தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றிய மங்கையர்கள்!
மங்கையர்க்கு அரசியார்
பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்
நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே
1. மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே
2. பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான்
மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னிப் பின்னை
ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்
3. வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள்
திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம்
மங்கையர்க்கரசியார் புராணம்
சைவ ஒழுக்கத்தை எத்தகையதோர் நிலையிலும் காக்கக் கூடிய மரபில் வந்தவர், மங்கையரில் மாணிக்கமான, சோழமன்னனின் தவப்புதல்வியாக அவதரித்தவர், மங்கையர்கரசியார். நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னருக்கு மணம் முடித்து வைத்தார் சோழ மன்னர். பாண்டிய மன்னனோ, சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். அரசவையில் குலச்சிறையார் என்ற ஒரு அமைச்சரைத்தவிர ஏனையோர் அனைவரும், சமண சமயததை தொடர்பவர்களாகவே இருந்தனர். சைவநெறியில் சிறந்து ஒழுகுபவரான அம்மையார் திருநீறு இடுவதற்கும் வழியின்றி நொந்து போனவராகிறார். சிவனடியார்களைக் கண்டாலோ, அவரிடம் பேசினாலோ, தீட்டு என்பதாக, ‘கண்டு முட்டு - கேட்டு முட்டு’ என்று வாழ்ந்த மன்னவனின் கட்டளைப்படி அதற்கான அனுமதியின்றி, அவர் மன்னன் அறியாதவாறு திருமண்ணை மார்பின் மத்தியில் மறைவிடத்தில் வைத்துக் கொண்டிருந்தார்.. இச்சமயத்தில் திருஞானசம்பந்தர் தம் அடியார் குழுவுடன் பாண்டிய நாட்டிற்கு வருது தங்கியிருப்பது அறிந்து, சமணர்களின் விருப்பிற்கிணங்க அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த ஆணையிடுகிறார். ஆளுடைய பிள்ளையார் தம் அடியார்களுடன் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். ஞானசம்பந்தப்பெருமானார் “பையவே சென்று பாண்டியருக்கு ஆகவே” என்று பணித்திட, அவருக்கு வைத்த தீ திரும்பி வந்து, அரசருக்கு வெப்பு நோயாக மாறி வாட்டியது. சமணர்கள் எவ்வளவோ மருந்து, மாயம் செய்தும், மன்னரை சுர நோயிலிருந்து காக்க முடியவில்லை. மங்கையற்கரசியாரின் மாதவத்தினால், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருநீறு மூலமாக வெப்பு நோய் நீங்கி சைவ சமயத்தை போற்றிப் பரவினார். குடிமக்களும் மன்னன் வழியே சிவநெறியைப் போற்றி வாழலாயினர். மகாராணியாக இருந்த போதும் தாம் விருப்பம் போல் தெய்வத்தை வணங்கும் அனுமதி கூட மறுக்கப்பட்ட போதும், தம் பொறுமை மற்றும் பதிபக்தி மூலம் கணவனை நல்வழிப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார், மங்கையர்கரசியார் என்பது புராணம் கூறும் உண்மை.
'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”
என்பார் வள்ளுவப் பெருந்தகை.
சோழவள நாட்டின் கடற்துறைப்பட்டிணமான காரைக்கால் எனும் திருத்தலத்தில் வணிகர் குலத்தில் தனதததன், தர்மவதி தம்பதிருக்கு, மகாலட்சுமியைப் போன்ற தோற்றம் கொண்ட புனிதவதியார் அவதரித்தார். திருமண வயதில் பரமதத்தன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். சைவநெறியில் தவறாது ஒழுகி கணவருக்கும் அருஞ்சேவைகள் புரிந்து கற்புடைநாயகியாக வாழ்ந்து காட்டியவ்ர் புனிதவதியார். ஒரு முறை தனதத்தன் தனக்கு ஒரு வியாபாரி மூலம் கிடைத்த இரண்டு மாங்கனிகளைத் தன் வீட்டிற்கு கொடுத்தனுப்பினார். சிவனடியார் ஒருவர் அவர்தம் இல்லம் நாடிவர, அவரை அன்போடு உபசரித்து கையில் இருந்த மாங்கனிகளில் ஒன்றை அவருக்குப் படைத்தார். கணவர் வீடு வந்து மதிய உணவுடன் தாம் கொடுத்தனுப்பிய மாங்கனியைக் கேட்க அம்மையாரும் கையிலிருந்த அந்தக்கனியைக் கொண்டுவந்து கொடுத்தார். பழம் மிகவும் சுவையாக இருப்பதாகவும் அந்த மற்றொரு கனியும் தனக்கே வேண்டும் என்றும் கேட்கிறான். அம்மையார், கணவர் விரும்பிக் கேட்கும் கனியை தம்மால் கொடுக்க முடியவில்லையே என்று மனம் வருந்தி, சிவபெருமானை மனமுறுகி வேண்டிக்கொள்ள், புனிதவதியாருக்கு ஆண்டவனிடமிருந்து அற்புதமானதொரு மாங்கனி கிடைக்கிறது. மனமகிழ்ச்சியுடன் கணவருக்குக் கொடுக்க, அதை உண்ட கணவனோ நான் அனுப்பிய கனியை விட பன்மடங்கு சுவையான இக்கனி எங்கனம் வந்தது என வினவ, புனிதவதியார் நடந்ததைக் கூறி, இறைவன் அருளால் தாம் கனி பெற்றதைக் கூற, நம்பிக்கையற்ற கணவனோ அதனை சோதிக்க விரும்பி, “அங்கனமாயின் மற்றொரு கனியை உம் இறைவனிடம் பெற்று தா” என்று கேட்கிறார். திரும்பவும் சிவபெருமானை வேண்டி நிற்க, மீண்டும் கனி கிடைக்கும் வரம் பெறுகிறார். இதைக்கண்ட கணவன் இத்தகைய மாட்சிமை வாய்ந்த மங்கையுடன் உறைய தனக்குத் தகுதியில்லை என்றுணர்ந்து , பாண்டி மாநகர் சென்று அங்கு வேறு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த பெண் குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைக்கிறார்.
அவரைச் சந்திக்கும் வேளையில் தம் மனைவி, குழந்தையுடன் வந்து புனிதவதியாரின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்குகிறார், தம் மனைவி குழந்தையுடன். அந்நொடியே, தமக்கு இந்த அழகுருவம் நீங்கி, பேய் வடிவைப் பெற வேண்டும் என்று ஆண்டவனிடம் வரமும் பெறுகிறார். உடம்பில் அழகைக் கொடுக்கும் அத்துனை சதைகளையும் உதறி எறிந்து சிவகண வடிவை விரும்பி ஏற்கிறார்.
"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்" என்று வேண்டுகிறார்.
‘காலையே போன்று இயங்கும் மேனி, கடும்பகலின்
வேலையே போன்று இலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கு இருளே போலும் மிடறு’ -
காரைக்கால் அம்மையின் பாடல்.
நம் தமிழகம் எத்துனையோ வீரப்பெண்மணிகளின் வரலாறுகளைக் கண்டிருக்கிறது. ஆயினும், இப்பெண் சாதாரண வீர மங்கை அல்ல. ஆம் ராணி வேலு நாச்சியார் என்றால் சாதாரண வீரம் அல்ல. மாபெரும் படையை எதிர்கொண்டு ஆயுதம் தாங்கி எதிரிகளை வீழ்த்திய, வீராங்கனை! 1730 ஆம் ஆண்டு, இராமநாதபுரத்தில் பிறந்தவர். விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாரின் ஒரே செல்வமகள். சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தவர். 18ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி என்ற பெரும் பேறு பெற்றவர். வேலுநாச்சியார் வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து போர்க் கலைககளிலும் கற்றுத் தேர்ந்தவர். வீர சாகசம் மட்டுமன்றி, கல்வியறிவிலும் சிறந்து விளங்கியதற்கு ஆதாரம் அவர் பத்து மொழிகள் திறம்பட அறிந்திருந்ததோடு, மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களும் கற்றறிந்திருந்தார்.. இப்படி வீரத்திலும், கல்வியிலும் சிறந்து, வளர்ந்த இளம் பெண் வேலு நாச்சியாரின் அழகிலும் தீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை 1746ம் வருடம் மணமுடித்தார்.
திருமண வாழ்க்கை இனிதாக ஆரம்பமாகியது. சில காலங்களில், இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றிய ஆற்காடு நவாப்பின் அடுத்த குறி சிவகங்கையாக இருந்தது. ஆங்கிலேயப் படைகள் நவீனரக ஆயுதங்கள் மூலம் நவாப்பிற்கு உதவ முன்வர, சமயம் பார்த்துக் காத்திருந்தவன், முத்துவடுகநாதர் காளையர் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்து அக்கோவிலைச் சுற்றி வளைத்து கொடூரமாய்த் தாக்கத் துவங்கினர். ஆங்கிலேயரின் நவீனரக ஆயுதங்களின் சக்தியால், அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் மன்னனும், உடன் சென்ற இளவரசியாரும் அநியாயமாகக் கொல்லப்பட்டு, காளையார் கோவில் கோட்டையும் நவாப் வசமானது. இதனை அறிந்த வேலு நாச்சியார் பதைபதைத்து கணவர் மற்றும் இளவரசியைக் காண கோவிலுக்குச் செல்லும் வழியில் வேலு நாச்சியாரைக் கைது செய்ய நவாப் அனுப்பிய படை நாச்சியாரை வழியிலேயே மடக்க அவர்களை எதிர்த்து வீராவேசத்துடன் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை அவர்.
தன் கணவரின் உடலை உடனே சென்று காண வேண்டுமென்ற வெறியில் வீராவேசமாக போராடி,முன்னேறிச் சென்ற வேலு நாச்சியாரிடம், தளபதிகளான மருது சகோதரர்கள், மன்னரும் கொல்லப்பட்ட நிலையில் நாட்டைக் காப்பாற்ற அரசியார் வாழ்ந்தாக வேண்டும் என்று வலியுறுத்திய ஆலோசனையையும் சட்டை செய்யாமல் காளையார் கோவில் சென்று பிணக்குவியலுக்கு இடையில் தம் கணவரும், இளவரசியும் இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சியைக் கண்டு கதறி அழுததோடு நிற்காமல் தம் கணவரையும், இளவரசியையும் கொன்ற கயவர்களை பழி வாங்கியேத் தீருவது என்ற சபதமும் மேற்கொண்டார். மருது சகோதரர்களின் உதவியால் குதிரையின் மீது ஏறி மேலூர் சென்று சமயோசிதமாக, ஆங்கிலேயருக்கும், நவாபிற்கும் எதிரியான ஹைதர் அலியுடன் நட்புப்பாலம் அமைத்தார். தம் நிலையை தெளிவாக விளக்கிய வேலு நாச்சியாரின் வீரத்திருமுகம் கண்டு அவரைத் தம் அரண்மனையிலேயேத் தங்கவும் அனுமதி அளித்தார். தலைப்பாகையுடன் ஆண் வேடத்தில் வந்து தன்னிடம் உருது மொழியில் மிகச்சரளமாக உரையாடிய நாச்சியாரைக் கண்டு பேராச்சரியம் கொண்டார் ஹைதர் அலி. ஹைதர் அலியின் பாதுகாப்பிலேயே, மருது சகோதரர்களின் உதவியுடன், திண்டுக்கல் ம்ற்றும் விருப்பாட்சி கோட்டைகளில் 8 ஆண்டுகள் தங்கி தம் படைபலத்தை பெருக்கிக் கொண்டிருந்தார். ஆங்கிலப் படையையும், நவாப்பையும் ஒழித்து, தம் பரம்பரைச் சின்னமான அனுமன் கொடியை தம் சிவகங்கைச் சீமையில் பறக்கவிட்டேத் தீர வேண்டும் என்ற வெறியுடன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அதற்கான தருணமும் வந்தது. காளையார் கோவிலை போரிட்டு முதலில் கைப்பற்றினார்.. சிவகங்கையையும், திருப்பத்தூரையும் ஆங்கிலேய மற்றும் நவாப்பின் படைகள் சுற்றி வளைத்திருந்தன. இளைய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஒரு படையை திருப்பத்தூருக்கு அனுப்பி, வெற்றி கொள்ளச் செய்தார். வேலு நாச்சியாரின் தலைமையிலான மற்றொரு படை பெரிய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தியது.
வேலு நாச்சியார் மிக சாணக்கியத்தனமாக செய்த ஒரு செயல் வெள்ளையர் படையில் பலரையும் வெட்டுண்டு உயிரிழக்கச் செய்தது. ஆம், சிவகங்கை ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி, விஜயதசமி அன்று பெண்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபடுவது வழக்கம். ஆங்கிலேயப் படைகள் பாதுகாப்பாக அங்கு இருக்கும். இச்சமயத்தில், வேலு நாச்சியாரும் தம் படைகளுடன் கூட்டத்தோடு கூட்டமாக நுழைந்து, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி, ஆங்கிலேயப் படைகளை நிலை குலையச் செய்தனர். உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடினர். கொஞ்ச நாட்களிலேயே, வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்றொரு பெண்ணின் வீர சாகசத்தால் தம் உயிரைப் பணயம் வைத்து, தம்மீது தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின் ஆய்தக்கிடங்கையே முழுவதுமாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. தம் கணவனைக் கொன்றவர்களை பழி வாங்க தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார். பத்து ஆண்டுகள் அவருடைய நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது......
தடைகளையும் மீறி சாதித்தப் பெண்களின் வரலாறு இது போன்று ஏராளம்.....
sir naan In & Out Chennai nra fortnightly news paper nadathi kondu irukiren , melum wonawill nra peyaril webmagazine thodanga ullen , atharkku ungal pangalippu alithal migavum nantraga irukkum ungal pathivugal anaithum migavum nantraga ullathu , enathu paper ai parkka www.inandoutchennaifortnightly.blogspot.com
ReplyDeleteviruppam irunthal ennakku mail setho (vijay@wonawill.com) allathu 8122220258 kku phone seitho thodarbu kollalam nantri ,