மலர்ந்திருப்போம்
மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம்
குற்றால அருவியாய்!!
ஆண்டான்
அடிமையெனும் பேதங்களில்லை
கொண்டான்
கொடுத்தானெனும் சங்கடங்களில்லை
இனம்
நிறம் மதமெனும் மயக்கங்களில்லை
மழலையர்
பதின்மர் முதியோரெனும் பிரிவினைகளில்லை
மலர்ந்திருப்போம்
மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம்
குற்றால அருவியாய்!!
மனம்
குணம் குற்றம் குறையெனும் இழிவுகளில்லை
இகம்
பரம் வானம் பூமியெனும் பாரபட்சங்களில்லை
செல்வந்தன்
வறியோன் வேடதாரியெனும் கபடங்களில்லை
சொந்தம்
சுற்றம் உறவு பகையெனும் விகல்பங்களில்லை
மலர்ந்திருப்போம்
மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம்
குற்றால அருவியாய்!!
கதறல்
சிரிப்பு கவலை களிப்பெனும் கருத்துக்களில்லை
வளர்க வளமும் நலமும் பெருகவெனும் வாழ்த்துக்களில்லை
சிற்றின்பம்
பேரின்பம் சிறுமை பெருமையெனும் சாத்திரங்களில்லை
இல்லறம்
துறவறம் துணைநலம் மக்கட்செல்வமெனும் கோட்பாடுகளில்லை
மலர்ந்திருப்போம்
மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம்
குற்றால அருவியாய்!!
வேதவித்தகன்
மகோன்னதன் மகிழ்நன்னெனும் மாச்சரியங்களில்லை
சொந்தக்காரன்
மாற்றான் தோட்டத்துக்காரனெனும் உறவுகளில்லை
கல்லாய்
பேயாய் கணங்களாய் வல்லசுரராய் காணும் காட்சிகளில்லை
கனிரசமாய்
கற்கண்டாய் கார்மேகமாய் கரடுமுரடாய் பகுத்துணர்வதில்லை
மலர்ந்திருப்போம்
மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம்
குற்றால அருவியாய்!!
திருமண
பந்தம் மரண பிம்பம் எனும் வேறுபாடுகளில்லை
கருணை
வள்ளல் முரட்டு சிங்கமெனும் முட்டுக்கட்டைகளில்லை
கற்பகத்தரு
கற்றாழை தாமரை தாழம்பூவெனும் தரவரிசைகளில்லை
கொண்டாடுவோர்
குறைகாண்போர் குத்திக்கிழிப்போரெனும் பரிகாசங்களில்லை
மலர்ந்திருப்போம்
மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம்
குற்றால அருவியாய்!!
No comments:
Post a Comment