Monday, December 31, 2012

மெய்ஞ்ஞானத்திலிருந்து தோன்றியதே விஞ்ஞானம்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!


வல்லமைக்கு நன்றி


நேர்காணல் – பவள சங்கரி

புகழ் கண்டு மயங்காதே
புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே.

இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதராதே
இகழ்ந்துரைக்க எண்ணாதே

தியானம் என்றால் என்ன?

“எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் தியானம். நல்லெண்ணத்தை நாம் கொள்ளும்போது அதுவே நம் செயலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நற்சுவாசத்துடன், நல்லெண்ணத்தை நாம் வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் அதற்கு தகுந்தவற்றை ஈர்த்து நம் செய்கைக்கு துணை புரிகின்றது.”
“தியானம் மூலம் தம் குருதேவர் கொடுக்கும் பாடங்களின் மூலம் தம்முடைய மெய்ஞ்ஞானத்தை உயர்த்திக் கொள்வதோடு தம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு அதன் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். சப்த ரிஷிகளின் துணையோடு மாமகரிஷிகள், நவகோள்கள் , ராசி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்போடு தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள்லாம்” என்று ஆணித்தரமாகக் கூறும் ஞானத்திருமதி ராஜம்மாள் பாலசுப்பரமணியம் அம்மையார், தன்னுடைய 70 அகவையைத் தாண்டியவர். நல்ல ஆரோக்கியமும், தெளிவான சிந்தனையும், கலகலப்பான உற்சாகமும், அமைதியான மனோநிலையும் கொண்ட இளம் மங்கையாக வலம் வருதலே இதற்கான சான்று.. ஆவிகளுடன் தம்மால் உரையாட முடியும் என்றும் அதற்கான அனுமதி கிடைக்கும் போது மட்டுமே அது குறித்த செய்திகளை பகிர்நது கொள்ள முடியும் என்றும் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இது குறித்து அவரிடம் மேலும் சில வினாக்களும் அதற்கான அவ்ருடைய விடைகளும் பல ஐயங்களை தெளிவாக்கும் விதமாக அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ’கவாலியர்’ எம். எஸ் மதிவாணன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி இவர். இவர்களின் குடும்பமே ஆழ்ந்த ஞானமும், எண்ணமே கடவுள் என்ற உறுதியான நிலைப்பாடும், நேர்மையே  இலட்சியம் என்ற கடப்பாடும் கொண்டு செயல்படும் பாங்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது.


தியானத்தினால் சாதிக்கக்கூடியவை எவை?

தம்முள் இறைவனைக் காணும் சக்தியைப் பெற்று தெய்வ நிலை பெறச் செய்வதே தியானம். இல்லறத்தை நல்லறமாக்கி, இல்லத்தையே ஆலயமாக்கி, இல்லறத்தில் இருந்தபடியே உயர் ஞானம் பெற்று இறைத்தன்மையை அடையச் செய்வதே தியானம்.

இறைவனை எங்கனம் அறிவது?

பாலாகி, தயிராகி, மோராகி, வெண்ணெயாகி,நெய்யுமாகி உருப்பெற்ற பிறகு மீண்டும் மாற்ற முடியுமா? அதை நெய்யாக மட்டுமே பயன்படுத்த முடியும். கொடிய விடமும், அமுதுணவும் அனைத்துமே ஆண்டவன் படைப்புதான். பாலைப்போல எண்ணமும், பாலின் உருமாற்றத் தயிரைப்போல் இவ்வெண்ணத்தால் எடுக்கும் சுவாசமும், மோரைப்போல் கடையப்பெற்ற உணர்வும், வெண்ணெயைப்போல் அவ்வுணர்வின் வழித்தொடர் திரட்டலும், நெய்யைப் போல ஞானமும் பெற்றால் அந்த ஞானத்தையே ஒவ்வொரு ஆத்மாவும் அவரவர்கள் எதன் வழித்தொடரை செயலாக்கும் குறிக்கோள் கொண்டுள்ளனரோ அவற்றில் நெய்யைப் போன்று செயல்படுத்தலாம்.

தியானத்தின் மூலம் கடவுளைக் காண முடியுமா?

“எண்ணமேதான் கடவுள்;
கடவுளேதான் எண்ணம்;
எண்ணத்தை பரிசுத்தப்படுத்தினால்
கடவுளைக் காணலாம்!

இயற்கையே கடவுளாக்கி, அன்பையே தெய்வமாக்கி நல்லெண்ணம், நல் சுவாசம் எடுக்கும் முறையை வழிப்படுத்துதல் வேண்டும். இயற்கையே கடவுள் என்றால் இயற்கையின் படைப்பான நாமும் கடவுள்தான். இயற்கையின் கடவுளான நாம் அன்பான தெய்வ உணர்வை உணர்ந்தோமானால், அத்தெய்வீக நல்லுணர்வு கொண்ட சுவாசம் நாமெடுக்கும் பொழுது அவ்வுணர்வால் ஏற்படும் நல்லெண்ணமுடன் கூடிய சுவாசத்தால் இறைவனின் இயற்கைப் படைப்பிற்கு நற்சக்தி ஒளி அலை கூடுகின்றது.

இயற்கையாய் உள்ள் நம் பூமியின் உணர்வின் சுவாச நிலைக்கொப்ப அமில குணக்காற்றைத்தான் பால்வெளி மண்டலத்தில் பலவாக பரவியுள்ள அமில குண நிலையையே சூரியனின் அமில குணத்திற்கும், பூமியின் உணர்வு அமில சுவாச மோதலுக்கும் தனக்கு வேண்டிய அலையை மட்டும் எடுப்பதினால், இன்றுள்ள இவ்வகத்தக் காற்று மண்டல நிலையையே நாமெடுக்கும் நல்லுணர்வின் கூட்டுச் சக்தியினால் எடுக்கப்படும் ஜெபசுவாச அலையின் ஈர்ப்பினால் பூமியையே புனிதத் தன்மை ஈர்ப்பாக்கலாம். எண்ணிலடங்கா மனித ஆத்மாக்களின் எண்ண சுவாசமும் மற்ற இனவர்க்கங்களின் சுவாசமும் நம் பூமி எடுத்து வெளிகக்கும் சுவாசமுடன் கலந்து வெளிப்படும் இயற்கையையே நற்கடவுளாக்க நல்லெண்ண சுவாசம் நாம் எடுக்க வேண்டும்.

நல்லெண்ணம் மட்டுமே இறைவனைக் காணும் வழி என்றால் எண்ணத்தை பரிசுத்தப்படுத்துவது எங்கனம்?

பசி, தூக்கம் மற்றும் இயற்கையின் சில மாற்றங்களும் நம் உடலில் எண்ணத்தைச் செலுத்தாமலே உணர்வினால் ஏற்படுகிறது. உணர்வால் எண்ணத்தால் தெரிவதைப் போன்று எண்ணத்தைக் கொண்டு உணர்வையும் மாற்றி அமைக்க முடிகிறது.

ஜீவனுக்கே சக்தி நீர். அந்நீர் சக்தியுடன் வளரும் பூமியில் எப்படிச் சில இரசாயணத் திரவங்களை எடுத்து அவற்றைப் பக்குவ முறையினால் மாற்றிய பிறகு அதே நீரை அவற்றில் சேர்த்தால் கெட்டுவிடுகிறது. நீரில்லாமல் எண்ணெய் இல்லாவிட்டாலும்  நீர் சேர்த்தால் எண்ணெய் கெட்டுவிடுகிறது. இதைப்போன்று நம் எண்ணத்தை நாம் செலுத்தும் முறைப்படியே தெயவமாகவும் ஆகலாம்  அன்றி பேயாகவும் சுழலலாம்.. ஆக நல்ல எண்ணங்களே நம்மை கடவுட்தன்மை பெறச்செய்கிறது. அதாவது, உணர்வுடன் கூடிய எண்ணங்களைச் செலுத்தி பலவாக நிலைகளைப் புரியும் ஆற்றல் கொண்ட முதிர்ச்சியுற்ற பிறப்பினனான மனிதன், எந்த உணர்வின் அடிப்படையில் வளர்ச்சியின் வழிப்பெற்றானோ அதே உணர்வலைக்குத் தன்னை வழிநடத்த இந்த ஞானத்தைச் செலுத்துவானேயானால் அவனே தேவனாகலாம்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் கோபம், குரோதம், வஞ்சனை, வெறி போன்ற தீய எண்ணங்களை வளர்த்து ஆண்டவனின் ஆலயத்தை அசுத்தம் செய்யாமல், நம் எண்ணத்தை உயர் ஞானம் கொண்டு சொல்லாலும், செயலாலும் , நம்முள் இருக்கும் இறைவனை வணங்குதலே அந்த இறைவனை நேரில் காணும் மார்க்கமாகும்.

மதம் என்பதன் அடிப்படையில் இறைநிலையை அடையும் தன்மை பற்றி தங்கள் கருத்து என்ன?

பேரண்ட பூமியின் காற்று மண்டலத்தின் ஈர்ப்பு ஓட்டத்தில் ஓடும் நம் பூமி ஒலிக்கும் நாதம்தான் ‘ஓம்’ என்ற நாதம். இந்த ‘ஓம்’ என்ற நாதமே பூமியின் சகல ஜீவராசிகளுக்கும் அடிப்படை. இந்த ‘ஓம்’ என்ற நாதத்தின் ஒலியில்தான் எல்லாமில் எல்லாமாய் நாம் உள்ளோம். மற்ற மண்டலங்களில் இவ்வொலியின் தன்மை மாறுபடுகிறது. நம் பூமியின் ஜீவ ஒலியான இந்த ‘ஓம்’ என்ற ஒலியை நாம் எடுக்கும்போது நம் ஆத்மாவும் அவ் ‘ஓம்’ என்ற ஒலியுடனே ஐக்கியப்படுகிறது. இதையே கிறித்துவ மதம் ‘ஆமென்’ என்றும் முகமதியர்கள் , ‘அல்லாஹீ அக்பர்’ என்றும் நாதமெழுப்புகின்றனர்.

மனித இனங்களை மதத்தினால் அவர்களுக்கு நல் உணர்வுகளும், சில வழித்தொடர் வாழ்க்கையில் நல் வழிகளையும் ஒழுங்குபடுத்தி மதம் என்ற அடிப்படை பிணைப்பிற்குள் ஓர் கூட்டு அமைப்பு ஏற்படுத்தி மனித இனங்களின் எண்ணங்கள் சிதறாமல் ஒழுங்கு முறையென்ற வேலி அமைத்து பாதுகாப்பு உணர்வைக் கூட்ட வழிவந்தது மதம். ஆனால் வளர்ந்துவிட்ட இந்த சமுதாய வளர்ச்சிப் பெருக்கத்தில் மதத்தைக் கொண்டு இனத்தைப் பிரிக்கும் துவேச அலைகளும், தன் மதம் என்ற வெளியின் பிணைப்பும் வளர்த்துக் கொண்டு ஒன்றே குலமான மனித இனத்தை ஒருவனே தேவனாக உணரும் வழித் தொடரை மதங்களைப் பிரித்து, உணர்வுகளை மாற்றி தத்தம் சமுதாய இச்சையின் வெறியில் சுழன்றுள்ள் இக்கலியின் காலத்தில் வளர்ந்துவிட்ட இனப்பெருக்கத்தில் எந்த அடிப்படையில் மதம் உருவானதோ அதற்கெல்லாம் மீறிய இனப்பெருக்கத்தில் உள்ள சமுதாய வளர்ச்சியில் மாற்றம் கொண்டுள்ள இந்நாளிலும் இம்மதம் என்ற பிடியிலிருந்து எல்லா மதமும் நம் மதம்தான் என்ற மனித ஆத்மாவின் உயர்ந்த ஞான மதம் செல்ல வேண்டும். எம்மதமும் தனதாகக் கொள்ளும் ஞான உணர்வுதான் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும். எண்ணத்தால், உணர்வால் ஞான மதம் ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

”காற்றிலிருந்தே ஆகாரம் பெற முடியும்” என்ற தங்கள் கருத்தின் அடிப்படை யாது?

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழிகாற்று ஆகாரம் உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் உயிர்காற்று நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியோடி செயல்படும் விதமே, சரீரத்தை இயக்கி தொழில்படும்பொழுது உடலில் பசி, தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்காற்றின் மூலம்தான் சரீரசெயல் அனைத்தையும் ஓர் கட்டுக்கு வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலைநிறுத்தி, ஒருமையுள் ஐந்திடக்கிட்டால், தியானத் தொடரே நிலைபெற்றுவிட்டால், காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைவு ஏற்பட்டுவிடும்!

மனிதன் மகானாவது எங்கனம்?

வாழ்க்கையில் எளிமையும், ஆத்மாவில் சுகத்தையும் அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன், மனிதனாகும் முதல் நிலை. இம் முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு உயர்ஞானத்தின் மெய்ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும். மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகும் நிலை!

தியானத்தின் பலன் பற்றி….?

காற்றலையில், ஜீவ நீர்ச்சக்தியில் சூரியனுக்கும் பூமிக்கும் மற்ற கோள்களின் தொடர்புக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் சுழல் ஓட்டத்தினால் காந்த மின் தொடர்பு ஒலியாகி, ஒளியாகி, நீராகி உருவாகும் உயிர்த்துடிப்பு ஒவ்வொன்றிலுமே காந்த மின் அலை வளர்த்து, சக்தியின் தொடர்பை மனித உணர்வு எண்ணத்தால் ஜீவகாந்த நினைவு அறியும் அறிவு, பகுத்தறியும், ஞானமுதிர்ச்சியுற்ற நம் சரீரத்தை, நாம் நம்முள்ளுள்ள ஜீவகாந்த நுன்ணலையை உயர்காந்த ஈர்ப்பு நிலைக்கு இவ்வுடல் என்ற கோளத்தையே எண்ணத்தில் தியானம் கொண்டு மனிதனின் உயர்வு நிலைக்கு ஒளிநிலை என்றும், பிறவாநிலை என்றும் உணர்த்திய வழித்தொடருக்குச் செல்ல வழிகாட்டுவதே தியான முறை.

புறத்தடைகளைத் தகர்த்து அகத்தினுள் ஆழ்ந்து தியானம் செய்யும் முறை யாது?

கண்மூடி அமர்ந்து முதலில் தாய், தந்தை, அடுத்து குலதெய்வத்தையும், அடுத்து குருவையும் வணங்கிப் பின் உயர்வு வழி காட்டிய நற்குண தெய்வநிலை பெற்றோரின் எண்ணமுடன் நம் எண்ணத்தைச் செலுத்தி பின் எண்ணத்தை மேல்நோக்கி சூரியனின் எதிரில் நாம் உள்ளதாக எண்ணி ‘ஓம்’ என்ற ஒலியுடன் சுவாசத்தை மேலே சூரியனிலிருந்து எடுத்து சூரியனை புருவ மத்தியில் பொட்டு வைக்கும் இடத்தில் நினைத்து,  எண்ணத்தைக் குவித்து, சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், மகரிஷிகள் ஆகியவர்களை மனதில் எண்ணிச் சாந்தமாய் சுவாசமெடுத்து தியானித்துப் பழக வேண்டும்.
அப்போது நம் வாழ்க்கைத் தொடர்பில் நடந்தவை, நடப்பவை, நடக்க வேண்டியவை போன்ற எண்ணங்கள் யாவும் இவ்வுணர்வில் இச்சரீரம் பெற்ற காலம் முதற்கொண்டு ஓடிய நினைவோட்டங்கள் மோதும். அதே ஓட்டத்தில் எண்ணத்தைச் செலுத்தாமல், அவரவர்கள் தெய்வமாய் வணங்கும் குல தெய்வத்தின் தொடர்பு கொண்டு சாதி, மத வேற்றுமை இன்றி முன்னோர்களால் வழிப்படுத்திக்காட்டிய தம் குருத் தொடர்பைக் கூட்டிக்கொண்டு , நாம் எண்ணும் குரு சூரியனில் இருந்தே நம் ஆத்மாவை உயர்வு நிலைப்படுத்தும் உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அறியும் தொடர்புடன் உணர்வை ‘ஓம்’ என்ற ஒலியுடன் இச்சுவாசத்திற்கு உயர்காந்த நுண் அலையை எடுக்க வேண்டும்.

இச்சரீரம் ஜீவகாந்த சக்தி கொண்டது. நாமெடுக்கும் அலை உயர்காந்த நுண்ணிய ஒலி சக்தி பெற்றது. உடல் என்ற ஜீவசக்தி உணர்வு எண்ணத்தில் உயர்காந்த தொடர்பலையை அறியும் ஆற்றலுடன் தியானத்தை மேற்கொண்டோமானால் மனிதனுக்கடுத்த தெய்வநிலை இச்சரீர பிம்பத்திலிருந்தே ஒவ்வொருவரும் பெறலாம்!!

நாமும் தெய்வநிலையைப் பெற முயற்சிப்போம் என்ற நற்சிந்தையுடனான மன நிலையுடன் ராஜம்மாள் அம்மையாரை வணங்கி விடைபெற்று வந்தோம்.




2 comments:

  1. சிறப்பான நேர்காணல் இவை மேலும் தொடர இனிய
    புத்தாண்டில் எம் நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. அன்பின் அம்பாளடியாள் அவர்களுக்கு,

    தங்களுடைய வருகைக்கும், வாசிப்பிற்கும், அன்பான வாழ்த்திற்கும், உற்சாகமான வார்த்தைகளுக்கும் எம் மனம் கனிந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete