Tuesday, February 26, 2013

குடும்ப விளக்கு



பவள சஙக்ரி

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா!


எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மாவின் குரலில் உள்ளத்தை உருக்கும் இந்தப்பாடலைக் கேட்காமல் ஒருநாளும் பொழுது விடியாது கல்யாணிக்கு. விடியற்காலை 5 மணிக்கு குளித்து சுவாமி விளக்கேற்றி, வாசல் கூட்டித் தெளித்து, கோலம் போட்டு செம்மண் கரைகட்டி, சமையலறையில் நுழைந்தால் பம்பரமாய் சுழல வேண்டும்.

”கல்யாணி.. பேப்பர் வந்துடுத்தா?”

”வந்துடுத்துண்ணா.. அதோ அங்க டேபிளில் இருக்கே...”

“கல்யாணி.. காப்பி தரயாடீ... ?”


“இதோ தர்றேண்ணா...”

“நேரமாயிடுத்தோண்ணோ...... சீக்கிரம் வாடீ.. “

மணக்க,மணக்க பில்டர் காப்பியுடன் வந்தாள் கல்யாணி.

“ஏண்ணா காப்பிப் பொடி தீரப்போறதுண்ணா..  நேத்தைக்கே வர வேண்டிய சாய்பாபா காப்பி வேன் வரவேயில்லை போல.. என்னமோ தெரியல..”

“போன் பண்ண வேண்டியதுதானே.. செல் நம்பர் கொடுத்திருக்கான் இல்லியோ”

”ஆமாண்ணா  இதோ பண்றேண்ணா..”

“பேப்பர்ல என்ன முக்கியமான நியூஸ் சொல்லுங்கோண்ணா.. கேக்கலாம்”

“டெய்லி நியூஸ் பேப்பர் படின்னு சொன்னா கேக்கறதில்ல. சரி. பேப்பர்ல நியூஸ் என்ன இருக்கு..கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், இதை விட்டா அரசியல் விளையாட்டு.. நாடு போற போக்கே சரியில்ல. மனுஷாள்ட்ட நியாயம், தர்மம் எல்லாம் போயே போச்சு....”

” சரிண்ணா, மதியம் சாப்பிட என்ன செய்யணும்.. லேட்டாயிடுத்தே....”

“ஆமா..ஆமா.அப்புறமா பஸ் போயிடுத்தேன்னு குய்யோமுறையோன்னு சத்தம் போட்டுண்டு நிக்க வேண்டியதுதான்.. மோர் குழம்பும், கேரட் உசிலியும் பண்ணிடு. “

“கேரட் இல்லையேண்ணா, பரங்கிக்காய் இருக்கு, கூட்டு பண்ணவா?”

“அது மோர்க்குழம்புக்கு சூட் ஆகாதேடி.. கேரட் உசிலிதான் சரியான மேட்ச். இல்லேனா உருளைக்கிழங்கு கறி பண்ணிடு”

“இல்லேண்ணா, ஏற்கனவே உங்களுக்கு சுகர் கொஞ்சம் அதிகமாயிருக்கு.  இப்ப உருளைக்கிழங்கு கறி வேண்டாமே. இதோ இந்த முக்குல ராசு கடையில கேரட் இருக்கும். நான் போய் வாங்கிண்டு வந்துட்றேனே “

“அப்படியே, வெற்றிலை, சீவலும் வாங்கி வந்துடும்மா.. தீர்ந்து போச்சு”

“சரிண்ணா. “

“இன்னும் சமையல் ஆகலையா.. என்ன பண்றே.. சுறுசுறுப்பா வேலை ஆக வேண்டாமோ. நேரம் ஆயிடுத்தோன்னோ”

“இதோ ஆச்சுண்ணா.. காலையில சாப்பிட இடலியும், தக்காளி கொத்சும் பண்ணியிருக்கேன். “

“சரி போதும்.. நான் பாத்துக்கறேன்...”

“அப்பாடி.. எல்லா வேலையும் ஆச்சு. சொல்ல மறந்துட்டேனே... கேஸ் புக் பண்ணியிருக்கேன். இன்னைக்கு வருமே. பணம் இருக்காண்ணா.. ? அவன் சாயங்காலமாத்தானே வருவான்.. வந்து பாத்துக்கலாம்”

“சரிண்ணா.. நான் கிளம்பறேன். ஸ்கூல் பஸ் வந்துடும். இப்ப ஓடினாத்தான் போய் பிடிக்க முடியும். இல்லேன்னா டவுன் பஸ்சுல முட்டி மோதி சீப்பட்டுப் போகணும். நீங்க ரெஸ்ட் எடுங்கோ.. சாயங்காலம் பாக்கலாம்”

“அப்பாடி... உன்னை ஸ்கூலுக்கு அனுப்பறதுக்குள்ள போதும்னு ஆயிடறது... கிளம்பு.. நானும் போய் ரெஸ்ட் எடுக்கறேன்.. அப்புறமாத்தான் வாண்டட் காலம் பாக்கணும். துபாய்ல இருந்து ஏதாவது வேலைக்கு ஆர்டர் வருதான்னு பாக்கணும்...  சொல்ல மறந்துட்டேனே.. சாயங்காலம் வரும்போது ஏ.டி.எம் போய் ஒரு 1000 ரூபாய் எடுத்துண்டு வந்துடு. சரி நீ பத்திரமா போயிட்டு வாம்மா..”


நன்றி : இன்&அவுட் சென்னை வெளியீடு

1 comment: