Saturday, January 4, 2020

The Man in the Mist - Agatha Christie




ஒரு காலத்தில், கல்லூரிக் காலங்களில் அகதா கிரிஸ்டி கதை என்றால் அப்படியொரு ஈர்ப்பு இருந்தது. கதாவின் நூற்றாண்டான இப்போது ஒரு சிறுகதையைப் படித்து மொழிபெயர்க்கலாம் என்றால் தற்காலக் கதைகளிலிருந்து இது எவ்வளவு வித்தியாசப்படுகிறது என்று தெரிகிறது ... துப்பறியும் சாம்பு மாதிரித் தெரிகிறது கொஞ்சம் .. 

மூடுபனி மனிதன் - The Man in the Mist

துப்பறிவாளர்கள், டாமியும், தப்பென்சும், சமீபத்தில் ஒரு முத்துமாலை களவாடப்பட்ட வழக்கில், தோல்வியைத் தழுவியிருந்தனர். அதுகூட பரவாயில்லை, உள்ளூர் காவல் அதிகாரி அந்தக் கயவனை கையும், களவுமாகப் பிடித்தும்விட்டதால் தங்களது துப்பறியும் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டதாக மிகுந்த வருத்தம் கொண்டவர்கள் அந்த வருத்தம் தீருவதற்காக  ஒரு விடுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பல்ஜர் என்று அழைக்கப்பட்ட  மெர்வின் எஸ்கோர்ட், என்ற தெரிந்த நபர் ஒருவரைச் சந்தித்தனர்.. அவன் கில்டா கிளென் என்கிற ஒரு பிரபலமான நடிகையிடம் தொடர்பு கொண்டிருந்தவன். கில்டா கிளென் நல்ல அழகியானாலும் சற்று மந்த புத்தி உடையவள் என்ற அவளைப்பற்றிய கிசுகிசுப்பும் உண்டு. செல்வி கில்டா, டாமியின் தந்தை பிரவுன்  மாறுவேடத்தில் இருப்பதைக் கண்டு இவர் ஏன் இப்படி மாறு வேடத்தில் இருக்க வேண்டும் என்று குழப்பமடைந்தாள். இதை அறிந்த டாமி தன் தகப்பனின் துப்பறியும் திறமையைப் பற்றி  ஆதாரத்துடன் அவளிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தான். காவல் நிலையத்திற்குச் செல்வதற்காக பல்ஜரிடம் வழி கேட்டுக்கொண்டிருந்தாள் அவள். அவன் மார்கன் அவென்யூ பக்கம் செல்ல வேண்டும் என்று வழிகாட்டிய போது, கில்டா கிளென் அதிர்ச்சியடைந்தாள். ஆம், கொலை செய்யப்பட்ட ஒரு காவல்துறை பணியாளர், கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த இடத்தில் ஆவியாக அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் வதந்தியை முழுதாக நம்பிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து வேடிக்கையாகச் சிரித்தான் அவன். அந்த கேலிச் சிரிப்பு சங்கடப்படுத்த,  மெல்ல பேச்சை மாற்றும்முகமாக,  சற்று முன் அந்த விடுதியின் வெளியில் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்த  லார்ட் லெக்கன்பரியைத்தான் தனக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறாள். பல்ஜரும் அவசரமாகக் கிளம்பத் தயாரான அந்த நேரத்தில்தான் டாமி கிளென்னிடமிருந்து, தனக்கு உதவி வேண்டுமென்ற செய்தி வருகிறது. வெள்ளை மாளிகை, மார்கன் அவென்யூவில் மாலை 6.10 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றது மேலும் அந்த குறிப்பு.
அந்த நேரத்தில், அலங்கோலமாக உடை உடுத்திய ஒரு வித்தியாசமான இளைஞன் ஒருவன் அந்த விடுதியினுள் ஆவேசமாக நுழைந்தான். இதனால் மேற்கொண்டு இது தொடர்பான பேச்சு தடைபட்டது. வந்தவன் டாமி மற்றும் தப்பென்சு அருகில் அமர்ந்தபடி, தன் பெயர் ஜேம்ஸ் ரெய்லி என்றும், தான் ஒரு அமைதிவாதக் கவிஞர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். கில்டா மீது தனக்கு அன்பும் அக்கறையும் இருந்தாலும், அவளுக்கு லார்ட் லெகன்பரியுடன் திருமணம்  நிச்சயம் ஆன பிறகு அவள் பின் சென்று தொல்லை கொடுப்பதில்லை என்றான். ஆனாலும் அவனுக்கு இன்னும் கோபம் தீரவில்லை என்பது, அவன் வந்த அதே வேகத்தில் திரும்பிச் சென்றதில் தெரிந்தது.
டாமியும், தப்பென்சும் மார்கன் அவென்யூ நோக்கிச் சென்றனர். காற்றினூடே அடர்ந்த பனிமூட்டம் புகையாய் கிளம்பியிருந்தது. அதனுள்ளிருந்து, ஒரு உருவம் ..  காவல்காரர் தோற்றத்தில், வெள்ளை மாளிகையின் அருகிலிருந்து மெல்ல மெல்ல மேலே எழும்பி வருவதைப்போல் இருந்தது. அதைக் கண்டு தப்பென்சு திடுக்கிட்டாலும், ஒருவேளை பிரம்மையாக இருக்கும் என்று விரைவில் ஆசுவாசப்படுத்திக்கொண்டபோது, ரெய்லி அந்த வீட்டினுள் நுழைவதையும் அவர்கள் கண்டனர். காவல்காரர் அதை திருமதி ஹனிகாட் இன் இல்லம் என்று உறுதிபடுத்தியதோடு, சில நிமிடங்களுக்கு முன் செல்வி கிளென் போலவே யாரோ ஒருவர் அந்த வீட்டினுள் நுழைவதைப் பார்த்ததாகவும் கூறுகிறான். அந்த வீட்டினுள் நுழைய எத்தனித்தபோது பயங்கரமான ஒரு அலறல் சத்தம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அப்போது ரெய்லி கையில் சிகப்பு பெயிண்ட் போல எதையோ வாசற்கதவின் கம்பத்தில் பூசிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தான்.

அவர்கள் இருவரும் வீட்டின் உள்ளே சென்று எல்லெனைச் சந்திக்கிறார்கள். அந்தப் பணிப்பெண் ரெய்லியின் வருகைக்கும், திருமதி ஹனிகாட்டை சந்திப்பதிலும் விருப்பமின்றி கோபமாக இருக்கிறாள் என்பது தெரிகிறது. டாமியை ஒரு உண்மையான பாதிரியார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, கில்டா தன் தங்கை என்ற உண்மையையும் சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள். 20 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய பதினேழாவது வயதில் தன் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக மணந்து கொண்ட அவனை  இன்று லார்ட் லெகான்பர்ரியை மணப்பதற்காக விவாகரத்து செய்ய  விரும்புகிறாள். ஆனால் இந்தத் திருமணம் முடிந்து வெகு காலம் ஆனதில் திருமதி ஹனிகாட்டிற்கு அவன் பெயர் கூட நினைவில் இல்லை. இந்த நிலையில் அவளுடைய கணவன் அவளின் இந்த விருப்பத்திற்கு உடன்பட மறுக்கிறான். வெகு வேகமாக மாடிக்கு விரைந்த அதே வேகத்தில் திரும்பியது ரெய்லி இல்லை என்று உறுதியாகக் கூறுகிறாள் அவள். அங்கு நடந்தது என்னவாக இருக்கும் என்ற நடுக்கம் ஏற்பட்டது. டாமி மாடிப்படிக்கான வழியை காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டு போய் பார்த்தான். அங்கு மழுங்கிய ஏதோ ஒரு ஆயுதம் மூலம் கில்டாவின் தலையின் ஒரு புறம் அடித்து நசுக்கப்பட்ட நிலையில் உயிரற்ற அவளுடைய உடல்  கிடப்பதைக் கண்டனர் அவர்கள். தப்பென்சு போலீசை வெளியிலிருந்து இழுத்து வருகிறான். திருமதி ஹனிகாட்டை விசாரித்ததில், அவளுடைய தங்கை மணி ஆறடிக்க எட்டு நிமிடம் இருக்கும்போது, உள்ளே நுழைந்தாள் என்பதைத் தான் அந்த பெரிய கடியாரத்தைச் சரி செய்யும் வேளையில் சரியாக அவள் வந்ததால் உறுதி செய்ய முடிந்தது என்கிறாள். அந்த போலீசுக்காரர் அந்த நடிகை டாமியும், தப்பென்சும் மார்கன் அவென்யூவிற்கு வரும் சற்று முன்பு அவள்  உள்ளே சென்றதைப் பார்த்ததையும் உறுதி செய்தது இது. 

மறுநாள், ரெய்லி கைது செய்யப்பட்டு, டாமியும், தப்பென்சும் குற்றவாளியை அவனுடைய வழக்கறிஞர் மிஸ்டர் மார்வெல்லுடன் சந்தித்தனர். ரெய்லி, தான் அந்த அறையினுள் நுழைவதற்கு முன்பே அந்தப் பெண் இறந்திருந்தாள் என்று வலியுறுத்துகிறான். ஆனால் அந்த நேரத்தில் அந்த வீட்டினுள் வேறு எவரும் இல்லாதலால் எல்லென் அல்லது ஹனிகாட் இருவரில் யாராவது ஒருவரே அவளைக் கொன்றிருக்கக் கூடும் என்று தோன்றியது. டாமி உடனே, யாரும் இல்லாத வீட்டினுள் கில்டா நுழைவதைக் கண்டதை நினைவுகூர்கிறான் - அவள் குரலை மட்டுமே கேட்டனர் - ஆனால் அதற்கு முன்பு வீட்டிலிருந்த இரு பெண்களும் சமயலறையில் இருந்தனர், அவர்கள் வேறு எவரும் உள்ளே நுழைவதைக், காணவோ அல்லது சத்தம் கேட்கவோ இல்லை. கதவின் அசைவைக் கேட்டதால் மட்டுமே அது எதையும் நிரூபிக்க முடியாது.  சாதாரணமாக வீட்டை விட்டு யாரோ வெளியேறுவதாலும் ஏற்படும் சலசலப்பாகவும் இருக்கலாம் - வெளியில் இருந்த போலீசுக்காரன் அந்த வேலையை முடிக்கக்கூடிய மழுங்கிய ஒரு ஆயுதத்துடன் கேட்டின் வழியாக பனிமூட்டத்திலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக அந்த போலீசுக்காரனே கில்டாவின் வெகு காலத்தின் முந்தைய கணவனாக இருந்திருக்கவும் வேண்டும்.



No comments:

Post a Comment