Sunday, April 6, 2014

பாம்பைக் கண்டால்! (4)






பாம்புக் கடிக்கு வைத்தியம் பற்றிப் பார்க்கப் போகுமுன் வேறு சில பாம்புகள் பற்றியும் பார்க்கலாமா?

விஷம் துப்பும் நாகம்  (Spitting cobra) என்ற ஒரு பாம்பு ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகிறது இந்த வகைப் பாம்பு..


http://www.impactlab.com/wp-content/uploads/2009/01/mozambique_spitting_cobra.jpg
விஷம் துப்பும் நாகம்


இந்தப் பாம்பு தன்னைத் தாக்க வரும் எதிரிகளின் முகத்தில் விஷத்துளிகளைத் தெறிக்குமாம்.  எப்படி என்கிறீர்களா?  தன் விஷப் பையினைத் தசைகளால் சுருக்கி விஷத் துளிகள் விஷப் பற்களின் துவாரம் வழியே வெளி வரும் போது வாயினால் காற்றை திடீரெனெ பலத்துடன் வெளி விடுமாம்.  அப்போது விஷப் பற்களின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் மிக மிக நுண்ணிய துளிகளாக மாறி சுமார் 6 முதல் 10 அடி வரை பாயும்.  இந்தப் பாம்பு எதிரியின் கண்களைக் குறி வைக்குமாம்.  இவ் விஷத் துளிகள்    காயம் எதுவும் இல்லாத தோலில் விழுந்தால் ஒரு ஆபத்தும் இல்லை.  ஆனால் கண்களில் விழுந்தாலோ உடனே வைத்தியம் செய்யா விடில் கண் பார்வை போய் விடும்.

கிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பு (Rattle snake) எனப்படும் மிகக் கொடிய விஷம் கொண்ட ஒரு வகைப் பாம்பு அமெரிக்காவின் வரண்ட தென் மாகாணங்களில் காணப்படும்.  இதன் வால் நுனி உடலில் இருந்து மாறு பட்டுக் காணப் படும். இது எதிரிகளை எச்சரிக்க வாலை வேகமாக ஆட்டும்.  அப்போது ஒரு கிலுகிலுப்பையை ஆட்டியது போன்ற ஒலி கிளம்பும்.


கிலுகிலுப்பை வால் கொண்ட பாம்பு


கிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பின் விஷம் முக்கியமாக நம் ரத்த மண்டலத்தைத் தாக்கும்.  ரத்தம் தனது உறையும் தன்மையை இழக்கும்.  மேலும் கடி பட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களின் புரதப்பொருட்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரியச் செய்யும்.  அதனால் கிலு கிலுப்பைப் பாம்பு கடி பட்டவர்கள் உடனே வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் கூட சில சமயம் கடி பட்ட உருப்புகளை அவர் இழக்க நேரிடும்.

கடல் வாழ் பாம்புகள் :  பாம்புகள் நிலத்தில் மட்டும்தான் வாழும் என்பதில்லை. நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன.  அவற்றில் கடல் வாழ் பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை.  இவை கடலில் வாழ்ந்தாலும் மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதிள்கள் கிடையாது.  ஆகவே சுவாசிப்பதற்காக அவ்வப்போது தலையை நீருக்கு வெளியே கொண்டு வரவேண்டும்.  இந்தப் பாம்புகளின் வால் பட்டையாயிருக்கும்.  அதை அவை நீரில் நீந்திச் செல்ல துடுப்பு போல உபயோகிக்கும்.



 http://en.wikipedia.org/wiki/File:Laticauda_colubrina.jpg

மஞ்சள் உதடுகள் கொண்ட கடல் கட்டு விரியன்






http://en.wikipedia.org/wiki/File:Pelamis_platurus.png

மஞ்சள் வயிறு கொண்ட கடல் பாம்பு

பாம்பின் விஷம் : நல்ல பாம்பு, கட்டு விரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம். (Neurotoxin)  இவ்விஷம் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் பாலமாய் உள்ள திசுக்களைச் செயலிழக்கச் செய்யும்.  அதனால் நம் உடலில் உள்ள இச்சா தசை அனிச்சா தசை இரண்டுமே வேலை செய்யாது.  அதன் விளைவாக தன்னிச்சையாகச் செயல் படும் நுரை ஈறல், இருதயம் இரண்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளும்.  உயிரும் பிரியும்.

கட்டு விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைப் போல பதினாறு மடங்கு வீரியம் உடையது.

கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் சற்று மாறுபட்டது.  அது ரத்த மண்டலத்தைத் தாக்கும் விஷம் (Heamotoxin).  ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை அழிக்கும்.  ரத்தம் உறைவதைத் தடுக்கும்.  உடல் உறுப்புகளின் செயலை அழிக்கும்.  முக்கியமாக மூத்திரக் காய்களை செயல் இழக்கச்செய்யும்.

பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கும் மருந்து பாம்பின் விஷத்தில் இருந்துதான் தயாரிக்கப் படுகிறது.  இந்தியாவில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் இது தயாரிக்கப் படுகிறது.  இம் மருந்து தயாரிக்க ஒரு குதிரைக்கு  வீரியம் மிகவும் குறைக்கப் பட்ட விஷத்தினை ஊசி மூலம் ஏற்றுவர்.  பின் தினமும் மெல்ல மெல்ல விஷத்தின் வீரியம் அதிகரிக்கப் படுகிறது.  குதிரையின் உடலில் இந்த விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல வளருகிறது.  எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக வளர்ந்த பின் குதிரையின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து விஷம் முறியடிக்கும் மருந்தினைத் தயாரிக்கின்றனர். 

செயற்கை முறையில் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அது நடந்தால் பாம்புக் கடி முறிவுக்கான மருந்தின் தட்டுப் பாடு நீங்கும்.

இருளர்களும் பாம்புகளும் :  தமிழ் நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஜில்லாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருளர்கள் என்ற ஒரு பழங்குடி வகுப்பினர் வசிக்கின்றனர்.  (இந்த இருளர்கள் மத்தியதரைக் கடல் நாடான அல்பேனியாவிலும் இருக்கின்றார்களாம்!)


இருளர்

இருளர்களின் முக்கியத் தொழில் பாம்பு, எலி பிடித்தல்.  பிள்ளைப் பிராயத்திலேயே இத்தொழிலை கற்க ஆரம்பித்து விடுகிறார்கள் இவர்கள்.  பேசும் மொழி தமிழும் தெலுங்கும் கலந்த ஒன்று.  பயிர்கள் நடவு, அறுவடை காலங்களில் அன்றாட விவசாயக் கூலிகளாக வேலையும் செய்கின்றனர்.

1972ல் இந்திய வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வரும் வரை இவர்கள் பிடித்த பாம்புகளைத் தோலுரித்து வெளி நாடுகளுக்கு பாம்பின் தோலை ஏற்றுமதி செய்வோருக்கு விற்று வந்தனர்.

தானியகளை அதிக அளவில் (25 சதவிகிதத்துக்கு மேல்) தின்று தீர்ப்பது எலிகள் என்பதாலும்,  அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாம்புகள் என்பதாலும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டப்படி பாம்புகளைப் பிடிப்பதும், பாம்புத் தோல் ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப் பட்டது.  இதனால் வருவாய் இழந்த இருளர்கள் வறுமையில் வாட ஆரம்பித்தனர்.

இருளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டாகர் என்பவரும் (சென்னை கிண்டி பாம்புகள் பூங்கா, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைகள் பண்ணை இவைகள் தோன்றக் காரணமாய் இருந்தவர்) மற்றும் ஒத்த கருத்துடையவர்களுமாகச் சேர்ந்து இருளர் கூட்டுறவுச் சங்கத்தினை ஆரம்பித்தனர்.  இந்த சங்கம், அங்கத்தினர்கள் பிடித்து வரும் ஒவ்வொரு விஷப் பாம்புக்கும் ரூ.150/- கொடுக்கிறது.

இவர்கள் பிடித்து வரும் பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கப் படுகிறது.  மூன்று வாரங்கள் வைத்திருந்து பாம்புகளிலிருந்து விஷம் கறந்த பின் அவை மீண்டும் காட்டிற்குள் விட்டு விடப் படுகின்றன.


http://channel.nationalgeographic.com/staticfiles/NGC/StaticFiles/Images/Show/30xx/309x/3097_Ultimate-viper-1-7_04700300.jpg
பாம்பின் விஷம் கறத்தல்

சர்வதேசச் சந்தையில் ஒரு கிராம் விரியன் பாம்பின் விஷம் சுமார் 2,000 டாலர்கள்.  நல்ல பாம்பின் விஷத்தின் விலை குறைவு.  சுமார் 1,000 டாலர்களே.  காரணம் நல்ல பாம்புகள் அதிக அளவில் கிடைப்பதுதான்.

கறந்து சேகரிக்கப் பட்ட பாம்பின் விஷம் திரவ நிலையில் இருக்கும்.  அதற்கு அதீதக் குளிரூட்டி பொடியாக மாற்றி சிறிய கண்ணாடிக் குழாய்களில் அடைத்து பாம்புக் கடிக்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப் படுகிறது.

பாம்புக் கடியும் மாந்திரீகமும் : மந்திரத்தில் மாங்காய் விழுமோ விழாதோ எனக்குத் தெரியாது.  ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட நாட்களில் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த என் தந்தை சொன்ன ஒரு செய்தி என் ஞாபகத்துக்கு வருகிறது.  அந்த நாட்களில் ஒரு ரயில் நிலய இயக்குனர் (Station master) பாம்புக் கடிக்கு மந்திரிப்பதில் வல்லவராம்.  எவருக்கு பாம்பு கடித்தாலும் உடனே அவருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினால் அவர் எதோ மந்திரம் ஜபித்து தான் அணிந்துள்ள துணியிலிருந்து ஒரு சிறிய துண்டைக் கிழித்துப் போடுவாராம்.  அதே சமயம் அது வரை படுத்திருந்த பாம்புக் கடி பட்ட மனிதர் எழுந்து உட்காருவாராம்.  அன்றைய அரசாங்கம் எல்லா ரயில் நிலய இயக்குனர்களுக்கும் ஒரு ஆணை பிறப்பித்திருந்ததாம், “எந்த ஒரு ரயில் நிலையத்திலும் எந்த வேளையிலும் ஒருவர் வந்து இன்னாரை பாம்பு கடித்து விட்டது என்று சொன்னால் அந்த செய்தி உடனே அந்த குறிப்பிட்ட நிலைய இயக்குன்ருக்கு இலவசமாகத் தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்” என்று. இன்நாட்களில் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்களோ  இல்லையோ தெரியாது.  ஆனால் மந்திரிப்பதாகச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

இனி ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்றால் செய்யக் கூடாதவை என்னென்ன, செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

முதலில் செய்யக் கூடாதவை பற்றி.

1.  பதட்ட மடையாதீர்கள்.  நீங்களும் பதடமடைந்து கடி பட்டவரையும் பதட்டம் அடையச் செய்யாதீர்கள்.  பதட்டம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து விஷம் உடலில் பரவுவதை துரிதப் படுத்தும்.

2.  கடி பட்டவர் மேல் கைகளால் தட்டுவதும், கடி பட்ட இடத்தினைத் தேய்ப்பதும் கூடவே கூடாது.  இதனாலும் விஷம் உடலில் வேகமாகப் பறவும்.

3.  கடி பட்ட இடத்தில் கத்தியால் கீறி வாயினால் ரத்த்தோடு விஷத்தையும் உரிஞ்சித் துப்பிவிட முயற்சி செய்யாதீர்கள்.  இப்படிச் செய்வதால் மூன்றுவித பாதிப்புகள் ஏற்படலாம்.  ஒன்று கடித்த பாம்பு கண்ணாடி விரியனாக இருந்தால் ரத்தத்தின் உறையும் தன்மை போய்விடுமாதலால் நிற்காத ரத்தப் பெருக்கெடுத்து அதனாலேயே அவர் உயிர் போகலாம்.  இரண்டாவது உங்கள் வாயில் புண் இருதால் அதன் வழியே உங்களுக்கும் விஷம் பரவலாம்.  மூன்றாவது உங்கள் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் கடி பட்டவருக்குப் பரவலாம்.

4.  முன் காலத்தில் பெரிதும் சொல்லப் பட்ட ஒரு முதலுதவி கடி பட்ட இடத்துக்கு மேல் ஒரு கயிற்றினைக் கட்டி, அதற்குள் ஒரு பென்சிலைச் சொருகி, அந்தப் பென்சிலைச் சுற்றுவதன் மூலம் கட்டு இறுகி (Torniquet) ரத்த ஓட்டமும் விஷம் பரவுதலும் தடைப்படும் என்படதாகும்.  ஆனால் எற்படக் கூடியது என்ன தெரியுமா?  கடி பட்ட இடத்தில் உள்ள திசுக்கள் சிதைந்து பின்னர் அவருக்கு பாம்புக் கடிக்கான வைத்தியம் செய்யப் பட்டு அவர் உயிர் பிழைத்தாலும் கடி பட்ட உறுப்பினக் கழித்து விட வேண்டிய நிர்பந்தம் வரும்.

5.  கடித்த பாம்பினைத் தேடி அதை அடிப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள்.  அதனால் இரண்டு பாதிப்புகள்.  ஒன்று கடி பட்டவருக்கு உடனே தேவையான சிகிச்சை அளிப்பதின் பொன்னான நேரம் விரயமாதல்.  மற்றொன்று அந்தப் பாம்பு உங்களையும் கடிக்க நேரிடலாம்.

6.  கடி பட்ட உறுப்பினை, அது காலோ, கையோ, இருதய மட்டத்திற்கு மேலாக வைக்காதீர்கள்.  அப்படி வைப்பதால் விஷம் வேகமாகப் பறவும்.

7.  கடி பட்டவரை நடக்க வைக்காதீர்கள்.  அதனால் அவரது ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக உடலில் பறவும்.

இனி செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.

நீங்கள் சரியான (RIGHT) நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது என்ன சரியான நடவடிக்கை எங்கீறீர்களா?  மேலே படியுங்கள்.

1.  கடி பட்டவருக்கு தைரியமூட்டுங்கள்.  எல்லாப் பாம்புகளுமே விஷப் பாம்புகள் அல்ல. (Reassure)   

2.  பாம்புக் கடி பட்டவரையும் கடி பட்ட அவயவத்தினையும் அசைய விடாதீர்கள்.  கடி பட்ட இடத்துக்கு மேல் இருகக் கட்டும் பட்டிச் சுருளினால் (Compression bandage) ஒரு அளவு கோலையோ பட்டையான குச்சியையோ வைத்து கட்டுப் போடுங்கள்.  (Immobilize)

3.  உடனே எந்த வைதிய சாலையில் பாம்புக் கடிக்கான மருந்து இருக்கிறது என்பதை  விசாரித்தறிந்து நேராக அங்கு கூட்டிச் செல்லுங்கள்.  ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  (Go to Hospital)

4.  பாம்பு கடி பட்டவருக்கு கீழ்க் கண்ட மாறுதல்கள் ஏற்படலாம்.
இவற்றில் எந்த மாறுதல்கள் காணப் பட்டன என்பதை மனதில் இருத்தி மறக்காமல் வைத்தியரிடம் சொல்லவும்.

அ.  கடிபட்ட இடத்திலிருந்து ரத்தப் பெருக்கு.
ஆ.  கண் பார்வை மங்குதல்.
இ.  தோளில் எரிச்சல்.
ஈ.  வலிப்பு.
உ.  பேதி.
ஊ.  மயக்கம்.
எ.  அதிகமாக வியர்த்து விடுதல்.
ஏ.  ஜுரம்.
ஐ.  அதிகமாக தாகம் எடுத்தல்.
ஒ.  தசைளை இயக்க முடியாமை.
ஓ.  வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.
ஒள. மறத்துப் போதலும் ஊசிகள் குத்தும் உணர்ச்சியும்.
அ.அ.  இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தல்.
ஆ.ஆ.  அதீத வலி. 
இ.இ.  தோலின் நிறம் மாறுதல்.
ஈ.ஈ.  கடித்த இடத்தில் வீக்கம்.
உ.உ.  சோர்வு.

பாம்பை நீங்கள் பார்த்திருந்தால் அதன் நிறம், உடலில் காணப் பட்ட குறியீடுகள், கடிக்கும் போதோ பின் அடிக்கும் போதோ படமெடுத்ததா என்பது போன்ற விவரங்களையும் வைத்தியரிடம் சுருக்கமாகச் சட்டென்று சொல்லுங்கள்.  (Tell the doctor)

மேற்சொன்னவையே ஒருவரை பாம்பு கடித்து விட்டால் நீங்கள் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகள் (RIGHT actions).

“கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா?” என்பது பழமொழி.  “பாம்பு கடித்து பாம்பு சாகுமா?” என்பது கேள்வி.  சாகாது, ஒரே ரகப் பாம்பாயிருந்தால்.  காரணம் அதன் உடலிலே அதன் விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி உள்ளடங்கி இருப்பதுதான்.

கட்டுரையை முடிக்கும் முன் இரு  வேண்டுகோள்கள்.

ஒன்று:  பாம்பினைக் கண்டால் அதை உடனே அடித்துக் கொல்லாதீர்கள்.  பயத்திற்கு அடிமையாகி அதை வெறுக்காதீர்கள்.  அவை மனித குலத்திற்கு இழைக்கும் தீங்கினைவிட நன்மை பல மடங்கு அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

இரண்டு:  உங்கள் ஊரில் உள்ள எந்தெந்த மருத்துவ மனைகளி லெல்லாம்  பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கத் தேவையான மருந்து கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  இது உங்களுக்கும் உதவியாக இருக்கும்.  பிறருக்கும் உதவியாக இருக்கும்.  காரணம் பாம்பு கடித்தால் ஓரிரு மணி நேரத்திற்குள் வைத்தியம் செய்யா விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.                     

கட்டுரையை இத்தோடு முடித்திட நினைத்தேன்.  ஆனால்......

நடராஜன் கல்பட்டு

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...