறுத்து வந்து விரட்டியதாகவே விளக்கப்பட்டாலும், கண்ணகியின் கட்டுக்கடங்காத கோபம் ஆவேசமாக வெளிப்படுவதைக் காண்கிறோம். “மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ?” (சிலம்பு 18:36-37) எனக் கண்ணகி அழுது புலம்புகிறாள். “பட்டேன் படாத துயரம்” (சிலம்பு 19: 5) என ஊராருக்குத் தன்கதையை கழிவிரக்கத்தோடு எடுத்தியம்புகிறாள். இந்நகரில் “பெண்டிரும்  உண்டுகொல்?.. சான்றோரும் உண்டுகொல்? .. தெய்வமும் உண்டுகொல்?” (சிலம்பு 19: 50-59) என ஆவேசமாக வினவுகிறாள். பாண்டிய மன்னனிடம் நீயா அரசன், இல்லை நீயே கள்வன் எனவும் நீதி கேட்கிறாள். “ஒட்டேன் அரசை, ஒழிப்பேன் மதுரையை” என கோபாவேசம் கொண்டு மதுரை நகரையே தீக்கிரையாக்குகிறாள். கண்ணகியின் இச்செயல்களில் வெளிப்படும் ஆற்றொணாக் கோபம் ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதான கோபம். ஒட்டு மொத்த வாழ்வியல் சார்ந்த கலாச்சார நிலையின்மை குறித்த கோபமே கண்ணகியை இத்தனை ஆத்திரம் கொள்ளச் செய்து வன்முறையைத் தூண்டியிருக்க வேண்டும். நூலின் முற்பகுதியில் கண்ணகி கற்பு எனும் ஒரு வலுவான கருத்தியலுக்குப் பலியான பெண்ணாகவும், பிற்பகுதியில் அதன் தீவீரம் ஏற்படுத்திய பின்விளைவுகளின் ஒட்டுமொத்த வன்முறைச் செயல் வடிவமாகவும் காட்சியளிக்கிறாள். அவளது வன்முறை நீதியின் பாற்பட்ட வன்முறையாகவும் சமூகச் சீர்கேடுகளை சுத்திகரிக்கும் வன்முறை என்றாலும் அது ஏற்புடையதன்று. கண்ணகியின் வன்முறை என்பது அரசு அமைப்பு, சமுதாய அமைப்பு என  அமைப்புரீதியான வன்முறைகள் என்ற கோணத்திலேயே நகர்கிறது. “கொன்று வா” என்று சிந்திக்காமல் உத்தரவிட்ட தேரா மன்னனின் செயலின் பின்விளைவுகளாகவும் உள்ள வன்முறை என்றே கொள்ளமுடிகிறது.

 
அதேபோன்று மாதவி, மணிமேகலை ஆகியோர் துறவு மேற்கொள்ளுதல், ணிமேகலையைக் காதலித்த அரச குமாரனும் கொலை செய்யப்படுதல், புகார் நகரைக் கடல் கொள்வது – இவை அனைத்துமே தொடர்ந்து ரும்  சம்பவங்களாகவே உள்ளன. சிலம்பு, மேகலை ஆகிய காப்பியங்களின் கதைகள், கற்பு நெறியோடு இல்லறத்திலிருந்து துறவு நோக்கி நகரச்செய்வதும் அக்கால குடும்ப அமைப்புகளின் நெருக்கடியின் குறியீடாகவேத் தோன்றுகின்றது. மணிமேகலை துறவு மேற்கொண்டாள் என்ற செய்தியும் மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள அவளது செயல்பாடுகள் பற்றிய தகவல்களும் பண்டைத் தமிழகத்தில் குடும்ப அமைப்பு முறை பெண்களைக் கொண்டாடும் வகையில் அத்துணைச் சிறப்பானதாக இல்லை என்றே தோன்றுகிறது. கணிகையர் குலத்தில் பிறந்தவளாலால், மணிமேகலை அக்குலத்திற்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை  விரும்பாதவளாக தன்னைக் காதலித்த உதயகுமாரன் மீது தனக்கு விருப்பம் இருந்தபோதும் (அவள் “வருணக் காப்பு இலள்” என ஓரிடத்தில் குறிக்கப்படுகிறாள்.5; 87) பௌத்தத் துறவு மேற்கொள்ளுகிறாள்.

 

அந்த வகையில் காப்பியக்காலத்தில் பெண் என்பவள் வெறும் பொழுது போக்குச் சித்திரமாய் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் போராடி வெற்றி பெறும் தகுதியும் பெற்றவள் என்பதனை இக்காப்பியம் பதிவு செய்கிறது

 

ஆக்கும் சக்தியையும், அழிக்கும் சக்தியையும் ஒருசேரப் பெற்றவள் பெண் என்று போற்ற விரும்பும் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் காப்பியங்களில் தலைவர்களின் பெருமை பாடப்படுகின்ற அளவிற்கு, காப்பியத்தலைவிகளின் பெருமை பேசப்படவில்லை என்பதே நிதர்சனம்.

 

திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திலகவதியார் மற்றும் மங்கையர்கரசியார் ஆகிய இருவரும் கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆத்ம ஞானிகள்.

கம்பராமாயணத்தில்,  சீதையின் பாத்திரப்படைப்பின் மூலமாக பெண்ணை தெய்வப்பிறவியாக உயர்த்துவதன் மூலமாக அவளை அடிமைப்படுத்தி முடக்கி வைத்திருந்ததையும் அறியமுடிகின்றது. சீதையின் மூலமாக அகலிகை பாத்திரப்படைப்பின் வாயிலாக, கற்பு என்பது மனமாண்பே தவிர உடல் தூய்மை போய்விட்டால் கற்பு போய்விட்டது என்பதில்லை என்ற கருத்தை கம்பர் வலியுறுத்துவதைக் காணமுடிகின்றது.

 

மனத்தினால் வாக்கினால் மறுவுற்றேனெனின்

சினத்தினால் சுடுதியால் தீசெல்வா – அதாவது மனம் வாக்கு என்ற இரு நிலைகளிலும் தூய்மை பேணுவதே கற்பு என விளக்குகிறார் கம்பர்.

 கைகேயி பாத்திரம் மூலமாக ஒரு பெண்ணுக்கு தாய்மையைவிட கற்புடமையே சிறந்தது என்பதையும் விளங்கச் செய்கிறார்.

 

பெருந்தடங்கண் பிறை நுதலார்க்கு எலாம்

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவன் யாவையே

என்ற பகுதியின் மூலம் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், ‘எல்லாரும் எல்லாம் பெருஞ்செல்வமும் எய்தலாலே’ என்ற தொடரின் மூலம் பெண்களுக்கு செல்வ உரிமையும் இருந்ததைக் கம்பர் காப்பியம் செப்பக்காணலாம்.

 

ஒரு பெண் பல ஆடவரை மணந்து கொள்ளும் வழமை இருந்ததையும் மகாபாரதக் கதையின் திரௌபதி போன்ற பாத்திரங்களின் மூலமாக அறிய முடிகிறது. பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக விளங்குகிறாள்.  பஞ்ச பாண்டவர்களை பஞ்ச பூதங்களாகக் கொண்டால் அனைத்திற்கும் ஒரு தலைவியே.  இந்த உலகமே பஞ்ச பூதங்களால்தான் இயங்குகிறது. ஒரு பெண்ணால் மட்டுமே பஞ்ச பூதங்களைக் கையாள முடியும் என்பதும், பஞ்ச பூதங்கள் இயங்க ஒரு தூண்டுதலாக பெண்சக்தி தேவை என்பதன் குறியீடாகக் கொண்ட பாஞ்சாலியின் பாத்திரம் நம்பியவர்களுக்கு ஒருவகையாகவும், மற்றையோருக்கு எதிர்மறையாகவும் தோன்றலாம்.

 இது மட்டுமல்லாமல் புராணங்களின் அடிப்படையில் அந்த மாகாவியம் மேலும் சில பலதார மணங்களைக்காட்டுவது கூர்ந்து நோக்கத்தக்கது. காரணம் அந்தக் காலகட்டத்தில் அப்படி ஒரு வழமை இல்லாமல், இது போன்ற மாபெரும் காவியங்களில் அப்படி ஒரு ஆதாரம் காண்பதும் அரிது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஐம்பெருங்காப்பியங்கள் என்று புகழப்படும் சீவகசிந்தாமணிசிலப்பதிகாரம் 

மணிமேகலைவளையாபதிகுண்டலகேசி எனும் ஐந்து காப்பியங்களுமே 

பெண்களை மையமிட்ட காப்பியங்களாகவே படைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. மணநூல் என்றழைக்கப்படும் சீவகசிந்தாமணியில் 

ஆடவன் எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம் என்பதற்கு ஆதாரமாக சீவகன் 8 பெண்களை மணந்து கொண்ட செய்தியைக் கூறக் காணலாம். பெண் ஆணுக்காக, அவன் மகிழ்ச்சிக்காகப் படைக்கப்பட்டவள் என்ற இகழ்வான போக்கை வலியுறுத்துவதாகவே இக்காப்பியம் விளங்கச் செய்கிறது.

 

ஓடும் நதிகள் முதல் வணங்கும் தெய்வம் வரை பெண்கள் பெயரே 

முதன்மைப்படுத்தப்படுவதைப் போல சீவகன் கல்வி கற்றதை ‘ஞானம் என்னும் 

குமரியைப் புணர்கலுற்றார்’ என்று நாமகளைப் புணர்ந்ததாகக் கூறுவதும், 

சீவகன் பகைவரை வென்று நாட்டை மீட்டுவிடும் செயலைக் குறிப்பிடும்போது 

சீவகன் மண்மகளை மணந்தான்’ என்றும்முடிசூடிய நிகழ்ச்சியைப் பூமகளை

 மணந்தான் என்றும் ஞானம் பெற்று முக்தி நிலையை அடைந்தததை ‘கேவல 

மடந்தையை மணந்தான்’ என்றும் கல்விநாடுமுக்திஎன அனைத்தையும்

 பெண்மையின் அம்சமாகவே எடுத்துரைத்தாலும் இவையனைத்தும் பெண்மையைப் போற்றக்கூடிய போக்காக இல்லாமல் இருப்பதையே உணரமுடிகிறது. காப்பியங்களில் பெண்ணடிமை நிலையும், சில சூழல்களில் பெண்ணுரிமை நிலையும் காண முடிகிறது.

 

இல்லறத்தில் பண்புடனும், கணவனின் கற்புடை நாயகியாக வாழ்ந்த மாந்தர் தெய்வப்பெண்டிராகப் போற்றப்பட்டது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம், புராணக்கருத்துகளை எடுத்துரைக்கும் காப்பியங்கள், பெண்களை, ஆண்களை மயக்கும் போதைப் பொருளாகவேக் காட்டுகின்றன. சித்தர்களோ மேலும் ஒருபடி சென்று பெண்களைப் பேய் என்றும் போதைப்பொருள் என்றும் சித்தரித்துப் பாடியுள்ளது வியக்கவைக்கின்றது.

 

பொதுவாக காப்பியக்காலப் பெண்கள் அச்சம், நாணம், மடம் என்ற இயல்புகளுடன் அழகு, இரக்கம், அடக்கம், அமைதியின் உருவாகவும், ஆற்றல் இல்லாதவளாக, செயல் திறனற்றவளாக உருவாக்கப்படுகிறாள்.

பெண் இப்படித்தான் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்றெல்லாம் கூறி வளர்க்கப்படும்போது அக்கருத்துக்கு மாறாக பெண் தன்னை மாற்றிக் கொள்ளாது தன்னை ஆட்படுத்திக்கொள்கிறாள். காப்பியக் காலப்பெண்கள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம்தரக் குடிமகளாக, கணவனே தெய்வம் என்று கொண்டாடுபவர்களாக ஆணின் தேவையை மட்டும் நிறைவேற்றும் பணிப் பெண்களாக வாழ்ந்தார்கள்.

 

ஆனால் இன்றைய காலகட்டத்தில், ‘பெண்ணியம்’ என்பது தேவையின்றி ஆண்களை எதிர்ப்பதும், பண்பாடு, கலாச்சாரம் கடைபிடிப்பதெல்லாம் பிற்போக்குத்தனம் என்றும் எல்லா வகையிலும் ண்களைவிட மேலோங்கி இருக்கவேண்டும் போன்ற பொருள்கொண்டு இயல்பிற்கு மாறாக நடந்துகொள்வதும் வருந்தத்தக்கது. ஆண், பெண் இருவரும் சமம் என்ற கருத்து பெருமளவில் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றாக இருப்பினும், ஆண், பெண் இருவரும் அவரவர் எல்லைக்குள் சுதந்திரமாக வாழ்ந்து சமூகத்திற்கும் பிரச்சனையின்றி, சமூக நலனுக்காகவும் வாழ முற்பட்டால் மன அமைதியோடு நல்ல வாழ்வியல் முன்னேற்றங்களையும் அடையலாம் என்பது திண்ணம்.

 

நம் சமூகம் ‘பெண் வழிச் சமூகம்தான்’. ஞானம் எனும் மூன்றாம் விழியைப் பெற்ற சிவனுக்குரிய பெருமைக்கும், அவ்விழியைச் சிவனுக்கு அளித் ‘பார்வதியையேச் சேரும் என்கிறது ஒரு புராணக்கதை.

எங்கு பெண்ணினம் மதிக்கப்படுகிறதோ, அங்கு மட்டுமே கடவுளர் மகிழ்கிறார்கள்; எங்கு பெண்களுக்கு உரிய மரியாதை மறுக்கப்படுகிறதோ அங்கு அனைத்தும் பாழ்” என்று மனு அறுதியிட்டுக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. தாய்வழிச் சமூகம் பற்றிய வாய்மொழிக் கதைகள் பல கிரேக்கம், ஈரான் போன்ற நாடுகள் உட்பட பல நாடுகளில் வழங்கப்பட்டு வந்தாலும் இந்தியாவில் மட்டும் அதனைப் போன்று தொன்மக் கதைகள் வழியாகத் தாய்வழிச் சமூகத்தை வெளிக்காட்டும் கதைகளைக் காண்பது அரிதாக உள்ளது. காப்பியக்காலத்தில் பெண்கள் நேரடியாகப் போரில் பங்கு பெற்றதற்கான சான்று எதையும் காண இயலவில்லை.

உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான வங்க எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்தியாயன் என்பவர். இவர் கி.மு. 3,000-க்கு முந்தைய காலத்தில் தாய்வழிச் சமூகமே நிலவி வந்தது என்பதனைத் தனக்குக் கிடைத்த சான்றுகள் மூலமாக, வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அதாவது அக்காலத்தில் தாய்வழிச் சமூகச் சூழல் நிலையே இருந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

பெண்ணியச் சிந்தனைக் கண்கொண்டு நோக்கினால், காப்பியக்காலம் ஓர்ஆணாதிக்கச் சமூகமாகவே இருந்திருக்கிறது என்பதை கற்புநெறி, பரத்தைமை ஒழுக்கம் போன்றவற்றின் மூலம் அறியலாம். ஒரு தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினால், பெண் எந்த அளவு பாதிக்கப்படுகிறாள் என்பதை விட, எத்தகைய மனச் சிதைவுக்கு ஆளாகிறாள் என்பதையும் நன்கு உணர முடிகின்றது. சென்ற நூற்றாண்டுகளிலும் பரவலாகத் தொடர்ந்து வந்த இந்த நிலை தற்போது இந்த நவீன காலத்திலும்கூட முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று உறுதியாகக் கூறவும் முடியவில்லை.

பருவம் எய்துவதற்கே முன்பே ஏழு வயதில் திருமணம். மணமகனுக்கும் இளம் பருவம். திருமணம் முடித்தவுடன், திரும்ப தாய் வீட்டு வாசம். ஆனால் பள்ளிப்படிப்பும், தோழியருடன் வெளியில் திரிந்து விளையாடும் அனுமதியும் மறுப்பு. வீட்டில் சமையலும் மற்ற பழக்க வழக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். பருவ வயது வந்தவுடன் நல்ல நாள் பார்த்து கணவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். 13 வயதில் ஒரு வாலிபருக்கு மனைவியாக குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம். அன்றிலிருந்து இரவிக்கைக்கு விடுதலை. அதாவது திருமணமானவுடன் பெண்கள் இரவிக்கை அணியக்கூடாது என்ற பழக்கம் சில பகுதிகளில் இருந்தது. சில பெண்கள் கச்சை என்ற பெயரில் வெளியில் தெரியாத மார்போடு ஒட்டிய ஒரு உள்ளாடை அணிந்திருப்பார்களாம். சிலர் தன் சேலை முந்தானையை எடுத்து ஒரு சுற்று உள்ளாடையாகச் சுற்றி அணியும் வகையில் நாணத்தை மறைக்கத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட வழமையாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பருவ வயதில் ஒரு பெண் உள்ளாடையும் இரவிக்கையும் அணியக்கூடாது என்றால் அவள் நிலை என்னவாக இருக்கும்? அவமானத்தால் கூனிக்குறுகி கதவின் இடுக்கை விட்டு வெளியே வரவே முடியாத, ஆண்களின் முகத்தில் முழிக்கவே இயலாத நிலையில், குடும்பப் பெண்களின் பெரும்பாலோனோர் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்கள். இதனாலேயே கூட தாசிகள், பரத்தையர் என்ற ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆண்களுக்கு ஒரு வடிகாலாக அவர்கள் இருந்திருக்கலாம். அப்படி அங்கு சென்று வரும் ஆண்களை தவறு சொல்லும் வழக்கமே இல்லாமல் இருந்திருப்பதும், சில நேரங்களில் அதெல்லாம் அவர்களுக்கு கௌரவமான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகக்கூட இருந்திருப்பதும் இதன் காரணமாகத்தான் இருந்திருக்கலாம். உளவியல் காரணமாக ஒரு பெண்ணை எளிதாக முடக்கிப்போடும் ஒரு நுழைவாயிலாக இந்த இரவிக்கை மறுப்பு இருந்திருக்க வேண்டும். நாணத்தினால் அந்தப் பெண், கல்வியறிவும் பெறாமல், கைப்பாவையாக, அலங்காரப் பதுமையாக, தனக்கான ஒரு பொக்கிசமாக வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இந்தப் பழக்கம் வந்திருக்க வேண்டும். வெளி உலக ஞானமே இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்னவாக இருக்க முடியும். இரவிக்கை போட்டவர்களெல்லாம் ஒழுக்கமான பெண்கள் இல்லை என்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்த பல்வேறு நாட்டு பெண்களுக்கும் பெரும்பாலும் இந்த நிலைதான் இருந்திருக்குமோ என்ற ஐயமும் எழாமல் இல்லை.

 

கேட் மில்லட் என்பவர் பெண்ணடிமைப் போக்கு வளர்ந்த வரலாற்றை விரிவாக விளக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் பால் வகை என்பது ஆண் பெண்ணை அதிகாரம் செய்யும் பான்மையில் அமைந்துள்ளதன் காரணம் ஆணாதிக்க சமூகம் வகுத்ததுதான் பால் வகை என்பது. ஆண் தனக்குரிய சமூகக் கனவாக இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம், கல்வி போன்றவற்றைத் தெரிந்து கொண்டான். பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளை ஆட்படுத்தி நிலைபெறச் செய்ய முயல்கிறான். னால் சமூகத்தில் பெண்களின் இயக்கம் பெரும்பாலும் முடக்கப்பட்டுவிடுகிறது. குடும்ப அமைப்பில் உறைந்து கிடக்கும் பெண், சமூகத்தை அணுகவும், தேவைகளுக்காகவும்கூட கணவனை முற்றிலும் சார்ந்து நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் காரணமாகவே  சுயசிந்தனை என்பதே இல்லாதவளாக ஆடவன் கைப்பாவையாக உருவாக்குவதற்குத் துணை போயிற்று. ஆண், பெண் இடையே அதிகார உறவுகள் வளர்ந்து பெருக குடும்பம் என்ற அமைப்பும் காரணமாயிற்று.

 

அயல் நாட்டுப் பெண்ணியம் தொடர்பான ஒரு சிறு ஒப்பீடு காட்ட விரும்புகிறேன். பழமையான கலாச்சாரங்களில் ஊறிப்போன ஜப்பான் நாட்டின் பெண்ணிய அடையாளம் சற்றே வித்தியாசமானதாகவே தென்படுகிறது.  நான் லெஸ்லி டவுனர் அவர்களின் ஆங்கில வழி ஜப்பானிய  கெய்ஷா” என்ற 450 பக்க விரிவான புதினத்தை தமிழில் மொழிபெயர்த்தபோது இந்த எண்ணம் உறுதியானது. ஒரு நாட்டின் முன்னேற்றம், அதன் வீழ்ச்சி என அனைத்தும் அந்நாட்டின் பெண்களின் நிலையை வைத்தே எளிதாக எடை போட முடியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

 

உலக அரங்கில் நவீன ஜப்பான் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறியிருக்கின்றது. ஜப்பானியப் பெண்கள் அதிகாரம் மற்றும் தன்னாட்சியைப் பொறுத்தவரை பாரம்பரியமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு ஆண் வீட்டின் தலைவனாகவும் குடும்பத்தின் வெளி உலக பொது விவகாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடியவனாகவும் இருக்கிறான். வீட்டில் உள்ள மனைவி குடும்பத்தை நிர்வகிப்பதில் கட்டுப்பாடுடன்  செயல்படலாம்.

 

ஜப்பானிலும் ஆச்சரியமூட்டும் வகையிலான இதே கலாச்சாரம். ஜப்பானியப் பெண்களின் பரிதாப நிலையை ஒரு ஆடவன் இப்படி விளக்கமளிக்கிறான்.

எங்கள் மனைவியர் வீட்டில் சமையல் செய்வதும் குழந்தைகள் வளர்ப்பதிலும் கட்டுண்டிருந்தனர். அவர்களுடனான எங்களின் உறவுகள் எப்பொழுதும் வீட்டு விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்களாகவே இருக்கின்றன. இதைக்கடந்து, ஆண்களுக்கு மற்ற உலக நடப்புகள் பற்றிப்பேச ஒரு மேம்பட்ட வித்தியாசமான துணையாக, கலை, கருத்துகள் பற்றி விவாதிக்கக்கூடிய ஒரு பெண் தேவைப்படுகிறாள். எங்களுக்கு மகிழ்ச்சியூட்டி உற்சாகப்படுத்துகிற, அறிவாளியான நன்கு படித்த பெண்கள் தேவை. ஒரு கெய்ஷா இருக்க வேண்டியதும் இப்படித்தான்” என்று கூறுவதிலிருந்து ஒரு கெய்ஷா என்ற காமக்கிழத்தியின் நிலை பற்றி அறியலாம்.

 

இந்த கெய்ஷாக்கள்  ஜப்பானின் பழைய அரசாட்சிக் காலத்தில் அப்போதைய பிரபுக்களை மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட பெண்கள். இவர்களை உயர்குடித் தாசிகள் என்றும் சொல்லலாம். கெய்ஷா என்ற சொல்லின் பொருள், கலைபயின்றவள், அளிப்பவள் என்பது. ஆயிரம் ஆண்டுகளாக ஆண்களை மகிழ்விக்கும் கலையைக்கற்றுத் தேர்ந்த அதையே பிழைப்பாகவும் நடத்திக்கொண்டிருந்தவர்கள். காமம் என்பது உடற்சுகம் மட்டும் சம்பந்தப்பட்டதன்று. ஒரு  ஆணின் அகங்காரத்தை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு கலைகளைப் பயின்றவர்கள். கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிகவும் விரிவான, தெளிவான நூல், லெஸ்லி டவுனரின், ‘கெய்ஷா’.

 ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து ஒரு தனிப்பட்ட சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. இவள் பிரபுக்களைத் தம் காதல் வலையில், மயக்கு மொழியில் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியோ அன்றி பாலியல் தொழிலாளியோ அல்ல. ஒரு சக்கரவர்த்தியாக இருந்தால்கூட அவளது விருப்பத்திற்கு மாறாக அவளைத் தீண்ட முடியாது. ஒரு கெய்ஷாவின் காதலுக்காக ஏங்கி பித்துப்பிடித்தவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் பலர் உண்டு. அதேபோல் சாமுராய்களின் உறவிற்கு மிக உண்மையாக இருந்து, அவர்களுக்காகத்தம் உயிரையும் அர்ப்பணித்த கெய்ஷாக்களும் உண்டு.

 

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த விசித்திரமான கெய்ஷா உலகத்தில் வலம் வரும் கணவன்களை ஜப்பானிய மனைவிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான். ஜப்பானியக் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கம் இந்த கெய்ஷா. ஜப்பானின் மறுக்க முடியாத அடையாளமும் கெய்ஷாதான்.

இயற்கையிலேயே, பெண்களுக்கு ஆண்களைவிட மனோபலமும், தனித்திறன்களும் அதிகளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிக குளிர், அதிக வெப்பம் போன்றவைகளை தாங்கிக் கொள்ளும் சக்தியும் கூட பெண்களுக்கு அதிகமாக உள்ளது என்கின்றனர். பொதுவாகவே ஆண்குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் விரைவாக நடை பழகுவதும், பேசப்பழகுவதும், விவரமாக செயல்கள் செய்வதும் கண்கூடாகக் காணமுடிகிறது.

இது ஒரு புறமிருக்க, இந்தியாவில் 3 நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். Trust Law என்ற உலகம் தழுவிய பெண்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில், நம் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய உள் துறை செயலாளர் மதுகர் குப்தா ஓர்அறிக்கையில், 2009ம் ஆண்டு மட்டும் நம் இந்தியாவில் கிட்டத்தட்ட 10கோடி பேர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 40 சதவிகிதம் பேர் குழந்தைகள் எனவும் இந்திய மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ - 2009) தெரிவித்துள்ளது. இன்றும் பெண்கள் தனியே வெளியில் செல்வதற்கு தயக்கம் காட்டும் சூழ்நிலையே உள்ளது. இதற்கு நம் கலாச்சாரம் என்ற போர்வையும் முக்கியக் காரணமாகிறது. இந்தியாவில் பெரும்பாலும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அற்ற சூழ்நிலை இருப்பதாக நம்புவதால் பெண் குழந்தை பிறப்பதையே விரும்புவதில்லை. பெண் சிசுக்கொலைக்கான முக்கியமான காரணமாகவும் இதுவே ஆகிவிடுகிறது. அதுமட்டுமின்றி, பல இடங்களில் பெண்ணே, பெண்ணிற்கு எதிரியாக இருக்கும் சூழ்நிலைகளே அதிகம் இருப்பதே காண முடிகிறது. ஒற்றுமை என்ற எண்ணமே சுத்தமாக இல்லாதிருப்பதாகவும் கூறுகின்றனர். பெண் சமுதாயம் மறுமலர்ச்சியடைய வேண்டுமாயின், தேவையற்ற வரட்டு கௌரவம், பிடிவாதம், பொறாமை, புறம் பேசுதல், தாழ்வு மனப்பான்மை, சகபெண்ணினத்தையே எதிரியாகப் பார்க்கும் போக்கு ஆகிய தீய குணங்கள் களையப்பட வேண்டும் என்ற என் கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...