Tuesday, January 21, 2014

சிறுவர்களுக்கான நூல் - கதை கதையாம் காரணமாம்!



வணக்கம் நண்பர்களே!

பழனியப்பா பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மற்றுமொரு சிறார்களுக்கான நூல் இது. சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால் வாங்கிப் பார்த்துச் சொல்லுங்கள். நன்றி.



    


கதைகள் என்பது நம்மைச் சுற்றி நடப்பவற்றிற்கு ஒரு சாளரமாக இருப்பது. குழந்தைகளுக்காக எழுதுவது என்பது நாமும் குழந்தையாக மாறி, அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து, அவர்களுக்காகப் பேசி, அவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது. அந்தக் கதையின் நாயகர்கள், கடவுளாகவோ, மனிதராகவோ, தேவராகவோ, முனிவராகவோ, பறவைகளாகவோ, மிருகங்களாகவோ அல்லது உயிரில்லாத சடப் பொருளாகவோ கூட இருக்கலாம்.



ஆனால் கதைப் பாத்திரங்கள் தங்களைச் சுற்றி இயங்குவது போலவும், அனைத்து சம்பவங்களும் தங்களைச் சுற்றி நடப்பது போலவும் ஒரு உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தால் மட்டுமே அது குழந்தைகளைச் சென்று அடையும். அவர்களுடைய கற்பனைச் சிறகுகளை விரித்துஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கக்கூடிய கதைகள் அவர்களை மிகவும் மகிழ்ச்சியாக்குகிறதுஉண்மையோடு கலந்த கற்பனைகளும் பெரிதும் விரும்பப்படுகிறது. அந்த வகையில் முக்கியமான கண்டுபிடிப்புகள், படிப்பினை ஊட்டக்கூடிய சம்பவங்கள், நல்லொழுக்கத்தை போதிக்கும் சம்பவங்கள், தேசப்பற்று, சக மனிதரிடமும், மற்ற உயிரினங்களிடமும் பாரபட்சமின்றி நேசமுடன் நடந்துகொள்வது போன்றவற்றை கற்பனைப் பாத்திரங்களுடன், சுவையான சம்பவங்களையும் கலந்து வழங்கும்போது அது குழந்தைகளை எளிதாகக் கவருவதோடு, குழந்தைகளுக்காக வாசித்துக் காட்டும் பெற்றோருக்கும் சுவை கூட்டுகிறது. அதோடு பெற்றோரின் கற்பனைச் சிறகையும் விரிக்கச் செய்து குழந்தைகளுக்காக தாங்களே கதை சொல்லிகளாக மாறுவதற்கும் வழி வகுக்கிறது.

ஆதி காலந்தொட்டு, பாட்டி சொல்லும் கதைகள் என்றால் குழந்தைகளுக்கு ஒரு தனிப்பட்ட ஆர்வம் ஏற்படுவதும் இயற்கைதான். மற்ற உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்தும் வழியையும் இது போன்ற கதைகள் ஊக்குவிக்கிறது. நவீன கண்டுபிடிப்புகளை குழந்தைகளுக்கு அப்படியே எடுத்துச் சொல்லுவதைக் காட்டிலும் அத்துடன் சம்பந்தப்பட்ட பழைய பாட்டி கதைகளையும் இன்றைய நாகரீக காலத்திற்கு ஏற்றவாறு சற்றே மாற்றியமைத்து இரண்டையும் சரி விகிதமாகக் கொடுத்தால் அது குழந்தைகளின் மனதில் பச்சென்று பதிந்து கொள்ள வழி வகுக்கும். அந்த வகையில் இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கதையும் சம்பந்தப்பட்ட மற்றொரு கதையுடன் இணைத்து, குழந்தைகளுக்கு நல்ல படிப்பினையை வழங்கும் வகையில் சிறப்பாக அமைத்துள்ளேன். நம் புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள் போன்றவற்றில் சுவையான சிறு சம்பவங்களை அவர்களுக்கு எளிமையாகப் புரியும் வகையில் சொல்லும் போது அது அடி மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ’ காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டுஎன்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுமாறு பாரதி சொல்லுவான். அத்தோடுஇரவு உறங்குமுன் நல்ல கதைகள் வாசிக்கும் வழக்கமும் ஏற்படுத்திக்கொள் பாப்பாஎன்பதையும் சேர்த்துக்கொள்வது அவர்களுடைய அமைதியான உறக்கத்திற்கு மட்டுமல்லாமல் பண்பட்ட உள்ளத்தை ஊக்குவிப்பதற்கும் பயன்படும். காலையில் எழும்போது அதே உற்சாகத்துடன் எழுந்து தங்கள் கடமைகளை தாங்களே முடித்து, பள்ளிக்கு அமைதியாக கிளம்பிச் சென்று அங்கு ஒழுக்கத்துடன் நல்ல கல்வியையும் பயில வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலில் ஒவ்வொன்றும்  முத்தான கதைகளாகத் தேர்ந்தெடுத்து, எளிமையாகப் புரியும் வகையில் கொடுத்திருக்கிறேன். குழந்தைகள் இது போன்ற புதிய பாணியிலான கதைகளை கட்டாயம் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். நல்ல கதைகளை அவர்கள் விரும்பும் வகையில் எடுத்துச் சொல்வதன் மூலம் குழந்தைகளை வருங்காலத்தில் வரலாற்று நாயகர்களாக ஆக்க முடியும் என்பது சத்தியம்.  வாழ்த்துக்கள் குழந்தைகளே!

அன்புடன்

பவள சங்கரி













2 comments:

  1. இன்றைய குழந்தைகள் புதிய பாணியிலான கதைகளை கட்டாயம் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.
    சிறுவர்களை எப்படியாவது படிக்க வைக்கப் பார்க்கிறோம் :)

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...