Saturday, May 5, 2012

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! - (3)


வீழ்வது உற்சாகமாக எழுவதற்காகத்தான்!

“நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது. ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது. நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை. மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.” டெஸ்ஸி தாமஸ்.

“டெஸ்ஸி தாமஸ் வெற்றிப் பாதையில் தமது கனவுகளைத் தொடர்ந்து முயலும் பல பெண்டிர் இதய உந்துதலோடு வேட்கையுடன் பின்பற்ற விரும்பும் பெண் விஞ்ஞானிகளுக்கு ஒரு மாடல்,” என்று கருதப் படுகிறார். - இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம்

”அவர் சேரும் போது அவரது ராக்கெட் பணியகத்தில் ஒரு சில பெண்டிரே வேலை செய்து வந்தார் என்றும், தற்போது 200க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் பல்வேறு போர்த்துறைப் பணிகளில் வேலை செய்து வருகிறார்கள் என்றும் கூறுகிறார். பெண் விஞ்ஞானிகளுக்கு அளிக்கும் இந்திய சிறப்புப் பரிசு (Shanthi Swarup Bhatnagar Award) கடந்த 50 ஆண்டுகளில் (1958-2010) பெற்றவர் 11 பெண்டிர். அதே சமயம் 2011ம் ஆண்டில் மட்டும் பரிசு அளிக்கப்பட்டவர் 3 பேர். டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்கு இந்திய சிறப்புப் பரிசோடு எதிர்காலத்தில் பாரத ரத்னா பட்டமும் கிடைக்க வாய்ப்புள்ளது.”

2008 ஆம் ஆண்டில் இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் (The Indian Women Scientists Association) அவருக்குச் சூடிய புகழுரையில், “வீட்டுக்கும், விஞ்ஞானப் பொறுப்பு வேலைக்கும் இடையே கட்டிய இறுக்குக் கம்பியில் விழாமல் நடந்து தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட பல அன்னையரைப் போன்றவர் என்று சொல்லிப் பாராட்டியது. இவரது குருநாதரான இந்தியாவிற்கு அசுர வல்லமை ஈந்த ராக்கெட் பொறியாளர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கீழ் பணி செய்தவர்.

விஞ்ஞானப் பெண்மணி பிரியம்வதா நடராஜன் நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், கணித மேதை இராமானுஜன் போன்ற இந்திய விஞ்ஞான மேதைகளின் வரிசையில் ஓர் உன்னத ஆராய்ச்சியாளாராய் அடியெடுத்து வைக்கிறார். நோபெல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகளான மேரி கியூரி, புதல்வி ஐரீன் கியூரி, (Marie Curie, Irene Curie) அணுப்பிளவை விளக்கிய லிஸ் மெய்ட்னர் (Lise Meitner) ஆகியோர் அணியில் பிரியா தடம் வைக்கிறார். அவர் முதன்முதல் கண்டுபிடித்து உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்த “கருந்துளைப் பெருநிறை வரம்பு” உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “இராமன் விளைவு” (Raman Effect), “சந்திரசேகர் வரையறை” (Chandrasekhar Limit) போன்று “பிரியா வரம்பும்” (Black Hole Ultra-Mass Limit) விஞ்ஞான வரலாற்றில் சுடரொளி வீசும் மைல் கல்லாக விளங்கப் போகிறது. ஒளிமயமான எதிர்காலத்தில் பிரியாவுக்கு வெகுமதியாக வானியல் பௌதிக விஞ்ஞானத்துக்கு நோபெல் பரிசும் கிடைக்கவும் பெரியதோர் வாய்ப்புள்ளது
- சி. ஜெயபாரதன், கனடா
அக்கினி புத்திரி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear)

இது போன்று விஞ்ஞானம் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இன்று பெண்கள் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் கண்கூடாகக் கண்டாலும், இந்நிலையை அடைவதற்காக பெண் சமுதாயமும், கல்வியாளர்களும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த விளைந்தவர்களும் பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. ஆறாம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் பெண் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். பெண்கள் கல்வி நிலையங்கள் கூட நடத்தியிருந்திருக்கிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் பெண்ணுரிமை பற்றிய பேச்சு மெல்ல பிரான்சு நாட்டில் தலை தூக்கியுள்ளது. 17ம் நூற்றாண்டில் பல பெண் எழுத்தாளர்கள் தோன்றி பெண்ணுரிமையை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேற்கிந்திய அடிமை கிளர்ச்சியிலும் இந்த பெண்ணீயவாதி எழுத்தாளர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். 18ம் நூற்றாண்டில் நடந்த பிரஞ்சுப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பெருமளவில் இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் பெண்கள் தங்கள் உரிமையைப் பற்றிய விழிப்புணர்வு பெற ஆரம்பித்தார்கள். ஆண்களைப்போல தாங்களும் சுதந்திரமாக இருக்கப் பிறந்தவர்கள்தான் என்ற விழிப்புணர்வும் கொண்டார்கள்.

ஆனால்,18ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் பொருளாதார சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்படும் வகையில் சட்டங்களும், குறியீடுகளும் ஏற்படுத்தப்பட்டு அவர்தம் வாழ்க்கை வீட்டோடு முடக்க்பபட்டது. குடும்பக் காரியங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு என்பதாக சுருக்கப்ப்பட்டது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெண்கள் இயக்கம் ஊக்கம் பெற ஆரம்பித்தது எனலாம். உலக அளவில் இந்த விழிப்புணர்வு வெளிப்படையாக தெரிய ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில்தான். பெண்கள் திருமணம் என்ற பெயரில் பேரம் பேசப்பட்டு சொந்த உடமையாக்கப்பட்ட பொருளாக வடிவம் பெற்றதும் இந்த காலகட்டத்தில்தான். தேர்தலில் ஓட்டு போடும் ஜனநாயக உரிமைகூட மறுக்கப்பட்டதோடு சொத்து உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது.

இதே 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான், சீன நாட்டுப் பெண்களும் தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், சொத்துரிமை மற்றும் ஆண்களுடன் சம உரிமைப் போராட்டமும் மேற்கொண்டனர். இதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் சுதேசி இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக, பெண்களும் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு பிரித்தானியப் பொருட்களை புறக்கணித்து ஒத்துழையாமை இயக்கத்திலும் தீவிரமாக பங்கெடுத்தனர். பிரித்தானியர்களிடமிருந்து தொற்றிக் கொண்ட வரதட்சணை பிரச்சனை பற்றிய வினாக்களும் எழுந்தன. மற்றொரு புறம் ஆப்பிரிக்கப் பெண்கள் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அடிப்படை உரிமைகளையும் வேண்டியும் போராட ஆரம்பித்தனர். எகிப்து போன்ற ஆப்ரிக்க நாடுகளில் பெண்களின் திருமண வயதும் உயர்த்தப்பட்டது. பெண்களின் ஓட்டுரிமை என்பது உலகளவில் பெரும்பிரச்சனையானதும் இதே காலகட்டத்தில்தான். ஓட்டுரிமை முதலில் நியூசிலாந்து நாட்டிலும், தொடர்ந்து, பிரிட்டான், அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வழங்கப்பட்டது. காலனிய இந்தியாவிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் வந்தது.

ரஷ்யாவின் சோசலிச இயக்கத்தில், பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டாலும், ஸ்டாலினின் ஆட்சிக் காலங்களில் விசயம் மோசமாகிப் போனது. சுய மரியாதையுடன் வாழும் உரிமை மற்றும் இனப்பெருக்க உரிமைகள் பறிக்கப்பட்டது. சீனாவிலும் சோசலிச இயக்கம், பெண்களுக்கு சம உரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலமாக குடும்பப் பொறுப்பையும், பணியையும் ஒருசேர நடத்திச் செல்லும் வாய்ப்பும் பெற்றார்கள். இந்த முதற்கட்ட பெண்ணுரிமைப் போராட்டம் மூலமாக ஓட்டுரிமையும், சொத்துரிமையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரஞ்சு நாட்டிலும் பெண்கள் தங்கள் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டதோடு, ஓட்டுரிமையையும் பெற்றுக் கொண்டார்கள்.

1960 முதல் 1980 வரை இரண்டாம் கட்ட பெண்ணுரிமை அலை வீசிய போதுதான், குறிப்பாக அமெரிக்காவில், வெடித்து அந்தத்தீ சுவாலை உலகம் முழுவதும் மளமளவென பரவியது. சிவில் உரிமைகள், கருக்கலைப்பு உரிமை உள்ளிட்ட பாலியல் விடுதலை, குழந்தை வளர்ப்பு, சுகாதார நலம், கல்வி, பணி மற்றும் இனப்பெருக்க உரிமைகள் ஆகியவைகள் முக்கியப் பிரச்சனைகளாக கருதப்பட்டது. பெண்களுக்கு கலாச்சார மற்றும் சமூக சமத்துவம் போன்றவைகள் பெண்ணிய அலையின் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. அதாவது பெண்கள் குடும்பப் பொறுப்பைச் சுமக்க மட்டுமே தகுதியானவள் என்ற கருத்து முறியடிக்கப்பட்டு, அவர்கள் ஆண்களுக்கு நிகராக தொழில் புரிவதிலும், பணியை மேற்கொள்வதிலும் சம உரிமை வழங்கப்பட்டது. அடுத்து, இது மெல்ல மெல்ல, உலகளாவிய நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது கலாச்சாரம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

குடும்பத்தில், உறவுகளில், பணியிடங்களில், சமூகத்தில் நிகழும் அவலங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்க வேண்டியவளானாள் பெண். ஒரு கொள்கையோ, கோட்பாடோ ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை மறுத்தாலோ,, அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தாலோ,, அவளிடம் புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தாலோ அவற்றைக் கண்டு போராடக் கூடிய துணிச்சலும் படிப்படியாக வளர ஆரம்பித்தது.

பொருளாதார சுதந்திரத்தை ஒரு பெண் பெற்றிருந்தாலும்கூட, சமுதாய, கலாச்சார சுதந்திரம் கிடைக்கும் போதுதான் நிலையான பொருளாதார சுதந்திரத்தைப் பெற முடியும். நன்கு படித்து, உயர் ப்தவியில் இருக்கக்கூடிய பெண்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதாக எண்ணினாலும், இந்நிலையை அடைவதற்கு உலகளவில் எத்துனைப் போராட்டங்கள், பெண்ணியவாதிகள் நீண்ட காலமாக நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எத்தனையோ சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் என தங்கள் தொடர் முயற்சிகள் மூலம்தான் இன்று நாம் இந்நிலையை எட்டியிருக்கிறோம் என்பதும் உண்மை. பீகாரிலோ, உத்திரப் பிரதேசத்திலோ, மத்தியப் பிரதேசத்திலோ ராஜஸ்தானிலோ இன்றளவும் இதுபோன்ற விவாதங்களுக்கு இடமே இல்லை.

ஆக, பெண் என்பவளும் தனக்கென்று ஒரு மனம், தனக்கென்று ஒரு நோக்கம், கருத்து என்று கொண்ட ஒரு தனிப்பிறவி என்பதை ஏற்றுக் கொண்டாலும், பெண்ணிற்கான எல்லை வீடு மட்டுமே என்ற குறுகிய வரம்புக்குள் பாதுகாப்பு என்ற போர்வையில் சமுதாயம் அவளை அடைத்தபோதும், அந்த எல்லையையும் மீறிக்கொண்டு, அந்த வரம்புகளையும் கடந்து, கல்வி மற்றும் தங்களுடைய தனித்துவ ஆளுமையாலும் பல்வேறு அழுத்தங்களையும், மீறி, சாதனை புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆடவரைக் களிப்பூட்டும் அலங்காரப் பொருளாக மட்டும் வாழாமல், வெளியில் வந்து சாதிக்கத் துடிக்கும் பெண்ணின் போராட்டத்தையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல நற்சிந்தனையாளர்கள பெரும் தொண்டாற்றிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் என்பவள் சார்பு நிலையில் மட்டுமே இயங்கக் கூடியவள் என்று முத்திரை குத்தப்பட்டு, அவள்தம் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட காலகட்டமான 18ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த (condorcet) காண்டார்செட் என்னும் தத்துவ மேதை
பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர்களின் கல்வியறிவை மேம்படுத்தி தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீட்டுக் கொண்டுவர உதவ வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். பெண்களின் மீது சமத்துவமின்மை, வெறுப்புணர்ச்சி போன்ற நியாயமற்ற தரக்குறைவான போக்கை ஆண்கள் கைவிட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். அக்காலகட்டத்தில் நடந்த தொழிற்புரட்சியும் பெண்ணுரிமைக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியதால் ஆண்களோடு சமமாக பெண்களும் இணைந்து பணியாற்றி சம உரிமை பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

இத்துனைப் போராட்டங்களுக்குப் பிறகு பெற்ற சுதந்திரத்தை இன்று பெண்கள் மிக நல்ல விதமாக பயன்படுத்திக் கொண்டு பல துறைகளிலும் மிகச் சிறந்து விளங்குவதும் கண்கூடாகக் காணமுடிகிறது!



--

7 comments:

  1. அற்புதமான எழுத்து.தெளிந்த சிந்தனையைக் கொண்ட எழுத்து.உங்கள் எழுத்தை நேசிக்கின்றேன்.நட்புடன்…வாணிஜெயம்.vanij42@blogspot.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வாணிஜெயம்,

      வருக.. வருக வணக்கம் தோழி. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
  2. இத்தனை பெருமிதம் பெண்களுக்கு இருந்தும்....இன்றும் பெண்களுக்குண்டான மதிப்பு எதுவரை !

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ஹேமா,

      உண்மை தோழி.. வேதனையின் உச்சங்களைக் கண்ட பல விசயங்களை நாம் பார்த்திருக்கிறோமே... அர்த்தமுள்ள வார்த்தைகள் ஹேமா...

      பவளா.

      Delete
  3. அன்பின் பவள சங்கரி அவர்களுக்கு,
    தங்களின் கட்டுரை....அருமை.நிறைய எடுத்துக் காட்டுடன் சொல்லி இருக்கும் விதம் அருமை.
    பெண் சுதந்திரம் என்ற மகிழ்வில் ஒரு இருபது சதவிகிதம் இப்போது மகிழ்வாக இருக்கிறார்கள்...
    மீதம் இருப்பவர்கள்....தங்களின் குழந்தைகளாவது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பாடு
    படுகிறார்கள்...அங்கேயும் ஒரு குறைந்த சதவிகிதம் தான்....சல்லடையில் இன்னும் எண்பது சதவிதம்
    பெண்கள்....இந்தியா முழுதும் இருக்கத் தான் செய்கிறார்கள்...அவர்களது அறிவுக் கண்களைத் திறக்க
    என்றே....விஞ்ஞானி அறிஞர்.கவிஞர்..அனைவரும்.அக்கினிப் புத்திரியை ....முன்னோடியாக வைக்கிறார்கள்...
    பெண் சுதந்திரம்.... தாம் பிறந்த இந்தியாவில் ....சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியின் அருகே
    பெண் சுதந்திரக் கொடியும் பறக்க வைக்கும் நல்லெண்ணத்துடன். தங்களது சிறந்த கட்டுரைக்கு
    மிக்க நன்றி. அக்கினிப் புத்திரியை எழுதி விழிப்புணர்வு தந்த விஞ்ஞானி.சி.ஜெயபாரதன் அவர்களுக்கும்
    இதன் மூலம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    வணக்கம்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    .

    ReplyDelete
  4. அன்பின் பவள சங்கரி அவர்களுக்கு,
    தங்களின் கட்டுரை....அருமை.நிறைய எடுத்துக் காட்டுடன் சொல்லி இருக்கும் விதம் அருமை.
    பெண் சுதந்திரம் என்ற மகிழ்வில் ஒரு இருபது சதவிகிதம் இப்போது மகிழ்வாக இருக்கிறார்கள்...
    மீதம் இருப்பவர்கள்....தங்களின் குழந்தைகளாவது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பாடு
    படுகிறார்கள்...அங்கேயும் ஒரு குறைந்த சதவிகிதம் தான்....சல்லடையில் இன்னும் எண்பது சதவிதம்
    பெண்கள்....இந்தியா முழுதும் இருக்கத் தான் செய்கிறார்கள்...அவர்களது அறிவுக் கண்களைத் திறக்க
    என்றே....விஞ்ஞானி அறிஞர்.கவிஞர்..அனைவரும்.அக்கினிப் புத்திரியை ....முன்னோடியாக வைக்கிறார்கள்...
    பெண் சுதந்திரம்.... தாம் பிறந்த இந்தியாவில் ....சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியின் அருகே
    பெண் சுதந்திரக் கொடியும் பறக்க வைக்கும் நல்லெண்ணத்துடன். தங்களது சிறந்த கட்டுரைக்கு
    மிக்க நன்றி. அக்கினிப் புத்திரியை எழுதி விழிப்புணர்வு தந்த விஞ்ஞானி.சி.ஜெயபாரதன் அவர்களுக்கும்
    இதன் மூலம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    வணக்கம்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    .

    ReplyDelete
  5. அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,

    வருக,வணக்கம். தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி. தங்களின் புரிதலுக்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள் சங்கரி.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...