Sunday, April 22, 2012

சூல் கொண்டேன்!


அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும்
இனியதொரு பொழுதின் ஏக்கமும்
கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும்
சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து
கனிவான கற்கண்டாய் உருமாறி
கவின்மிகு கருவதனைக் கொள்ளவே
தவியாய்த் தவித்து மனம்
பனியாய் உருகிப் பார்த்திருக்க.......

பதமாய் பகட்டாய் பரிதவிப்பாய்
காத்திருந்த கருகூலம் கண்டேன்
மதியொளியும் கருக்கமும் வின்மீன்களும்
கண்டறியாதனக் கண்டேன் என
கட்டிக்கரும்பாய் கனிரசமாய் கவித்துளியாய்
கன்னியவளை கருத்தாய்க் கவரவே
காந்தர்வமாய் கணப்பொழுதில் காட்சிமாறவே
ஆலிங்கனமும் புனைவும் புனிதமாகவே
ஆனந்தமாய் அள்ளிப்பருகிய அற்புதங்கள்
ஆசுவாசமாய் சூல் கொண்டது

சூல் கொண்ட சுடரொளியாய்
மயங்கி தள்ளாடி மூச்சிறைத்து
மனம் நிறைந்து மட்டற்றமகிழ்ச்சியில்
பிரசவ வேதனையையும் பிரியமாக
வரவேற்று கதறாமல் சிதறாமல்
பொன்னாய் பூவாய் முத்தாய்
வைரமாய் புளங்காகிதமாய் புதுமையாய்
பூத்த புதுமலராய் அழியாத மணமும்
நிலையான குணமும் தனியான
சுவையும் கனிவான பார்வையும்
சலியாத மொழியும் இனிமையான
நடையும் இதமான சுகமும்
சுவையாக வழங்கும் வெல்லக்கட்டியாய்
கட்டவிழ்ந்த தருணமதில் பெற்றெடுத்த
கவி மழலையின் இளம்தாயாய்
உளம் நிறைந்த பேதையாய் யாம்!



நன்றி : திண்ணை வெளியீடு.

2 comments:

  1. ஒரு கவிப்பிரசவம்.நானும் அனுபவித்திருக்கிறேன்.மீண்டும் அதே புத்துணர்வு !

    ReplyDelete
  2. அன்பின் ஹேமா,

    நன்றி. ஒவ்வொரு பிரசவம் அளிக்கிற முத்தும் நம் சொத்து அல்லவா...

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete