Saturday, February 4, 2012

முகத்தின் அழகே அகத்தின் அழகு!

இன்று உலக புற்று நோய் தினம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமே உள்ள ஆரோக்கியம். முகத்தில் நோயின் உபாதைகள் இல்லாத உற்சாகமே அகத்திற்கும் அழகைக் கொடுக்கும். எத்துனை கோடி செல்வங்கள் இருந்தாலும் நோயிற் கிடவாமல், நொந்து மனம் வாடாமல், பாயிற் கிடவாமல் பாசக்கயிறு வந்து விடுமோ என்ற பயங் கொள்ளாமல் வாழ்கின்ற அந்த சலனமற்ற வாழ்க்கையே சுவர்கம். நம் வாழ்க்கையை சுவர்கம் ஆக்குவதும் , நரகமாக்குவதும் நம் கைகளில்தான் உள்ளது. சில நேரங்களில் தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் அமைதியான வாழ்க்கையில், புயலாக வந்து தாக்கும் சில நோய்களுக்கான காரணமும் புரியாது….. அதையும் எதிர் கொண்டு தாக்குதலை சமாளிக்கும் பக்குவத்தையும் பெற முயல வேண்டும். நமக்கு மிக நெருங்கியவர்கள் நம் கண் முன்னே சிரமப்படும் வேளையில் அதனைச் சமாளிப்பது சாமான்ய காரியமல்ல.

அந்த வகையில், உலக புற்று நோய் தினமான இன்று புற்று நோய் பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வாவது கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காரணம் மனித வாழ்க்கைக்கு சவாலாக இருந்து வரும் நோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது புற்று நோய். நம் இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றிற்கு சுமாராக ஏழு இலட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் போதுமான சிகிச்சையின்றியும், முறையற்ற சிகிச்சையினாலும் , 3,50,000 பேர் இறந்து போகிறார்கள் என்று சமீபத்திய ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியப் பெண்களில், ஒரு இலட்சம் பேர்களில் முப்பது பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், பத்தொன்பது பேருக்கு கருப்பைவாய் புற்று நோயும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் எளிய வழியில் தடுக்கக் கூடியதாகும், மார்பகப் புற்று நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்படுமானால் முற்றிலுமாக குணப்படுத்திவிட முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். நம் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் கிட்டத்தட்ட 95% மக்கள் புற்று நோய் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். படித்த பெண்கள் கூட ஒரு மெத்த்னப் போக்கால் சரியான விழிப்புணர்வு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். பொதுவாகவே கூச்ச சுபாவம் உள்ளவர்கள் பெண்கள். அதன் காரணமாகவே பெண் மருத்துவர்களிடம் கூட பல நேரங்களில் மார்பகப் புற்று நோய் பற்றிக் கூறவோ, தனக்கிருக்கும் அறிகுறிகளை மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவோ தயங்கிக் கொண்டு, நோயை முற்ற விட்டு விடுகிறார்கள். ஒரு சிலர் அதிக செலவாகுமே என்ற தயக்கத்திலேயே இயன்றவரை வெளியே சொல்லாமல் தள்ளிப் போட்டு விடுகிறார்கள். ஆனால் கால்ங்கடந்து தானாக வெளியே தெரியவரும் போது, நோயின் உபாதைகளும் அதிகமாகி, பணச்செலவும் இரட்டிப்பாகி, தம்மைச் சார்ந்தவர்களுக்கும் அதிக வேதனையைக் கொடுக்க வேண்டியதாகி விடும்.

கான்சர் என்கிற இந்தப் புற்று நோய் வருவதற்கான முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்காக இந்தியாவிலும், மற்றைய உலக நாடுகளிலும், ஆயுர்வேதம் மற்றும் அனைத்து முறைகளிலும், ஆய்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தில்லியில் ஆண்களுக்கு அதிகமாக நுரையீரல் புற்று நோய் இருக்கிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது. கடலூர் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதே இதற்கு முக்கியக் காரணம் என்று, இந்திய மருத்துவச் சங்கம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளது.

பொதுவாக பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு வரும் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் சிறு வயதினரிடையே கூட அதிகம் புற்றுநோய் காணப்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்காக, புற்று நோயாளிகள், நாளொன்றுக்கு ஒருவர் வீதம், வருகிறார்கள். புற்றுநோயால் நான்கு கட்டமாக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான நோயாளிகள் 4-வது கட்டத்தில், தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதாவது மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் குணமாக்க முடியாத நிலையில் தான் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். என்கிறார்கள் வல்லுநர்கள். வருடம் ஒரு முறையாவது பொது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அனைத்துப் பருவத்தினக்கும் நல்லது. நோய் இருப்பதற்கான ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலோ, நம் உடல் நலத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலோ, தயக்கமின்றி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவச் செலவிற்கு அஞ்ச வேண்டிய கட்டாயம் இல்லாமல் ஒருவரும் இருக்கவே முடியாது. ஆனாலும் பல நேரங்களில் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் இது தவிர்க்க முடியாததாகிப் போவதும் உண்டு. இருப்பினும், தகுந்த காப்பீட்டுத் திட்டங்கள் முன் கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்வது நலம். ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலேயே, நோய் வந்தால் என்ன செய்யப் போகிறோம், என்பதை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு என்று சொல்வதாலேயே வாய் வெந்து விடப் போவதில்லை. எதிர்பார்த்து பணம் சேமித்து வைத்த பிறகு, நோய் வராவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதை வேறு நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? சேமித்து வைத்திருக்கும் அந்தப் பணமே மனதிற்கு தெம்பையும் கொடுத்து, நோயிலிருந்து காக்கவும் செய்யும். ஆக நோய் வராம்ல் காப்பதும், நோய் வந்த பின்பு சரியான மருத்துவரை அணுகி, முறையான மருத்துவம் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

மார்பகப் புற்று நோய் பற்றி அறிந்து கொள்ள:

http://www.breastcancer.org/symptoms/understand_bc/index.jsp?gclid=COmHhr2hhK4CFQUb6wodNxKR3w

படத்திற்கு நன்றி : http://www.medicinenet.com/breast_cancer/article.htm

1 comment:

  1. விழிப்புணர்வைக் கோரும் மிக நல்ல பதிவு.

    ReplyDelete