Monday, September 3, 2012

அஞ்சா நெஞ்சம்!

பவள சங்கரி

ருக்மணி லட்சுமிபதி - (1892 - 1951)

Inline image 1

நம் இந்திய அன்னை அடிமைத் தளையில் சிக்குண்டு தவித்தபோது எண்ணற்றவர்கள் அதற்காக பெரும் போராட்டங்கள் நிகழ்த்தி தத்தம் இன்னுயிரையும் ஈந்துள்ளனர். அடுப்படியே உலகம் என்று வாழ்ந்த அந்த காலத்திலும் துணிச்சலாக அன்னை திருநாட்டிற்காக வெளியே வந்து போராடிய பல பெண்கள் இன்று நம் வரலாற்றின் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்..

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்:
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

என்பான் பாரதி. அதற்கேற்ப புதுமைப் பெண்களாய், நாட்டின் கண்களாய்த் திகழ்ந்த முத்துப்பரல்களில் குறிப்பிடத்தக்கவர் ருக்மணி லட்சுமிபதி.


டிசம்பர் திங்கள் 6ம் நாள், 1892ம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா ராஜா டி.ராமாராவ் நிலக்கிழாராக இருந்தவர். தந்தை சீனிவாசராவ் மற்றும் தாய், சூடாமணி. தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக, குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ருக்மணி லட்சுமிபதி. பிறப்பினால் வைதீகமான பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர், சனாதன பழக்க வழக்கங்களைக் கடுமையாக சாடிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ருக்மணிக்கு இளமையிலேயே ‘பால்ய விவாகம்’ செய்து வைத்திட தந்தை விரும்பிய சமயம், அவருடைய நண்பரான வீரேசலிங்கம் பந்துலு எனும் தேச பக்தர் இதனைத் தடுத்து ருக்மணி பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அண்டை வீட்டில் குடியிருக்கும் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படித்து முன்னேறுவதைக் கண்ட தாய் சூடாமணியும் மகளை படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் உறவினர்கள் சாதியைவிட்டு இவர்களை விலக்கி வைத்துள்ளனர். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்ட எண்ணம் ஈர்த்தது இவருக்கு.

சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான, மனைவியை இழந்த டாக்டர் லட்சுமிபதி அவர்களை பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி விரும்பி மணந்து கொண்டார். இவரது பிடிவாதமும், தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து குடும்பச் சூழலில் ஏற்பட்ட மாறுதல்களுமே இந்தத் திருமணத்தை சாத்தியமாக்கியது. டாக்டர் லட்சுமிபதி தம் மனைவியின் படிப்பார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக மருத்துவ கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். இடையில் ருக்மணி கருத்தரித்தமையால் படிப்பை பாதியில்விட நேர்ந்தது.

1919ம் ஆண்டு ‘பாரதி ஸ்திரி மண்டல்’ சங்க இயக்கத்தில் இணைந்து, பெண்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். மதுவிலக்குப் போராட்டத்திற்கான இளைஞர் அமைப்பையும் உருவாக்கினார்.சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுக்கும் விதமாக 1924ம் ஆண்டில் காங்கிரசில் தம்மை இணைத்துக் கொண்டு, பெண்கள் பிரிவின் செயலாளரானார். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் தொண்டு செய்து அவர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றார். சென்னை திருவல்லிக்கேணியில் கதர் துணி விற்பனை நிலையம் ஒன்றையும் துவக்கினார். தம் குழந்தைகளுக்கும் கதர்துணி மட்டுமே அணிவித்து, அவர்களுக்கு இளைமையிலேயே நாட்டுப்பற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். 1929ம் ஆண்டில் லாகூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு, அங்கு பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். பால்ய விவாகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். பெண் கல்வியை வற்புறுத்தியதோடு, தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன்னுதாரணமாக, தம் வீட்டிலேயே, தாம் ஒரு பிராமண சமுதாயத்தைச் சார்ந்தவராக இருப்பினும், பிராமணர் அல்லாத ஒரு பெண்ணை சமையல் பணியாளராக நியமித்ததோடு, அவருக்குத் துணையாக தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு பெண்ணை கூட்டி வந்து அவருக்கு சமையல் வேலைகளைக் கற்றுக் கொடுத்து தம் வீட்டிலேயே வேலைக்கு அமர்த்திக் கொண்டார். இதனால் தங்கள் உறவினர்களின் பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

1930ம் ஆண்டில் வேதாரண்யத்தில் நடைபெற்ற இராஜாஜி அவர்கள் தலைமையேற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். தன்வாழ்வில் முதல் முறை பங்கேற்ற உப்பு சத்தியாகிரகத்தின்போதும், அதற்குப் பிறகு தனிநபர் சத்தியாகிரகத்திலும் ஈடுபட்டு இரண்டு முறை சிறைபட்டு, இரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். போராட்டத்தின் இடையில்,தம் மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும், மருத்துவரான தம் கணவரே கவனித்துக் கொள்ளட்டும் என்று நாட்டிற்காக போராட்டத்தை தொடர்ந்தார். பிறகு மற்றவர்களின் கட்டாயத்திற்காக வீடு சென்று மகள் குண்மானவுடன் மீண்டும் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்., உப்புக் குவியலின் மேல் படுத்து, மறியல் செய்து கைதாகி, ஓராண்டு சிறைப்படுத்தப்பட்டார். 1932ம் ஆண்டில், ஜனவரி 26ல் நடைபெற்ற போராட்டத்தில் காசா அப்பாராவ் போலீஸ் தடியடியால் காயமுற்று வீழ்ந்து கிடந்தபோது கட்டுக்காவலை மீறி உள்ளே நுழைந்து போலீஸாருடன் நீண்ட நேரம் வாதாடி, அவருக்கு முதல் உதவி செய்தார்.

1934ம் ஆண்டில், சென்னை மாகாண சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1937ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அதே ஆண்டு ஜூலைத்திங்கள் 15ம் நாள் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946ம் ஆண்டு மே மாதம் 1ந்தேதி சென்னை மாகாணத்தில், முதலமைச்சர் த. பிரகாசம் அவர்களின் அமைச்சரவையில் பொதுச் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். தம் பதவிக் காலத்தில், நாட்டின் சுகாதாரத்தின் மிக முக்கியப் பிரச்சனையான, கொசுவை ஒழிக்கும் திட்டமாக ‘மலேரியா ஒழிப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
மருத்துவத் துறையிலுள்ள அனைத்து உயர் பதவிகளிலும் இந்தியரை மட்டுமே அமர்த்தி அலங்கரிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார். இவர் அமைச்சராக பொறுப்பேற்றபோது அன்றைக்கு சர்ஜன் ஜெனரல் பதவியிலிருந்த வெள்ளையரை நீக்கிவிட்டு ஓர் இந்தியரை நியமித்தார்.
லட்சுமிபதி ஒரு தேசியவாதி. என்பதால் அவர்களின் இல்லத்துக்கு பல தேசியவாதிகள் அவரைச் சந்திக்க வருவது வழமை. அப்படி வந்தவர்களின் அழைப்பின்பேரில் கள்ளுக்கடை மறியல், சத்தியாகிரகம் உட்பட பல போராட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் ருக்மணிக்கு கிடைத்தது.

1934ல் சென்னை மாகாணசபைத் துணைத் தலைவர்; 1936ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு தலைமை; 1937ல் சென்னை மாநகராட்சி உறுப்பினர்; அதே ஆண்டு சென்னை சட்டசபை மேலவை துணை சபாநாயகர்; 1946ல் அமைச்சர் என இவர் பல பொறுப்புகள் வகித்தார். எல்லாவற்றிலும் அப்பொறுப்பை ஏற்ற முதல் பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஞ்சா நெஞ்சுடன் பேச்சிலும் செயலிலும் சீர்திருத்தமும், தேசபக்தியும் இழையோட வாழ்ந்து வழிகாட்டியவர், ருக்மணி லட்சுமிபதி.
1951ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ம் நாள் இப்பூவுலகைவிட்டு மறைந்தார். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்கள் மேம்பாடு இவற்றில் இவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் இந்தியாவின் பெண் சமூகமே இவரை காலம் முழுவதும் மனதில் கொள்வதோடு நம் இந்திய வரலாற்றிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

3 comments:

  1. கேள்விப்பட்டது கூட இல்லை.
    நீங்கள் இதை நிச்சயமாகத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அப்பாதுரை சார்,

      தங்களின் மனமார்ந்த வாழ்த்துரைக்கு நன்றி. ஒரு பிரபல பதிப்பகத்தார் இத்தொகுப்பினை வெளியிட சம்மதித்துள்ளனர். அதற்கான பணிகள் விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. தங்களைப் போன்ற நல்லோரின் ஆதரவில் நற்காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. புத்தகம் வெளிவந்தவுடன் அவசியம் தங்களுக்கு தெரிவிக்கிறேன். முகவரி கொடுத்தால் ஒரு புத்தகம் அனுப்பியும் வைக்கிறேன். தங்களுடைய ஊக்கம் எனக்கு பல வகையிலும் உற்சாகமளித்துள்ளது நண்பரே.நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
  2. வீரேசலிங்கம் பந்துலு போன்றவர்கள் நிறைய இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...