Saturday, May 10, 2014

அம்மா என்னும் பிரம்மா!


பவள சங்கரி



அம்மா கைதேர்ந்ததொரு சிற்பி
பிண்டத்தைக் கொடுத்த பிரம்மாவுக்கு
அண்டத்தில் வாழும் உருவைச் செதுக்கிய சிற்பி!
கண்டம் விட்டு கண்டம் போனாலும் உண்மை
விண்ணம் ஆகாமல் உறுதியாய் வடித்த சிற்பி!
குருதியுடன் குறும்பும் குறும்புடன் அன்பும்
அன்புடன் பண்பும் பண்புடன் பாசமும்
பாசமுடன் நேசமும் நேசமுடன் மனிதமும்
சேர்த்தேச் செதுக்கினாள் சீரான உளிகொண்டு!

வாய்கோணி வழிந்தோடும் சலவாயில் சொல்தேடி
வாக்குச் சித்தராய்க் கிடந்த மழலையைத் தட்டி
வார்த்தெடுத்து வாழவைத்த வல்லமையான சிற்பியவள்!
சிற்றாடை கட்டிச் சிட்டாகப் பறந்து திரிய எத்தனித்தபோது
சிறப்பாக நடைபயில சினந்துநின்று பதம் பார்த்த சிற்பியவள்!
உற்றார் என்றாலும் ஊரார் என்றாலும் பரிவோடு பற்றுதல் அளவையும்
கற்றார் உளரென உளியால் உள்ளத்தே ஆழச் செதுக்கியவள்!
மாற்றாரையும் வஞ்சம் கொள்ளாமல் மதிகொண்டு வாழ்த்தும்
பேற்றைத் தவமாய் ஊட்டி உயிர்த்த உன்னதச் சிற்பியவள்!
பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகுதானென்று வசைபாடியே
பற்றில்லாமல் பதின்மத்தைக் கடக்கச் செய்த பெரும்சிற்பியவள்!
அன்பு மட்டுமே நிரந்தரம் மனிதம் மட்டுமே மதிநலம் யாக்கை நிலையாது
அதமம் இல்லாது அருளெனும் உதிரம் குழைத்து உருவாக்கிய சிற்பியவள்!
கந்தையும் சிந்தையும் கசக்கிக் கட்டிக் கருத்தாய் கடவுளாய் வாழ
வழிகாட்டி உள்கடவென உத்தமமாய் உருவாக்கிய சிற்பியவள்!
சொல்லொன்றும் செயலொன்றுமென செறிவற்று நில்லாமல்
சீர்தூக்கிச் சிதிலமில்லாமல் சிறப்பெய்தச் செய்த சிற்பியவள்!
களிமண்ணாய்க் கிடந்ததைப் பொன்னாய் மணியாய் சீராய் செதுக்கிய
ஓசையில்லா ஒளிவட்டமும் ஆடம்பரமில்லா ஞானமும் தேர்ந்த சிற்பியவள்!
கனிவும் பணிவும் பாலபாடமாய் உறுதியும் உன்னதமும் கன்னிப்பாடமாய்
தெளிவும் நம்பிக்கையும் வாழும்காலமாய் இறுதிவரை போராடும் வரமும்
குழைத்துச் சமமாய் மூச்சைக்கலந்து சீராய் வெளியிடச்செய்த சீர்மிகு சிற்பியவள்!!
சிப்பிக்குள் முத்தாய்ச் சீவனுக்குள் சிவமாய்ச் சீராகவாழும் தன்மையாய்
என்னை வார்த்தெடுத்த சீலமிகு சிற்பியவள்!!
அம்மா.. அவள்தான் என் பிரம்மா!!!

 நன்றி : வல்லமை

10 comments:

  1. ஒவ்வொரு வரியும் சிறப்பு...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. தனபாலன்.

      Delete
  2. அம்மா தான் பிரம்மா ! அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    அனைத்து வரிகளும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. திரு வை. கோ. அவர்களே.

      Delete
  3. படங்களைக் கண்டு மகிழ்ந்தேன் உங்களுக்கு என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அம்பாளடியாள் அம்மா.தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. கவிதை மிக அருமை.
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க சகோ. ராஜலஷ்மி. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  5. அற்புதமான வரிகள் செதுக்கிய சிற்பி வல்லமைக்கு வாழ்த்துக்கள்
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருக.. வருக.. திரு கில்லர்ஜீ. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

      Delete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...