Monday, April 25, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 (4)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 (4)

’பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம்’ என்று ஒரு பழங்கால வழக்கு உள்ளது.இவற்றின் முக்கிய நோக்கம் பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது. பாவம் நீங்கி இறையோடு ஒன்றுவது .முண்டம் என்பது முடி எடுத்தல், அதாவது பிரயாகை தலத்தில் முடி காணிக்கை செலுத்தி பாவம் தொலைக்க வேண்டுமாம். தெரிந்தோ, தெரியாமலோ எத்துனையோ பாவங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் செய்து கொண்டுதானே இருக்கிறோம்! நீத்தார் கடன் தீர்க்க நேர்த்தியான தீர்த்தம் என்ற பெருமையும், வரலாற்றுப் புகழும் கொண்ட புனிதமான கயைத் தலத்தை விட்டு கிளம்பினோம்.

DSC00036.JPG

கயையிலும், சந்த் சௌரா என்னும் இடத்தில், கோவிலுக்கு அருகன்மையில், நாட்டுக்கோட்டை நகர சத்திரம் இருக்கிறது. அங்கு மதிய உணவு கிடைக்கிறது. முன்னாலேயே பதிவு செய்தால்தான் சமைத்துக் கொடுப்பார்கள். காசியிலிருந்து போன் செய்து சொல்லிவிட்டு கிளம்பியிருந்தோம். அதனால், எளிமையான, ஆனால் நல்ல உபசரணையுடன், சுவையான உணவு கிடைத்தது.மதியம் 3.30மணியளவில் கிளம்பினோம். கயையிலிருந்து போத கயா அலது புத்த கயா என்று வழங்கும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடத்திற்குச் செல்ல அரை மணி முதல் 40 நிமிடங்கள் தான் ஆகிறது.

அவதாரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நிலைக்குத் தம்மைத் தாமே உயர்த்திக் கொண்ட, புத்த பகவான் அரண்மனை வாசத்திலிருந்து கயைக்கு வந்தவர். புத்த கயா என்னும் இடத்திற்குச் சமீபத்தில் உள்ள உருபேலா என்னும் இடத்தில் தங்கி ஆறு ஆண்டுகள் தவம் இயற்றி, ஞானோதயம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.இதுவே பௌத்த தர்மமாக பட்டொளி வீசி நாடெங்கிலும் பரவி, திபெத்,ஜப்பான் போன்ற இடங்களையும் ஆட்கொண்டது.

DSC00055.JPG

அமைதியும், புனிதமும் நிறைந்த நிரஞ்ஜனா நதிக்கரையில், கயையிலிருந்து ஏழு மைல் தொலைவில் புத்த கயா அமைந்துள்ளது.

புனித புத்த பூர்ணிமா தினமான,வைகாசி மாதப் பௌர்ணமி தினமே, பகவான் புத்தர் போதி மரத்தினடியில் அறிவொளி பெற்ற நன்னாள். சிரார்த்தம் செய்ய கயை செல்லும் அன்பர்கள் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தை பிரம்மா, விஷ்ணு, சிவனின் உறைவிடமாகக் கருதி வணங்குவதாகக் கூறுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. பார்க்கும் கண்களில்தானே பேதங்கள்! எண்ணத்தில் என்ன நினைக்கிறோமோ அதையேக் காட்சியாக்கும் அவன் அருளை நினைத்து பேரானந்தம் அடைய முடிந்தது.

ஆரம்பத்தில் வேரோடு வெட்டிய அசோக சக்கரவர்த்தியே தான் பௌத்த மதம் தழுவிய பின் அங்கே புதிதாகக் கிளைத்த போதி மரத்தை வழிபட்டு, அங்கேயே புத்த பகவானுக்கு முதல் ஆலயமும் எழுப்பியுள்ளார். அது மட்டுமல்லாமல் புத்த பிட்சுகளுக்காக அவர்கள் தங்குவதற்கு ‘புத்த விஹார்’ம் அமைத்திருக்கிறார். அந்த இடத்தில் நின்ற போது இனம் புரியாத உணர்வுகள் நம் மனதை ஆட்கொள்வதை அறிய முடிகிறது. இன்றும் அந்த இடத்திற்கு ஏதோ அதிர்வலைகள் இருப்பதாக என்னால் உணர முடிந்தது.என் கணவர் மற்றும் பெரும்பாலான ம்க்களிடமும் அதனை வெளிப்படையாக உணர முடிந்தது. ஏதோ ஒரு பரவசம் ஆட்கொண்டதை மறுக்க முடியவில்லை.அசோகர் கட்டிய அக்கோவில் மகா போதி கோவில் என்று வழங்கப்படுகிறது.கால மாற்றத்தினால் சிதிலமடைந்தாலும், அதன் கோபுரத்தைப் புதுப்பித்திருக்கிறார்கள். அந்த கோபுரத்தின் உயரம் 170 அடி. அங்கே பகவான் புத்தபிரான், அமைதியே உருவாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
DSC00060.JPG

இந்தக் கோவிலின் மேற்புறத்தில் தான் பகவான் புத்தர் தவமிருந்த போதி மரம் குடையாகப் பரந்து விரிந்து இருக்கும் காட்சி பரவசமூட்டுவதாக உள்ளது. புத்த பகவான் அமர்ந்திருந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு மேடை எழுப்பப்பட்டு உள்ளது. அங்கே இரு பெரிய அடிச்சுவடுகளும் காணப்படுகின்றன.

அருகில் உள்ள மற்றுமொரு கோவிலில் சுவர்ண விக்கிரமாக மின்னும் பகவான் புத்தரின் திரு உருவச்சிலை! ஆழ்ந்த அமைதியும், மிகுந்த தூய்மையும் மனதிற்கு இனிய அனுபவமாக அமைகிறது. புத்தரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

உலகம் த்ழுவிய ஒரு மதமாக புத்த மதம் பல நாடுகளிலும் பரவியிருந்ததால், திபெத்தியர்கள், பர்மியர்கள், ஜப்பானியர்கள், தாய்லாந்துக்கரர்கள் என்று பல நாட்டினரும் தங்கள் நாட்டுச் சிற்பக்கலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் இங்கே ஆலயம் எழுப்பியுள்ளதால், அந்நாட்டு மக்களையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் அமைகிறது.

திபெத்தியர்களது ஆலயம் மகா போதி ஆலயத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. இவர்கள் தாந்திரிக வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களாதலால், கோவிலின் கீழ்தளத்தில் சக்கரம் ஒன்று பதித்திருக்கிறார்கள். அதைச் சுற்றினால் பாவம் தீரும் என்பது இவர்கள் நம்பிக்கையாக உள்ளது. அதைச்சுற்ற உடல் வலிமை மிக அதிகம் வேண்டும்...பின்னே.... செய்த பாவத்தை அவ்வளவு எளிதாக தொலைக்க முடியுமா என்ன....

மாடியில் புத்த பகவான் தமது சீடர்களான மௌத் கல்யாயனுடனும், சாரிபுத்ரனுடனும் வீற்றிருக்கும் அழகான சிலை வடிவங்களைக் காணலாம். அந்த இடட்தில் நிற்கும் போது ஏதோ ஒரு காலத்தில் நாமும் இப்படி ஒரு வேளை புத்தரின் பார்வையில் அமர்ந்து அவர்தம் உபதேசம் பெற்றிருப்போமோ என்று எண்ணும் அளவிற்குஅந்த இடம் நம்முள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது இயற்கையே!

ஆலயத்திற்கு வடக்கு புறம் பர்மிய ஆலயம் மற்றும் அடுத்ததாக ஜப்பானியர் ஆலயமும் அமைந்துள்ளது.

தாய்லாந்து ஆலயத்தின் மண்டபத்து விளிம்புகளில் சிறு சிறு வெண்கல மணிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அம்மணிகள் வாயு பகவானுடன், கலந்து உரையாடும் போது ஜலதரங்கம் வாசிப்பது போன்ற நாதம் எழுப்பி பரவசப்படுத்துகின்றது.நம் உள்ளம் ஒருமுகப்படும் போது, அந்த இன்ப நாதம் நம்மை ஒரு தியான உலகத்தினுள் இட்டுச் செல்வதை உணர முடியும். அந்த இன்பம் பெறுவது நம் கையில்தான் உள்ளது. அதாவது உள்ளத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.

நாகார்ஜீன குகைகள் மற்றும் கலோலத் நீர்வீழ்ச்சி ஆகியவைகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இடங்களாகும். நாங்கள் காணத்தவறிய இடங்களும் அவைகள்தாம்.

புத்த கயாவின் இனிமையான நினைவுகளையும், அங்கு வாங்கிய அழகிய புத்தர் சிலைகளையும் சுமந்து கொண்டு, இரவு 7 மணியளவில் கிளம்பினோம். திரும்ப காசி வந்து இரவு 11 மணியளவில் வந்து சேர்ந்தோம். நாங்கள் இரவு உணவு அருந்த அங்குதான் வருவோம் என்று முன்பே சொல்லி வைத்துவிட்டு சென்றிருந்ததால் எங்களுக்கு உணவு , நாங்கள் தங்கியிருந்த, காசி நாட்டுகோட்டை நகர சத்திரத்தில் தயாராக இருந்தது.நிம்மதியாக உண்டுவிட்டு, மன நிறைவுடன், அன்றைய பொழுது மிக நல்லபடியாக சென்றதை எண்ணி அதற்காக ஆண்டவனுக்கும், உதவிய மற்ற அன்பர்களுக்கும் நன்றி சொல்லி நிம்மதியாக உறங்கச் சென்றோம். அடுத்த நாள் விடியலில் எழுந்து விசுவநாதரை திரும்பவும் தரிசித்து விட்டு மற்ற கோவில்களுக்கும் செல்ல வேண்டுமே......அடுத்து நாங்கள் சென்ற கோவில்களில் மிக இனிமையான, அதாவது இனிப்புகளாலேயே அலங்கரிக்கப்பட்ட கோவில் இருந்ததே........சொல்கிறேன்....சற்று பொருங்கள் சாமி.....

தொடரும்.-



காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 - (4)
Apr 25, 2011
by coral shree



No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...