Monday, May 2, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - 7

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - 7


மனித ஆற்றலின் சக்தியைத் திருடும் களவாணி அந்த மனிதனுகுள்ளேயே உட்கார்ந்துகொண்டு ஆட்சி செய்வதை அந்த மனிதனே உணரத் தவறுவதும் இயற்கையாக நடக்கக்கூடியதுதான். ஒரு சில விசயங்களை நம் மனது திட்டவட்டமாக ஒரு முடிவு எடுத்துவைத்துக் கொள்கிறது. அதை உள் மனது ஆழமாக நம்பிக் கொண்டு, இப்படித்தான்நடந்திருக்கும் என்று உறுதியான முடிவும் எடுத்துக் கொள்கிறது. ஆனால்பிற்காலங்களில் அது உண்மை அல்ல என்று தெரிய வரும்போது, அதாவது அறிவாற்றலின்மீதிருக்கும் அந்த திரை விலகும் நேரம் காலங்கடந்த நிலை ஏற்பட்டு விடுகிறது.

ரிஷியின் மனைவி வந்தனா கூறிய விசயங்கள் நம்பக் கூடியதோ என்ற சந்தேகம்
ஆரம்பத்தில் இருந்த போதும், அவளுடைய பேச்சில் தெரிந்த நேர்மை அவள் கூறியவிசயமும் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பச் செய்தது. அந்தக் குழப்பமே,மாறன் போன் செய்த போது , பேச மனமில்லமல் அடுத்த நாள் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

ரிஷியைத் தான் முதன் முதலில் சந்தித்த சூழல் நினைவிற்கு வந்தது. கன்னிமாரா
நூலகத்தில் அந்த ஊசி முனை அமைதியில் சில புத்தகங்களிலிருந்து முக்கியமானகுறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அருகில் இருந்த அடுத்த மேசையில் ஏதோ சலசலப்பு ஏற்பட, தன்னையறியாமல், நெற்றியைச் சுருக்கியவாறு சலசலப்பு வந்த திசையை நோக்கித் திரும்பினாள்.ரம்யாவிடம் எப்போதும் ஒரு நல்ல பழக்கம், தான் செய்யக்கூடிய வேலை எதுவாயினும் அதில் நூறு சதவிகித ஈடுபாடு கொண்டு தெளிவாக செய்வது. அதுவும் நூலகம் வந்துவிட்டால், நன்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் கூட, மிக மெல்லிய புன்னகை மட்டுமே தயக்கத்துடன் வரும். அன்று விடுமுறை தினமாதலால் கூட்டமும் சற்று அதிக்மாகத்தான் இருந்தது. இருந்தாலும் ரம்யா,தன்னுடைய இறுதியாண்டு பிராஜெக்ட் சம்பந்தமான குறிப்புகள் எடுப்பதில் தீவிரமாக இருந்தாள்.

சலசலப்பு வந்த திசையை சலிப்புடன் நோக்கியவள், முதன் முதலில் ரிஷியைப்
பார்த்தாள். அருகில் இருந்த தன் நண்பனுடன் சாடையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். புரியாததை எழுதிக் காண்பித்துக் கொண்டிருந்தான்.அவள் முறைத்துப் பார்ப்பது கூட அறியாதவர்களாக ஏதோ சீரியசாக சாடை பேசிக்கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கு உபத்திரவமாக இப்படி, நூலகத்தில் வந்து பேசிக் கொண்டிருக்கிறோமே என்ற சுயநினைவு கூடவா இருக்காது என்று யோசிக்கும் போதே, சட்டெனத் திரும்பி ரம்யாவைப் பார்த்தவன், அடுத்த வினாடி ஏற்கனவே அறிமுகமானவ்ன் போல புன்னகை பூத்தான். அந்தக் குறும்புப் பார்வையும், விகல்பமில்லத புன்னகையும், பளிச்சென்ற முகமும், ஒரு கணம் தானும் கோபத்தை மறந்து,புன்னகை செய்ய வைத்தது. அடுத்த கணம் அதனை மறைத்துக் கொண்டு கோபமாக பார்வையைச் செலுத்த முயன்று தோற்றுப் போனாள். ஆனாலும் இதில் எதையும் சட்டை செய்யாதவனாக ரிஷி வெகு இயல்பாக திரும்ப புன்னகையுடன் கையையும் ஆட்டிவிட்டு கிளம்பி விட்டான்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் இரண்டு மூன்று முறை அவனை பேருந்து நிறுத்தத்திலும், ஒரு முறை தன் தங்கும் விடுதியின் அருகன்மையில் இருக்கும் ஸ்பென்சர் பிளாசாவிலும் சந்தித்தாள்.
--
ஏனோ ஒவ்வொரு முறை அவளைப்பார்க்கும் போதும் மிகவும் பழகியவன் போல கையை ஆட்டி விட்டுச் செல்வதை வழக்கமாகவேக் கொண்டிருந்தான்.
ரிஷியின் குறும்புப் பார்வையும், களங்கமற்ற அவனுடைய புன்னகையும் ஒரு ஈர்ப்பை அவன் பால் ஏற்படுத்தியது. அவன் படிக்கும் கல்லூரி பற்றி அறிந்து கொள்ளவும் மனம் விழைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஏதோ கோபமாக இருப்பது போலவே ஒரு முகபாவத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அதுவே தனக்கு ஒரு பாதுகாப்பு என்று கூட நினைக்கத் தோன்றியது அவளுக்கு. தன்னுடைய அன்பான பார்வையை மறைக்க ஒரு முகமூடி தேவைப்பட்டது அவளுக்கு. ஆனால் ரிஷியோ அதற்கு நேர்மாறாக, ஒவ்வொரு முறை
பார்க்கும் போதும், பார்வையாலேயே அவளை நெருங்கிக் கொண்டிருப்பதையும் அவள் உணராமல் இல்லை.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் , கல்லூரிகளுக்கிடையேயான, காலச்சாரப் போட்டிகளில், ரம்யா மிக அழகாக, அத்துனை உணர்வுகளையும் கூட்டி, பாரதியாரின், சின்னஞ்சிறு கிளியே..செல்வக் களஞ்சியமே.. என்று மெய்மறந்து பாடியபோது அரங்கமே, கைதட்டி முடித்தவுடன், தனக்குப் பின்னால், ஒரு சோடிக் கைகள் மட்டும் தனியாக வெகு நேரம் தட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தவள், தன்னையுமறியாமல் யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் திரும்பிப் பார்த்தவள், அங்கு அதே குறும்ம்புப் பார்வையும், மலர்ந்த முகமும் கண்டு தன்னையறியாமலே, தன் கையைத் தூக்கி ஆட்டியதை, அதுவும் மேடையில்,............அந்த இனிமையான நினைவுகள் பல நாட்கள் அவளுடைய தூக்கத்தைக் கெடுத்ததும் உண்மை.

சில நேரங்களில், இப்படி ஒரு பொழுதுபோக்காக அந்த ஆண்டவன் சிலப் பார்வைகளைச் சந்திக்கச் செய்து, உறவாடவும் வைத்து, மொட்டு, விட்டு மலரும் வேளையில் அதனை வேரோடு பிடுங்கி எறிந்து எள்ளி நகையாடுவது சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், தன் உயிர்த்தோழி ஒருவரின் உறவினர் இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, நிறைய இரத்தம் தேவைப்படும் சூழலில், சிநேகிதிகள் அவருக்கு உதவும் வகையில், அடையார் புற்று நோய் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அதுவரை பட்டாம்பூச்சிகளாக துள்ளித் திரிந்து வளைய வந்து கொண்டிருந்த தோழிகள் , அந்த மருத்துவமனையின் எல்லையில் நுழைந்தபோதே, இறுக்கமான ஒரு சுழலை உணர்ந்தவர்கள் மனதிற்குள்ளும் இனம் புரியாத ஒரு சோகம் ஒட்டிக் கொள்ள அமைதி மட்டுமே மொழியானது அங்கே. நம்முடைய சக மனிதர்கள், குழந்தைகள் முதற்கொண்டு, வலியினாலும், வேதனையினாலும், உருக்குலைந்து, துடிப்பதைக் காண உள்ளம் உறைந்துதான் போனது.......

இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், இலட்சமாக, கோடியாக பெருகி, சிவப்பணுக்களைத் தின்று, பாதிக்கப்பட்டவரை இரத்த சோகையால் , சக்தியிழந்து, அதனால், தலைவலி, காய்ச்சல், நரம்பு மண்டலம் பாதிப்பு, போன்று பல்வேறு உபாதைகளைக் கொடுத்து காண்போரையும் வேதனைக்குள்ளாக்குகிறது. அதைவிட அதற்கான மருத்துவமும், கீமோதெரபி,
ரேடியேசன், எலும்பு மஞ்சை மாற்றம் என்று இப்படி வேதனைக் கொடுக்கக்கூடிய பெரிய வைத்தியமாகவே இருப்பதுதான் கொடுமை.

தன் தோழியின் உறவினராக இருந்த போதிலும், அவர் படும் வேதனைகளை அறிந்த பின்பு ஒன்றும் பேசத் தோன்றாமல், ஆறுதல் கூட சொல்லாமல் அமைதியாக இரத்த தானம் செய்துவிட்டு வெளியே கிளம்புவதற்காக வந்தவர்கள், அங்கே ஓர் ஓரமாக தலை கவிழ்ந்து சோகமே உருவாக அமர்ந்திருப்பது, யாரோ தான் அறிந்தவர் போல் இருக்கவும், திரும்பவும் சற்று நெருங்கிச் சென்று பார்த்தவள், அங்கே ரிஷியை சந்திப்பாள் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. அவனுடைய பெயர் ரிஷி என்பது
கூட ஒருமுறை அவனுடைய நண்பன் அவனை அந்தப் பெயர் சொல்லி அழைத்தது கண்டுதான் தெரிந்து கொண்டாள். ஆனால், இன்று அவனுடைய வாடிக்கையான குறும்புப் பார்வையும், மந்திரப் புன்னகையும் காணாமல், அப்படி ஒரு சோகமான முக அமைப்புடன் காண நேர்ந்ததை எண்ணி நொந்துப் போனாள். தன் தோழியின் முகத்தை சந்தேகத்துடன் பார்த்தவளின் மனநிலையை புரிந்து கொண்டவளாக,

“ இது ரிஷி, என் பெரியம்மா மகன். இவருடைய அம்மாதான் அவர்கள்’, என்று சொன்னதைக் கேட்டவுடன், ஒரு கணம் அவள் இதயமே கனத்துப் போனதாக உணர்ந்தாள் ரம்யா.........

உடனே அவன் கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் மனம் துடித்தாலும், அதனை சமாளித்துக் கொண்டு, பேச்சே ஏதும் வாராமல், பார்வையாலேயே அவன் வேதனைக்கு ஆறுதல் சொல்ல முயற்சித்தாள். அவனும் அதை உணர்ந்து கொண்டவனாக, நன்றி என்ற ஒற்றைச் சொல்லை தடுமாறிச் சொன்னான். கண்கள் கண்ணீரைச் சொரிந்தபடி!

அவந்திகாவின் நினைவை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்ந்தாலும்,மாறனின் இதயமோ, தன்னையறியாமல் அவளை நெருங்கிக் கொண்டே இருப்பதை அவனால் தடுக்க இயலவில்லை. அப்பாவிடமும், அம்மாவிடமும், எப்படியாவது தன் நிலையை விளக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். இந்த சனிக்கிழமை எப்படியும் பொறுமையாக எடுத்துச் சொல்லி விட
வேண்டும் என்று உறுதியும் கொண்டான். இந்த சில நாட்கள் பிரிவு, மாறனுக்கு
அவந்திகாவிடமிருந்து எந்த விலகலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அவளைப்பற்றி ஏதும் தெரியாமலே, நெருக்கம் மட்டும் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதற்கு மேலும் இது பற்றி பெற்றோருடன் பேசாவிட்டால், பிறகு காலம் முழுவதும் வருந்த வேண்டியிருக்கும் என்பதும் புரிந்தது அவனுக்கு. ரம்யா தன் தந்தையிடம் இது பற்றி பேசுவாதாகக் கூறியிருந்தாலும், இன்று அவள் இருக்கும் நிலையில், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லையே.......

அன்று வெள்ளிக்கிழமை. பொதுவாக அலுவலகத்தில் எப்படியும் ஏதேனும், ஒரு பார்ட்டி இருக்கும். அல்லது உடன் பணி புரியும் சகாக்களுடன், குஷியாக உணவு விடுதி சென்று வித்தியாசமான உணவு வகைகளை முயற்சிப்பது வழக்கம். இரவு அரட்டை அடித்து விட்டு, தாமதமாக வீடு திரும்பி, அடுத்த நாள் மிக தாமதமாக துயிலெழுவது என்று வாரக்கடைசி என்றாலே கொண்டாட்டம்தான்.....எல்லாம் தனக்கென்று ஒருத்தி வரும்வரைதானே.. பின்பு குடும்பம், குழந்தைகள் என்று வந்துவிட்டால் பொறுப்பும், பொது நலமும் தானே வந்துவிடுமே! அவந்திகா தன் வாழ்க்கையில் வந்தால், தான் அவளை எப்படி இளவரசி போல
வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் ஒரு சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது. அந்த தேவதைக்கு ஒரு மனக்கோவிலே அல்லவா எழுப்பி வைத்திருக்கிறான்...... இதை எங்கே அவள் அறிந்திருக்கப் போகிறாள். அவள்தான் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பவளாயிற்றே.....அவந்திகாவைப் பற்றி நினைத்தாலே ஒரு வெட்கம் வந்து தன் முகம் மேலும் சிவந்து போவது போல் இருக்கும்..

இந்த இனிமையான நினைவுடன் வந்தது, நேரம் போனதே தெரியாமல் மகிழ்வுந்துப்பயணம் மேலும் மகிழ்வுறச் செய்வதாகவே, அலுவலகம் வந்து சேர்த்து விட்டது. இப்படியெல்லாம் ஏதோ நினைவாக வண்டி ஓட்டியது தெரிந்தால் அம்மா என்ன சொல்வார்கள் என்று நினத்தவன், முன்பெல்லாம் இது போன்று பல விசயங்கள் அம்மாவிடம் ய்தார்த்தமாக பகிர்ந்து கொள்ள முடிந்த தன்னால், அவந்திகா விசயத்தில் மட்டும் கள்ளத்தனம் புகுந்தது ஏன் என்று மட்டும் அவனுக்கு விளங்கவில்லை. ஒரு வேளை தான் மறுதலிக்கப்படுவோம் என்ற அச்சமாகக் கூட இருக்கலாம்.

அலுவலகம் உள்ளே நுழைந்தவுடன் ரம்யா இருக்கை வெறுமையாக இருப்பது தெரிந்தது. சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது மாறனுக்கு. ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு தாமதமாக வந்தவளில்லை அவள். இன்று என்னவாகியிருக்கும் என்று யோசிக்கும் போது, முதல் நாள் ரிஷி, தன் மனைவி ரம்யாவிடம் பேச விரும்புவதாகக் கூறியது நினைவிற்கு வந்தது. அப்படி என்னதான் பேசியிருப்பாளோ தெரியவில்லையே, என்று யோசிக்கும் போதே
தன்னுடைய செல்பேசி சிணுங்கவும், ரம்யாவின் அழைப்பாகத்தான் இருக்கும் என்ற முடிவுடனே போனை எடுத்தான்.

‘ஹலோ, மாறன்.....நான் ரம்யா...’

‘ ம்ம்ம் சொல்லு ரம்யா. ஏன் ஆபீஸ் வரவில்லையா’

‘ஆமாம்....மாறன். இன்று கொஞ்சம் தலைவலியாக இருக்கிறது. அதனால் சிக் லீவ் அப்ளை பண்ணி மெயில் அனுப்பிவிட்டேன்’, என்றாள்.

‘ஏதாவது உதவி தேவையா ரம்யா? நான் வேண்டுமானால் சீக்கிரம் வேலையை முடித்து விட்டு கிளம்பி வரட்டுமா ரம்யா’ என்றான்.

’இல்லை , மாறன், கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். மாலை தொடர்பு
கொள்கிறேன்’, என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

வாழ்க்கையின் மறு புறம் ஒவ்வொருவருக்கும் ஒரு இறுக்கத்தையும்,
எதிர்பார்ப்பையும் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அப்படி
இல்லையென்றாலும் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமாக இல்லாமல் போய்விடுமே...

அடுத்த நாள் தன் தந்தையிடம் பேச எண்ணியிருந்தவன், மாலை தான் வீடு வந்ததும் தந்தை அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லையென்றாலும், அவர் தொலைபேசியில் அழைத்து ஒரு குண்டை அல்லவா தூக்கிப் போட்டுவிட்டார்......

தொடரும்.


No comments:

Post a Comment