சொட்......சொட்ட்......... விடிய விடிய அடித்து ஓய்ந்த மழையின் சொச்சம். மழை விட்டிருந்தாலும், தூவானம் விடவில்லை.
ஆனால் அவள் மனதில் மட்டும் புயல் ஓய்ந்த பாடில்லை. இன்று கணவன் ஊரிலிருந்து வந்து விடுவான். எப்பொழுதும், கணவன் ஊரிலிருந்து வரும் போது, மிகவும் மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும் இருக்கக் கூடியவள் இன்று அதற்கு மாறாக,
ஐயோ, கணவன் வந்தால் என்ன சொல்வது, இல்லை ஒரு வேளை தானே தெரிந்து கொண்டால் என்ன செய்வது? அது சரி மறைக்கக் கூடிய விசயமா இது? ஒன்றும் புரியவில்லை தாரணிக்கு.
இதற்கெல்லாம் காரணம், மணிதான். இந்த ஒரு வாரத்தில் எப்படி ஒட்டிக் கொண்டான். மெல்ல சமயலரை வரை ஆரம்பித்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக படுக்கையறை வரை வந்துவிட்டது. கணவனுக்கு கண்டிப்பாகப் பிடிக்காது என்று தெரிந்திருந்தும் அவளால் அதனைத் தவிர்க்க முடியவில்லை.
என்ன செய்வது? தனிமையின் ரணம். கணவன் மாதத்தில் பெரும் பகுதி நாட்கள் பயணத்திலேயேக் கழிப்பவன். அவன் தொழில் அப்படி. மார்க்கெட்டிங் மேனேசராகப் பணி புரிபவன்.
மாதத்தில் பத்து நாட்கள்தான் தன்னுடன் இருப்பான்.
" சே, என்ன வாழ்க்கை ", என்று அலுத்துக் கொண்ட வேளையில் தான் மணி வந்து சேர்ந்தான். ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று ஆரம்பித்தப் பழக்கம் தான் இன்று படுக்கையறை வரை வந்து நிற்கிறது.
இன்று கணவன் ஊரிலிருந்து வந்தால் என்ன நடக்கப் போகிறது என்றே தெரியவில்லை. ஏற்கனவே பல முறை இது போன்று வாக்குவாதம் வந்திருக்கிறது. இறுதியில் தான் மட்டுமே விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் படுவாள். ஆனால் இந்த முறை ஒரு முடிவாகத்தான் இருந்தாள்.
காரணம் தனிமையின் கொடுமையை அனுபவித்தால் தான் தெரியும். பொழுது போய் பொழுது வந்தால் சூனியமாக இருந்த வாழ்க்கையில், மணி வந்த பிறகுதான், ஒரு உற்சாகமே பிறந்தது.
இதை கணவனுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? புரிந்தாலும், தனக்குப் பிடிக்காத ஒரு விசயத்தை அனுமதிக்க மறுக்கலாமே.
ஒருவர் மீது பாசம் வைத்து விட்டால் அதை எளிதில் மாற்றிக் கொள்ள முடியாதே. அதுதானே இயற்கை.
பெண் என்றால் எப்பொழுதும் தனக்குக் கீழ் தான் இருக்க வேண்டும், தன்னை மிஞ்சி எதுவும் செய்யக் கூடாது. தனக்குப் பிடிக்காத எந்தக் காரியத்தையும், அவளுக்கு எவ்வளவுதான் விருப்பம் இருந்தாலும், செய்யக் கூடாது. இப்படித்தானெ இன்றும் இந்த ஆண்கள் இருக்கிறார்கள்? என்னதான் சம உரிமை என்று வாயளவில் பேசினாலும், அவையனைத்தும், குடும்ப பாரம் சுமப்பதில் மட்டும் தானே? தனக்கென்று வரும் போது பெண் உரிமைப் பற்றி வாய் கிழிய பேசியவர்கள் கூட அவள் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்க வேண்டும் என்று தானெ எதிர்பார்க்கிறார்கள்?
" கணவனுடன் தான் ஏன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது ", என்ற எண்ணம் தலை தூக்கினாலும்,
தன் கணவன் பற்றிய கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக எந்த ஒப்பந்தமும் எடுபடாது, என்பதே அப்பட்டமான உண்மை.
இப்படியே யோசித்து, யோசித்து இரவு முழுவதும் தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.ஆயிற்று, நேரமும் கடந்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவர் வந்து விடக் கூடும்.
ஆனது ஆகட்டும் என்று துணிந்து நிற்பதா அல்லது வழக்கம் போல கணவன் சொல் கேட்டு அடி பணிந்து, ஆசை ஆசையாக வைத்திருக்கும் மணியை விட்டு விலகுவதா? ஒன்றுமே புரியவில்லை. மணி அழகாக தலையைச் சாய்த்து பாசமாக ஒரே ஒரு பார்வை பார்த்தால் போதும், பிறகு தன்னால் தன் கணவன் சொல்லைக் காதில் கூட வாங்க முடியாது.
வந்தவுடன் பிரச்சனையை கிளப்பவேண்டாம் என முடிவு செய்தவளாக, மணியை விருப்பமின்றியே அவசரமாக, பழைய சாமான்கள் போடும் பின் அறைக்கு கூட்டிச் சென்று விட்டு வரும் போது மனது வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் வேறு வழி இல்லை அவளுக்கு.
எப்படியாவது கணவரை சரிக்கட்டி விட முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு தெளிவான முடிவுடன் காத்திருந்தாள்.
அழைப்பு மணியும் அடித்தது. கதவைத் திறந்தவள், கணவனின் துவண்ட நிலைக் கண்டு ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து விட்டாலும், உடனே, அவன் பெட்டியைத் தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு தடுமாறிக் கொண்டு நிற்பதைப் பார்த்தவுடன், அவசரமாக ஓடிச் சென்று, அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கி வைத்து விட்டு, கைத்தாங்கலாக அவனை அணைத்த வண்ணம் உள்ளே கூட்டி வந்தாள். நல்ல காய்ச்சல் இருக்கும் போல. உடம்பு அனல் வீசியது.
"என்னங்க, என்ன ஆச்சு, நேத்து போன் பண்ணினப்பக் கூட ஒன்னுமே சொல்லல", என்று பதறிப் போனாள்.
" இல்லம்மா, லேசான காய்ச்சல் தானே ஒரு மாத்திரை போட்டால் சரியாகிவிடும் என்று விட்டு விட்டேன். ஆனால் திடீரென்று வீசிங் வந்து விட்டது. அதற்குப் பிறகு தான் ஒன்றுமே முடியவில்லை. அதான் உடனே கிளம்பி வந்து விட்டேன்", என்றான்.
உடனே ஆட்டோ பிடித்து, கணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
மருத்துவரும், அவனை பரிசோதித்துவிட்டு, " ஒன்றுமில்லை அலர்ஜிதான். ஏற்கனவே ஆஸ்துமா இருப்பதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எத்தனை முறை குறியிருக்கிறேன். வெளியில் செல்லும் போது, தூசியோ மற்ற அன்னியப் பொருட்களோ சுவாசத்தில் கலக்கும் போதுதான், இப்படி அலர்ஜி உண்டாகிறது. இதற்குத்தான் உங்களை அதற்கான மாஸ்க் போடும் படி சொல்கிறேன், கேட்டால் தானே ", என்று சலித்துக் கொண்டார்.
அவரும், இனிமேல் முதல் வேலையாக மாஸ்க் வாங்கி மாட்டுவது என்று முடிவுக்கு வந்தவனாக மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள்.
தாரணி நேராக வீட்டிற்கு வந்தவள், ஒரு முடிவுடன், ஒன்றுமே பேசாமல், பின்னறைக்குச் சென்று தன்னுடைய, செல்ல மணிக்குட்டியைத் தூக்கி வந்தவள், அதன் பிறந்த வீட்டிற்கே, அதாவது, தன்னுடைய தோழி வீட்டில் இருக்கும் தாயிடம் எடுத்துச் சென்று ஒப்படைத்தாள். தன் செல்ல மணிக்குட்டி, தாயைக் கண்டவுடன், மகிழ்ச்சியாக, ஓடிச் சென்று, தன் தாயின் மடியை துளாவ ஆரம்பித்தது. தாயும், அதனை நக்கிக் கொடுத்தது.மற்ற குட்டிகளுடன் புரண்டு விளையாடவும் ஆரம்பித்துவிட்டது.................
கதையின் முதல் வரியிலே முடிவை யூகித்தேன்
ReplyDeleteஓ, அப்படியா, நாய்க்குட்டி போட்டோ போட்டது தப்போ, அடடா, நன்றிங்க.
ReplyDeleteநல்லாருக்குங்க
ReplyDeleteநன்றிங்க சார். ஏதாவது திருத்தம் இருந்தால் சொல்லலாமே. நானும் தான் கொஞ்சம் வளர்கிறேனே?
ReplyDelete\\ நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
ReplyDeleteஓ, அப்படியா, நாய்க்குட்டி போட்டோ போட்டது தப்போ, அடடா, நன்றிங்க. \\
:-)))
நாய்க்குட்டி படம், கதையின் போக்கை சொல்கிறது.
ReplyDeleteஆமாங்க சித்ரா, ஒரு தப்பு நடந்து விட்டது. நன்றிங்க.
ReplyDeleteநன்றிங்க அம்பிகா. நீங்களும் கண்டுபிடிச்சிட்டீங்க !
ReplyDelete