Monday, August 23, 2010

சுக்கா? மிளகா?.....சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்



”அடுப்பு ஊதும் பெண்ணிற்கு படிப்பு எதற்கு?” என்ற பழமொழியைச் சொல்லி பெண்ணை ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்த்த சமூகம், அவளை மதித்து, ஒரு உயிர்ப் பொருளாக, மனித நேயத்தோடு பார்க்கத்தொடங்கியுள்ளது. இன்று பெண் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.இந்த நூற்றாண்டுகளாக இந்தியப் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. ஆதி காலத்தில் ஆண்களுடன் சம நிலையும், மத்தியக் காலங்களில் சில உரிமைகள், பின் உரிமை மறுப்பு, இப்படி , பல்வேறு பரிமாணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் எட்டியிருக்கின்றன.

இன்றைய நவீன இந்தியாவில், பெண்கள் , குடியரசுத் தலைவர், பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர், விமான ஓட்டிகள், அணு விஞ்ஞானிகள், இப்படி அனைத்து உயர் பதவிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய நிலையை அடைவதற்கு எத்துணைப் போராட்டங்கள், வலிகள், அவமதிப்புகள், பகடிகளைத் தாண்டி, இந்தச சாதனைகளை பெண்கள் புரிந்துள்ளார்கள் என்பதை இளம் சமுதாயத்தினர் உணர வேண்டும். இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூகக் கொடுமைகளிலிருந்து, அவர்களை மீட்டெடுக்கவும், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், கல்வியறிவூட்டுவதிலும், மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்குரிய, அங்கீகாரத்தையும், பாதுகாத்துத் தருவதில், அசாத்தியமான திறன் கொண்ட முன்னோடிகளான பல பெண்கள் தங்கள் வாழ்க்கையையே அர்பணித்துள்ளார்கள்.

அவர்களுடைய உழைப்பும், முயற்சியும், இன்றைய மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவும் ஒரு பொக்கிசமாகும். தங்களுடைய தியாகச் சிந்தையினாலும், கடமையுணர்வினாலும், பெருமுயற்சி கொண்டு, மற்றைய பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி, சமுதாயத்தில் தன் சுவடுகளை பதியச் செய்த, பல வீர மங்கைகளின், வாரலாற்றுச் செய்திகளின் தொகுப்பே இத் தொடராகும். நம் நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சீர்திருத்தப் போராட்டத்தில் பெண்களின் பங்கு ஒரு வீர காவியக் கதையாகும்.


லேடி அபேலா போஸ்
[ LADY ABALA BOSE ]
{ 1865 - 1951 }

1865 ம் ஆண்டு பிறந்த லேடி அபேலா போஸ் ஒரு அசாதாரணமான வாழ்க்கை வாழ்ந்த ஒரு சாதனைப் பெண்மணியாவார். இவர், ஒவ்வொரு இந்தியரும் பெருமைப் படக்கூடிய, உலகப் புகழ் விஞ்ஞானியான சர். ஜெகதீசு சந்திர போஸ் அவர்களின் மனைவி. பார் போற்றும் விஞ்ஞானிக்கு ஒரு நல்ல தகுதிவாய்ந்த மனைவியாகவே வாழ்ந்தவர். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பாடுபடுவதையே தன்னுடைய வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

நாம் சுதந்திரமடைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆனபிறகு இன்று அரசு சார்ந்த மற்றும் தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் சென்ற நூற்றாண்டுகளின் காட்சிகளே வேறு.

பால்ய விவாகம், பலதார விவாகம், பெண்கள் கல்வியறிவு பெறுவதைத் தடைச் செய்து, பொருளாதார ரீதியாக ஆண்களையே முழுதும் சார்ந்திருப்பது போன்ற மூடப் பழக்கங்கள், சமுதாயத்தின் முக்கிய மையங்களையே தின்று கொண்டிருந்தன.

திறமை வாய்ந்த , சமுதாய சீர்திருத்தவாதிகளால் தீவிரமான முயற்சிகளின் மூலமாக சட்டப் பூர்வமாகச் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. பொருளாதாரத்தில் முடமாகிப் போன பரிதாபத்திற்குரிய கைம்பெண்கள் அல்லது ஆதரவற்றோர் ஆகியோரின் கல்வியறிவின்மையை எதிர்த்துப் போராடக் கூடிய போதிய மேடைகள் இல்லாதிருந்தது.

ஐஸ்வர்சந்த்ர வித்யாசாகர் மற்றும் ராஜா ராம் மோகன் ராய் போன்ற சில கட்டுறுதி மிக்கத் தலைவர்கள், சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான அயராத உழைத்தனர். தேச மறுமலர்ச்சி அந்தச் சிந்தையில் புதிய பரிமானத்தைக் கொண்டு வந்தது. அதன் விளைவாக பெண்கள் சம்பந்தமான மூட நம்பிக்கைகள் பெரும் மாற்றத்திற்குள்ளானது.

“ கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம் போல-அங்கே
புற்கள் விழைவதுண்டு நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”

போன்ற வார்த்தைகள் உரக்க எழுப்பப்பட்டன.

இந்தச் சூழலில் வளர்ந்த இளைஞர்கள் மற்றும் இளைஞிகளில் அச் சமூகப் பிணியைத் தீர்ப்பதில் பெரும் தொண்டாற்றியவர்களுள் லேடி அபேலாவும் ஒருவராவார்.

இவர் சமூகச் சேவையில் நாட்டம் கொண்ட ஒரு நேர்மையான ஆத்மாவாக இருந்தார். பெண்களின் அடிமைத் தளையைத் தகர்க்க வேண்டுமெனில், முதலில் அவர்களிடம் சுய மரியாதையை மீட்டுக் கொண்டு வருவது மூலமாகத்தான் சாத்தியப் படும் என்று நம்பினார்.

தன் மதிப்பு உயர வேண்டுமானால், அதனைத் தாங்கிப் பிடிக்கக் கூடியத் தூண்களான, கல்வியறிவு, தன்னம்பிக்கை மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவைகளின் அவசியத்தையும் உணர்ந்திருந்தார். இவருடைய இந்த நம்பிக்கைகளின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக வங்கப் பெண்களின் கல்வி குறித்தக் கலந்தாய்வில், அவர் முன்வைத்த, " வங்கத்துப் பெண்களின் ஆரம்பக் கல்வியின் இன்றைய நிலை" , என்ற தலைப்பிட்ட அறிக்கையின் மூலம் வெளிப்பட்டது.

அந்த அறிக்கையில், " இன்றைய பரந்த உலக முன்னேற்றத்தில், ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆரம்பக் கல்வியின் அடிப்படையிலேயே உள்ளது என்று கருதப் படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட சமுகக் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவைகளின் பிடியில் சிக்கியிருந்தப் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி எண்ணிலடங்கா நன்மைகளைப் புரிந்துள்ளது. பால்ய விவாகம் என்கிற கொடிய வழக்கம் கட்டுப் பாட்டிற்குள் வந்துள்ளது. ஒரு பெண் தன்னுடைய கல்வியை 12 வயது ஆரம்பத்திலேயே முடிவிற்கு கொண்டு வந்து அடுத்து ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவருடைய திருமண வாழ்க்கையும் ஆரம்பித்து விடுகிறது.," என்று கூறியிருந்தார்.

வங்க தேசப் பெண்களுக்காக அவர்களின் ஏழ்மையைப் போக்கி, தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக, 1919ம் ஆண்டு, லேடி அபேலா போஸ், " பெண்கள் கல்விக் குழு", [ Nari siksha samithi ] ஒன்றை தன் கணவரின் உதவியுடன் நிறுவினார். இந்த உயர்ந்த இலட்சியத்திற்கு கல்கத்தாவின் அன்றைய மேயரான,தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், நகராட்சிக்குச் சொந்தமான ஒரு துண்டு நிலத்தைக் கொடுத்து உதவினார்.இவர் அன்றைய சமுதாயப் புரட்சியாளர்களான வித்யாசாகர், குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோரின் உதவியையும் பெற்றார். ஜர்கிராம் நகரத்தின், வீரேந்திர மல்ல தேவ்வின் உதவியுடன், குல மரபு சார்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒரு மையத்தை நிறுவினார். இதுபோன்று, பெண்களின் முன்னேற்றத்திற்கானத் தன்னுடைய உறுதிப் பாட்டை அமைதியாகவும், சுயநலமில்லாமலும் செயல்படுத்தினார்.

இந்தியப் பெண்களின் புதிய நம்பிக்கை விடிவெள்ளியுடன், ஒரு சில படித்தப் பெண்களே, பெண்களின் சமூகச் சீர்கேடுகளை, சீர்திருத்த முன் வந்தனர்.பெரிய நகரங்களில் ஆர்வமிக்க பெரும் முயற்சிகளும் மேற் கொள்ளப் பட்டது. நாட்டுப் புறம் சார்ந்த நகரங்களில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தன் உதவிக் கரம் நீட்டி ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார், லேடி அபேலா போஸ்.

1919ம் ஆண்டில், மூன்று பெண்கள் கல்விக் கூடங்கள் கல்கத்தாவில் நிறுவப்பட்டதோடு, 1921லிருந்து, அவருடைய, நாரி சிக்ஷா சமிதியின், செயல்பாடுகள், கிராமங்களை நோக்கி நீண்டது.. கூட்டுக் குடும்பங்களின் பிளவு காரணமாக வங்க தேசத்தின், விதவைப் பெண்களின், மோசமான நிலையை அனுமானித்த, அபேலா போஸ், அவர்களை ஆரம்பப் பள்ளிகளின் ஆசிரியைகளாக நியமனம் செய்தார்.இதற்கான பயிற்சி, வித்யாசாகர் பால பவனில் அளிக்கப் பட்டது. பால்ய விவாக வழக்கம், வீழ்ச்சியடைய ஆரம்பித்தவுடன், அவருடைய பார்வை, பொருளாதாரத்தில் நலிவடைந்த இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் புணரமைப்பு மற்றும் அவர்களுடைய கல்வி நிலையை மேம்படுத்துவது போன்றவற்றில் திரும்பியது. நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இதற்கான பல மையங்கள் நிறுவப்பட்டு, செயல்படுத்தவும்பட்டது.

தன் கணவர் இறந்த பிறகு 1920ஆம் ஆண்டு வாக்கில்,தன் கையிருப்பிலிருந்து சுமார் ஒரு லட்சத்தை சகோதரி நிவேதிதா நடத்திவந்த மகளீர் மேம்பாட்டு நிதிக்கு நன்கொடையாக அளித்த கொடை வள்ளல் அபேலா போஸ்.

நம் நாடு சுதந்திரம் அடைந்து, 50 ஆண்டுகளுக்குப் பிறகு கூட, லேடி அபேலா போஸ் நிறுவிய கல்விக் கூடங்கள், மற்றும் பெண்களுக்கு வருமானம் ஏற்படுத்தக் கூடிய பயிற்சி மையங்கள் இவையனைத்தும், பல் வேறு சமூகச் சேவை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப் பட்டு, அரசாங்க செயல்திட்டத்தின் முக்கியப் பகுதியாக விளங்கினாலும், லேடி அபேலா போஸ் என்றுமே, பெண்களின் நலத்திற்காகவும், குறிப்பாக இளம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த கைம்பெண்களின் தேவைகளுக்கான வழிகாட்டிகளின் முன்னோடியாகவே கருதப் படுகிறார்.----தொடரும்.


9 comments:

  1. நல்ல பகிர்வுங்க. பல புதிய விஷயங்கள் தெரிந்தது. நன்றி.

    ReplyDelete
  2. இன்னைக்குதான் உங்க பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது ... நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... அடிக்கடி எழுதுங்கள் ... பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. நன்றி திரு செந்தில்

    ReplyDelete
  4. நல்லா எழுதியிருக்கீங்க ...... :)

    ReplyDelete
  5. நன்றிங்க அகல் விளக்கு.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  7. நன்றிங்க அம்பிகா.

    ReplyDelete
  8. நிறைய புது தகவல்கள்...... நல்ல பதிவு! பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete