பட்ட மரம்.
அடர்ந்த வனம். எங்கு நோக்கிலும் கபடமற்று தன்னிச்சையாக வளர்ந்த பசுமையான, வகைவகையான மரம் செடி கொடிகள். வண்ண மலர்கள். சுகந்த மணம் நாசியை நிறைத்து, மதியை மயங்கச் செய்தது........... பளீரென ஒரு மின்னல். அசைந்து, அசைந்து தன்னருகே வருகிறதே.......ஓ ...இது மின்னல் இல்லை. ஏதோ பறவை போலல்லவா இருக்கிறது.......அட ஆமாம் அன்னப்பறவை. பாலையும், தண்ணீரையும் தனித்தனியே பிரித்து விடுமாமே, அந்த அன்னப் பறவை.....தலையை ஆட்டி கிட்டே வந்து உரசி நின்று.........உற்றுப் பார்க்கிறதே, எதனால் என்று தெரியவில்லையே. திடீரென, ஒய்யாரமாக தோகையை ஆட்டியபடி அப்படியே ஒரு வட்டமடித்து, திரும்பி நடக்க ஆரம்பித்தது அது.
நேர்ந்து விட்டது போல பின்னாலேயே போக முயற்சித்து, அது ஓட ஆரம்பித்த போது தானும் ஓடி துரத்திப் பிடிக்கும் நோக்கில், நெருங்கி, நெருங்கி.....ஆகா பிடிக்கப் போகிறோம் என்று கையை நீட்டும் நேரம் அங்கே ஒரு அழகான ராஜ குமாரி. ஆம் ராஜகுமாரியாய் மாறிப்போன அன்னம்.
டொக்.....டொக்......டொக்........என்ன சத்தம். ராஜகுமாரி, நீ எனக்கே, எனக்கா.........
அட பாவி மனுசா......மணி 7 ஆவுது, கனவு கண்டுகினு கீது பாரு.........பொழுதன்னைக்கும் சுட்டி டிவி குழந்தைங்களோட உக்கார்ந்துகினு பாக்குறது. அப்பறம் இப்படிகனவு கண்டு உளர்றது. இதே பொயப்பா பூடிச்சி உனக்கு.
ஏய் இன்னாம்மே ரொம்பத்தான் அலுத்துக்கினுகிற.............
சரி, இன்னா சத்தம் வெளிய?
அதுவா, நீதானே அந்த பட்டுப் போன, காய்க்காம கடந்த கொய்யா மரத்த வெட்ட சொன்ன? அதைத்தான் ஆள் வந்து வெட்டறான்.
எம்புட்டு நாளா சொல்லறேன். கண்டுக்காம இருந்துட்டு இன்னைக்கு என்னா ஞானோதயம்?
அதுவா, இன்னைக்குத் தானே, உங்க அக்கா ஊரில இல்ல, குல சாமி கோயிலுக்கு போயிருக்கா. அதான் இன்னைக்கு வெட்டச் சொன்னேன்.
அவ ஊருக்குப் போறதுக்கும், நீ மரத்தை வெட்டறதுக்கும் இன்னாம்மே சம்பந்தம்? அவகிட்ட எப்பவும் மல்லுகட்டிகினு நிக்கிறது போதாதுனுட்டு, அவ இல்லாத நேரத்திலயும் இப்புடி கரிச்சி கொட்டறியே ஞாயமா?
அடப் போய்யா, உனக்கு என்னைக்குத்தான் இதெல்லாம் புரியப் போகுது. அவளே பாவம், புருசனும் இல்லாம, புள்ளை குட்டியும் இல்லாம, நொந்து போய் பட்ட மரமா வந்து நிக்குறா......இந்த மரத்த வெட்டற போது நீயோ இல்ல அந்த மரவெட்டியோ ஏழு தடவை பட்ட மரம், பட்டமரம்னு சொல்லுவீங்க......அந்த நேரத்துல அந்த புள்ள மனசு என்ன பாடு படும் கொஞ்ச ரோசனை பண்ணிப் பாத்தியா நீ? அதான் அவ வரதுக்குள்ள இந்த மரத்தை வெட்டிப்புடலாம்னு...............
அடி, என் ராசாத்தி, இத்தனை நல்ல மனசா உனக்கு........இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..........
நெஞ்சில் வலி......
ReplyDeleteமனோ நன்றி என்று சொன்னால் சரியாக இருக்காது. தங்கள் வருகைக்கு நன்றி மனோ.
ReplyDeleteஉறவின் அக்கறை உருக்கம். நல்ல கதை.
ReplyDeleteஒருவர் கருத்து அடுத்தவருக்கு பிழையாகத் தெரியும் என்பதற்க்கு இந்தக் கதை உணர்வோட பாசத்தோட அருமையாயிருக்கு !
ReplyDeleteரசித் தேன் சுவைத் தேன்.
ReplyDelete