Thursday, May 15, 2014

ஆத்ம இராகம்! (இலக்கியப் பூக்கள் -10 அகில உலக வானொலி)


பவள சங்கரி



மெல்லத் திறந்ததென் அகக் கண்கள்!
பசுமையாய் விரிந்த காட்சிகள் .
அம் மெல் அல்லி பூத்த தாமரைத் தடாகம்!

 கொத்துக் கொத்தாய் பூத்துக்குலுங்கும்
 சூல்கொண்ட குறுஞ்செடிகளின் சூழ்தல்
நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்….


வெளிர்நீல மலைக் குன்றுகளில்
பனிபடர்ந்த மரக் கன்றுகள்!
அந்தி மயங்கும் நேரம்..
கூட்டில் அடையப் போகும்
புள்ளினங்களின் மதுர கானம்.

 தியானத்தில் திளைத்த தீபமாய் மனம்.
ஒதுங்கி நின்ற அந்த  ஓடைக்கரையில் 
ஓசையில்லா ஒரு குச்சு வீடு!

குச்சுவீட்டின் கோடியிலொரு
குட்டி அறையில் ஓரான்மா!
குள்ளக் குளிர ஒளிரும் உன்னதம்!

எளிமையான வீட்டின் கொல்லைப்புறத்தில்
பசுமையான வயல் வெளி
கருசுமக்கும் பயிர்களின் நாணம்
நிறைமாதமாய் துவண்டிருக்கும் மோனம்
செவ்வரியோடிய கரையோரத்துக் காந்தள் 
மலர்களின் தலையசைப்பு நடனம்

குடில்... அழகானதொரு  குடில்
எளிமையான மனிதரும்
எழிலான புள்ளினங்களும்
பகிர்ந்து வாழும் அழகிய குடில்

குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை.
என் சாதி இல்லை..  என் மதம் இல்லை.
என் இனமும் கூட இல்லை!

 பெயர் மட்டுமே அடையாளமாக..
 அன்பு மட்டுமே ஆதாரமாக….
இயற்கையின் இனிமையைக்
கொண்டாடும் இனமாக…

அத்துனை அழகையும் பகிர்ந்து -
அள்ளிப் பருகும் இனமாக…
ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாய்
மலர்ந்த மனதுடன், பரந்த
இதயத்துடன் வாழும் இனம்….

ஓ..  என் அமைதியான அற்புதமான
ஆனந்தமான வாழ்க்கை அங்கே!!




Audio 140505_003.MP3



1 comment:

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...