Friday, March 7, 2014

சுவடுகள் பதித்த சுடரொளிகள்!


பவள சங்கரி

தலையங்கம்

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி  அனைவருக்கும், பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம், பாதுகாப்பான வாழ்க்கை என அனைத்தும் அனைவரும் பெறும்  உரிமை உள்ளது. ஆனால் இவையனைத்திற்குமாக நாம் நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கிறது.

பண்டைக்கால மகளிரின் ஒழுக்க நெறியினை நம் வேதங்கள் அழகாக எடுத்துரைக்கின்றன. வேத காலத்தில்  ஒரு ஆண் மட்டுமே குடும்பத் தலைவனாக இருந்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆண் மகவு பிறப்பதையே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடியதோடு, அதற்கான பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர். வேத காலத்தில் கல்வி என்று எடுத்துக்கொண்டால் பெண்களைப் பொறுத்த வரையில் ஆணுக்கு நிகரான கல்வி வழங்கப்படவில்லை. ஆனாலும் சமூக வாழ்க்கையில் ஆண், பெண் என இரு பாலரும் சம நிலையிலேயே இருந்திருக்கின்றனர். அதாவது ஆண்களைப் போன்றே பெண்களும் அனைத்து விதமான சுதந்திரமும் பெற்றிருக்கின்றனர். மெல்ல மெல்ல அவளே தெய்வ நிலைக்கும் உயர்த்தப்பட்டிருக்கிறாள்.  ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அந்தக் காலத்தில் பெண்களின் திருமண வாழ்க்கையில் கட்டுப்பாடும், ஒழுக்க நெறியும் கடைபிடிக்கப்பட்டு வந்ததோடு, விவாகரத்து என்ற ஒரு கோட்பாடே இல்லாமலிருந்திருக்கிறது. 


ஆனால் ரிக் வேத காலத்தின் இறுதியில், பெண்களின் மீது சில கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டதோடு, அவர்களுடைய சுதந்திரமும் மெல்ல மெல்ல பறிக்கப்பட ஆரம்பித்தது.  ஆரம்ப காலத்தில் பிரகாசமாக ஒளி வீசிய மகளிரின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல இருள் தோன்ற ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த இருளிலும், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றளவிலும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும், கார்கி, மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, கோஷா, சஸ்வதி, அபலா, இந்திராணி போன்றோரை நாம் மறக்க இயலாது. 

தர்ம சாத்திரங்களின் அடிப்படையில் திருமணம் அக்னி சாட்சியாக நடைபெற்றபின், கணவனும், மனைவியும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இறுதியில் உயிர் பிரிந்தவுடன் அந்தத் தீயிற்கே உடலை ஆகுதியாக அளிப்பது புனிதமாகக் கருதப்பட்டது. இந்தத் திருமணத்தில் ஒரு பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பதன் மூலம் அவள் தன் கணவனுக்கு முழுமையாக உரிமையானவளாக ஆகிவிடுகிறாள். கணவனுக்கு அடங்கியவளாகவும், குடும்பத்தில் கணவனைச் சார்ந்து இருப்பவளாக, குழந்தை பெற்று வளர்ப்பது மற்றும் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றுவது போன்றவை  மட்டுமே அவளுடைய தலையாயப் பணியாக இருந்தது. பிறன்மனை நாடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு எந்த விதமான சட்டப் பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை.  கலப்புத் திருமணங்கள் ஆதரிக்கப்பட்டன. கைம்பெண்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விஷ்ணு மற்றும் பிரஹஸ்பதி ஆகியோர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை புனிதமானதாக அங்கீகரித்ததால், அதைப் பெண்களுக்கு அளித்த சிறப்பாக கருதப்பட்டது. 

உன்னதமான தர்மங்களைப் போதிக்கும் மகாபாரதம்  ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்பட்டது. ராஜ தர்மம், அபதர்மம், மோக்‌ஷதர்மம் மற்றும் தான தர்மம் போன்ற அனைத்தும் மகாபாரதத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தலை சிறந்த தத்துவங்கள் மற்றும் உபனிசங்கள், கீதோபதேசம் போன்றவைகளை போதிப்பதால் மகாபாரதம் தலைசிறந்த காவியமாகக் கருதப்பட்டது. பாரத தேசத்தின் மிகச் சிறந்த காவியங்களான, இராமாயணம் மற்றும் மகாபாரதம் சீதா, கைகேயி, குந்தி, திரௌபதி, சாவித்திரி, கௌசல்யா போன்ற ஒழுக்க நெறி தவறாத உன்னதமானப் பெண்களை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள் மகனின் பாதுகாப்பில் வாழ்ந்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமும் மெல்ல வலுவிழந்தது. 

மனுதர்மம், கணவன், மனைவி உறவின் புனிதத்தைக் காக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளை வரையறுத்தது. ஒரு மனைவி கணவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று மனைவி, கணவன் மற்றும் சந்ததிகளின் நலனைப் பேணுகிறவளாக இருக்க வேண்டும். கணவன் இறந்த பிறகும் அவன் நினைவில் மட்டுமே அவள் வாழவேண்டும்.  அப்படி வாழ்ந்த பெண்களை மிகவும் மதிப்பாக  நடத்தினார்கள். 

அடுத்து வந்த முகலாய ஆட்சியில் பர்தா போடும் வழக்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. விபச்சாரம் பிரபலமானது. ராஜபுத்திர வீரர்களால் அபகரிக்கப்படுவதைக் காட்டிலும் கணவன் இறந்தவுடன், அவனுடனேயே உடன்கட்டை ஏறுவதே சிறந்தது என்ற முடிவிற்கும் தள்ளப்பட்டார்கள் பெண்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் முகலாய ஆட்சி முடிவுற்றபின் உடன்கட்டை ஏறும் வழக்கமும் சிதறுண்டது.  அடுத்து வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டது. 1829ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி, ஆங்கில அரசு மனிதாபிமான அடிப்படையில் ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடை செய்ததோடு அதை மீறுபவர்களுக்கு அபராதமும் சிறை தண்டனையும் வழங்கியது. ஆச்சாரமான இந்துக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தாலும் ராஜாராம் மோகன் ராய் அவர்களின் பெரும் முயற்சியால் அது நிறைவேற்றப்பட்டது. 

அடுத்ததாக ஈரோடு பெரியார் அவர்கள், மறுமணம் என்கின்ற விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய மிகப் பெரிய தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தினார். வெறும் உபதேசமாக மட்டும் இல்லாமல் தானே முன்னோடியாக இருந்து, தம் சிறு வயதிலேயே, தம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிற்கு மறுமணம் செய்துவைத்து வழிகாட்டினார்.   திருமணத்திற்குப் பிறகும் அப்பெண்னிற்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும்  வகையில், ஈரோடு தங்கவேலனார் போன்றோரின் முயற்சியால் கன்னிகாதான முறையும் ஒழிக்கப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியால், இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும்  நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் இலட்சுமி எனப்படும், இலட்சுமி சேகல்  போன்ற ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களுடைய பங்களிப்பைக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியவைகள் என சிலவற்றை  சிந்திக்க வேண்டியுள்ளது. ‘ இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்’ என்கிறபடி,  நம் வீட்டில் பிறக்கும் பெண் குழந்தையை இனி பொத்திப்பொத்தி வளர்ப்பதைக் காட்டிலும், அவர்களுக்குத் தாய்ப்பாலுடன் தைரியம், துணிச்சல், கல்வி, தற்காப்பு போன்ற அனைத்தையும் சேர்த்தே போதித்து வளர்ப்போம். சங்க இலக்கியத்தில் கூறியது போல முறத்தால் புலியை விரட்டிய பெண்ணின் கதையையும், இரும்புப் பெண் என்று போற்றப்பட்ட மார்கரேட் தாட்சர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறியும், ஜெர்மன் நாட்டை ஆண்ட கோல்டா மேயர் பற்றியும், வீரப்பெண் அன்னை இந்திராவின் சரித்திரத்தையும், ஸ்ரீலங்காவை ஆட்சி செய்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகா பற்றியும், வான்வெளியில் புரட்சி செய்த கல்பனா சாவ்லா பற்றியும் எடுத்துரைத்து , அச்சமின்றி, சவால்களை எதிர்கொண்டு, சாதனைப் படைக்கும்  தலை சிறந்த ஒரு பெண் சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம். பெண்ணே ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடை என்ற கருத்தை முறியடிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்க உறுதி கொள்வோம்.

எந்த ஒரு சக்தியும் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க வேண்டிய தேவையில்லை என்பதில் தெளிவாக இருப்போம்.  நம்முடைய பணிகளை நாமே  செய்ய முனைவோம். அடுத்தவரை சார்ந்திருப்பதைத் தவிர்ப்போம்.  தேவையற்ற எதிர்பார்ப்புகளையும், அளவிற்கு அதிகமான பாராட்டுதல்களில் நாட்டம் கொள்வதையும்  முற்றிலும் தவிர்ப்போம். ஆண்களுக்குச் சமமாக நம்மாலும் சாதிக்க முடியும் என்பதை நம் உழைப்பைக்கொண்டு உறுதி செய்வோம். நம்மை உற்று நோக்கி துவண்டு விழச் செய்பவரை, திரும்பி நின்று நேர் கொண்ட பார்வையால் வீழ்த்துவோம்! நம் பெண் குழந்தைகள் முதலில் தம்மைத்தாமே மதித்துக் கொள்ளவும், சுய கௌரவத்தை எந்த நிலையிலும் இழக்காமல் இருப்பதற்கும் நாம் முதலில் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்போம். நம் இளைய சமுதாயத்தை, தம்முடைய உரிமைகளை எந்த நிலையிலும் இழக்காமல் இருக்க உறுதி பூண வழிநடத்துவோம்.  எவருடைய தலையீடும் இன்றி நம்முடைய உரிமைகளை சரியான முறையில் பயன்படுத்த உறுதி கொள்வோம். 

நன்றி : வல்லமை - தலையங்கம்

6 comments:

  1. சிறந்த வரலாற்றுச் செய்தி வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி கீதா.

      Delete
  2. அருமை... பல தகவல்கள் சிறப்பு...

    சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் இனிய மகளீர் தின வாழ்த்துக்களும் அம்மா .

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...