Friday, July 27, 2012

திமிர்ந்த ஞானச் செருக்கு!





இலட்சுமி மேனன் – பெண்கள் முழு சுதந்திரம் பெற்று, தனித்தன்மையுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அதற்கான முயற்சிகளில் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டவர். மேடைப்பேச்சில் மிக திறமைசாலியாக விளங்கியவர்.


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்:


அமிழ்ந்து பேரிரு ளாமறியா மையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!

பாரதியார்.


1899ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ராம வர்மா தம்பிரான் மற்றும் மாதவிகுட்டி அம்மாள தம்பதியருக்குப் பிறந்த அன்பு மகள்தான லட்சுமி மேனன். ஆசிரியை, வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் செயல் திறனாளர் என்ற பன்முகங்கள் கொண்டவர். இவருடைய ஆரம்பக்கல்வி மற்றும் கல்லூரி வாழ்க்கை ஆரம்பமும் திருவனந்தபுரத்திலும், மேற்படிப்பு சென்னை, லக்னௌ மற்றும் இலண்டன் ஆகிய இடங்களில் தொடர்ந்தது ஒரு சிறந்த கல்வியாளராக தம் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தவர். தம் முதற்பணியை சென்னை இராணிமேரி கல்லூரியில ஆரம்பித்தார். 1926ம் ஆண்டு வரை அங்கு ஆசிரியப் பணியிலும் அதைத் தொடர்ந்து கோகலே மெமோரியல் பெண்கள் பள்ளியிலும், பின்பு லக்நோவில் இசபெல்லா தோபர்ன் கல்லூரியிலும் பணி புரிந்தார். அதற்குப் பிறகு 1935 வரை வழிக்கறிஞராகவும் பணியாற்றினார். ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, மற்றும் மார்கரேட் கசின்ஸ் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததால் தாம் பிறந்த பொன்னாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலும் மேலெழுந்தது. அகில இந்திய பெண்கள் மகாநாட்டில் சில காலம் செயலாளராகவும், தலைவராகவும், ரோஷினி என்ற அதன் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.


சீனா, இந்தியாவை தாக்கிய காலங்களில், பண்டிட் நேருஜி, இந்தியாவின் நிலைப்பாட்டை ஏனைய உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் விதமாக இவரை தூதுவராக பணியாற்ற நியமித்தார்.


1952ல், பீகார் மாநிலத்தின் சாரணர் பிரிவு ஆணையராக நியமிக்கப்பட்டார். அகில இந்திய மகளிர் மாநாடு அமைப்பில் மிக முக்கியமான பங்கெடுத்துக் கொண்டார். தன்னுடைய சொந்த சொத்துகள் மற்றும் நகைகளை அடமானம் வைத்து தில்லியில், அகில இந்திய மகாநாட்டிற்காக ஒரு நிலம் வாங்கினார். அகில இந்திய மகளிர் மாநாட்டுத் தலைவியாக 1955 முதல் 1959 வரையிலும், இறுதி வரை புரவலர் மற்றும் அறங்காவலராகவும் இருந்தார். மகளிரின் நலத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இலட்சுமி மேனன், நேருஜியின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சராக இருந்தார். உலக விவகாரங்களில் ஆழ்ந்த ஞானம் கொண்டவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வ சாதாரணமாக உலகம் முழுவதும் சுற்றி வந்ததோடு, மகளிரின் மேம்பாட்டிற்காக முழுமையான முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.


நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சில காலம் பாட்னா ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரி முதல்வராக இருந்தார். ஜவஹர்லால் நேருவின் கட்டாயத்தின் பேரில் மேல்சபையில் ஒரு சில பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டி வந்தது. 1949 – 50களில் ஐக்கிய நாடுகளின், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவிற்கு தலைமை தாங்கினார். தாய்நாடு திரும்பியவுடன், 1952 முதல் 1957 வரை வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பாராளுமன்ற செயலாளராகவும், 1957 முதல் 1962 வரை பிரதி அமைச்சராகவும் (Deputy Minister) 1967 வரை மாநில அமைச்சராகவும் சேவை புரிந்தார். 1957ம் ஆண்டு இவருடைய பல்வேறுவிதமான சேவைகளைப் பாராட்டி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.


1960ம் ஆண்டில், நம் இந்தியாவை சீனா, தாக்கிய போது ஜவஹர்லால் நேரு லஷ்மி மேனன் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நம் இந்திய நாட்டின் நிலையை தெளிவுபடுத்தும் வகையில் தூதுவராக அனுப்பி வைத்தது.. பீஹார் மாநிலத்திலிருந்து, மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது நேருஜியின் தலைமையின் கீழ் பல முக்கியப் பணிகளை மேற்கொண்டார். தம் இறுதிக் காலங்களில்கூட ஏழை, எளியோருக்கு சேவை புரிவதில் தம் பொன்னான நேரத்தை செலவிட்டார்.

லஷ்மி மேனன் கஸ்தூரிபா காந்தியின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபாடு கொண்டதனால், 1971ம் ஆண்டு அதன் தலைவராகவும் ஆனார். அங்கு பணிபுரிபவர்களுக்கு சிறந்த திட்டங்கள் மூலம், அந்த பெண்களின் கல்வியறிவை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். கல்வியறிவை முழுமையாகப் பெறுவதன் மூலம் மட்டுமே அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதில் உறுதியாக இருந்தார்.காந்தியடிகளின் கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்ட லட்சுமி, கதராடை உடுத்தும் வழக்கமும் மேற்கொண்டார்.

அன்னையர் தினக் கொண்டாட்டம் என்பதன் மொத்த சூத்திரதாரியான லட்சுமி மேனன் அவர்கள், நாட்டு மக்களின் அன்னை கஸ்தூரிபா நினைவாக கஸ்தூரிபா ஆசிரமத்தில் மட்டுமன்றி ஒவ்வொருவர் இல்லத்திலும், ஒவ்வொருவர் அன்னையையும் கொண்டாட வேண்டிய ஒன்று என்று நம்பினார். இரவு, பகல், நேரம், காலம் பார்க்காமல் உழைப்பு மட்டுமே வாழ்க்கையாக கொண்டிருக்கும் அன்னையர்களை அந்த ஒரு நாளாவது, குழந்தைகள் புத்தாடைகளுடன், விடியலிலேயே அன்னையின் அருகமர்ந்து, அவள் பாதம் பணிந்து, அன்று முழுவதும் அந்த ஒரு நாளேனும், எந்த பணியிலும் ஈடுபடாமல்,முழு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படியும் அன்றைய அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் தாங்கள் சுமப்பதாகவும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார். இன்றும் பெரும்பாலும் பல இடங்களில் இந்த வகையில் கொண்டாடப்படுகிறது.

அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த இரு குணங்கள் அவரிடம் உண்டு. ஒன்று, பற்றற்ற நிலை, அதாவது எந்த ஒரு உலகப் பொருள் மீதும் பற்று கொள்ளவோ, அடைய விரும்பியதோ இல்லை. மற்றொன்று, அடுத்தவரிடமிருந்து எந்த ஒரு பொருளையும் கையால் தொடவும் விரும்பமாட்டார். இந்த இரு குணங்களும் கடவுள் தனக்களித்த வரமாக எண்ணியிருந்தார்.

இங்கிலாந்தில் கல்வி பயிலும் போதுதான் முதன் முதலில் நேருஜியை சந்தித்தார். இரஷ்ய நாட்டில் நடந்த மகாநாட்டில் அவருடன் சென்று கலந்து கொண்டார். இந்தியாவிற்கு திரும்பியவுடன், தம் கணவர் பேராசிரியர் மேனன் அவர்களுடன் தாமும் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். இலவச கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக இளந்தளிர்கள, கல்வியறிவற்ற சமுதாயத்தினருடன் சேராமல் இருப்பதோடு, எதிர்காலத்தில், அனைத்து ஓட்டாளர்களும், கைநாட்டு வைக்காமல், கையொப்பமிடல் வேண்டும் என்ற பேராவலும் கொண்டிருந்தார். பெண்கள், ஆதிவாசிகள், தலித்துகள் போன்று அனைத்து மக்கள் மத்தியிலும் எழுத்தறிவு ஒளிவீச வேண்டும் என்றும், 2000ம் ஆண்டில் இந்தியாவில் அனைத்து மகளிரும் கல்வியறிவு பெறச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ஆனால் 1994லிலேயே அவருடைய இறுதி மூச்சு நின்றுவிட்டது. அது வரையில் தம் வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார சேவைகளுக்காகாவே செலவிட்டார்.

இலட்சுமி மேனனின் தனிப்பட்ட மற்றொரு நல்ல பழக்கம், தபால் நிலையத்திற்கு தானே சென்று, தபால் அட்டைகள் வாங்கி வந்து, ஒவ்வொருவருக்கும், தம்முடைய அழகான கையெழுத்திலேயே கடிதம் எழுதுவதை வழமையாகக் கொண்டிருந்தார். அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வதோடு, அன்பும், பாசமும் நிறைந்ததாக இருக்கும் என்றும், பதில் எழுதப்பட வேண்டியவர்களுக்கு ஒரு நாளும் தவற விடாமல், தாமதமானாலும், ஒரு சிறு குறிப்பேனும் வழங்கி விடுவார் என்று அவருடன் நெருங்கிப் பழகிய, ஷோபனா ரானடே, சுசீலா நாயர் போன்றவர்கள் கூறுகின்றனர். நூற்றுக் கணக்கான கடிதங்களை, தட்டச்சு உதவியாளரோ அல்லது செயலாளரோ என்று எந்த உதவியும் எதிர்பாராமல், தம் அழகிய கையெழுத்திலேயே எழுதி தொடர்பு கொள்வார் என்பது மிக ஆச்சரியமான விசயம். கோபம் கொள்ளும் குணமோ, எந்த ஒன்றின் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டு துன்பமுறும் வழக்கமோ ஏதுமில்லாதலால் தாம் மிகுந்த மன நிறைவுடன் இருப்பதாகக் கூறுவாராம். அவர் இல்லம் எப்பொழுதும் கல்வியாளர்கள் நிறைந்தும், விதவிதமான சைவ உணவு விருந்துடனும் கலகல்ப்பாக காணப்படும். இலட்சுமி மேனன் தாமே சமையல் செய்வதில் வல்லவராகவும் விளங்கினார்.

தங்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பும் மகளிர் ஒவ்வொருவரும் ஒரு சிறந்த பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய பல உன்னத குணங்களை லட்சுமி என். மேனன் அவர்கள் கொண்டிருந்தார் என்றால் அது மிகையில்லை.

நன்றி : வல்லமை வெளியீடு

2 comments:

  1. இவரைப் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது - இதுவரை.
    விரிவான கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அன்பின் அப்பாதுரை சார்,

    வாங்க. மிக்க நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...