Tuesday, January 29, 2013

தைப்பூசத் திருவிழாவும், எம் நூல்கள் வெளியீடும்

பவள சங்கரி
Inline image 1

’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழமொழி. பலவிதமான ஆன்மீகச் சிறப்புகளைக் கொண்டது தை மாதம். தை மாதத்தில், பூச நட்சத்திரத்தில் வரும் தினம் புண்ணிய தினமாக நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு வருகிறது. குறிப்பாக பௌர்ணமியும் சேர்ந்து வரும் தைப்பூசத் திருநாள் மிகவும் விசேடமானது. பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாதர் முனிவருக்கும், சிவசக்தியின் ஆனந்தத் தாண்டவக் காட்சி கிடைத்த அற்புத நாளாம்.

2013ம் ஆண்டு 27ம் நாள் பௌர்ணமி தினத்தில், சிவாம்சம் பொருந்திய சூரிய பகவான் மகர இராசியிலும், சக்தி அம்சம் பொருந்திய சந்திர பகவான் கடக ராசியில், பூச நட்சத்திரத்திலும் ஆட்சி பெற்று, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் இருப்பது பௌர்ணமி தினத்தில் வரும் தைப்பூசத் திருநாளில் மிகச் சிறப்பாம். இந்நாளில் துவங்கப்படும் எக்காரியமாயினும் நிறைந்த பலனை அளிக்கக் கூடியதாகுமாம்.  அறிவின் தேவதையாக போற்றப்படும் குரு பகவான் பூச நட்சத்திரத்தின் நாயகனாகப் போற்றப்படுகிறார்.

சிவசக்தியின் ஆனந்தத் தாண்டவத்தில் இவ்வுலகம் தோன்றியதாகவும், முதன் முதலில் நீர் பின்பு நிலம், நெருப்பு, ஆகாயம் என அனைத்து பஞ்ச பூதங்களும் தோன்றியதாகக்  கூறுவார்கள்.

சிவபெருமானாரின் அருளால் தோன்றிய முருகப் பெருமானுக்கு அன்னை பராசக்தி சகல சக்திகளையும் வழங்கியத் திருநாளும் இத்தைப்பூசத் திருநாள் என்பதாலேயே, முருகன் வாழும் குன்றுதோறும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பழனி மலை முருகன் கோவிலுக்குப் பாத யாத்திரையாகவும், விரதமிருந்து மாலையணிந்து பெரும் பக்தர் கூட்டம் வருவதைக் காண முடிகிறது. புனித நதிகளில் நன்னீராடி வழிபடுதலும் சிறப்பாம். கொங்கு நாட்டில், தைப்பூசத் திருநாளில்  குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாகச் செய்வதையும் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் உலகப்பம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள எங்களுடைய குலதெய்வமான அருள்மிகு பெரியாண்டவர் எல்லம்மாதாய் திருக்கோயிலில் 14ம் ஆண்டு குடமுழுக்கு மற்றும் 36ம் ஆண்டு தைப்பூச விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. வெளி நாடுகள் மற்றும் வெளியூர்களில் வாழுபவர்களும், இயன்றவரை வந்து கலந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 4000 மக்கள் கலந்துகொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக அன்னதானத்துடன் நடந்தேறியது.


‘பெரிய வீடு’ என்று சொல்கிற மூத்த பங்காளிகளின் குடும்பத்திலிருந்து பெண்கள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு தீர்த்தக் குடம் எடுத்து வருவார்கள். தீர்த்தம் எடுத்து வரும்போது சாதாரணமாக வருபவர்கள் கோவிலை நெருங்க, நெருங்க அந்தச் சிறிய தீர்த்தக் குடத்தில் அம்மன் எழுந்தருளிவிடுவதால் கனம் தாளாமல் வெகு சிரமப்பட்டே கோவிலினுள் கொண்டு வந்து தீர்த்தம் சேர்ப்பது மெய் சிலிர்க்கும் அற்புதமான காட்சி..

தீர்த்தக்குடம் வைத்து பூஜை ஆனவுடன், அதை வைத்து அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவு இடித்து படையல் இடுவார்கள். மலையென் அன்னம் குவித்து அதை லிங்க வடிவாக அமைத்து, சமைத்தப் பதார்த்தங்களை சிவலிங்க வடிவின் முன் வைத்து, பூசாரி அவர்கள் மஞ்சள் துணியால் தம் வாயைக் கட்டிக் கொண்டு பூசை செய்வார்கள். பூசை ஆனவுடன் படைத்த சாதத்தை பிசைந்து முதலில் ஒரு பெண் குழந்தைக்குக் கொடுத்துவிட்டு, அடுத்து மடிச்சோறு வாங்குபவருக்கு இட்டுவிட்டு, பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்குவார்கள். ‘மடிச்சோறு’ என்பது குழந்தை வ்ரம் வேண்டி அம்மனுக்கு விரதம் இருந்து வருபவர்களுக்கு மடியில் படைத்த சாப்பாட்டை முதலில் போடுவார்கள். அப்படி மடிச்சோறு வாங்கி உண்பவர்களுக்கு வெகு விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக இருக்கிறது. பிறகு அன்று முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது.
Inline image 2Inline image 3
விஜய் தொலைக்காட்சி புகழ், முனைவர் என். விஜயசுந்தரி அவர்களின் அருமையான ஆன்மீகச் சொற்பொழிவும் நிகழ்ச்சியை சுவை கூட்டியது. ஆன்மீக விழாவை சமுதாய விழாவாகவும் கொண்டாடுவதில் உள்ள பல்வேறு நன்மைகள் குறித்து மிக அழகான விளக்கங்களும், குழந்தைகள் வளர்ப்பு முறை குறித்தும் தம் கருத்துக்களைத் தெளிவாகப் பகிர்ந்து கொண்டார். இணையவெளி மூலம் செய்திகளும், நம் தமிழ் மொழி வளர்ச்சியும் எந்த அளவிற்கு உலகம் முழுவதும் பரவுவது எளிதாகிறது என்பது பற்றியும் விளக்கினார். என்னுடைய ஏற்புரையிலும், நானும் நம்முடைய வரலாற்றுச் செய்திகளை பதிவிட வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டேன். அதற்கான ஆதரவையும் வேண்டுகோளாக வைத்தேன்.

இந்த தைப்பூசத் திருநாளில் ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு செயலும் மிக நல்ல முறையில் நடந்தேறும் என்பது ஐதீகம் என்பதால், திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போடுபவர்கள், புதிய தொழில் துவங்குபவர்கள், குருவிற்கு உகந்த நாளென்பதால் கல்வி, கலை, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட அனைத்துச் செயல்களும் நன்மையாக முடியும் என்பார்கள். அந்த வகையில் இந்நந்நாளில் பெரியோர்களின் முன்னிலையில் எம் நூல்களையும் வெளியிட வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாக எண்ணுகிறேன். எல்லாம் சக்தியின் செயல்.

எம் நூல்களுக்கு மனமுவந்து அணிந்துரை வழங்கிய பெருமதிப்பிற்குரிய திரு நரசய்யா அவர்களுக்கும், திரு திவாகர் அவர்களுக்கும், திரு ஜெயபாரதன் அவர்களுக்கும்,  அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களுக்கும், அனைத்து நூல்களுக்கும் அழகாக அறிமுக உரை வழங்கிய  கவிஞர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், எழுத்தாளர் திரு ஜெகதீசன் அவர்களுக்கும், நிகழ்ச்சியில் எம்மை வாழ்த்திய பெரியோர் அனைவருக்கும் மற்றும் எம்மைப் பற்றிய அறிமுக உரை வழங்கியுள்ள முனைவர் அண்ணாகண்ணன் அவர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

1 comment:

  1. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் சங்கரி.

    ReplyDelete