Monday, December 31, 2012

வள்ளியம்மை





பவள சங்கரி

கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் .வீரதீர சாகசங்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்குவதற்குத் தயாரானார். சுனாமியின் போது தம் உயிரைப் பணயம் வைத்து, இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இளைஞன், ஒகேனக்கல் ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த படகிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய முதியவர், இளம் பெண்களைக் கடத்தும் கும்பலைக் காட்டிக்கொடுத்த நபர், குழந்தைக் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க உதவியவர் என முதன்மை வரிசையில் அமர்ந்திருப்போரின் மத்தியில் தம்முடைய மனைவி வள்ளியம்மை நாச்சியார் என்கிற வள்ளியும் அமர்ந்திருப்பதைக் கணவன் முத்துமணி. உற்று நோக்கியவாறு காத்திருந்தான்.


பெண்கள் நாட்டின் கண்கள், பெண்கள் சக்தியின் அம்சம், ஆவதும் பெண்ணாலே, தீமைகள் அழிவதும் பெண்ணாலே என்ற வாசகங்கள் அனைத்தும் இன்று நிதர்சனமாக கண் முன்னே காண்பது பெருமையாக இருக்கிறது. அமைதியே உருவாக, குடும்ப விளக்காக, இருக்கும் பெண்மணிகள் தம் கண் முன்னே நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கும்போது உக்கிர காளியாகவே காட்சியளிக்கிறார்கள். திருமதி வள்ளியம்மை போன்று ஒவ்வொரு பெண்ணும் துணிச்சலும், கூர்மையான மதிநுட்பமும கொண்டு, சீறுவோர்ச் சீறு என்று ஐயன்  பாரதி சொன்னது போன்று இருந்தால் நம் நாட்டில் பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, பெண்களை கேலி செய்யும் கொடுமை என அனைத்தும் வேரறுக்கப்படும் என்பது உறுதிஎன்று உற்சாகமாக உரத்த குரலில் பேசவும், தொண்டர்களும், பொது மக்களும் கரவொலி எழுப்ப, தலை நிமிர்ந்து,பெருமை பொங்க மகிழ்ச்சியுடன் விருதைப் பெற மேடையேறிய வள்ளியம்மை தாம் பெற்ற விருதை கணவனிடம் கொடுக்க விரும்பியதால் முத்து மணியை மேடைக்கு அழைக்க மீண்டும் கரவொலி எழுந்தது.

இயற்கையிலேயே வள்ளியம்மை அப்படி ஒன்றும் வீராங்கனை அல்ல. கரப்பான் பூச்சியைக் கண்டால்கூட காத தூரம் ஓடுபவள்தான். அப்படிப்பட்டவள் அப்படி என்ன சாகசம் செய்திருக்க முடியும்? முதலில் அவளுக்கு வீரம் வந்த கதையைக் கேட்க வேண்டும். தன் ஒரே செல்ல மகன் அமோகசீலனுக்கு, டைபாய்ட் காய்ச்சல் வந்து குழந்தை மிகவும் சிரமப்பட்ட நிலையில், வைத்தீஸ்வரன் கோவிலில் குழந்தையின் மார்பின் மீது மாவிளக்குப் போடுவதாக வேண்டிக் கொண்டாள். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக கோவிலுக்குச் சென்றனர். எல்லாம் முடிந்து வெளியில் வந்தபோது அங்கு ஏடு ஜோசியம் பார்ப்பது மிகவும் சரியாக இருக்கும் என்று தன் சகோதரி சொன்னதை நம்பிக்கொண்டு கணவனிடம் பிடிவாதம் பிடித்து ஒப்புதல் வாங்கினாள்.

சிவப்பழமாக அமர்ந்திருந்த அந்தப் பெரியவரைக் கண்டவுடன் கையெடுத்துக் கும்பிட்டதோடு,  எடுத்த எடுப்பிலேயே அவர், சொன்ன விசயங்கள் அவளை எளிதாக அவர்வசம் ஈர்த்துவிட்டது. கண்களை மூடி தியானம் செய்தவர், பிறந்த தேதி, நட்சத்திரம் என்ற சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டார்.

அம்மா, முதலில் உங்கள் பெயர் சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். அப்போதுதான் உங்களுக்கான ஏடுதானா இது என்று உறுதி செய்து கொள்ள முடியும். ஒரு சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் பெயர் கொண்டவரா நீங்கள்?”

ம்ம்ம்... ஆமாங்க...

தில்லையம்பல நடராசப் பெருமானின் ஊரும், அவன் புள்ளாண்டான் முருகப் பெருமானின் தர்ம பத்தினி, குறத்தி மகளின் பெயரும் சேர்ந்த ஒரு போராளியின் பெயரில் பாதியைக் கொண்டவரா நீங்கள்

அடடே ஆமாங்க, தில்லையாடி வள்ளியம்மையின் பாதி பெயர்தான் வள்ளியம்மைஎன்ற என்னோட பேருங்க..... 

அங்கே ஆரம்பித்த தீவிர நம்பிக்கை வள்ளியம்மைக்கு. அப்படியே மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் வேதவாக்காக. ஏதேதோ பாட்டாகப் படித்துக் கொண்டிருந்தாலும் அதன் சாரம் அவளுக்கு நன்றாகப் புரியும்படியே இருந்தது. வள்ளியம்மை தன்னுடைய முற்பிறவியில் புலியை முறத்தால் விரட்டியடித்த பெண்மணி மற்றும் புறநானூற்றின் வீரத்தாயின் வழித் தோன்றலாம்.

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன்என்று பலர் கூற,


மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்" எனச் சினைஇக்,
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!

என்ற இந்தப் பாடலை அந்தப் பெரியவர் பாடியபோது தன்னையறியாமல் அவளுடைய உடல் ஒருமுறை குலுங்கி அடங்கியது.  நாட்டிற்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து, அல்பாயுசில் மறைந்துபோன தில்லையாடி வள்ளியம்மையின் மறு பிறவியாம். ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் மெய்மறந்து கேட்டுக்கொண்டு வந்தவள் வீட்டிற்கு வந்தும் அவர் கொடுத்தனுப்பிய இந்தச் செய்திகள் அடங்கிய சிடியையும் அடிக்கடி கேட்க ஆரம்பித்தாள்.

ஏம்மா.. வள்ளி எப்பப் பார்த்தாலும் இந்த சிடியையே கேட்டுக்கிட்டிருக்கிகளே..  அப்படி என்னதான் இருக்கு இதுல....

இதுல இருக்குற அத்தனை விசயமும் எனக்கு நம்பறா மாதிரித்தான் இருக்கு. குறிப்பா அவரு அந்த புறநானூற்றுப் பாட்டை பாடும்போதும் இன்றும் அதக் கேக்கறச்ச எனக்குள் என்னவோ செய்யுதே. அதனால்தான் எல்லாத்தையும் நம்பத் தோணுது.

இதெல்லாம், அப்படியே நம்பக்கூடாதும்மா. ஏதோ போனமா, கேட்டோமான்னு இருக்க்ணும். ரொம்பவும் நம்ம மனசை பாதிப்பு ஏற்படுத்தாம பாத்துக்கணும்

அதெல்லாம் சரிங்க.. அவரு ஒன்னும்  தப்பா சொல்லிடலியே.. அவரு சொன்னது அப்படியே உண்மையா இருக்கணும்னு நினைக்கிறதுல தப்பில்லையே... அதனால என்ன நட்டம் ?”

சரி, சரி. நீ ரொம்ப மனசை குழப்பிக்கிட்டு கிறுக்கு புடிக்காம இருந்தா சரி

அப்படீல்லாம் ஒன்னும் ஆகாது பாருங்க. அவரு சொன்ன அந்த புறநானூற்றுப் பாடல ஸ்கூல்ல படிச்சப்பவே  கேட்டிருக்கேன். போரில் தன் மகன் புறமுதுகு காட்டி இறந்திருக்கிறான் என்று யாரோ சொன்னதைக் கேட்டு, அந்தத்தாய் ஆவேசமாக அப்படி என் மகன் கோழையாக இருக்கும் பட்சத்தில் அவனுக்குப் பால் கொடுத்த இந்த மார்பகத்தை அறுத்தெறிவேன் என்று சபதம் செய்து அந்தப் பிணக் குவியலில் தம் மகனைத் தேடிக் கண்டுபிடித்து அவன் மார்பில் குண்டு வாங்கி இறந்திருப்பதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் மகன் இழப்பிற்கு அழுதாளாம். ஆகா இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டாலும் புல்லரிச்சிப்போகுது

இதையெல்லாம் கொஞ்ச நாட்களில் மறந்துவிடுவாள். கேட்டு,கேட்டு அலுத்துப்போய் அந்த சிடியையும் ஏரக்கட்டிவிடுவாள் என்றுதான் நினைத்திருந்தான் முத்துமணி. ஆனால் அவை அப்படியில்லை. அது வேறு அவதாரம் எடுத்திருக்கிறது என்பதை அந்தச் சம்பவம் நடந்தபோதுதான் புரிந்து கொள்ள முடிந்தது.

அன்று உடம்பு கொஞ்சம் முடியாமல் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி, வீட்டில் ஓய்வில் இருந்தான் முத்துமணி. வழக்கம் போல மகனை பள்ளிக்குத் தன் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றவள் வழக்கத்திற்கு மாறாக வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சற்று கவலையாகிப்போக, அவளுடைய கைபேசி எண்ணிற்கு அழைக்க்லாம் என்று நம்பர் போட்டால் அதுவும் வீட்டிற்குள்ளேயே பாடுவதைக் கேட்டபோதுதான் அவள் அதை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டுப்போனது தெரிந்தது. ஏதாவது பிரச்சனை என்றால்கூட தொடர்பு கொள்ளக்கூட வழியில்லையே என்ற கவலையும் அதிகமாக, இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தன் துள்ளுந்தை (பைக்கை) எடுத்துக்கொண்டு கிளம்பினான். மகன், அமோகசீலனின் பள்ளி செல்லும் வழியிலேயே சென்று பார்க்கலாம் என்று சென்றவன் அவள் தென்படாததால் சற்றே அச்சம் கொள்ள ஆரம்பித்தான்.

சார், நீங்க சாந்தினி அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிற முத்துமணிதானுங்களே..

ஆமாங்க, நீங்க?”

சார், நான் அடுத்த தெருவில்தான் குடியிருக்கேன். உங்க பக்கத்து வீட்டுக்காரர் என் நண்பர். அவரைப் பார்க்க வரும்போது உங்களைப் பார்த்திருக்கேன். சரி இங்க என்ன பண்றீங்க சார், முகம் வேற வாட்டமா இருக்கே

ஒன்னுமில்லீங்க கொஞ்சம் உடம்பு முடியல. என் மனைவி குழந்தையை பள்ளிக்கு கூட்டி வந்தா, ரொம்ப நேரமாச்சு, இன்னும் வீடு திரும்பல. அதான்.

, அப்படீங்களா, நான் இன்னும் உங்க மனைவியைப் பார்த்ததில்ல. ஆனா அங்கன பஸ் ஸ்டாண்ட் பக்கமிருந்துதான் இப்ப வாரேன். யாரோ ஒரு அம்மா அங்க தகராறு பண்ணிக்கிட்டு இருக்கு. அங்க ஒரே கூட்டமா இருக்கு. நேரமாச்சேன்னு நான் வந்துட்டேன். அங்கப் போய் பாருங்களேன். ஏதாவது வேடிக்கை பார்த்துட்டு இருக்கப் போறாங்கஎன்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

சே.....சே... அப்டீல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு நிற்கிறவ இல்லையே என்று நினைத்துக் கொண்டே எதுக்கும் போய்ப் பார்க்கலாமே என்று சென்றவனுக்கு பெரும் அதிர்ச்சி. பெரும் கூட்டத்தினிடையே வள்ளியம்மை நடுநாயகமாக நின்றிருக்கிறாள். அருகில் ஒருவன் மண்டையில் லேசாக இரத்தம் ஒழுக நின்றிருக்கிறான். காவல்துறையினர் இருவர் அருகில் நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


கோர்ட், கேஸ் என்று அலைந்து ஒருவழியாக எல்லாம் முடிந்து உட்கார்ந்தபோதுதான் மன ஆறுதலாக, இந்த விருது அறிவிப்பு வந்தது.

சில நாட்களுக்கு முன்புதான் தங்கள் அபார்ட்மெண்ட்டில் குடியிருப்பவரின் 8 வயது சிறுவன், விஜய் ஹைபராக்டிவ் என்ற மூளை பாதிக்கப்பட்டவன், காணாமல் போன பரபரப்பு இன்னும் தீராத சூழலில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்று பள்ளிக்குச் செல்லும் வழியில் நால்வழிச் சாலையில் உள்ள சிக்னலில் வண்டி நின்றிருக்கும் போது, பின்னால் ஒரு அம்பாசிடர் காரில் பல குழந்தைகள் காச் மூச் என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அக்கா.. அக்காஎன்ற குரல் எங்கோ கேட்டது போல் இருக்க திரும்பிப் பார்த்தாள். காரின் சன்னல் வழியாக ஒரு பெண் குழந்தை தன்னைப் பார்த்துக் கூப்பிடுவது தெரிந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் திரும்பவும், அமோகா அண்ணா என்று கையை நீட்டி சிரித்துக் கொண்டு கொஞ்சும் மழலையில் கூப்பிட்டது.

அட.. பையனின் பெயரைச் சரியாக்ச் சொல்கிறாளே இந்தப் பெண் ,ஒருவேளை அவனுடன் கூடப்படிக்கும் பெண்ணாக இருக்குமோ என்று யோசித்து மகனிடம் கேட்டபோது அவனும் இல்லை என்று தலையாட்டினான். இதற்குள் காரினுள்ளிருந்து யாரோ அந்தப் பெண்ணை பிடித்திழுத்து உட்கார வைப்பது தெரிந்தது. சிகனலில் பச்சை விளக்கு எரிய ஆரம்பிக்கவும் வண்டிகள் விர்ரென்று கிளம்ப ஆரம்பித்துவிட்டது. பின்னால் இருந்த அம்பாசிடர் கார் முந்திக் கொண்டு செல்லும் அந்த நொடியில் காரினுள் இருந்த அந்தப் பெண் அக்கா.. அக்கா என்று கத்துவது தெரிந்தது. ஏதோ சந்தேகமாக பொறி தட்டிய அதே வேளை அமோகசீலனும்,  அம்மா அது பொண்ணு இல்ல. நம்ம மாடிவீட்டு விஜய்தான் அப்படி டிரஸ் பண்ணியிருக்கான் என்றான் சந்தேகமாக. தனக்கும் ஏதோ நெருட, சற்றும் தாமதியாமல் அந்தக் காரின் பின்னாலேயே சென்றாள். மகனின் பள்ளி நேரம் போனாலும் பரவாயில்லை என்று அந்தக் காரை விரட்டிச் சென்றாள். அவர்கள் இவள் வருவதைக் கவனிக்கவில்லை. அதனால் பிரச்சனை இல்லை. சற்று தூரத்தில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் சென்று வண்டி நின்றது. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க நிறுத்தியிருப்பார்கள் போல. மீண்டும் அந்தக் குழந்தை அமோகா அண்ணா என்று கூப்பிட, முரடனாகத் தெரிந்த ஒருவன், ‘ஏய் வாயை மூடு, சத்தம் போடாதேஎன்று அதட்டியதைப் பார்த்தவுடன் அவளுடைய சந்தேகம் உறுதியாக அடுத்த நொடி,

டேய் யாருடா நீ, குழந்தையை எங்கடா கூட்டிட்டுப் போறஎன்று கத்திக் கொண்டே நெருங்கினாள். சந்தடி மிகுந்த அந்தத் தெருவில் அனைவரும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பிக்கவும் அவன் தாமதியாமல் கிளம்ப எத்தனித்தான். ஐஸ்க்ரீமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

 யோவ் காரை வேகமா எடுய்யாஎன்று கத்திக்கொண்டே ஓட முயற்சித்தபோது அவள் சற்றும் தாமதியாமல் செய்வதறியாது, அவனை எப்படியும் நிறுத்த வேண்டுமென்று சுற்றும் முற்றும் பார்த்து வேறு எதுவும் கிடைக்காதலால் ஒரு சிறு கருங்கலலை எடுத்து வீசினாள். அவன் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியதால் அந்தக் கல் அவன் நெற்றியை பதம் பார்த்தது. அவன் தடுமாறி நிற்பதற்குள் சத்தம் போட்டுக் கொண்டே நெருங்கினாள். அதைக் கேட்டு அதற்குள் கூட்டம் கூடி, காரைச் சுற்றி வளைத்துள்ளனர். ஒருவர் போலீசிற்கும் போன் செய்துள்ளார்.

காவல் துறையினரின் விசாரிப்பில் அவர்கள் குழந்தைகளைக் கடத்தும் பெரிய குமபலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஆண் குழந்தைகளுக்கு பெண் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ஆண் வேடமும் போட்டு கூட்டிச் சென்றிருக்கின்றனர். கையும் களவுமாகப் பிடிபட்டதால் கடத்தப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்க முடிந்ததால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வாழ்த்த அன்று முதல் கதாநாயகி ஆகிவிட்டாள் வள்ளியம்மை!

மூடப் பழக்கங்கள் என்று சிலவற்றை ஒதுக்க நினைத்தாலும், அதுகூட ஏதோ ஒரு வகையில் சாதனைப் புரிய வழி வகுத்துவிட்டதே என்று ஒரே ஆச்சரியம் முத்துமணிக்கு! காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை என்பதும் தெளிவானது!

நன்றி :திண்ணை வெளியீடு

2 comments:

  1. மிக அருமையான படைப்பு. ரஸித்துப் படித்தேன்.

    //மூடப் பழக்கங்கள் என்று சிலவற்றை ஒதுக்க நினைத்தாலும், அதுகூட ஏதோ ஒரு வகையில் சாதனைப் புரிய வழி வகுத்துவிட்டதே என்று ஒரே ஆச்சரியம் முத்துமணிக்கு!//

    முத்துமணிக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சர்யமாகவே உள்ளது.

    திண்ணையில் அமர்ந்தமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அன்பின் திரு வை.கோ அவர்களுக்கு,

    மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete