Sunday, April 22, 2012

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்!

//இதுபோன்ற தகவல்கள்தானே நமக்கு வேண்டும்! மிக மிக நன்றியப்பா!

அந்த "ரவுக்கை கழட்டுற" பழக்கம் இடத்துக்கு இடம் வேறுபடுமோ-னு நினைக்கிறேன், பெண்ணே!
இன்னும் சொல்ல நிறைய இருக்கில்லெ -- "சேலை முந்தானையெப் போர்த்திக்கொள்ள" வேண்டிய பழக்கத்திலிருந்து தொடங்கி?!!// ராஜம் அம்மா.


யானை கட்டி போரடித்த காலம்! பொன் விளையும் பூமி. பஞ்சம் வந்த காலத்திலும் ஊருக்கு தானியங்களை படியளந்த வள்ளல். சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம். ஜவஹர்லால் நேரு, காமராசர் என பெருந்தலைவர்களுக்கு வீட்டில் விருந்து வைத்து உபசரித்ததன் சாட்சியாக 8 அடியில் நெடிதுயர்ந்த புகைப்படங்கள். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவிற்கு உயரமான சுவர்கள். ஒரு தெருவில் ஆரம்பிக்கும் வாசல், மறு தெருவில் முடிவுறும் பொடக்காளி என்கிற பின்வாசல். சேலம் மாநகரின் சேர்மன் ராமலிங்கம் என்றால் அன்றைய காங்கிரசு வட்டாரத்தில் மிக பிரபலம். இன்றும் ஊரில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் சேர்மன் ராமலிங்கம் மார்க்கெட், சேர்மன் ராமலிங்கம் மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்கம் பள்ளிக்கூடம் என்று மாளாத சொத்துகளை ஊருக்காக வாரி இறைத்த வள்ளல்தன்மை தந்த பரிசாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிதர்சனம். உக்கிராண அறை என்கிற பொக்கிச அறை! (ஒரு அறையே பீரோவாக இருந்த ஆச்சரியம்) அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று சதாசர்வ காலமும் நிறைந்த சபையாக இருக்கும் இல்லம். இப்படி ஊரின் முக்கிய பிரபலங்களின் ஒருவராய் இருந்த என் தாய் வழித்தாத்தா. இவ்வளவு பெருமையும், புகழும், செல்வாக்கும் தாண்டவமாடிய ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் நிலை என்ன என்பதைக் காட்டவே இந்த முன்னுரை.

ராஜாராம் மோகன்ராய், திலகர் போன்றோரின் பெரும்போராட்டத்தின் விளைவாக சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படது. ஆனால் ஒவ்வொரு நாளும், தீக்குளித்து புழுவாய்த் துடித்த வாழ்க்கையில் இருந்து மீள அந்த தலைமுறையினரால முடியவில்லை. பருவம் எய்துவதற்கே முன்பே ஏழு வயதில் திருமணம். மணமகனுக்கும் இளம் பருவம். திருமணம் முடித்தவுடன், திரும்ப தாய் வீட்டு வாசம். ஆனால் பள்ளிப்படிப்பும், சகஜமாக வெளியில் திரிந்து விளையாடும் அனுமதியும் மறுப்பு. வீட்டில் சமையலும் மற்ற பழக்க வழக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். பருவ வயது வந்தவுடன் நல்ல நாள் பார்த்து கணவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். 13 வயதில் ஒரு வாலிபருக்கு மனைவியாக குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம். அன்றிலிருந்து இரவிக்கைக்கு விடுதலை. சில பெண்கள் கச்சை என்ற பெயரில் அணிந்திருப்பார்களாம். இவர்களெல்லாம் தன் சேலை முந்தானையை ஒரு சுற்று உள்ளாடையாக நாணத்தை மறைக்க தாங்களே ஏற்படுத்திக் கொண்ட வழமையாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பருவ வயது. வெள்ளை வெளேர் என்ற பளபளப்பான அழகிய தோற்றம். ஒரு பெண் உள்ளாடையும் இரவிக்கையும் அணியக்கூடாது என்றால் அவள் நிலை என்னவாக இருக்கும்? அவமானத்தால் கூனிக்குறுகி கதவின் இடுக்கை விட்டு வெளியே வரவே முடியாத, ஆண்களின் முகத்தில் முழிக்கவே இயலாத நிலை. குடும்பப் பெண்களின் பெரும்பாலோனோர் இந்நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் கூட தாசிகள், பரத்தையர் என்ற ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆண்களுக்கு ஒரு வடிகாலாக அவர்கள் இருந்திருக்கலாம். அங்கு சென்று வரும ஆண்களை தவறு சொல்லும் வழக்கமே இல்லாமல் இருந்திருக்கிறது...சில நேரங்களில் அதெல்லாம் அவர்களுக்கு கௌரவமான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகக்கூட இருந்திருக்கிறது.

இந்நிலையில் ஒரு பெண்ணின் அறிவு வளர்ச்சி எந்த அளவில் இருக்க முடியும் என்று எளிதாக ஊகிக்க முடியும். அதற்கு அடுத்து வந்த காலம் சற்று விழிப்புணர்வு ஏற்பட்ட காலமாக இருந்திருக்கிறது. ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே அறிவு பெறும் என்பார்கள். ஆனால் கல்வியறிவே இல்லாத ஒரு தாய், பொது வாழ்க்கையில் சதாசர்வ காலமும் உழன்று கொண்டிருக்கும் தந்தை, ஆள் அம்பு என்று பணி செய்ய பலர் இருந்தாலும், குழந்தைகளை படிப்பறிவே சற்றும் இல்லாத ஒரு தாயால் எப்படி நன்கு வளர்க்க முடியும். சமையலறையை விட்டு வெளியே வரவே கூச்சம்... இதுதான் ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயந்திரமாக பெண்ணின் வாழ்க்கை. தன் சட்டங்களுக்கு அடி பணிய வேண்டும், தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற அந்த ஆதிக்க உணர்வு பெண்களின் வாழ்க்கையை அழகுப் பதுமைகளாக சமையலறையுடன் முடக்கிப் போட்டிருக்கிறது. அசுர உழைப்பு இருந்த அவரிடம் மன உறுதியையும் பார்க்க முடியும். தன் 60 வயதில் ஒரு மூட்டை அரிசியை இழுத்துப்போடும் அளவிற்கு சக்தி கொண்டவர்கள். தன் 85 வயதுவரை நல்ல கண் பார்வையுடன் எவருடைய உதவியும் இல்லாமல் தானே சமைத்து சாப்பிட்டு, தவ வாழ்க்கையாக, இரவிக்கை போடாமலே உயிரை விட்ட உத்தமி. அந்த அளவிற்கு மனப்பக்குவம் பெற்றதொரு வாழ்க்கை.

உளவியல் ரீதியாக ஒரு பெண்ணை எளிதாக முடக்கிப்போடும் ஒரு நுழைவாயிலாக இந்த இரவிக்கை மறுப்பு இருந்திருக்க வேண்டும். நாணத்தினால் அந்தப்பெண், கல்வியறிவும் பெறாமல், கைப்பாவையாக, அலங்காரப் பதுமையாக, தனக்கான ஒரு பொக்கிசமாக வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இந்த பழக்கம் வந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பிருந்திருப்பதாகத் தெரியவில்லை. வெளி உலக ஞானமே இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்னவாக இருக்க முடியும். இரவிக்கை போட்டவர்களெல்லாம் ஒழுக்கமான பெண்கள் இல்லை என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.

நல்ல வேளையாக தான் ஒரு கல்வியாளராக இருந்ததாலும், ஈரோடு கல்வி நிலைய நிறுவனர் மீனாட்சி சுந்தரமுதலியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்ததாலும், தம் ஊர் மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும், தாமே ஒரு பள்ளியை நிறுவியதால் ஓரளவிற்கு குழந்தைகளும் கல்வியறிவு பெற முடிந்தாலும், தம்முடைய 50 வயதிற்குள்ளாகவே ஓயாத உழைப்பின் காரணமாகவோ என்னவோ இருதய நோயினால், மரணம் அடைந்த பின்புதான் உலக ஞானமும், கல்வியறிவும் இல்லாத ஒரு தாய் அந்த சொத்தையும் கட்டிக்காக்க இயலாமல், மகனையும் ஒழுங்காக வளர்க்க இயலாமல், கடலில் கரைத்த பெருங்காயமாக அவ்வளவு சொத்தும் கரைந்து போக காலி பெருங்காயப் பெட்டியாக இறுதிவரை ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து சென்ற உத்தமியாக மட்டுமே பார்க்க முடிகிறது.

இந்த காலகட்டத்திற்குப் பிறகுதான், ஈரோடு மாநகரிலும், சில கல்வியாளர்களின் முயற்சியால ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. முதன்முதலில் ரா.பா தங்கவேலனார் மற்றும் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்களும், திண்ணைப்பள்ளியாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் 4 குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் மட்டுமே சேர்ந்து, பிறகு இவர்களெல்லாம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக, செல்வச்சீமான் வீட்டு பெண் குழந்தைகள் மட்டும் மெல்ல வெளியேவர ஆரம்பித்து, பின்பு ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்கள் முதன்முதலில் பெண்களுக்கென்று தனி பள்ளியை நிறுவினார். மெல்ல மெல்ல இரவிக்கை அற்றுப்போன வாழ்க்கைக்கும் விடிவு வந்திருக்கிறது,நாகரீகம் வளர ஆரம்பித்து, இன்று அசுர வளர்ச்சியாக பெண்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதையும் மறுக்க இயலாது.. இருந்தாலும் இன்றளவிலும் பழைய பண்பாட்டின் மிச்சங்களாக கிராமப்புறங்களில் இரவிக்கை இல்லாத பாட்டிமார்களைக் காண முடிகிறது.


1 comment:

  1. லாங்க் லாங்க் எகோ ஒன்ஸ் அப்பான் எ டைம் ஹி ஹி

    ReplyDelete