Tuesday, November 13, 2012

தீபாவளிப் பரிசு!



 
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
அன்புடன்
பவள சங்கரி


சிறுகதை

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. புது துணி எடுக்கவோ, பலகாரம் செய்யவோ ஏதும் விருப்பம் இல்லை. ஒரு வாரமாக கடைவீதிக்குப் போகலாம் என்று கணவர் சுந்தரம் கூப்பிட்டு சலித்துப்போனதுதான் மிச்சம்.

எல்லாம் தீபாவளி கழித்து வாங்கினால் என்ன நட்டம். இந்தக் கூட்டத்தில் போய் அலைமோதி வாங்கி வந்து புதுசு உடுத்தனுமாக்கும். மெதுவா அப்பறமா வாங்கலாம்என்று தட்டிக் கழித்த சாவித்திரியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ஒரு மாதம் முன்பே எப்போது குழந்தைகளுக்கு துணி எடுப்பீர்கள் என்று சண்டை போட்ட மகராசியா இவள் என்று ஆச்சரியமாக இருந்தது. பள்ளிபாளையம் பேப்பர் மில்லில் வேலையில் இருந்த காலம் அது. போனஸ் வருவதற்குள் எப்போது வரும் என்று கேட்டு தொணப்பி எடுத்துவிடுவாள். 


குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். மூத்தவள் ரம்யா 7ம் வகுப்பும் இளையவன் ரகு நான்காம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் கான்வெண்ட்டில் படித்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று ஒத்தைக் காலில் நின்று ஊரிலேயே பெரிய பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தாள். அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து நான் என்ன கெட்டுப் போய்விட்டேன். பட்டம் வாங்கவில்லையா, இல்லை வேலைக்குத்தான் போகவில்லையாஎன்று வாதிட்ட போதும்,

ஆமா, நீங்க படிச்ச இலட்சணம்தான் தெரியுதே, 10,000 சம்பளத்தை வச்சிக்கிட்டு வாயுக்கும், வயிற்றிற்குமே போதவில்லை. இதிலே வேற பெருமைஎன்று இரத்தம் தெரிப்பது போல பேசினாள்.

தெரியுதுல்ல, அப்பறம் பிள்ளைகள கான்வெண்ட்டுல சேர்க்கலாம்னா, எங்கிருந்து பணம் வரும். கூரைய பிச்சிக்கிட்டா கொட்டப்போகுது..  எல்லாம் அரசு பள்ளியில படிச்சாலே போதும்.

எனக்கு மட்டும் தெரியாதா இந்த கதை. அதுக்குத்தான் ஒரு வழி பண்ணியிருக்கேன். நம்ம சாரதி வித்யா பவன் கரெஸ்பாண்டெண்ட் மகாதேவன் சார்கிட்ட பேசிட்டேன். அவரு எங்கப்பாவிற்கு ரொம்ப பழக்கம் இல்லையா. எனக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கேன். பாவம் அவரால ம்றுக்க முடியல. அப்பாவிற்காக ஏதாவது செய்யணும்னு மனசு வச்சதாலே நான் வெறும் பி.ஏ மட்டுமே  படித்திருந்தாலும்  இப்போதைக்கு நர்சரி பள்ளியில வேலை போட்டுத்  தருவதாகச் சொல்லியிருக்கார். சீக்கிரமா பி.எட். படிச்சு முடிச்சுடறேன்னு வாக்கும் கொடுத்திருக்கேன். முடிச்ச பிறகு பெரிய கிளாசுக்கும் போகலாம். அங்கே வேலை பார்க்குறவங்களோட குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணமும், பஸ் கட்டணமும் இல்லை. அதனால் மற்ற மேல் செலவுதானே அதை என் சம்பளத்த வெச்சு சமாளிக்கலாம்என்று அவ்வளவு நம்பிக்கையாகச் சொன்ன போது மறுக்க முடியாமலும், மனைவியின் முயற்சிக்கு தடை போடக்கூடாது என்பதாலும்தான் இதற்கு ஒத்துக்கொண்டார், சுந்தரம்.

சாவித்திரிக்கு மனது நிறைய மகிழ்ச்சி, தன் குழந்தைகள் படிக்கப்போகும் பள்ளியிலேயே தனக்கும் வேலை கிடைத்ததில். இந்த வயதில் புதிதாக வேலைக்குப் போவதில் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் போகப்போக பழகிவிட்டது. பள்ளியில் தன்னால் இயன்றவரை அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து நல்ல பெயர் வாங்கியதோடு, விரைவிலேயே பி.எட் பட்டமும் வாங்கிவிட்டாள்.

ஆனாலும் கான்வெண்ட் பள்ளியின் சூழல் குழந்தைகளை ரொம்பவும் மாற்றியதை தவிர்க்க முடியவில்லை. போடும் உடையிலிருந்து, காலணி, புத்தகப் பையிலிருந்து, சாப்பாடு கொண்டு போகும் டப்பர்வேர் டப்பா வரை அனைத்தும் செலவு கூடிப்போகும் சமாச்சாரமாகவே இருந்தது. பலவிதமான தியாகங்களை இருவரும் செய்ய வேண்டியிருந்தது. ஆனாலும் குழந்தைகள் மகிழ்ச்சியே பிரதானமாக இருந்ததால், வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை. அவர்களுக்கு தங்கள் சிரமம் கொஞ்சமும் தெரியக்கூடாது என்றும் முடிந்தவரை மறைத்துதான் வைத்திருந்தார்கள்.

  இருவரும் மளமளவென வளர்ந்து மூத்தவள் ரம்யா குட்டி பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் சேரும் நேரம், வாழ்க்கை இவ்வளவு வருடம் ஓடிவிட்டதா என்று நின்று யோசிக்கும் கட்டமும் வந்தது.  பொறியியல் படிப்பிற்கு தனி மவுசு வந்திருந்த காலம் அது. எல்லாக் குழந்தைகளையும் போல ரம்யாவும்  கல்லூரியில் சேர விரும்பினாலும், அவளை மெல்ல பிஎஸ்சி கம்ப்யூட்டர் டிகிரி வகுப்பில் சேர்த்துவிட்டு, பின்பு எம்சிஏ படித்துக் கொள்ளலாம் என்று சொன்னபோது, அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும், குடும்ப நிலையை ஓரளவிற்கு புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருந்ததால் பதில் ஏதும் பேசாமல் பெற்றோரின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தாள். ஒரு வழியாக ரம்யாவை சமாதானம் செய்தாலும், ரகு மட்டும் அப்பொழுதிலிருந்தே, தான் எக்காரணம் கொண்டும் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்  தவிர வேறு எதிலும் சேர மாட்டேன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டான்.

ரகுவின் அடம் தெரிந்ததுதான். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பான். ஆனால் நல்ல வழியில் அவனுடைய பிடிவாதங்கள் இருந்ததால் அதை மறுக்க முடியவில்லை. பேப்ப்ர் மில் வேலை முடிந்து மாலையில் 6 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுவதால் நிறைய பொழுது வீணாகக் கழிவதாகத் தோன்றியதால் மகனின் படிப்புச் செலவிற்காகவாவது ஏதாவது சிறு வியாபாரம் செய்தால் என்ன என்று தோன்றியது. தன் நண்பனின் மூலமாக டீத்தூள் வியாபாரம் ஓரள்விற்கு பரிச்சயம் ஆகியிருந்தது. அவர் மொத்தமாக குன்னூரிலிருந்து பெரிய பெட்டிகளில் மொத்தமாக வாங்கி வந்து அதை 1 கிலோ, அரை கிலோ பாக்கெட்டுகளாகப் பிரித்துப் போட்டு டீக்கடைகளுக்கு விற்றுக் கொண்டிருந்தார். பக்கத்தில் திருச்செங்கோட்டில் அவர் வியாபாரம் ஓரளவிற்கு நன்றாகவேப் போய்க் கொண்டிருந்தது அவரிடம் டீத்தூள் வாங்கினால் கிலோவிற்கு எப்படியும் 30 ரூபாயாவது மீதமாகும் என்பதால் வீட்டு உபயோகத்திற்கு வாடிக்கையாக அவரிடம் தான் வாங்குவார். தானும் ஏன்  பள்ளிபாளையம் பேப்பர் மில் குவார்டர்ஸில் குடி இருப்பவர்களுக்கு இந்த டீத்தூளை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று தோன்றவும், உடனே செயல்படுத்தினார். நல்ல தரமும், குறைந்த விலையும் இருந்ததால், எளிதாக  மார்க்கெட் பிடிக்க முடிந்தது.

முதலில் நண்பனிடம் வாங்கி விற்றவர், ஓரளவிற்கு மார்க்கெட் சூடு பிடித்தவுடன், தானும் குன்னூர் சென்று பெரிய பெட்டியில் வாங்கி வந்து, அதை மாலையில் உட்கார்ந்து சிறு பொட்டலங்களாக 100 கிராம் முதல் 1 கிலோ வரை நிறுத்து பேக் செய்து சப்ளை செய்ய ஆரம்பித்தார். மனைவியின் உதவியும் பல நேரங்களில் கைகொடுக்க, பிரச்சனை இல்லாமல் ஓரளவிற்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. சீட்டு போட்டு விவரமாக சேமித்து வைத்திருந்ததால், மகன் ஆசைப்படியே அவனை கம்ப்யூட்டர் பொறியாளராகவும், மகளை எம்சிஏ பட்டதாரியாகவும் படிக்க வைக்க முடிந்தது.

ஆனால் இத்துனைச் சிரமங்களையும் தாங்கிக் கொண்டவர்களுக்கு இன்று மகனும், மகளும் வெகு தூரம் தங்களை விட்டுப் பிரிந்து சென்றதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகளுக்கு அமெரிக்காவில் வேலை பர்ர்க்கும் நல்ல வரன் அமைந்ததால் அவளுடைய படிப்பிற்கும் அங்கு நல்ல வேலை கிடைக்குமே என்று அந்த வரனையே முடித்து அனுப்பி வைத்தபோது ஆரம்பித்த வேதனை இது. அடுத்து மகனும் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி நல்ல கம்பெனியில் சேர்ந்ததோடு ஆறே மாதத்தில்  ஜெர்மனி செல்லவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், வருடங்கள் போய்க் கொண்டிருக்க அந்தத் தனிமை தாங்கொணாத் துயரத்தையேக் கொடுத்தது. பொறுப்புகளெல்லாம் முடித்து ஓய்ந்து விட்டது போல ஏதோ சாப்பிட்டோம், உறங்கினோம் என்றே காலம் போய்க் கொண்டிருக்கிறது.

ஏனோ தீபாவளி வரப்போகும் இந்த நேரத்தில் ரகு +1 படிக்கும் போது மொபெட் வேண்டும் என்று அடம் பிடித்தது நினைவிற்கு வந்தது.
தீபாவளிக்குத் துணியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், மொபட்தான் வேண்டும் என்று அடம் பிடித்தபோது இயலாமையால் கோபம்தான் வந்தது. மூன்று நாட்கள் ஒழுங்காகச் சாப்பிடாமல், முகம் கொடுத்துப் பேசாமல் அட்டகாசம் செய்து கொண்டிருந்தான். எல்லாம் அம்மா கொடுக்கும் செல்லம் என்று கோபம் தலைக்கு ஏறினாலும், உள்ளூர அவன் பத்திரமாக வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டுமே என்ற கவலைதான் சைக்கிளிலேயே இறக்கை கட்டிக்கொண்டு பறப்பவன் ஆயிற்றே.  டிராபிஃக் மிக அதிகமாகிவிட்ட ஊரில் மகனுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற கவலையே இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பணம் இல்லை என்று வேறு ஏதேதோ காரணங்கள்தான் சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ஒரு அடி கூட வைத்து விட்டோமோ என்று, நினைத்தபோது வேதனையாக இருந்தது. தன்னையறியாமல் தன் கையை எடுத்து பார்த்துக் கொண்டார். கணவரின் இந்தச் செயலும் ஆழ்ந்த யோசனையையும் கண்ட சாவித்திரிக்கு என்ன காரணம் என்று புரியாமல் குழப்பமாக இருந்தது. பேப்பர் மில் வேலையிலிருந்து வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கி இப்போது வியாபாரம் மட்டும் கவனித்துக் கொண்டிருப்பவருக்கு, அதில் ஏதும் பிரச்சனையோ என்று சந்தேகம் வந்தது.

ஏனுங்க, ஏன் இப்படி வருத்தமா இருக்கீங்க. பிசினசில் ஏதாவது பிரச்சனையா. எதுவானாலும் வெளிப்படையா பேசினாத்தானே பாரம் குறையும். மனசுலயே வச்சிக்கிட்டு மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டா என்னா புரியும்என்று சிடுசிடுத்தாள்.

அதெல்லாம் ஒன்னுமில்லம்மா... திடீர்னு ஒரு பழைய ஞாபகம் ... ரகு ஒரு தீபாவளியப்ப மொபட் வாங்கணும்னு அடம் பிடிச்சானே அப்ப நான் அவனை ரொம்ப திட்டிட்டேன். அதுவரை ஒரு முறைகூட அடிக்காதவன் அவன் பிடிவாதத்தைப் பார்த்து ஒரு அடி கூட வச்சுட்டேன்.  இந்த ரோட்டுல லாரிக்காரங்க கண்ணை மூடிக்கிட்டுப் போறாங்களே, பையன் பத்திரமா போயிட்டு வரணுமேங்கற டென்சன்லதான் வண்டி வேண்டாம்னு சொன்னேன். அவன் கேக்கற மாதிரி இல்ல.. அதான் ஒரு அடி முதுகுல வச்சிட்டேன். எனக்கு கை வலிச்சுது. ஆனா அவ்ன் ஒரு சொட்டுத் தண்ணி கண்ணுல விடல... தலையை குனிஞ்சுக்கிட்டுப் போயிட்டான். ஒரு வாரம் கழிச்சு மனசு கேக்காம வண்டி வாங்கிக் குடுத்தேன். அதுக்குப் பிறகுகூட ஒரு நாள் கூட ஏம்ப்பா அடிச்சேன்னு அவன் கேக்கவேயில்ல.. அத நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு

என்னங்க நீங்க. பையனுக்கு மொபட் வாங்கிக் குடுத்ததோடவா நிறுத்தினீங்க, அவன் நல்லா ஓட்டிப் பழகற வரைக்கும் அவன் கூடவே உசிரை கையில பிடிச்சிக்கிட்டு இல்ல அலைஞ்சீங்க...

பாவம் அந்தக் குழந்தை நான் அடிச்சப்ப எப்படி வருத்தப்பட்டிருப்பான், என்கிட்ட ஏம்ப்பா அப்படி அடிச்சேன்னு ஒரு கேள்வி கேட்டிருந்தாக் கூட மனசு ஆறியிருக்கும். ஆனா அவன் கடைசி வரை கேக்கவே இல்ல...

சரி விடுங்க. பையன் அதெல்லாம் மறந்தே போயிருப்பான். இப்ப போய் ஏன் அதெல்லாம் நினைக்கறீங்க. கிளம்புங்க போய் நம்ம தொண்டீசுவரரை தரிசனம் பன்ணிட்டு வரலாம். மனசு கொஞ்சம் லேசாகும்.

கோவிலுக்கு என்றவுடன் எதுவும் பேசாமல் கிளம்புவார் என்று தெரிந்துதான் கணவன் மனம் மாற வேண்டும் என்று கிளம்ப வைத்து கூட்டிச் சென்றாள்.

அன்று தீபாவளி காலை. இருவரும் சாவகாசமாக எழுந்து குளித்து விட்டு, பக்கத்து வீட்டுக் குழந்தைகள், புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்துக் கொண்டு கலகலவென சிரித்து ஓடிக் கொண்டிருந்ததை பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்த்து இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும். வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டு எழுந்து போன சுந்தரம், வெளியில் , தனக்குப் பிடித்த, புளு நிறத்தில் பளபளவென ஜெர்மனியில் தயாராகும், ’வோல்ஸ் வேகன்கார் வந்து நிற்பதைக் கண்டு யார் வந்திருப்பார்கள் என்று யோசிக்கும் போதே நீலக்க்லர் சட்டை அணிந்த கம்பெனி எக்ஸிக்யூட்டிவ் ஒருவர் வந்து,

சார் சுந்தரம் என்பது நீங்கதானேஎன்றார்.

ஆமாம்... நீங்க.... என்று இழுத்தார்.

சார், இந்தாங்க கார் சாவி. இது உங்க கார்என்றபோது ஒன்றும் புரியாமல்,

நாங்கள் காரெல்லாம் புக் பண்ணவில்லையே, நீங்கள் அட்ரஸ் மாறி வந்திருப்பீங்க. என்றார்.

இல்லை சார், 106 தானே உங்க வீட்டு எண், காசிராம் வீதிதானே, இதே முகவரிதான் இதில் இருக்கிறது பாருங்கள்என்று முன்பதிவு செய்த ஆதாரங்களுக்கான ஆவணங்களைக் காட்டினார்.

நாங்கள் புக பண்ணாத போது எப்படி வரும்?” என்று அப்போதும் நம்பிக்கை இல்லாதவராகக் கேட்டார்.

சார் , ரகு என்பவர் ஜெர்மனியிலிருந்து உங்கள் பெயருக்கு புக் பண்ணி தீபாவளியன்று டெலிவரி கொடுக்கும்படி சொல்லியிருக்கார். அவர் புக் செய்து இரண்டு வாரம் ஆகிறது.என்றார்.

தன் கண்களையே நம்ப முடியாதவராக காரின் அருகில் சென்று மெல்ல அதை வருடிக் கொடுத்தபோது, தம் மகனையேத் தொடும் உணர்வு ஏற்பட அப்படியே மெய்சிலிர்த்து நின்றார்.

“TO MY LOVELY DADDY" என்ற  அட்டை பளிச்சென்று கண்ணில்பட கலங்கிய கண்ணீர் பார்வையை மறைத்தது!

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment