Sunday, January 19, 2014

நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!
பவள சங்கரி

ஸ்ரீநிதி.. ஸ்ரீநிதி...  என்ன காரியம் செய்திருக்கிறாய் நீஎத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியில் உறைக்கிறதே இல்லைநான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி கத்திட்டிருக்கேன். நீ கொஞ்சமாவது  சட்டை பண்றயாஇன்னும் என்ன சொல்லி உன்னை திருத்தறதுன்னு தெரியல.. கடவுளே

எதுக்கும்மா இப்படி தேவையில்லாம கூப்பாடு போடற நீ? இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி சீன் போடற. போம்மா, போய் வேற ஏதாவது வேலை இருந்தா போய்ப்பாரு

அடிப்பாவி. நான் இவ்ளோ சொல்லியும் நீ சர்வ சாதாரணமா கூப்பாடு போட்றேன்னு சொல்ற.. உன் மாமியார் வந்திருக்காங்க நினைப்பிருக்கா. இப்பகூட திருந்த மாட்டியா? அவிங்க கிராமத்துக்காரவிங்க. பாவம் நம்மளோட அதிநாகரீகமெல்லாம் அவிங்களுக்கு புரியாது. அதனால் அவிங்க ஊருக்குப் போற வரைக்குமாவது கொஞ்சம் நான் சொல்றத கேளும்மா ப்ளீஸ். அவிங்களுக்குத் தெரிஞ்சா தாங்க மாட்டாங்க. பிரச்சனையாயிடப் போவுது. கல்யாணம் ஆகி இன்னும் முழுசா மூனு மாசந்தான் ஆவுது. அதுக்குள்ள இப்படின்னா, அப்பறம் அவிங்க என்ன முடிவு எடுப்பாங்கன்னு சொல்லவே முடியாது


என்னம்மா நீ. இது எங்களோட  பர்சனல் விசயம். இதுல தேவையில்லாம நீங்கள்ளாம் ஏன் மூக்கை நுழைக்கறீங்க. வினு எதுவுமே சொல்லலையே. அவரும்தானே இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கார்அதுக்கென்ன இப்ப. நீ பேசறதப் பார்த்தா நான் என்னமோ உலக மகா தப்பு பண்ணிட்ட மாதிரில்ல இருக்கு. ஏம்மா இப்படி தேவையில்லாத செண்டிமெண்ட்டை வச்சுக்கிட்டு எங்க உசிர வாங்கறீங்க?”

என்னடி சொல்ற.. எதுடி தேவையில்லாத செண்டிமெண்ட். தாலிங்கறது ஒரு பெண்ணிற்கு கவசம் மாதிரிஅது மங்கலச் சின்னம்டிஉசிரு போற வரைக்கும் அது தன் கழுத்துல இருந்து இறங்கக்கூடாதுன்னு நினைக்கிறவதான் நம்ம தமிழ் நாட்டுப் பொண்ணு. நாலு எழுத்து படிச்சுட்டா நம்ம கலாச்சாரம் எல்லாத்தையும் மறந்துடணும்னு இல்லை. நம்ம பழைய பாரம்பரியங்களை பொக்கிசமா பாதுகாக்கறதுதான் இன்றைய நவீன நாகரீகத்தின் சுதந்திரமான வாழ்க்கைக்கு பாதுகாப்புக் கவசம். நாகரீகம்ங்கற பேர்ல நம் பழம்பெரும் பாரம்பரியங்களை உதாசீனப்படுத்துவது நமக்கு நாமே வச்சுக்கற கொள்ளி. அதை எப்பவும் மறந்துடக்கூடாதுதாலிக்கொடியைப்போய் அனாவசியமா கோட் ஸ்டேண்டில கழட்டி மாட்டிட்டுப் போயிருக்க. கேட்டா இத்தனை அசால்டா பதில் சொல்ற.. உன்னை என்ன பன்றதுனே தெரியல. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. இத்தனை நாளா எப்படியோ இருந்திட்டுப் போ. இப்பவாச்சும் எடுத்து கழுத்துல மாட்டு, சத்தமில்லாம. உங்க மாமியார்கிட்டயும் இப்புடி விதண்டாவாதம் பேசிட்டிருக்காதே. பிரச்சனையாயிடப்போவுது. நாங்க ஊருக்கு கிளம்பற வரைக்குமாவது கொஞ்சம் நடிச்சாக்கூடத் தேவலையம்மா தாயே

ஓகேம்மா.. உன் லெக்சர் முடிஞ்சுதா? நான் அப்படியே ஆபீஸ் கிளம்பட்டுமா. சாயந்தரம் வந்து மீதியைத் தொடரலாம். நான் தாலிக்கொடி செய்யும் போதே சொன்னேன். இப்படி வடக்கயிறு மாதிரி 6 பவுன்லல்லாம் செய்யாதீங்க. 2 பவுன்ல சின்னதா செய்தால் போதும்னு. என் பேச்சைக் கேட்டீங்களா? இப்ப நான் போடுகிற மாடர்ன் டிரஸீக்கு இந்த செயின் ஒத்து வராதும்மாகஷ்டப்பட்டு உள்ளே வச்சு மறைச்சு பின்னு குத்தி, எதுக்கு தேவையில்லாம சிரமப்படணும். புடவை கட்டிக்கறப்பல்லாம் நான் இந்த தாலிச்செயினை போட்டுக்கறேனே. அப்புறம் என்ன.. ஆளை விடும்மா நேரமாச்சு

அடிப்பாவி, இவ்ளோ சொல்லியும் தாலிக்கொடியை என்னமோ மேட்சிங் ஆபரணம் மாதிரி பேசற. நீயெல்லாம் திருந்தவே மாட்டடீ..  எனக்கென்ன நான் இன்னும் இரண்டு நாள்ல ஊருக்குக் கிளம்பிடுவேன். அப்பறம் என்ன வேணா பண்ணு. புருசனை பேர் சொல்லி கூப்பிடறது, வா, போங்கறது, இதெல்லாம் நல்லாவா இருக்கு? என்னமோ போங்க. எல்லாம் காலக்கொடுமை!”

மைதிலி, என்னம்மா இன்னும் புலம்பிட்டிருக்கே. உன் பொண்ணு கிளம்பி அஞ்சு நிமிசமாச்சு. நீ பாட்டுக்கு பேசிட்டிருக்கே. அது சரி உன் ஆதங்கம் உனக்கு. சில விசயத்தையெல்லாம் கொஞ்சம் மேம்போக்கா சொல்லிட்டு விட்டுறணும். நம்ம குழந்தையா இருந்தாலும் அவங்க பர்சனல் விசயத்துல மூக்கை நுழைக்கிறது சரியில்ல. நீ போய் அமைதியா உன் வேலையப்பாரு. அவங்க மாமியார் காதில உழப்போகுது. தேவையில்லாம பிரச்சனை கிளம்பிடப் போகுது. ஊருக்குக் கிளம்பற வரைக்கும் கொஞ்சம் நீ அமைதியா இரு

என்னமோ போங்க. உங்க மகள் செய்யிறது கொஞ்சமும் சரியில்லைஅன்னைக்கு ஒரு நாள் எங்க அம்மா வீட்டுக்கு போனப்பவும், இப்படித்தான் சன்னமா பில்லாட்டம் ஒரு சின்ன செயின் போட்டுக்கிட்டு வந்தாள். அதோட வேடிக்கை, எங்க அம்மா ஏம்மா இப்படி பண்றே, இப்படி சொந்த, பந்தங்களைப் பார்க்க வரும்போதாவது ஒழுங்கா தாலி செயினைப் போட்டுக்கிட்டு வரக்கூடாதான்னு கேட்டதுக்கு, சர்வ சாதாரணமா, சரி பாட்டி, உன்னோட தாலி செயினைக் குடு இன்னைக்கு உனக்காக அதை வேணா போட்டுக்கறேன்னு சொல்றா.. எங்கம்மா ஏன் அப்பறம் பேசப்போறாங்க. அதிர்ச்சியில அப்படியே வாயடைச்சுப்போயிட்டாங்க. வரவர அவ விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சு. இன்னும் குழந்தையாவே இருக்கா. என்னைக்குத்தான் பொறுப்பு வருமோ

ஸ்ரீநிதி ஒரு பிரபலமான கணினித் துறை நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவள்உடன் பணி புரியும் வினோத் குமாரைக் காதலித்து  பெற்றோரையும் மிகுந்த போராட்டத்திற்கு இடையே சம்மதிக்க வைத்து மணம் புரிந்து கொண்டவள். திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளையும், அவர்களின் வீட்டாரும் மிக நல்ல முறையில் பழகுவதால் இரண்டு குடும்பத்திற்கும் ஒருவருக்கொருவர் மிகவும் பிடித்துப்போக உறவு நல்ல நிலையில் தொடர ஆரம்பித்துவிட்டதுசென்னையில் அவர்களை தனிக்குடித்தனம் வைத்துவிட்டு மகள் குடும்பம் நடத்தும் அழகைக் காண வந்திருந்தனர் பெற்றோர். பொதுவாகவே மிக வெளிப்படையாக இருப்பவள் ஸ்ரீநிதி. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவள். ஆனால் இந்த குணம்  பல நேரத்தில் பிரச்சனையாகத்தான் முடிந்திருக்கிறது அவளுக்கு. அவளைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர்கள் அவளுடைய கள்ளமில்லா உள்ளத்தை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள். குழந்தை போல வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று பேசும் வழக்கமும் அவளுக்கு நிறைய நட்புகளை உருவாக்கிக் கொடுத்தது

திருமணம் ஆகி ஓராண்டு நிறைவு பெற்றதை  நம்ப முடியவில்லை. அத்துனை வேகமாக ஓடும் காலம். இன்னும் இரண்டு நாட்களில் முதல் திருமண நாள் . அம்மா, அப்பா, அத்தை, மாமா என அனைவரும் கிளம்பி வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்ரீநிதிக்கு அவர்கள் வருவதில் விருப்பமில்லை என்பது அவள் முகம் போன போக்கிலேயே தெரிந்ததுவினுவிற்கும் அதைப்பற்றி கருத்து சொல்ல ஏதும் இருக்கவில்லைகிட்டத்தட்ட இந்த ஒன்னரை மாதமாக வினுவின் உடல் நிலையில் பலவிதமான மாற்றங்கள். இந்த 30 வயதில் இத்தனை பிணிகள் என்பதை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அதுவும், சின்ன வயதிலிருந்து ஒரு நாளும் தலை வலி, காய்ச்சல் என்றுகூட படுத்ததில்லை அவன். ஆனால் இந்த சில நாட்களில்  அதீதமான சோர்வு, குமட்டல், கால் வலி, தசைப்பிடிப்பு, தூக்கம் பிரச்சினைகள், தலைவலி, மனக்குழப்பம், இப்படி பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆட்பட்டிருக்கிறான்ஸ்ரீநிதியின் ஒத்துழைப்பும், தைரியமான போக்கும் மட்டுமே தன்னை இந்த அளவிற்கு சமாதானமாக வைத்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதாலேயே, அனைத்து முடிவுகளும் அவள் எடுக்கட்டும் என்று நிம்மதியாக இருக்க முடிகிறது. இதனாலேயே பெற்றோரும், அத்தை, மாமாவும் வருகிறோம் என்று சொன்னபோது கூட ஸ்ரீநிதி தாட்சண்யமே இல்லாமல் தாங்கள் குலு மணாலிக்குச் செல்வதற்காக டிக்கெட் புக் பண்ணியிருப்பதாக பொய் சொன்ன போதும் அவனால் மறுத்துப் பேச முடியவில்லைபலவிதமான மருத்துவச் சோதனைகளுக்கு ஆட்பட்டிருக்கும் இந்த வேளையில் அவர்களின் வருகை  அவர்களையும் குழப்பத்தில் உள்ளாக்குவதோடு, தங்களுக்கும் சிரமத்தைக் கொடுக்கக்கூடும் என்ற  ஸ்ரீநிதியின் வாதத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. அவளுடைய தெளிவான சிந்தனையும், எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் அவள் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது அவனுக்கு. அது பெரிய நிம்மதியையும் கூடக் கொடுத்திருந்தது .

எல்லோரிடமும் குலு மணாலிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டாலும் முதல் கல்யாண நாளை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று ஒரு சிறு கற்பனை வைத்திருந்ததை மறக்க முடியவில்லை ஸ்ரீநிதிக்கு. காதலிக்கும் காலத்தில் பெற்றோரிடம் சம்மதம் பெற்று மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்ததால், இரண்டு ஆண்டுகளாக காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் மனம் சலித்துப்போக வினு ஸ்ரீநிதியிடம், ‘பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிடலாம், கொஞ்ச நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்என்று சொன்னதை உறுதியாக மறுத்ததோடு, அவளுடைய பெற்றோரை மட்டுமல்லாமல், தன் பெற்றோரையும் பொறுமையாகப் பேசி சம்மதிக்க வைத்தது நினைவிற்கு வந்தது

அன்று சனிக்கிழமை என்பதால் இருவருக்கும் விடுமுறை கிடைத்ததுவினுவிற்கு விடியலிலேயே முழிப்பு தட்டிவிட்டதுஎங்கோ ஒரு புறா தன்னைப் போலவே தூக்கமில்லாமல்பக்..பக்..’ என்று சத்தமிட்டுக்கொண்டிருந்ததுதங்களுடைய அடுக்கு மாடி குடியிருப்பின் பின் புறம் உள்ள தண்ணீர் தொட்டியின்  மீது இருக்கும்  ஜோடிப் புறாக்களில் ஒன்றுதான் இப்படி சத்தம் செய்கிறது என்று நினைத்தவன், அது சரியா என்று பார்க்கும் வகையில் சத்தமில்லாமல், படுக்கையில் அதிர்வு ஏற்படாமல், (கொஞ்ச நாட்களாக ஒரு சிறு அதிர்வு ஏற்பட்டாலும், ஸ்ரீநிதி சடக்கென்று எழுந்து உட்கார்ந்துவிடுகிறாள்) மெல்ல எழுந்து சன்னலுக்கருகில் வந்தான். அங்கிருந்து பார்த்தால், பெரும்பாலும் ஒன்றாகவேக் காட்சியளிக்கும் அந்த ஜோடிப்புறாக்களைப் பார்க்க முடியும். தன் பார்வைக்காகவே இவையிரண்டும் அங்கே காத்துக்கிடக்கிறதோ என்றுகூடத் தோன்றும் அவனுக்கு. கொஞ்ச நாட்களாக இப்படி விடியல் நேரம் அடிக்கடி அவர்களின் கொஞ்சு மொழியையும், மூக்கோடு மூக்கை உரசும் அழகையும் இரசிக்க முடிகிறது அவனால்சாளரத்தின் வழியே பியத்துக்கொண்டு உள்ளே வரும் பௌர்ணமி நிலவொளியில் தகதகவென மின்னும் அன்பு மனைவியின் அழகில் லயித்தபடி சிறிது நேரம் நின்றிருந்தான். நெற்றியில் சுருளாக அனாயாசமாக விழுந்து கிடக்கும் அந்த அழகுக் கற்றையை தூக்கத்தில்கூட தன்னிச்சையாக, ஒருவித நளினத்துடன் ஒதுக்கித் தள்ளும் அந்த வெண்டை விரல்களைப் பிடித்துக் கொண்டே தன் காலத்தைக் கடத்திவிடலாம் என்ற எண்ணம் குளிர்ச்சியைப் பாய்ச்சியது உள்ளத்தில்எவ்வளவு நேரம் இப்படியே மெய்மறந்து நின்றிருந்தானோ தெரியவில்லை, மோட்டர் ஓடும் சத்தம் வந்து அந்த தவத்தைக் கலைத்தது. மெல்ல சிலிர்த்துக்கொண்டவன், நிமிர்ந்து மணியைப் பார்த்தான். தம் எண்ணத்திற்குத் தோதாக, அந்த இரு முள்ளும் கூட ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துக் கிடந்து மணி 5.25 ஆனதைச் சொன்னது. எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் ஸ்ரீநிதி விழித்துக்கொள்ளக் கூடும். அருகில் இல்லையென்றால் அடித்துப் பிடித்து எழுந்து வருவாள். அதைத் தவிர்க்க வேண்டுமென்று, மெல்ல அவளருகில் சென்று ஓசையில்லாமல் படுத்துக்கொண்டான். தன் கழுத்தைச் சுற்றி அந்த மெல்லிய பூப்போன்ற கரம் சுற்றி வளைக்க, தன்னுடைய மற்றொரு கையால் மெல்ல அவள் முதுகில்  தட்டிக் கொடுத்தான். லேசான புன்னகையுடன், பிடியில் ஒரு சிறு அழுத்தம் கொடுத்துவிட்டு, மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்அவளுடைய அழுத்தம், என்றோ தன் மனதில் பதிந்த ஒரு குறுஞ்செய்தியை நினைவூட்டியது.

ஆழமான உறவு கலகலப்பான நேரங்களில் கை குலுக்குவதால் பிரகாசிப்பதில்லை. வலி மிகுந்த கடினமான தருணங்களில் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளும் போதுதான் உறவு பூத்துக் குலுங்குகிறது

கையை மெதுவாக விலக்கி எழுந்து போய் காலைக் கடன்களை முடித்தவன், அடுக்களைப் பக்கம் சென்று அடுப்பில் கெட்டிலை ஏற்றி ஸ்ரீநிதிக்குப் பிடித்த நரசுஸ் காப்பித் தூளைக் கொட்டி பில்டரில் தண்ணீரை ஊற்றி மூடினான். டிகாக்ஷன் இறங்குவதற்குள் காம்புக்கிண்ணியில் பாலை ஊற்றிக் காய்ச்சி, இரண்டு கோப்பைகளில் பாலை ஊற்றி அதன் மேல் கெட்டியான டிக்காஷனை தெளித்தவாறு ஊற்றி அளவாகச் சக்கரைப் போட்டு ஸ்பூனால் கலக்கியபடியே அதை டிரேயில் வைத்தான். மணக்க, மணக்க காபியை ஏந்தியபடியே மனைவியைக் காணச் சென்றான். ஏற்கனவே தூக்கம் விழிக்கும் நிலையில் புரண்டு கொண்டிருந்தவள் பில்டர் காபியின் மணம் நாசியைத் துளைக்க பளிச்சென்று கண் விழித்தாள்..

வாவ்.. பில்டர் காபியா... தேங்க்யூ டியர். இதோ ஓடி வருகிறேன். காபி ஆறிடுமே...” சொன்னவள் ஐந்து நிமிடத்தில் பல் தேய்த்து முகம் கழுவி ஓடி வந்தாள். வாய் குவிந்த கோப்பை சூட்டைத் தக்க வைத்துக்கொண்டு காத்திருந்தது ஸ்ரீநிதிக்காக, வினுவுடன் சேர்ந்து.

கோவிலுக்குச் செல்லத் தயாராகி மெல்லிய ரோசா வண்ணத்தில் ஷிஃபான் சேலையில் தேவதையாக வந்து நின்ற மனைவியை அள்ளி அணைக்க நினைத்து சட்டென்று எழுந்தவன், திடீரென தலை சுற்றி, கண்கள் இருள, சரியப் போனவனை ஓடிச் சென்று அணைத்துத் தாங்கியவள், சற்றும் தயங்காமல் பரபரவென இயங்கினாள், அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கூடிய விரைவில் காரில் ஏற்றி, அழைத்துச் சென்றுவிட்டாள். அடுத்து பல சோதனைகளுக்குப் பொறுமையாக ஒத்துழைப்புக் கொடுத்தவன், உள் நோயாளியாக சேர்க்கப்பட்டபோது கொஞ்சம் அதிர்ச்சியானான். என்ன பிரச்சனை என்று  கேட்டபோது, ஸ்ரீநிதி புன்னகையால் மறைக்க முயன்ற போதும் அவள் முகத்தின் வாட்டமும், லேசாகக் கலங்கும் கண்களும் ஏதோ விபரீதத்தை உணர்த்தியதுஆனால் அதெல்லாம் சில நொடிகள்தான். உடனே தெளிவிற்கு வந்தவள், வினுவின் தலை முடியை கோதியபடி அருகில் அமர்ந்து, மெல்ல பேசலானாள்.

வினு, எந்த ஒரு விசயத்தையும் நாம் பார்க்கும் கோணத்தில்தான் அதன் பாதிப்பை உணருவோம் இல்லையாதீர்வு இல்லாத நோய் என்பது இன்றைய முன்னேறிய மருத்துவ உலகில் மிகவும் அதிசயம். சொல்லப்போனால் மருந்து இல்லாத வியாதியே இல்லை எனலாம், அப்படித்தானே வினு?” என்றாள் அழுத்தமாக.

தன்னையறியாமல் ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டியவன் அடுத்து அவள் போடப்போகும் குண்டிற்காக காத்திருந்தான். ஆனாலும் மனதளவில் அது  பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்ததற்கு ஸ்ரீநிதியின் மேல் கொண்ட நம்பிக்கையே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. வினுவின் சிறுநீரகங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை மிக நாசூக்காகச் சொன்னாள் ஸ்ரீநிதிஎதைப் பற்றியும் கவலையில்லாமல் ஓய்வெடுத்தால் போதும், மற்றதெல்லாம் தானே பார்த்துக்கொள்வதாகச் சொன்னது போலவே செய்தும் காட்டினாள். சிறுநீரக தானம் கொடுப்பவரை ஏற்பாடு செய்ததோடு  அறுவைச் சிகிச்சைக்கான நாளையும் குறித்துவிட்டு வினுவிடம் சொல்லி, கூடிய விரைவில் உடல் பூரண நலம் பெற்று வீடு திரும்பிடலாம் என்ற தைரியத்தையும் கொடுத்தாள்

இதற்குமேல் பெரியவர்களிடம் சொல்லாமல் இருக்க வேண்டியது இல்லை என்பதை உணர்ந்தவள் பெற்றோரையும், அத்தை, மாமாவையும் வரவழைத்து இருக்கும் நிலையை தெளிவாக எடுத்துக் கூறினாள். முதலில் அதிர்ச்சியும், பின் தங்களிடம் மறைத்தவளிடம்  கோபமும் கொண்டாலும், அடுத்து அவள் சொன்ன செய்திகளைக் கேட்டு மேற்கொண்டு ஏதும் பேச முடியாமல் வாயடைத்துப் போய் அமைதியாக அவள் பின்னால் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

அறுவைச் சிகிச்சைக்கான நாளும் வந்ததுஇரவெல்லாம் கணவனுக்கு ஆதரவாக மருத்துவமனையில் இருந்துவிட்டு, காலையில் வீட்டிற்கு வந்தவள் குளித்து, அமைதியாக மற்ற வேலைகளைக் கவனித்தாள். பூஜையறையில் விளக்கேற்றி சாமி படங்களுக்கு பூ வைத்தாள்மாமியார் அருகில் வந்து மெதுவாக, தொண்டை கம்மியபடி,

ஸ்ரீநிதி, என் பேச்சைக் கேளும்மா, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. வினுவிற்கு வேறு ஒருவரிடம் சிறுநீரக தானம் பெறலாமே. இன்னும் ஒரு குழந்தை கூட பிறக்காத நிலையிலநாம ஏன் இப்படி விசப்பரிட்சை  செய்யோணும். நீயே சிறுநீரகம் கொடுப்பேண்ணு அடம் பிடிக்கறது   எனக்கென்னமோ பயமா இருக்குமாஎன்றார்.


அத்தை, உங்களுக்கு இப்படி ஒரு பயம் தேவையே இல்லை. நான் டாக்டரிடம் கலந்து பேசாம முடிவெடுப்பேனா சொல்லுங்கமகப்பேறு மருத்துவரிடமும் பேசிட்டேன். ஒரு கிட்னி கொடுப்பதால் ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இன்னொரு கிட்னி இருக்குல்ல. என் வினுவிற்கு கொடுப்பதற்காகவே எனக்கு ஆண்டவன் இரண்டு கிட்னி கொடுத்திருக்கான்னுதான் நான் நினைக்கிறேன். நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க. உங்களுக்கு அழகான பேரப் பிள்ளையைப் பெற்றுக் கொடுப்போம். “ அவளுடைய வார்த்தைகளில் இருந்த உறுதி வெளியில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் பெற்றோருக்கும் சேர்த்தே தெம்பைக் கொடுத்தது. விளையாட்டுத்தனமாக இருந்த தங்கள் ஸ்ரீநிதியா இது என்ற ஆச்சரியமும் வராமல் இல்லை. பூஜை முடித்து திலகம் வைக்கும் போது தன்னுடைய மாங்கல்யத்தை எடுத்து குங்குமம் வைத்து கண்களில் ஒற்றிக் கொண்டதையும் கண்ட பெற்றோருக்கு கண்கள் கலங்கிப் போனது. இன்னுமொரு புதிய நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பித்தது

நன்றி : திண்ணை

1 comment:

  1. ஸ்ரீநிதி - குழந்தை போல வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் தான்... முடிவில் பெற்றோருக்கு மட்டும் கண் கலங்கவில்லை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete