Wednesday, July 28, 2010

வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க வேண்டுமா.........? வாருங்கள்..............இன்பமும், துன்பமும் பிறர் தர வாரா !!

நம்முடைய வெற்றிக்கும், தோல்விக்கும் நாமேதான் முழு காரணமாகிறோம்.வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்,மற்றும் செய்யக் கூடாது? வாருங்கள் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும், புது வருடத்தில், நாம் ஒரு சில தீர்மானங்கள் எடுத்துக் கொள்கிறோம். அப்படி எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களை செம்மையாக நிறைவேற்றும் பட்சத்தில், நம்முடைய வாழ்க்கை தரம் உயரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடாமல் செய்ய வேண்டிய வேளையில் தவறாமல் செய்ய வேண்டும் என்கிற ஒரு தீர்மானம் எடுக்கும் பட்சத்தில், நாம் வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முதல் படியாக அது மாறி விடுகிறது என்பதில் ஐயமில்லை.! அதனால் நாம் எக்காரணம் கொண்டும் நம்முடைய கடமைகளைத் தள்ளிப் போடுவதில்லை என்ற தீர்மானம் எடுத்துக் கொள்ளத் தயங்கக் கூடாது.

தாம் தள்ளிப் போடுபவர் இல்லையே என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தாலும், பெரும்பாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் தள்ளிப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

உதாரணமாக, பலர் சிரமமான காரியங்கள் என்பதற்காகவோ, நீண்ட வரிசையில் நின்று பில் கட்டுவது, பல நாட்களாக சேர்த்து வைத்திருக்கும் பரண் குப்பையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை முடிந்த வரை தள்ளிப் போட்டுத்தான் செய்கிறார்கள். ஆனால், சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வறிக்கையின்படி 25%தினர், இது போன்ற பழக்கம், தங்கள் வாழ்க்கையில் ஒரு தீராத பிரச்சனையாக உள்ளதென்றும், 40%தினர், பல நேரங்களில் இந்தத் தள்ளிப் போடும் வழக்கத்தினால், பல வாய்ப்புக்களையும், வருமானங்களையும் கூட இழந்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.இதனால் எத்தனையோ, இழப்புக்களை சந்திக்கவும் நேரிடலாம்.

இந்த பழக்கம் விலைமதிப்பில்லாத நேரத்தை மட்டும் வீணடிக்காமல், மன அழுத்தத்தையும் அதிகரிக்க வல்லதாயினும், நம்முடைய குறிக்கோளை அடைவதிலும், கனவு நிறைவேறுவதிலும் தடைகளை ஏற்படுத்திவிடுகிறது. இது பிறவிப் பழக்கமோ, பரம்பரைப் பழக்கமோ அல்ல. இடையில் கற்றுக் கொள்ளும் ஒரு தீய பழக்கமே என்கின்றனர், வல்லுனர்கள்.இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு,முதலில், நாம் எந்த வகையில் நேரத்தை வீணடிக்கிறோம் என்பதை இனம் காண வேண்டும்.இதற்காகப் பல மனோதத்துவ நிபுணர்கள் பல வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். அதைப் பற்றி பார்ப்போம்.

முதற்படி; எப்பொழுது,எப்படி, ஏன் தள்ளிப் போடுகிறோம்? நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு பகுதியில்தான் நாம் இதைச் செய்கிறோம். உதாரணமாக, பலர் தன் அன்றாடக் கடமைகள் எல்லாவற்றிலும் மிகத் தெளிவாக இருப்பவர்கள், வழக்கமான மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு, போன்றவற்றில் கோட்டை விட்டு டிடுவார்கள்.இதனைக் கண்டு பிடிப்பதற்கு, கடந்த 6 மாத காலத்தில் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் என்பதைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.நம்முடைய தொழில் சம்பந்தப்பட்டதாகவோ, சமூக வாழ்க்கை, பொருளாதாரச் செயல்கள், இப்படி எதுவாகவும் இருக்கலாம். இது எதனால் தள்ளிப் போடப் பட்டது? பயம், சலிப்பு, களைப்பு, நன்றாக செய்ய வேண்டும் என்ற பேராவலாகவும் இருக்கலாம். இல்லை வேறு ஏதாவது பொழுது போக்கில் ஈடுபட்டு, இதையெல்லாம் தள்ளிப் போட்டோமா? இதைக் கண்டறிந்தாலே அதிலிருந்து, எளிதாக மீண்டு விடலாம்.

இரண்டாம் படி; நாம் எப்பொழுதுமே மிக நன்றாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என எதிர் பார்ப்போமானால், எல்லாவற்றையும் குழப்பிக்கொள்ளாமல் நிதானமாக நன்றாகச் செய்யலாம் என்று தள்ளிப் போடுவோம். தகுதிக்கு மீறிய உயர்ந்த தரத்தை எதிர்பார்ப்பதை தவிர்த்தாலே, இது போன்று தள்ளிப் போடுதலைத் தவிர்க்கலாம், என்று நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜூலி, தன்னுடைய TIME MANAGEMENT FROM THE INSIDE OUT, என்கிற பத்திரிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதற்காக ஒழுங்கு முறையைக் கைவிட்டு விட வேண்டும் என்பது பொருளல்ல. தேர்ந்தெடுத்த ஒழுங்கு முறையைக் கடைப் பிடித்தாலே போதும்.எந்த வேலைக்கு அதிகப் படியான கவனம் தேவைப் படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.இப்படிச் செய்வதால் முக்கியமாகத் தேவையான இடத்தில் நம் நேரத்தைச் செலவிட முடியும்.

மூன்றாம் நிலை; ஒரு வேலையை நாம் தள்ளிப் போடுவதற்கான காரணம் பல நேரங்களில் நம் அணுகு முறையால் தான். உதாரணமாக, தாம் எழுத வேண்டிய கணக்குகள், அல்லது, வரவு செலவுக் கணக்குப் போடுவது போன்ற வேலையை இரவு 10 மணிக்கு மேல் செய்வது. நம்முடைய தெளிவான சிந்தனைக்கு முட்டுக் கட்டை போடக்கூடிய அந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது, தம் வேலையைத் தள்ளிப் போடத் தூண்டுகிறது.

இது போன்று தொடர்ந்து தள்ளிப் போடுகிறோம் என்றால், அந்த வேலையச் செய்யும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டும் சலிப்படையச் செய்யக் கூடிய வேலைகளைச் செய்ய முற்படும் போது விடுமுறை நாளையோ, ஓய்வாக இருக்கும் நேரத்தையோ தேர்ந்தெடுத்து, மனம் விரும்புகிற நல்ல பாடலோ, பிடித்த உணவு வகைகளோ, பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்ய முற்பட்டால எப்படித் தள்ளிப் போடும் எண்ணம் வரும்? எந்த வேலையாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் உற்சாகமாக, நகைச்சுவை உணர்வுடன்,ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.அப்படியும் செய்ய முடியவில்லையென்றால் வேறு யாராவது மூலமாக வேலையை முடிக்கப் பார்க்க வேண்டும். தம்முடைய பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்கப் பார்ப்பதால், அதை நிறைவேற்றுவதற்குரிய சக்தியையும், நேரத்தையும் விட அதிகமாக செலவிட வேண்டி வரும், என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நான்காம் நிலை; சில நேரங்களில் நாம் மிகவும் விரும்பிச் செய்யக் கூடிய வேலைகளைக் கூடத் தள்ளிப் போட நேரிடுகிறது. உதாரணமாக நல்ல அழகான கண்ணாடி ஓவியம் செய்து புதிதாகக் கட்டிய நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்ட வேண்டும் என்ற ஆசை. நம்முடைய மற்றப் பணிகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக இது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கலாம். கை வேலைகள் செய்கின்ற வேறு நண்பரையோ அல்லது பயிற்சி வகுப்பின் மூலமாகவோ ஒரு ஊக்கச் சக்தியைப் பெற்று, மளமளவென வேலையை முடிக்க முயல வேண்டும். அப்படி ஒரு வேலையை முடிக்கும் பட்சத்தில் ,அதை நமக்குப் பிடித்த உணவோடு, குடும்பத்துடன், கொண்டாடலாமே. சில நேரங்களில் ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதனால் அவமானப் பட்டுவிடுவோமோ அல்லது தவறாகப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகக் கூட தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்.இது போன்ற நேரங்களில் நாமே நன்றாக சிந்தித்து எதற்காக அஞ்சுகிறோம் என்பதைக் கண்டறிந்து, அதனைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். முடியவில்லையென்றால், நண்பர்களிடம் ஆலோசனை பெற்றாவது, அக் காரியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும். அந்தக் காரியத்தின் மூலம் நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கின்ற பட்சத்தில் அதை எப்படியாவது முடிக்க முயல வேண்டும்.

அமெரிக்க வல்லுனர்களான ரீட்டா மற்றும் ஜூலி ஆகியோரின் ஆலோசனைப்படி, அன்றாடம் முடிக்க வேண்டிய வேலைகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, அதனை தம் கைப்பட எழுதிக் கொள்ள வேண்டும்.

தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை செய்யும் நேரத்தை நம்மையறியாமல் அது கைப்பற்றிவிடும்.

மிகவும் சலிப்படையச் செய்யக் கூடிய நீண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில், அதைப் பிரித்து ஒரு வாரத்திலோ அல்லது மாதக் கணக்கிலோ குறிப்பிட்டு நிர்ணயித்து சலிப்படையாமல் செய்து முடிப்பதற்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

போனில் பேசுவது, படிப்பது, எழுதுவது, இப்படிப்பட்ட மன உற்சாகம் அளிக்கக் கூடிய செயல்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து விசயங்களையும் உள் வாங்கி, செம்மையாக நம் கடமையை நேரந்தவறாமல் செய்யும் போது, வெற்றி நிச்சயம்தானே!!!!!! .


9 comments: