Wednesday, May 7, 2014

பாட்டி சொன்ன கதை - 27பவள சங்கரி


ஆர்க்கிமிடீசும், அம்மாப்பேட்டையும்!


ஹாய் குட்டீஸ் நலமா?


இன்னைக்கு நாம பார்க்கப் போற கதை மிகச் சுவாரசியமானது. விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் வாசிக்கும்போது நமக்கு மலைப்பாக இருக்கிறதல்லவா?   நிறைய படித்தவர்களுக்கும், மிகப்பெரிய அறிவுஜீவிகளுக்கும் , அனுபவசாலிகளுக்கும் மட்டுமே அதெல்லாம் சாத்தியம் என்றுதானே நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை. இளம் வயதிலேயே விஞ்ஞானிகளான பலர் இருக்கிறார்கள். மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாகி, மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது அல்லவா. அதை அழிப்பதற்கு சப்பாத்திக்கள்ளியின் உட்பகுதியை அரைத்து, அதிலிருந்து வருகிற ‘மீயூசிலே ஐஸ்’ என்ற வழுவழுப்பான திரவத்தைப் பயன்படுத்தி, அந்த லார்வாக்கள் உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல் , இந்த ஜெல் கலந்த இரண்டே நாட்களில் இறந்ததோடு கொசுவின் கூட்டுப்புழுக்கள் மொத்தமாக அழிந்ததை நிரூபித்திருக்கிறார். இயற்கை முறையிலான இதனால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணுயிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறும்  பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவர், புதுவையைச் சேர்ந்த காஸ்ட்ரோ, தன் ஆசிரியையின் உதவியுடன் இதனைச் சாதித்துள்ளார். அதற்காகப் பல பரிசுகளும் வென்றிருக்கிறார் இவர். நம் நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த கொசுப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் உறுதியோடு இருக்கிறாராம், இவர். எத்துனை சமுதாய அக்கறை பாருங்கள் இந்த வயதிலேயே.. 


அதேபோல, கார்பநேட்டர் (தமிழில் புகைநீக்கி) என்ற இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி காற்றில் கலந்துள்ள மாசுவைக் குறைக்கவும், புவி வெப்பமயமாதலையும் குறைக்க முடியும் என்று சவால் விட்டு அதனைச் சாதித்தும் காட்டியிருக்கிறார் பாலாஜி என்ற மாணவர். கார்பநேட்டர் என்பது கார்பன்-டை-ஆக்சிடை(CO2) சோடியம் ஹைற்றாக்சைடின் (NaOH) உதவியுடன் சோடியம்-பை-கார்பனேட் (NaCO3)ஆக மாற்றும் கருவியாம். இதன் அமைப்பு ஆங்கில எழுத்தாகிய T -ஐ தலைகீழாகக் கவிழ்த்த வடிவமாக உள்ளது.  இதன் மேல் உள்ள புனல் மூலம் NaoH-ஐ ஊற்றும்போது, CO2-வை கரைத்து, அது  NaCO3 ஆக மாறுகிறது. இதனைக் குளிர்வித்து வெளிக்காற்றின் மூலம் CO2 ஐ தனியாகப் பிரித்து -72 C ல் குளிரூட்டும்போது,  உலர் பனிக்கட்டி கிடைக்கிறது. இதனை கடலுக்கு அடியில் செலுத்த வேண்டும். இது கடல் நீரில் கரையாது. இதன் மூலம் காற்று மாசுபடுதல் குறைகிறது. புவி வெப்ப மயமாதலும் குறைகிறது, என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார், இவர். கோவை அருகிலுள்ள, அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் சிற்றூரில் இருக்கும் , ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பாலாஜி என்பவர், தன் தம்பி ஹரிஹரன் எனும் எட்டாம் வகுப்பு படிக்கும் இவரின் உதவியுடன் இதைச் சாதித்திருக்கிறார் . பெரிதாக கல்வியாளர்கள் நிறைந்த குடும்பம் என்பதெல்லாம் இல்லை. இவர்களுடைய தந்தை சாதாரண நெசவுத் தொழில் செய்பவர்! 

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல, இது போல பல இளம் விஞ்ஞானிகள் நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அன்றாடம் எதையோ கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள். சரி நம்ம கதைக்கு வருவோம். மேட்டூர் அருகில் அம்மாப்பேட்டை எனும் ஊரில் காத்தவராயன் என்று ஒரு சிறுவன் இருந்தான்.  ”அவனுக்கு வேற காத்தவராயன் அப்படீங்கற பேரு புடிக்கலையாம்.  தினமும் என்கிட்ட அதுக்காக சண்டை போடுவான். அவங்க அம்மா ஆசையா வச்ச பேருன்னு வேற வழியில்லாம வச்சிக்கிட்டிருக்கான். அவங்க அம்மா மட்டும் இப்ப உசிரோட இருந்திருந்தா இந்நேரத்துக்கு அந்தப்பய இந்த அழகான பேரை மாத்தியிருப்பான்” என்று அவனோட பாட்டி புலம்பித் தீர்ப்பாங்க. அவனுக்கு நாகரீகமா பெயர் வைக்கணுமாம். தாயில்லாத பையன் என்று கொஞ்சம் அதிகமாகத்தான் செல்லம் கொடுத்துவிட்டோமோ என்று பாட்டி வருத்தப்படும். அவனோட அப்பாவும் தச்சு வேலைக்காக கேரளா பக்கம் போயிருக்கறதால பாட்டியும், பேரனும் ஒருவருக்கொருவர் ஆதரவா நண்பர்களா இருந்தார்கள்.  பாட்டிக்கு சின்னச் சின்ன வேலைகளுக்கெல்லாம், உதவி செய்வான். அன்று பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியவன், பாட்டியைக் காணாமல் தேடிக்கொண்டு தோட்டத்தின் பக்கம் சென்றான். அங்கு பாட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். காத்தன் முகத்தைப் பார்த்தவுடன் பாட்டி அப்படியே கையிலிருந்த வாளியை கீழே போட்டுவிட்டு ஓடிவந்து, “காத்தா, கண்ணா, என்னப்பா ஆச்சுது? ஏன் இம்புட்டு வருத்தமா இருக்குற சாமி.. உடம்பு, கிடம்பு சரியில்லயாப்பா.. ஆசுபத்திரிக்குப் போவமா..” என்று பதட்டத்துடன், பேரனின் தலையிலும், கழுத்திலும் கையை வைத்துப் பார்த்த பாட்டியை அப்படியே லேசாக ஒதுக்கி,

 “அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி. நான் பள்ளிக்கூடத்தை விட்டு நின்னுக்கலாம்னு பாக்குறேன். அப்பா மாதிரி நானும் வேலைக்குப் போறன் பாட்டி.. ”

“அடப்பாவி மக்கா.. உனக்கு ஏண்டா பயலே புத்தி இப்புடிப்போவுது. உங்கப்பன் இப்புடித்தான் படிக்காம ரகளை கட்டி, இன்னைக்கு கூலி வேலைக்கு ஊர், ஊரா போய்க்கிட்டிருக்கான், பாரு. உனக்கு அந்த பொழப்பு வேண்டாம் ராசா...  நீ நல்லா படிச்சு பெரிய டாக்டரா வாரோணுமப்பா.. நம்மூர்ல ஏழை, பாளைங்களுக்கு இலவசமா வைத்தியம் பாக்கணுமப்பா நீ. உங்கம்மாவுக்கு வெளியூருக்கு கூட்டிப்போய் நல்லா வைத்தியம் பாத்திருந்தா அவ பொழைச்சிருப்பான்னு இன்னும் எம் மனசுல ஒரு குறை இருக்குதுப்பா. நம்ம ஊர்ல இனிமே அப்புடி ஒரு சாவு யாருக்கும் வரக்கூடாது ராசா.. நீ நல்லா படிக்கணும் ராசா.. “

பாட்டியின் கண்களில் தாரை, தாரையாகக் கண்ணீர் வருவதைக்காணச் சகிக்காத காத்தன், “பாட்டி, நீ அழுவாத பாட்டி. நான் எப்படியாவது படிச்சுப்போடுவேன். எனக்கு இந்த அறிவியல் பாடம்தான் வரமாட்டீங்குது. இன்னைக்குக்கூட டீச்சர் சொல்லிக்கொடுத்த பாடம் எனக்குப் புரியவே இல்லை பாட்டி. அந்த அறிவியல் பாடம் நல்லா படிச்சாத்தான் டாக்டர் ஆக முடியும். அதான் எனக்கு ஒரே வெசனமா இருக்கு” என்று சொல்லி தானும் அழ ஆரம்பித்துவிட்டான். அவன் கண்களில் கண்ணீரைப் பார்த்தவுடன் பாட்டி பதறிவிட்டார். பின்பு  டியூசன் வச்சி படிக்கலாம் என்று அவனைச் சமாதானப்படுத்தி, கூட்டிக்கொண்டு போய், சாப்பாடு போட்டு உட்கார்ந்து வீட்டுப் பாடம் செய்யச் சொன்னார். பாட்டி கிணற்றில் நீர் இரைத்து வைத்துவிட்டு வரலாம் என்று சென்றவர், பின்னாலேயே காத்தனும் சென்றான். பாட்டி நீர் இரைப்பதற்காக கிணற்றில் வாளியை விட்டு, தண்ணீரை இழுக்கும் போது கயிறு அறுந்து வாளி கிணற்றின் உள்ளே விழுந்துவிட்டது. அது பழமையான பித்தளை வாளி என்பதால், ரொம்பவும் கனமாக இருந்தது. பாட்டியும், பேரனும் சேர்ந்து பாதாளச்சூழி கொண்டு, அந்த வாளியை எடுக்க முயற்சி செய்தார்கள். அப்போது நீருக்குள் இருந்து வாளியை எடுக்கும் போது துளியும் தெரியாத கனம், வாளி நீருக்கு மேலே வெளியே வந்தவுடன் கனமாக இருப்பது பளிச்சென்று புரிந்தது!! உடனே, அவனுக்கு ஞானோதயம் பிறந்தது போல இருந்தது. ஆம் இதற்குத்தான் இன்று வகுப்பில் ஆசிரியரிடம் மரமண்டை என்று திட்டு வாங்கி நொந்துபோய் வந்தான்.. ஆம், ஆர்க்கிமிடிசு தத்துவம்தான் அது!

 ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இத்தத்துவம் முழுமையாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். ஒரு பகுதியாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். அதாவது ஒரு பொருள் ஒரு திரவத்தினுள் மூழ்கியிருக்கும்போது எந்த அளவு திரவத்தை பெயர்த்துள்ளதோ அதன் எடைக்குச் சமமாக ஒரு மிதப்பு விசையை எதிர்கொள்ளும்.

இந்த தத்துவத்தை வெகு எளிதாக நடைமுறையில் புரிந்து கொண்டவுடன், அறிவியல் பாடத்தின்மீதே அவனுக்கு ஒரு பெரும் விருப்பம் ஏற்பட்டது. பாடத்தை எப்படி உள்வாங்கிப் படிக்க வேண்டும் என்ற மந்திரத்தை நொடியில் கற்றுக்கொண்டான் அவன். கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்து படிப்பது மனதில் அவ்வளவு எளிதாகத் தங்காது. அதே சமயம் அதன் கருத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, படித்தால் எத்தனை காலமானாலும் அது மறக்காது என்னும் அடிப்படைத் தத்துவத்தை உணர்ந்து கொண்டவுடன் அவனுக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் பன்மடங்காக உயர்ந்துவிட்டது! அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் எதிர்பார்க்காத வகையில், ஆர்கிமிடிசின் வரலாறு, தத்துவம் என மற்ற மாணவர்களுக்கும் புரியும் வகையில் மளமளவென பாடமே எடுத்துவிட்டான்.

அரசர் இரண்டாம் ஹியரோ என்பவர், ஒரு கோவிலுக்காக தங்க கிரீடம் ஒன்று செய்ய வேண்டுமென்று அதற்காகத் தூய தங்கத்தை பொற்கொல்லரிடம் வழங்கியிருந்தார்.  மிக அழகான வடிவில் கிரீடம் செய்து முடிக்கப்பட்டு வந்து சேர்ந்தவுடன், அரசனுக்கு அந்த பொற்கொல்லன்மீது சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை அவன் அதில் ஏதேனும் கலப்படம்  செய்திருக்கலாமோவென்று. ஆர்கிமிடீசைக் கூப்பிட்டு இதனைக் கண்டுபிடிக்கச் சொல்லிப் பணித்தார். அவரும் பல நாட்களாக ஏதேதோ முறைகளை முயன்றுகொண்டிருந்தார். நாட்கள் கடந்து கொண்டிருந்தது! இதன்பிறகு ஆர்க்கிமிடீஸ் ஒருநாள் குளித்துக் கொண்டிருக்கும்போது குளியல் தொட்டியில் இருந்த, தண்ணீரின் உயரம்,  தான் உள்ளே இறங்கும்போது அதிகமாவதைக் கண்டார். உடனே அரசரின் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதே என்ற உற்சாகத்தில், குளியல் அறையிலிருந்து அப்படியே, தன்னை மறந்த நிலையில், யுரேகா.. யுரேகா (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக்கொண்டே வீதியில் ஓடினார். ஆம் அவர் அதன் தத்துவத்தைக் கண்டுபிடித்துவிட்டார்!

இந்த கொள்கைப்படி ஒரு பொருள் ஒரு திரவத்தினுள் மூழ்கியிருக்கும்போது எந்த அளவு திரவத்தை அது பெயர்த்துள்ளதோ அதன் எடைக்குச் சமமாக ஒரு மிதப்பு விசையை எதிர்கொள்ளும். இந்த கொள்கையைப் பயன்படுத்தி, ஒரு தராசில் ஒரே எடைகொண்ட தூய தங்கத்தை ஒருபுறமும் கிரீடத்தை மறுபுறமும் வைத்து அதை நீரில் மூழ்கடித்தால் தராசு தூய தங்கத்தின் பக்கம் சாய்ந்தால் அது வெள்ளி கலக்கப்பட்ட கிரீடமென்று நிரூபணமாகிவிடும். இதுவே ஆர்க்கிமிடீசின் கண்டுபிடிப்பாகும்!யுரேகா! என்பது இன்றும் கலிபோர்னியா மாநிலத்தின் தாரக மந்திரமாகவே உள்ளது.

அமெரிக்க மாநிலம் ஒரேகானில் அனைவரும் மருத்துவ வசதியை அணுகமுடியவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு 'ஆர்கிமிடிசு இயக்கம்  என்று பெயர் வைத்துள்ளார்கள். 

காத்தவராயன், கல்வியை ஒரு பாரமாகக் கருதாமல், அதை ஒரு வரமாகவும், வாழ்க்கையையாகவுமே எடுத்துக்கொண்டு கற்று வந்தான். பல தத்துவங்களின் இரகசியங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டதன் விளைவாக பிற்காலத்தில் ஒரு பெரிய மருத்துவ விஞ்ஞானியாகி, தன் பாட்டியின் விருப்பத்தையும் நிறைவேற்றியதோடு, பலவிதமான நோய்க்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறான்.  அவனுடைய தாயின் ஆன்மா அவனை வாழ்த்திக்கொண்டிருக்கிறது!

http://www.famousscientists.org/archimedes/

1 comment: