Wednesday, February 18, 2015

சுட்டும் விழிச்சுடர்! - தாய்மையைக் கொண்டாடுவோம்!


பவள சங்கரி

தாய்மையைக் கொண்டாடுவோம்!
தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு வரம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பூரணத்துவம் பெறுவதே அவளுடைய தாய்மைக்குப் பிறகுதான். இன்றைய சூழலில் பெண்களுக்கு தாய்மைப் பேறு கிடைப்பதில் பல இடர்பாடுகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. குழந்தை உருவானவுடன் அது நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முதல் மூன்று மாதக் காலங்களிலிருந்தே தாயின் எண்ணங்கள் குழந்தைக்கும் செல்கிறது. தாய்மைக் காலத்தில் தாய் மன அழுத்தத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அதன் பாதிப்பு இருக்கலாம் என்கிறது ஆய்வுகள். குழந்தை உருவானவுடன் தாய், தந்தை, குழந்தை என அம்மூவருக்குமான தொடர்பு ஏற்படுவதை நம்மால் மனப்பூர்வமாக உணர முடியும்.
சமீபத்திய ஆய்வுகள், மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றன. ஏழு நாடுகளில், பத்தொன்பது மையங்களில், ஆய்வு செய்ததில் 8,200 க்கும் அதிகமான பெண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பிரசவ நேரத்தில், முன்சூல் வலிப்பு, கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம் என்கின்றனர். 10 முதல் 20 சதவிகித தாய்மார்கள், மன அழுத்தம், பதட்டம், இறுமுனை கோளாறு ஆகியவைகள் பிரசவ காலத்திலும்,அதன் பிறகு ஓராண்டிற்கும், பலவிதமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் சரிவும் இதற்குக் காரணமாகலாம் என்கின்றனர் வல்லுநர்கள். பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் இந்த நோய்க்கான காரணமும் அதன் தீர்வும் குறித்து சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

அபிமன்யு, பிரகலாதன் கதைகள் நாம் அறிந்ததே.
கண்ண பரமாத்மாவின் சகோதரி சுபத்திரையின் கர்பத்தில் உருவான குழந்தை அபிமன்யு. இத்தருணத்தில் தம் சகோதரனிடம், யுத்த தர்மங்கள் குறித்து அறிய விரும்பினாள் சுபத்திரை. அப்போது கண்ணன், போர்க்களத்தில், வீரர்களின் அணிவகுப்பை வகைப்படுத்தி வியூகமாக அமைத்து, எதிரியை வெல்லும் முறைகளைத் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக, பத்ம வியூகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர், அதனை உடைத்து உள்ளே நுழையும் முறையையும் விவரித்துக் கொண்டிருந்தபோது, இடையில் சிறிது நிறுத்துகிறார். அப்போது, ‘உம்… அப்புறம்?’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. அது சுபத்திரையின் கர்ப்ப வாசத்திலிருந்த அபிமன்யுவின் ஆர்வக் குரல் என்பது கண்ணனுக்குத் தெரியும். ஆனால் அதற்கு மேல் அவன் கதையைத் தொடரவில்லை. அதற்கான காரணமும் இருந்தது. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வழிமுறையைப் புரிந்துகொண்டதால், பிற்காலத்தில் தைரியமாகப் போர்க்களம் வந்துவிட்டான் அபிமன்யு. பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம் மட்டும்தான் அபிமன்யுவுக்குத் தெரியும். அதிலிருந்து வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால், அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டுக் கொண்டுவருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால், போர்க்களத்தில் சயத்ரதன் செய்த மாய வேலைகளால், உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யு, அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப் போகிறது பாரதப் போரின் 13 ஆம் நாளில், கௌரவர்களின் சேனாதிபதி துரோணர் அமைத்த பத்ம வியூகத்தை உடைத்தெறியும் நோக்கில் வீரதீரப் போர் புரிந்துகொண்டிருந்த அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் கதை….
அதே போன்று இரணியன் என்னும் அசுரனின் மனைவி கருவுற்றிருந்த காலத்தில், முனிவரின் போதனைகளை, பக்திக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, கருக்குழந்தையான பிரகலாதன், பக்தப் பிரகலாதனாக, திருமாலடியானாக மாறிய கதையும் நாமறிவோம்.
இவற்றையெல்லாம், பகுத்தறிவாளர்கள் பலவாறாக எள்ளி நகையாடினாலும், கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையின் தொடர்பாகத்தான் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் அமைகிறது என்பது நாம் யதார்த்த வாழ்வில் காணும் நிலை. இன்று குழந்தைகளை அதிகமாக ஆட்டிப்படைக்கும், ஆட்டிசம் போன்ற கொடிய பிரச்சனைகளுக்கான காரணமாக தாயின் மன அழுத்தமாகவும் இருக்கலாம் என்பதைச் சில ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் கருவுற்றிருக்கும் ஒரு பெண் நல்ல அமைதியான சூழலில், நிம்மதியான மன நிலையில் இருக்கும்போது குழந்தை அதேபோன்று எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். ஆனால் கூட்டுக் குடும்பப் பாரம்பரியம் சிதைந்துவிட்ட இன்றைய சூழலில், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு குழந்தைப் பேறு ஒரு சவாலாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பலர் குழந்தை பெற்றுக்கொள்வதை முடிந்த வரை தள்ளிப் போட்டுவிடுகின்றனர். இதனாலேயே பலருக்கு கரு உருவாகுவதில் பல பிரச்சனைகள் வந்துவிடுகிறது. கர்ப்ப காலத்தில் உடல் நலம் பேணுவதில் பெரும் சிரமமும் ஏற்படுகிறது.
முதல் மூன்று மாதங்களில் இருக்கும் தாயின் சிந்தனை குழந்தைக்கும்செல்கிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே அந்தக் குழந்தையின் மீதான அன்பை சிந்தனையில் வெளிப்படுத்துதல் நலம் என்கின்றனர். முதல் மூன்று மாதத்தில் மசக்கையால், வாந்தி, மயக்கம், உணவு ஏற்றுக்கொள்ளாமை போன்றவைகள் பாடாய்ப்படுத்தும்போது, வீட்டில் பெரியவர்கள் உடனிருந்தால், வாய்க்குப் பிடித்த சத்தான உணவை சமைத்துக்கொடுப்பதோடு, ஓய்வெடுக்கவும் வழியமைத்துக்கொடுப்பார்கள். ஆனால் பணிக்குச் செல்லும் பெண்களோ, ஓய்வெடுக்கவும் வழியில்லாமல், சரியான உணவும் உட்கொள்ள இயலாமல் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்துவிடுகிறார்கள். இது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. மென்மையான இசையையும், நல்ல சொற்பொழிவுகள் அல்லது கதைகள் போன்றவற்றைக் கேட்பதால் குழந்தைக்கும் அமைதியான மனோநிலை இயல்பாகிவிடுவதோடு, தீய பழக்கங்களுக்கும் அக்குழந்தை ஆட்படுவதில்லை. ஆனால் சதாசர்வமும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு, மன அழுத்தத்திற்கும் ஆளாகும் பெண்களால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தான் விரும்பும் சூழலில் இருப்பதோடு, பிடித்த உணவு வகைகளை உண்பது என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதும் அவசியம். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் படபடப்பை இது போன்ற இதமான சூழல்களால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஏனைய புற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, குழந்தையைப் பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் சதாசர்வ காலமும் பணியைப் பற்றிய சிந்தையிலேயே ஊறிக்கிடக்க வேண்டிய சூழலில் இருக்கும் பெண்களுக்கு வெகு எளிதாகவே சலிப்பு தட்டி விடுகிறது.


கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று அறியும் ஆவல் தவிர்க்கபட முடியாதது என்றாலும், அதுவே ஒரு மனப்பாரமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நலம். பெற்றோர் பிரசவ நேரத்தில் வந்தால் போதும். குழந்தை பிறந்தவுடன், குழந்தையைப் பராமரிக்கத் தேவையாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் கர்ப்ப காலத்தில் உதவியின்றி சிரமம் மேற்கொள்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் காலையில் சீக்கிரம் உணவு உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமல் இருப்பதால் அடிக்கடி மயக்கம் வருவதும் கட்டுப்படும். அத்தோடு வீட்டில் தயாரிக்கப்படும் பழச்சாறு, முளை கட்டிய பயறுகள் போன்றவற்றை அன்றாடம் எடுத்துக்கொள்வதும் அவசியம். ஆனால் வீட்டில் தயாரிக்க நேரமின்மையால் பலர் இன்று கடையில் தயாரித்த, கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பொருட்கள் கலந்த பழச்சாறுகள் மற்றும் துரித உணவு வகைகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியம் கெட்டுவிடுவதால், மன ரீதியான பிரச்சனைகளுக்கும் வழிவகுத்துவிடுவதோடு மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.
நம் இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களில் 15 விழுக்காட்டினர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக்காலத்தில் இரத்தச் சோகை ஏற்பட்டால் குறைப்பிரசவம் நிகழவோ, குழந்தை நோய்வாய்ப்படவோ வாய்ப்பாகிவிடும். இரத்த சோகையால் இதயத் துடிப்பில் மாற்றம் மற்றும் எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட்டால் இந்தப் பிரச்சனை சரியாகும்.
ஒரு பெண்ணைத் தன் கர்ப்ப காலத்தில் தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பது நம் பாரம்பரிய வழக்கம். காரணம், அந்த நேரத்தில் அவளுக்கு தாயின் அரவணைப்பு கட்டாயம் தேவைப்படுவதால்தான். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் பணி நிமித்தம் தூர தேசங்களுக்கோ அல்லது வேற்று மாநிலங்களுக்கோச் சென்று தங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது, உடல் ஆரோக்கியம் இரண்டாம்பட்சமாகப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இன்று பெரும்பாலானவர்கள் அதிகபட்சமாக இரண்டு அல்லது ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல சமுதாயத்தை உருவாக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டியது அவசியம். இதற்கான முழு பொறுப்பும் அக்குழந்தையின் பெற்றோரையேச் சாரும். அந்த வகையில் ஒரு தாய் தன் கர்ப்ப காலத்தில் அக்குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக எந்த விதமான ஒரு சில தியாகங்களையும் செய்யத் தயங்க வேண்டியதில்லை. மனமும், உடலும் முழு ஆரோக்கியமாக உள்ள நல்ல தாய்மார்களால் மட்டுமே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும். நல்ல சமுதாயம் மலர வேண்டுமென்றால் அதற்கு தாய்மார்களின் பங்கு இன்றியமையாதது என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டியது அவசியம்! தாய்மையைக் கொண்டாடுவோம்!

நன்றி : வல்லமை http://www.vallamai.com/?p=54412

1 comment:

  1. அபிமன்யுவின் கதை சிறப்பான உதாரணம்...

    ReplyDelete