Saturday, June 8, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (15)



பவள சங்கரி

தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும்
சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான்
உண்மையில் நீங்கள் அறிவுத்திறன்
உடையவராய் இருக்க முடியும்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி - வாழ்வியல் ஞானி!



ஒரு சிற்றரசன் ஒரு முறை ஒரு பேரரசனுடன் போர் புரிய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான். படை வீரர்களுக்கு பெரும் பதட்டமான சூழ்நிலை. காரணம், மிகச் சிறிய படையை  உடைய தங்களால் அத்துனைப் பெரிய படையை எதிர்த்து நின்று போரிட முடியுமா என்ற அச்சமே. அரசனின் ஆணையையும் மீற முடியாதே. இந்த எண்ணமே அவர்களை துவண்டு போகச் செய்தது. இதனை உணர்ந்துகொண்ட அரசன் படை வீரர்களை அழைத்து, நம்மிடம் மன உறுதி இருந்தால் எத்தகைய பகைவனையும் சமாளிக்கலாம், நம் மனம் எத்துனை பலம் வாய்ந்ததாக  இருக்கிறதோ அதைக்கொண்டுதான் எதிரியை வீழ்த்த முடியும், அதனால் எக்காரணம் கொண்டும் மனம் தளரக்கூடாது  என்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசியதோடு, தாங்கள் தங்கியிருந்த காளிமாதா கோவிலின் முன் தங்களுடைய ஆன்ம பலத்தையும் சோதித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டார். ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு, தலை விழுந்தால் நாம் போரில் எக்காரணம் கொண்டும் தலைகவிழ மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லி தேவி முன்னால் சங்கல்பம் செய்துகொண்டு அந்த நாணயத்தை சுண்டிவிட்டார். வீரர்கள் மிக ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அரசன் சொன்னது போலவே தலை விழுந்ததாம். உடனே வீரர்களிடம் உற்சாகம் பொங்கியதோடு, காளிதேவியின் அருள் தங்களுக்குப் பூரணமாகக் கிட்டிவிட்டது, இனி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக நம்பிய படை வீரர்கள் போருக்குத் தயாராகிவிட்டனர். அதே உறுதியோடும், உற்சாகத்தோடும் போரிட்டவர்கள் இறுதியாக வெற்றி மாலையும் சூடி வந்தனர். எல்லாம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக நாடு திரும்பியவுடன், தளபதி அரசனிடம் மெல்ல வந்து, ‘அரசே, ஒரு வேளை நீங்கள் நாணயத்தை சுண்டிய பொழுது அதில் பூ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும். வீரர்கள் போரிடவேத் தயங்கியிருப்பார்களே, காரியமே கெட்டிருக்குமே’ என்று ஆச்சரியமாகக் கேட்டார். அப்போது அரசன் புன் சிரிப்புடன் ஒன்றுமே பேசாமல் அந்த நாணயத்தை எடுத்துக் காட்டினார். அதில் இரண்டு பக்கமும் தலை மட்டுமே இருந்தது. அரசரின் சமயோசித புத்தியையும், வீரர்களுக்கு மன உறுதியை ஊக்குவிக்கும் விதமாக செயல் புரிந்ததற்கும் முதலில் அரசனின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மற்றும் சரியான வழிநடத்தலுமே என்பதை புரிந்து கொண்டார். இந்த தலைமைப் பண்பு மட்டுமே ஒரு காரியத்தை வெற்றிப்பாதையை நோக்கிச் செலுத்துகிறது. 


நேர்மறையாக எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் நிலைத்து நிற்கக்கூடியது என்பது போல எதிர் மறையாக எடுக்கின்ற முயற்சிகள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெற்றி பெற்றது போன்ற மாயையை ஏற்படுத்தினாலும், அந்த வெற்றி நிலைத்து நிற்பதில்லை. ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல எதையாவது செய்து சாமர்த்தியமாக காரியம் சாதிக்க வேண்டும் என்று அவசரத்தில் அள்ளித் தெளித்த நீர்க்கோலமாக எடுக்கும் முடிவு நிரந்தரமான வெற்றியை அளிப்பதில்லை. ஒவ்வொருவரையும் பிரித்துவைத்து தனித் தனியாக காரியம் சாதிக்க முயற்சி செய்வதைக் காட்டிலும், அனைவரையும் ஒன்று கூட்டி, ஒற்றுமையுடன் பணிபுரிய வழி வகுத்துக் கொடுப்பதே சிறந்த தலைமைப் பண்பாம். அந்த வகையில் ஒரு வெற்றியாளருக்கு நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நிரந்தரமான வெற்றியைத் தேடித்தரும் என்பதே சத்தியம். 


அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுதலே உத்தமம்!



ஒருவருடைய குறிக்கோள் எத்தகையதாக இருப்பினும், அவர் எப்படிப்பட்ட தன்மையுடையவராயினும்,  பேரும், புகழும், அளிக்கக்கூடிய வெற்றியாளராக பிரகாசிக்க வேண்டுமெனில் முதலில் தாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று  எதை, எங்கிருந்து ஆரம்பிப்பது மற்றும் எதை ஒருக்காலும் செய்யக் கூடாதது என்பதுதான்.  ஆரம்பத்தில் பல திட்டங்களை வகுத்துக்கொண்டு அதையனைத்தையும் முழுமையாகக் கவனம் கொள்ள முடியாமல்,  ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்தவும் செய்கிறோம். நம்மால் முடியக்கூடிய சிலத் திட்டங்களை மட்டும் ஆரம்பித்து, அதில் தீவிர கவனம் செலுத்தி, சரியான பாதையை வகுத்து அதில் பயணம் செய்யும் வல்லமையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். ஒரு திட்டத்தை ஆரம்பிப்பது என்பது எவருக்கும் எளிதான காரியம். ஆனால் அதனை செம்மையாக வழிநடத்தி வெற்றி காண்பதற்கு பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அச்செயலை  தேவையான துணிச்சலும்,  தன்னம்பிக்கையும், கடுமையான பொறுமையும் அத்தியாவசியமாகிறது. கொஞ்சம் பொது அறிவும், நல்லொழுக்கமும், செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாத குணமும் இருந்தாலே போதும். தன் தகுதிக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப, சரியான ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்காக கடுமையாக, விடா முயற்சியுடன் உழைத்தாலே போதும். ஒரு சாதனை என்பது சாதாரண வெற்றியைப் போன்று உடனே கிடைப்பது அன்று. பொறுமையுடன் கூடிய நீண்டதொரு கடினமான பயணம் மட்டுமே சாதனையை அடையச் செய்யக்கூடியது. விதையை ஊன்றியவுடன் கனியை எதிர்பார்ப்பது என்பது சாத்தியமன்று. விதை துளிர் விட்டு, செடியாகி, மரமாகி பின்புதான் கனியைக் கொடுக்க வல்லது. அப்படியேதான் நம் திட்டமும் ஆழ உழுதால் மட்டுமே கனி கொடுக்க ஆரம்பிக்கும். ஏதோ ஒரு திட்டத்தை ஆரம்பித்து, அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டு அடுத்த திட்டத்திற்குத் தாவிக் கொண்டிருப்பவர்கள் இறுதியில் எதையுமே முழுமையாக செய்து முடிக்க மாட்டார்கள். உதாரணமாக முதலில் நூல் வியாபாரம் செய்வதாகத் திட்டமிட்டு, சொற்ப காலங்களிலேயே, தான் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று முடிவு செய்து உடனே எண்ணெய் வியாபாரம் செய்யத் துணிந்து, பின் அதுவும் திருப்தியில்லாமல், ஜவுளி வியாபாரம் செய்கிறேன் என்று செல்பவர் ஒன்றில் நிலையான வெற்றியை எப்படி அடைய முடியும். இறுதிவரை அவர் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அதை விடுத்து முதலில் ஆரம்பித்த நூல் வியாபாரத்தில் எப்படி முன்னேற்றம் காண்பது என்பதை வரையறுத்து அதற்கான முழு முயற்சியை கடுமையான உழைப்புடன், அதே எண்ணத்துடன் செயல்பட்டால் ஒருநாள் அதன் எல்லையைத் தொட்டு சாதனையாளராக வெளிப்படுவார். 

எடுத்துக்கொண்ட பணி சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருப்பினும் அதை நுணுக்கமாக கவனம் கொண்டு, அழகாக ஆரம்பித்து, அதே அழகுடன் இறுதி வரை முழுமையாகச் செய்து முடித்தால் அது கொடுக்கும் நம்பிக்கை அதுவே நம்முடைய வழமையாக  மாறிவிடக்கூடும். தொடர்ந்து எடுக்கக்கூடிய பணிகள் அனைத்தும் தானாகவே வெற்றிப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடும் என்பதே சத்தியம்!

ஆழமற்ற தேடல் என்பது அர்த்தமற்ற அனுபவம்!

நன்றி ; வல்லமை 

4 comments:

  1. முதலில் அரசனின் தன்னம்பிக்கையும் புத்தியுமே வென்றது என்பது ஆச்சர்யம், நல்ல பதிவு...!

    ReplyDelete
  2. அன்பின் திரு நாஞ்சில் மனோ,

    தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  3. அன்பின் கிருபாகர்,

    தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete