Thursday, May 5, 2011

மனம் எனும் மாயக்கண்ணாடி!

”புலன்களின் எல்லா வாயில்களையும் அடைத்து வைத்து, வெளி விசயங்கள் புகாமல் தடுத்து நிறுத்தி மனதையும், இதயத்தில் நிலையாக நிறுத்திப் பின் அவ்வாறு வசப்படுத்தப்பட்ட மனதால், ப்ராணனை உச்சந்தலையில் நிலை பெறச்செய்து, பரமாத்மா ஸம்பந்தமான யோக தாரணையில் நிலைத்து நின்று எவன் ‘ஓம்’ என்னும் ஒரே எழுத்தான ப்ரம்மத்தை உச்சரித்துக் கொண்டு அந்த ‘ஓம்’ என்ற ஏகாபுரத்தின் பொருளான நிர்குண ப்ரம்மமான என்னைச் சிந்தனை செய்து கொண்டு இவ்வுடலை நீத்துச் செல்கிறானோ அந்த மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான்!”
பகவத்கீதை.

250px-Ars.moriendi.pride.a.jpg

'எத்துனை முறை இதனை மனனம் செய்திருப்பேன். ஒர் ஆயிரம் முறை இதனை மனக்கோவிலில் நிறுத்தி புண்ணிய மலர்களால் அர்ச்சித்திருப்பேனே. ஆயினும் இந்த இறுதி நேரத்தில் எனக்குப் பயனளிக்கவில்லையே ' என்று சுயநலமாகச் சிந்திக்கக் கூட இயலவில்லை, மரணப்படுக்கையில் மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கும் மகேந்திரனுக்கு. ஐம்புலன்களும் அடங்கப் போகும் நேரத்தில் சிந்தனை பின்னோக்கிச் சென்று, அசைபோட ஆரம்பித்தது.

வழக்கமாக விடியற்காலை 5 மணிக்கு எழுந்து பம்பரமாகச் சுழலும் திலகவதி அன்று படுக்கையை விட்டு எழவே மனம் வராமல், மணி ஆறாகியும் படுத்துக் கொண்டே இருந்தாள். இந்த பத்து நாட்களில் அவள் வாழ்க்கையை விதி எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு விளையாடிப் பார்த்து விட்ட்து.

விடிய, விடிய சேர்ந்தாற்போல் 10 நிமிடமாவது கண் அசந்திருப்போமோ என்றே
தெரியவில்லை திலகவதிக்கு. 5 நிமிடத்திற்கு ஒரு முறை கணவனின் முகத்தை,
தொட்டுப்பார்த்து, கைகால்களில் எதேனும் அசைவு தெரியாதோ, திடீரென கண் விழித்து , திலக்ஸ்’ என்று வழக்கமாக செல்லமாக கூப்பிடுவாரே அப்படி கூப்பிடமாட்டாரோ ஒரு முறையாவ்து என்று ஏக்கமாக பார்த்துக் கொண்டேயிருப்பதிலேயே இந்த வாரம் முழுவதும் ஓடியேவிட்டதே. லண்டனில் இருக்கும் மகனும், மருமகளும் இன்று வரப்போகிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதோ. விசயம் அறிந்தவுடன், ஓடோடி வர அவனுடைய பணியின் பொறுப்பே காரணம் என்று அவன் ஆயிரம் காரணம் கூறினாலும், அந்த பழைய பந்தம், பாசம் எல்லாம் காணாமல் போய்விட்டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. நல்ல வேளை மனிதர் சுய நினைவின்றிக் கிடக்கிறார். இல்லையென்றால் இதையெல்லாம் தாங்கக்கூடிய மனதா அவருக்கு.காசு, பணம் என்று வந்துவிட்டால், பந்தமாவது, பாசமாவது என்று அலுத்துக் கொண்டே கணவனைத் தொட்டுப்பார்த்து விட்டு, தலையை வருடிவிட்டு எழுந்து போய் கடமைகளைச் செய்ய ஆரம்பித்தாள். கணவன் ஒரேயடியாக இப்படி படுத்த படுக்கையாக விழக்கூடும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள். இந்த 45 வருட வாழ்க்கையில் அதிக பட்சமாக சேர்ந்தாற் போல் தன்னிடம் 1 வாரமாக பேசாமல் இருந்தது இதுதான் முதல்முறை. வருத்தமும், கோபமும் கூட வெகு நேரத்திற்கு நீடிக்காது. 18 வயதில் அடி எடுத்து வைத்து அன்றிலிருந்து இன்று வரை கணவனின் ஒரு சொல் கூட தன்னைத் தாக்கிய நினைவு இல்லை. சே! அப்படி இருந்தால் கூட தேவலாம் போல இருந்தது அவளுக்கு. அதை நினைத்தாவது ஆறுதல் பெற முடியுமே. ஆனால் தான் இன்னும் சுய நினைவுடன் நடமாடிக் கொண்டிருப்ப்தே ஆச்சரியமாக இருந்தது.. கணவனை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கூட்டி வந்த..............என்று சொல்வதைவிட எடுத்து வந்த என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம், மருத்துவர் இனி பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறிய பிறகு, தான் கட்டிய தன் வீட்டிலேயே உயிர் போக வேண்டுமென்று பல முறை அவர் விருப்பத்தில் உறுதியாக இருந்தபடியாலும், அவரை வீட்டிற்கு எடுத்து வர சம்மதித்தாள் திலகா.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல காலம் எத்துனை பெரிய அதிர்ச்சியிலிருந்துத் தன்னை வெளிக் கொண்டுவந்துவிட்டது என்று எண்ணி ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. எல்லோரும் சுயநலமாக உனக்கு முன்னாலேயே நான் போய்விட வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் மனிதர் எப்போது பார்த்தாலும்,

“உன்னை தனியாக விட்டுச் செல்வதுதான் எனக்கு பெரிய வேதனை திலக்ஸ..... உன்னை எளிதாக ஏமாற்றிவிடலாம். கொஞ்சம் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டால் போதும். உயிரைக் கேட்டால் கூட கொடுத்து விடுவாய் நீ. யாரையும் சீக்கிரமாக நம்பி விடுகிறாய். இந்த உலகம் நீ நினைப்பது போல அவ்வளவு நேர்மையான மனிதர்கள் நிறைந்தது கிடையாது என்பதை பல முறை கூறியும் அதைப் புரிந்து கொள்ளும் சக்தி கூட உனக்கு இல்லை. நீ,யாரை நம்பியும் இருக்காதே. சுயமாக இருந்து பழகு. ......”

எத்தனை அறிவுரைகள் இது போல் கூறியும் மண்டையில் ஏற்றிக்கொள்ளும் முயற்சி கூட எடுத்ததில்லை அவள். கணவனை மலை போல் நம்பி கடமையேக் கண்ணாகக் காலத்தை ஓட்டியவள். கணவனின் பேச்சை மீறி இன்று வரை எந்த முடிவையும் நினைத்துக் கூடப்பார்த்ததில்லை. உடுத்தும் உடையிலிருந்து, உண்ணும் உணவு வரை அவருக்குப் பிடித்தது தான் தனக்கும் பிடிக்கும் என்று சுய விருப்பம் என்ற ஒன்று பற்றிய உணர்வே அற்றவளாகவே காலத்தை ஓட்டியவள். ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் அவள் உறுதியான நம்பிக்கை கொண்டவளாக இருக்கிறாள். ஆம், கணவர் எக்காரணம் கொண்டும் தான் தனியே சிரமப் படுவதைப் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கமாட்டார். எப்படியும் தன்னையும் விரைவில் அழைத்துச் சென்றுவிடுவார் என்ற எண்ணமே அவளை தைரியமாக இந்தத் துன்பத்தை எதிர் கொள்ளச் செய்தது என்றே எண்ண வேண்டியிருந்தது.

ஆயிற்று. நேரம் ஓடிவிட்டது. மகனும், மருமகளும் பேரக்குழந்தையுடன் வரப்போகும் நேரம் வந்துவிட்டது. கணவனிடம் நெருங்கி,

“ ஏனுங்க......நான் பேசறது உங்களுக்குக் கேக்குதோ இல்லையோ எனக்குத் தெரியாது. நம்ம சந்திரு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான். அவனிடம் ஏதாவது ஒரு வார்த்தையாவது பேசோணும் நீங்க.....அவன் என்னதான் கோபமாக இருந்தாலும், பிற்காலத்துல நீங்க பேசாமையே போயிட்டீங்களேன்னு நினைச்சு ஏங்கிப் போயிடுவான். அது நரக வேதனையில்லியா.......ஒரு வருசமாச்சு நீங்க அவன்கிட்ட பேசி....அவந்தான் சின்ன பையன் ஏதோ கோபத்துல இருக்கிறான். நீங்களும் இப்படியே போய்ட்டா அவனால தாங்க முடியாதில்ல...”

மனைவியின் பேச்சைக் கேட்டு சிரிக்கத் தோன்றினாலும் தன்னால்தான் எந்த உணர்வையும் காட்ட முடியவில்லையே......வீட்டில் நடப்பது அத்தனையும் தெரிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாதே....இளைய மகன் படிக்கும் காலத்தில் விளையாட்டுப் பிள்ளையாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு படிப்பைக் கோட்டை விட்டு, ஏதோ வியாபாரம் பண்ணுகிறேன் பேர்வழி என்று எதையோ செய்து கொண்டிருக்கிறான். மனைவி, குழந்தை என்று ஆன பிறகும் பொறுப்பு வரவில்லை.

மூத்தவன் சந்திரு, படிப்பில் மட்டுமல்ல எல்லா விசயத்திலும் சூட்டிப்பு.
படிக்கும் காலத்திலேயே, கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் ஒழுங்காக படித்து,
பொறியியல் பட்டம் முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும்போதே கேம்பஸ் இண்டர்வ்யூவில் தெரிவு செய்யப்பட்டு, நல்ல கம்பெனியில் வேலையும் வாங்கிக் கொண்டுதான் வெளியில் வந்தான்.

பெற்றவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகளிடையே பாரபட்சம் தோன்றாது. அதுவும் சிரமப்படுகிற குழந்தை என்றால் ஒருபடி அதிகமாகவே பரிவு காட்டத் தோன்றும் என்பதுதானே இயற்கை. அந்த வகையில் மகேந்திரன், தனக்கு மிஞ்சிய ஒரே பரம்பரைச் சொத்தான 2500 சதுர அடி நிலத்தை மகன் சந்திரு வீடு கட்டிவிடலாம் எனக் கூறியபோது எந்த விகல்பமும் இல்லாமல் ஒப்புக் கொண்டு அவன் லண்டனிலிருந்து அனுப்பிய பணத்தை வைத்து கட்டி முடித்தார். சின்ன மகன் பெரிதாக ஏதும் சேமிக்க இயலாத நிலையில், கைக்கும், வாய்க்குமாக சம்பாதனை சரியாகிவிடுகிறதே என்று நொந்து போனதால், பாலமுருகனுக்கு, ஏதானும் செய்ய வேண்டும் என்று தோன்றியதால் அவனுக்கு ஊருக்குச் சற்றுத் தொலைவில் 3000 சதுர அடியில் ஒரு பிளாட் விலை மலிவாக தன் நண்பன் மூலமாகக் கிடைக்கவும், அதை கையில் இருந்த மீதிப்பணத்தில் வாங்கிப் போட்டுவிட்டார். ஆனால் அதைப்பற்றி ஏதும் பேசவில்லை. நிலம் வாங்கியிருப்பது மட்டுமே அனைவருக்கும் தெரியும். பாலமுருகனுக்கு அவனுக்காகத்தான் வாங்கியிருப்பது தெரிந்தால், அதையும் வங்கியில் வைத்து வியாபாரத்திற்கு பணம் புரட்ட நினைப்பான். அதனால் அதைப்பற்றி ஏதும் சொல்வதைத் தவிர்த்து விட்டார்.

ஆனால், சென்ற வருடம் சந்திரு லண்டனிலிருந்து வந்த போது, அந்தப்பக்கமாக இருக்கும் தங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருந்தனர், அந்த பகுதியில் நிலமெல்லாம் நல்ல விலை ஏற்றத்தில் இருப்பதையும், 2,3 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்து அந்த இடத்தில் தாங்களும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டலாமே என்ற யோசனையுடன் தந்தையிடம் வந்து கேட்கப் போக, அவர் சொன்ன பதில் அவனுக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.

அதாவது, அந்த இடம் பாலமுருகனுக்காக வாங்கியது என்று தந்தை சொன்ன பதில்தான் அவனுக்கு அந்த அளவிற்கு கோபத்தை வரவழைத்தது. அதை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தான் அனுப்பிய பணத்தில்தானே அப்பா வாங்கினார், அதனால் அந்த இடம் தனக்குத்தானே வரப்போகிறது என்று பல திட்டம் போட்டு வைத்ததன் விளைவு அவனை இந்த அளவிற்கு கோபமூட்டிவிட்டது. தந்தையை என்றுமே எதிர்த்துப் பேசியிராத மகன், அன்று சற்று குரல் உயர்த்திப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

ஆனாலும் மகேந்திரன் சற்றும் கோபப்படாமல் எவ்வளவோ பொறுமையாக நிலைமையை எடுத்துச் சொல்லியும் சந்திரு புரிந்து கொள்வதாக இல்லை. அந்த இடம் தனக்குக் கட்டாயம் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கவும் , வேறு வழியில்லாமல் தந்தையும் கணக்குப் பார்க்க வேண்டிவந்தது. சந்திரு வீடு கட்டியிருப்பது தன் தம்பிக்கும் பொதுவான சொத்துதானே, அதனால் அதில் பாதியை அவனுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா என்று கேட்டார்.

இதைச் சற்றும் எதிர்பாராத, சந்திரு,

‘ அப்பா, தம்பியை படிக்க வைக்கவும், அம்மாவிற்கு ஆபரேசன் செய்த போதும் நான் தானே பணம் கொடுத்தேன். அதற்கு இதுவரை 5 லட்சம் ஆகியிருக்கிறது. அந்த இடம் 3 லட்சம் பெரும் என்றாலும் என் காசுதான் உங்களிடம் 2 லட்சம் இருக்கிறது’ என்று ஏதோ கோபத்தில் வார்த்தையை விட்டுவிட்டான்

இதற்கு எந்த பதிலுமே சொல்லாமல் அத்தனையும் செயலில் காட்டினார் மகேந்திரன். உடனடியாக, தனக்கு வரவேண்டிய இன்சூரன்ஸ் பணம் மற்றும் சிறுசேமிப்பு என்று அனைத்தையும் புரட்டிப் போட்டு, மகனிடம் கொடுத்தவுடன்தான் ஓய்ந்தார் மனிதர். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத சந்திரு பேரதிர்ச்சியில், சற்று கோபமாக அந்த இடம்தான் தனக்கு வேண்டும் என்றும் பாலமுருகனுக்கு வேறு இடம் வாங்கிக் கொடுக்கும்படியும் விவாதம் செய்ய ஆரம்பித்தான். விவாதம் முற்றியதில் இருவருக்கும் ஏற்பட்ட வருத்தத்தில் பேச்சு ஒரேயடியாக நின்றுவிட்டது.

அதற்குப் பிறகு இருவரும் திலகவதி மூலமாக பேசிக்கொள்வதே வழக்கமாகிவிட்டது. பாலமுருகன் பக்கத்து ஊரில் இருப்பதனால், அடிக்கடி பெற்றோரை வந்து பார்த்துச் செல்வான், குடும்பத்துடன். தந்தை படுத்ததிலிருந்து இங்கேயே வந்து தங்கியிருக்கிறான்.

மாலை நெருங்க, நெருங்க, வீட்டில் உறவினர்கள் வர ஆரம்பித்தனர். மகேந்திரனைப் பார்ப்பதற்கும், திலகவதிக்கு ஆறுதல் சொல்லவும் பலர் வந்திருந்தனர். ஒரு மனிதனின் இறுதிக்காலத்தில்தான் அவன் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமே விளங்கும். தனக்காக உண்மையாக ஒரு சொட்டு கண்ணீர் விடுபவர்கள் இருந்தால் அதுவே பெரும் மனநிறைவைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இன்று மகேந்திரனின் நிலையும் அதுதான். தன்னைச் சுற்றி நின்று கண்ணீர் சிந்தும் அத்துனை உள்ளங்களின் ஆறுதலும் தன் மரண வேதனையைச் சற்றேனும் குறைப்பதாகவே இருந்தது. தன் நண்பன் திடீரென மாரடைப்பால் இறந்து போன போது, அவனுடைய மகனின் படிப்பு கெடக்கூடாது என தன்னால் ஆன உதவியும், கல்லூரியில் சேருவதற்கான ஏற்பாடுகளும் என்று இப்படி இயன்றவரை சின்ன சின்ன உதவிகள் செய்ததை மனதில் வைத்துக் கொண்டு, இன்று மனைவி குழந்தையுடன் தன்னைப் பார்க்க வந்ததோடு, காலில் வீழ்ந்து அசி பெற்றுக் கொண்டு, “ என் வாழ்க்கைக்கு விளக்கேற்றிய தெய்வம் “ என்று கண்ணீர் மல்க நெகிழ்ந்துப் போனது மகேந்திரனின் உணர்வினுள் ஊடுறுவி மரண வேதனைக்கு அருமருந்தானது. மனிதன் வாழும்போது, உடலில் நல்ல ரத்தம் பாயும் நேரம் நம்மையறியாமல், மிக எளிதாக செய்யக்கூடிய பெரிய உதவிகள், ரத்தம் சுண்டிப்போய் மரணப்படுக்கையில் இருக்குங்கால் எப்படியெல்லாம் ஆறுதளிக்கிறது என்பதை ம்கேந்திரனின் உள்ளுணர்வுகள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டின.

காலையும், மாலையும் இரு வேளைகளும் தந்தையை நெருங்கி சற்று நேரம் உற்று நோக்கிவிட்டு கையைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டு சில துளி கண்ணீரைக் காணிக்கையாக்கிவிட்டு, மற்ற முக்கிய பணிகளைக் கவனிக்கச் செல்வது பாலமுருகனுக்கு சமீபத்திய வாடிக்கையாகியிருந்தது. மனதில் எத்தனைதான் துக்கமும், பாரமும் இருந்தாலும், அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளை நிறுத்தி வைக்க இயலாதே.....பசி வந்தால் ப்த்தும் பறந்துபோம் என்பது போல் இரண்டு நேரம் பாழும் வயிறு காய்ந்தால் கூட மூன்றாம் நேரம் மரணப்படுக்கையில் கிடக்கும் தந்தையைப் பற்றிய நினைவையும் தாண்டி பசி நோய் வந்து தாக்கிவிடுகிறதே.

திருமணம் ஆகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாமல், எத்துனை மலைகள் ஏறி, இறங்கியிருப்போம், மனைவியோ வாரத்தில் 5 நாட்கள் விரதம், பூசை, புனஸ்காரம் என்று இருந்து, கோவிலில் மண் சோறு உண்டு, குழந்தை வரம் பெற்ற நாளில் அடைந்த இன்பம் இனி தன் வாழ்நாளில் இன்னொரு முறை சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது தம்பதியினருக்கு. அப்படி தவமிருந்து பெற்ற பிள்ளை, இன்று 1 வருடம் கழித்துத் தன்னை வந்து பார்க்கப் போகிறான். என்னதான் தன்னிடம் ஊடல் கொண்டு பேசாமல் இருந்தாலும், ஒவ்வொரு முறை தன் தாயிடம் பேசும் போதும் தன்னைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனிக்கத் தவறவில்லை மகேந்திரன். ஆனாலும் ஒரு சிறிய விசயம், தந்தை சொன்னால் அது சரியாக இருக்கும் என்று எண்ணத் தோன்றாமல், இந்த அற்ப காரணத்திற்காக, ஒரு வருடம் தன்னோடு பேசாமலே இருந்து விட்டானே என்று நினைக்கும் போது, தன்னால்தான் அவனை சமாதானம் செய்ய முடியாமல் போய்விட்டதோ என்ற ஞானோதயமும், உதயமானது. எது எப்படியிருந்தாலும், எல்லாம் முடியப் போகும் தருணம் வந்துவிட்டதே.

வாசலில் கார் வ்ந்து நிற்கும் ஓசை கேட்டது. வீட்டில் இருந்த அத்துனை உறவினர்களின் கவனமும் வாசலை நோக்கி இருந்தது. காரைவிட்டு இறங்கியவனின் தோற்றத்தைப் பார்த்தவுடன் அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை. அவ்வளவு உருக்குலைந்து வந்திருந்தான் சந்திரு. தினந்தோறும் தன் தந்தையின் உடல் நிலை குறித்து தங்கள் குடும்ப மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டு அறிந்து வைத்திருந்ததால், அவருடைய இன்றைய நிலை எவ்வளவு கவலைக்குரியது என்பதையும் புரிந்தே வைத்திருந்ததன் விளைவுதான் இந்த தோற்ற மாற்றம். காலில் அணிந்திருந்த காலணிகளைக் கூட கழ்ட்டி விடவேண்டும் என்ற உணர்வே இல்லாமல், பதை பதைக்கும் மன நிலையுடன் இருப்பது அப்பட்டமாகத் தெரியும் தோற்றத்துடன், பெட்டி,கைப்பை என எதைப் பற்றியும் சிந்திக்கும் திராணி கூட இல்லாத சூழலில் அவனுடைய மனைவியே, அனைத்தையும் தூக்கி வருவதைப் பார்த்த மற்ற உறவினர்கள், சென்று அவளுக்கு உதவினர்.

தந்தையை நெருங்கியவன், “அப்பா......” என்ற அவனுடைய விளிப்பு, இதயத்து வேதனை, துக்கம், குற்ற உணர்வு, அன்பு, பாசம், இப்படி அனைத்தும் கலந்த கலவையான ஒரு தொனியாக வெளியானது. அதற்கு மேல் தொண்டை அடைத்து பேச முடியாத நிலை ஏற்பட , ஓ வென்று அழுதபடி, தந்தையின் மார் மீது தலையைச் சாய்த்துக் கொண்டு விம்மி, விம்மி அழலானான்..........

அடுத்த கணம், மகேந்திரனின் உடல் ஒரு குலுங்கு குலுங்கியது. கண்ணில் கண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.....பத்து நாட்களாக மூடிய நிலையிலேயே, பஞ்சடைந்த தோற்றத்துடன் கிடந்த கண்கள் அசைய ஆரம்பித்தது. முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. உதடு லேசாக புன்னகைக்க ஆரம்பித்தது...வாய் எதையோ சொல்லத் துடித்தது.....முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. ஆம் அணையப் போகும் தீபத்தின் பிரகாசம்தான்.........!!

--

1 comment:

  1. சிறந்த சிறுகதை..


    வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...