Sunday, December 4, 2011

செவ்வி - கலீல் ஜிப்ரான்

செவ்வி


செவ்வியைப்பற்றித் தங்கள் கருத்தைக் கூற வேண்டும் என்று வேண்டிய ஒரு கவிஞனுக்கு கிப்ரானின் மறுமொழி:

எழிலை நீ எங்கே தேடுவாய், அவளே உன் பாதையாகவும், உன் வழிகாட்டியாகவும் இல்லாதவரை எவ்வாறு அவளை அடையாளம் காணப்போகிறாய்?

உம் பேச்சுக்களை நெய்பவளாக அவள் இல்லாதவரை எப்படி அவளைப்பற்றி பேசப்போகிறீர் நீவிர் ?

சஞ்சலம் கொண்டவரும், புண்பட்டவரும், “ அழகு அன்பானதும், சாந்தமானதும்” என்பார்கள்.

“ தம்பேழ் கண்டு அரை - நாணம் கொள்ளும் இளம் தாயைப் போன்று அவள் நடக்கிறாள் நம்மிடையே”

உணர்ச்சிவயப்பட்டவரோ, ”அழகு என்பது வல்லமையும், அசங்கியமுமான பொருள் என்பர்.
அவள் கொந்தளிப்போடு பூமியையே நமக்குக் கீழேயும், வானத்தை நமக்கு மேலேயும் புரட்டிப் போடுபவள்”

களைப்புற்றவரும், சோர்வுற்றவரும், ” செவ்வி என்பது அமைதியான முனகல்கள். அவள் நம் ஆன்மாவினுள் பேசுபவள், என்பர்.

நிழலின் அச்சத்தால் நடுக்கம் கொண்ட மெல்லொளி போன்று அவள் குரல் நம் மோனத்தை வளமாக்குகிறது.

ஆயினும், அமைதியற்ற ஒருவர் ,” மலைகளினூடே அவள் அலறிக் கொண்டிருப்பதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்பார்.
” அவளுடைய கதறலுடன், குளம்பொலியும், அத்தோடு சிறகுகளின் படபடப்பும், சிம்மத்தின் கர்சனையும் சேர்ந்தே வந்ததாம்”

இரவில் நகரத்துக் காவலாளியோ ,” செவ்வி கிழக்குப்புறத்திலிருந்து, உதயத்துடன் எழலாம் “ என்பார்.
உச்சிவேளை அலைக்கழிப்பில் உழைப்பாளிகளும், கால்நடைப்பயணிகளும், “ நாங்கள் அவளை ஆதவன் மயங்கும் சாளரத்திலிருந்து, தாரிணியின் மீது சாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டோம்” என்கின்றனர்.

குளிர்காலப்பனியில் கட்டுண்டு கிடந்தவரோ, “ அவள் குன்றுகளின் மீது குதியாட்டம் போடும் இளவேனிற்பருவத்துடன் சேர்ந்து வரலாம்,” என்பார்.

கோடையின் தகிப்பில் தவிக்கும் அறுவடைக்காரரோ, “ நாங்கள் , அவள் இலையுதிர் காலத்தின் இலைகளுடன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பதையும் , அவள் கேசத்தில் பனித்துளியையும் கண்டோம்”, என்கிறார்.

இவையெல்லாம் எழிலைப்பற்றி நீங்கள் சொல்வது.

இருப்பினும் , உண்மையில் நீங்கள் அவளைப்பற்றிப் பேசவில்லை. மாறாக உங்கள் நிறைவேறாத தேவைகளைப் பற்றியே பேசியிருக்கிறீர்கள்.
செவ்வி என்பது ஒரு தேவை என்பதில்லை ஆனால் அது ஒரு பேரானந்தம். ( மெய்மறந்த தெய்வீக இன்பம்)
அது வாய் வேட்கையுமன்று , முன் விரிந்த வெற்றுக்கரமுமன்று,
ஆயினும் ஒரு அழற்சியுற்ற இதயமும் , பரவசமான ஆன்மாவுமாகுமது.
அது நீங்கள் காணக்கூடியதாக உள்ள பிம்பம் அன்று, மற்றும் கேட்கக்கூடிய இசையுமன்று,
ஆயினும் அது நீங்கள் கண்களை மூடிக்கொண்டு காணக்கூடிய பிம்பமாகவும் , காதுகளை மூடிக்கொண்டு கேட்கக்கூடிய இசையுமாகவும் இருக்கும்.
அது குடையப்பட்ட மரப்பட்டையின் பலமற்ற பகுதியுமன்று, வளைநகத்தில் இணைந்த சிறகுமன்று.
ஆயினும் அது நித்தியம் மலர்ந்திருக்கும் சோலை மற்றும் நிதமும் பறந்து கொண்டிருக்கும் தேவதைகளின் கூட்டம்.

ஆர்பலீசு மக்களே, வாழ்க்கை தன்னுடைய புனிதமான முகத்தை வெளிப்படுத்தும் போது அந்த வாழ்க்கைதான் அழகு.
ஆனால் நீங்களே வாழ்க்கை மற்றும் நீங்களே அந்த திரை
கண்ணாடியில் தன்னையே வியப்புடன் உற்று நோக்கும் அமரத்துவம்தான் அழகு.
ஆனால் நீங்கள்தான் அமரத்துவமானவர்கள் மற்றும் நீங்கள்தான் அந்தக் கண்ணாடி.




கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும், ஆற்றின் நுழைந்து. -குறள் (130)


திருமந்திரம்: 1987

உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. - தந்தை பெரியார்



No comments:

Post a Comment