பேராண்மை!
"ஏண்ணா, கோவில் நடையைத் திறக்க நாழியாயிடுத்துன்னு
பறந்துண்டு ஓடினேள்.... என்ன ஆச்சு, திரும்ப வந்துட்டேள்”
“என்னத்தச் சொல்ல.. வழக்கம் போலத்தான். அந்தப் பக்கத்தாத்துல
புதுசா குடி வந்திருக்காளே அந்த தில்லிக்காரா.. அந்தப் பொண்ணு காலங்கார்த்தாலே வந்து
நிக்கிறா.. நல்ல காரியமா போறச்சே இவோ மூஞ்சியில முழிச்சுட்டுப் போக சங்கடமா இருக்கு.
கொஞ்சம் தூத்தம் கொண்டாடி. குடிச்சிப்பிட்டு கிளம்பறேன்”
“ஏண்ணா நம்மாத்தை விட்டு வெளியில் படியிறங்கறா வரையிலத்தான் சகுனம்
எல்லாம் பார்க்க முடியும். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிச்சப்பறம் யார், யாரோ வருவா.. போவா...
அதெல்லாம் சகுனத்தடையா நினைச்சா எப்படிண்ணா..”
“அப்படியில்லைடி.. புதுசா எதிர்த்தாத்துக்கு வந்திருக்கவா, அந்தப் பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்கு கரெக்டா எதிர்ல வந்துட்றா..
அவளைப் பார்த்துட்டு அப்படியே கிளம்ப மனசு ஒப்பலைடி நேக்கு. நல்ல காரியம் பண்றதுக்கு கிளம்பும்போது இப்படி வெறுங்கழுத்தோடவும், பாழும் நெற்றியோடவும் இருப்பவளைப் பார்த்துட்டுக் கிளம்ப மனசு
என்ன்மோ பண்றது.. அதான் வந்து, தண்ணி குடிச்சுப்பிட்டு, சித்த நாழி கழிச்சி புறப்படலாம்னு வந்தேன்”
“அந்தப் பொண்ணு நம்ம பக்கத்துல இருக்கிற பள்ளியில டீச்சரா வேலை
மாத்தி வந்திருக்காண்ணா.. குடும்பத்தோட வந்திருக்காங்க. அவ்ளுக்கு ஒரு பையனும் இருக்கான்.
ஐந்து வயசு இருக்கும். அவனையும் கூட்டிண்டு ஏதேதோ கிளாஸ், அப்பறம் பள்ளிக்கூடம் போவா.. தினமும் நீங்களும் அதே நேரத்துல
கிளம்பறேள். இனிமேல் அரை மணி முன்னாலேயே கிளம்புங்கோ. அவ்ளோதானே. அதுக்கு ஏன் சலிச்சுக்கறேள்”
“ ம்ம்.. அதுவும் சரிதான்.. சரி நான் வறேன்..”
அருணா, அன்று சமையல் எல்லாம் முடித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் புதிதாகக் குடி வந்திருக்கும் அவர்கள் வீட்டில்
போய் பேச்சுக் கொடுக்கலாம் என்று கிளம்பினாள். என்ன இருந்தாலும் தன் கணவர் இப்படி மூஞ்சியில்
அடித்தாற்போல படக்கென்று திரும்பி உள்ளே வந்ததாலே, அந்தப் பெண் மனசு
என்ன பாடு பட்டிருக்கும் பாவம் என்று வேதனையாக இருந்தது. அன்று மார்கழி மாத, ஆண்டாள் உற்சவத்திற்காக கோவிலில் கொடுத்த அக்கார அடிசல் பிரசாதம் இருந்ததை, ஒரு தொண்ணையில் எடுத்துக் கொண்டு, அதன் மேல் மற்றொரு தொண்ணையால் மூடிக்கொண்டு கிளம்பினாள்..
அவர்கள் வீட்டு வாசலை நெருங்கும்போதே
வெளி நடையில் உட்கார்ந்து ’இந்து’ நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர்,
“வாங்க, வாங்கம்மா.. “ என்று இன்முகத்துடன் வரவேற்றார். உள்ளே எட்டிப் பார்த்து ’பிரமீளா’, என்று குரல் கொடுக்கவும்,
“இதோ வறேன் மாமா” என்ற மெல்லிய குரல் வந்த திசையை
ஆர்வமாகத் திரும்பிப் பார்த்தாள், அருணா. ஓரிரு முறை பள்ளிக்குச்
செல்லும் தன் மாட்டுப் பெண்ணை வழியனுப்ப வாசல்வரை அந்த அம்மா வரும்போது பார்த்திருக்கிறாள்.
அதைத் தவிர அதிகமாக வெளியே பார்த்ததில்லை.
“வாங்க.. வாங்கம்மா” என்று முகம் மலர வரவேற்றவர்
அதற்குமேல் அதிகம் பேசவில்லை. அருணாவும், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் தம் ஒரே மகள் பற்றி சொல்லிவிட்டு, அதற்குமேல் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்த அம்மாவிடம் என்ன
பேசுவது என்று தெரியாமல், தான் வந்த விசயத்தை மெல்ல
ஆரம்பிக்கலாம் என்று நினைத்து, கையில் கொண்டுவந்த பிரசாதத்தை
அவர் கையில் கொடுத்துவிட்டு, மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.
“நாங்க பரம்பரையா இதே ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அர்ச்சகரா
சேவகம் பண்ணிண்டிருக்கோம். அவர் கொஞ்சம் சகுனம் பார்ப்பவர். அதான் சில வேளைகளில் உங்க
மாட்டுப் பெண்ணைப் பார்த்துவிட்டுக் கிளம்ப முடியாமல், திரும்ப வீட்டிற்குள் வந்துடுவார். அந்தப் பெண் மனசு எவ்வளவு
சங்கடப்பட்டிருக்கும்னு நேக்குப் புரியறது. அவராண்டையும் அதைப்பத்தி சொல்லியிருக்கேன்.
ஆனாலும், அவர் தன்னையறியாமல் ஒவ்வொரு முறையும் அப்படியே நடந்துக்கறார். உங்க மாட்டுப் பொண்ணுகிட்ட
அதை பெரிசா எடுத்துக்க வேண்டாம்னு சொல்லுங்கோ. எல்லாம் பகவான் கிருபை. நாம என்ன செய்ய
முடியும். எந்தப் பொண்ணுதான் இந்தக் கோலத்தை விரும்பி ஏத்துப்போ.. என்னமோ மனசு சங்கடமா
இருந்துச்சு. இப்ப பாரத்தை இறக்கி வச்சாப்பல இருக்கு. நான் வரேன்.. எந்த உதவி வேணும்னாலும்
தயங்காம எங்காத்துக்கு வாங்கோ” என்று சொல்லிவிட்டு அதிகம்
வாய் திறந்து பேசாத அந்த அம்மாவிற்கு, தான் இவ்வளவு நேரம் பேசியது
ஏதாவது புரிந்ததா இல்லையா என்றே தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டே வந்துவிட்டாள்.
ஆனால் அன்று அவள் பேசிய விசயம் அவர்களுக்கு நன்றாகவேப் புரிந்திருந்தது என்பது அவர்களின்
நடவடிக்கையில் தெரிந்தது. அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை தன் கணவன் கிளம்பும் நேரத்திற்குப்
பார்க்க முடிவதில்லை.
“அருணா.. இங்க வாம்மா.. எதிர்த்தாத்துல யாரும் இல்லையா.. அவாளுக்கு
ஏதோ கொரியர் வந்திருக்கு. அவா நம்மளாண்ட கொடுக்கச் சொல்லியிருக்காளாம். உன்கிட்ட ஏதாவது சொல்லிட்டுப் போனாளா அவா...?”
“ஆமாண்ணா, அவா எல்லாரும் தில்லியில ஏதோ
விழாவாம். அதுக்குப் போயிருக்காண்ணா. கொரியர் வந்தா வாங்கி வைக்கச் சொல்லியிருக்கா.
இன்னும் ஒரு வாரம் ஆகுமாம் திரும்பி வர்றதுக்கு”
அன்று மாலை அலுவலகம் முடிந்து
வீட்டிற்கு வந்தபோது எதிர்த்த வீட்டின் கதவு திறந்திருந்ததைப் பார்த்து அவர்கள் ஊரிலிருந்து
வந்துவிட்டது தெரிந்தது.
“அருணா.. எதிர்த்தாத்துக்காராளுக்கு ஒரு கொரியர் வந்ததே. அவா
வந்துட்டா போலயிருக்கே. அதைக் கொடுத்திட்டியோ?”
“இல்லண்ணா மதியம்தான் வந்திருப்பாங்க போல. இனிமேதான் கொண்டுபோய்
கொடுக்கணும். “
“சரி, கொடு நானே கொடுத்துட்டு வறேன்
என்று வாங்கிக் கொண்டு சென்றார். சென்றவர் அரை மணி நேரமாக வரவில்லையே. அப்படி என்னதான்
பேசிக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லையே என்று யோசிக்கும் போதே, மளமளவென உள்ளே வந்தவர் தன் அருகில் வந்து, ஒன்றும் பேசாமல் தரதரவென கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, எதிர் வீடு நோக்கிச் செல்பவரின் செயல் எதுவுமே புரியாமல் பின்னாலேயே
சென்றாள். நேரே உள்ளே அழைத்துச் சென்றவர் அங்கு ஈசி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த
பெரியவரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு, தன்னையும் விழுந்து வணங்கச் சொன்னதன் காரணம் ஏதும் புரியாவிட்டாலும், பெரியவரை வணங்குவதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை என்றே எண்ணி
தானும் சற்றும் தாமதியாமல் விழுந்து வணங்கினாள். ஆனால் எவர் காலிலும் சட்டென விழத்
தயங்கும் தன் கணவனின் போக்குதான் அவளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவையனைத்தும்
அவளுக்கு அந்த விசயத்தை தன் கணவன் மூலமாக அறிந்து கொள்ளும் வரைதான்....... அவர் அங்கு
சென்றபோது நடந்ததைப் பற்றி சொன்ன விசயம் இதுதான்....
"வாங்க.. வாங்க. நானே உங்களை வந்து சந்திக்கணும்னு இருந்தேன்.
எங்க வீட்டுப் பெண்ணால உங்களுக்கு சில சங்கடம்னு சொன்னாங்க. இனி அப்படி நடக்காம பார்த்துக்கலாம்.
டெல்லியில என் மகனுக்கு ஒரு பாராட்டு விழா வச்சிருந்தாங்க. அதுக்காகப் போயிட்டு வந்தோம்.
அதான் கொரியரை உங்ககிட்ட கொடுக்கச் சொல்லியிருந்தேன். சிரமத்திற்கு மன்னிக்கணும். வந்ததிலிருந்து
ஒரே கால்வலி. அதான் வந்து வாங்க முடியல”
“பரவாயில்லைங்க. கால்ல என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“அதுங்களா, செயற்கைக் கால் பொருத்தியிருக்கேன்.
வயசாகுதில்லையா, டிராவல் பண்ணினா வலி அதிகமாயிடுது” என்று சொல்லி, காலைக் காண்பித்தார். ஆச்சரியமாகப்
பார்த்துக் கொண்டிருந்த ராமச்சந்திரனிடம் பெருமை பொங்க,
”1962ம் ஆண்டில் இந்தியாவிற்கும், சீனாவிற்குமான எல்லைப்
பிரச்சனையினால் நடந்த போரில், இந்தியப் படையை முன்னின்று
நடத்திச் செல்லும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த யுத்தத்தில் ஒரு கால்
போனதால் செயற்கைக் கால் பொருத்தியிருக்கேன்”
என்றார் சர்வ சாதாரணமாக.
அவர்மீது இருந்த மரியாதை அதிகமாக
இருக்கையின் விளிம்பிற்கு நகர்ந்து வந்த ராமச்சந்திரன், “மகனுக்கு ஏதோ பாராட்டுவிழா என்றீர்களே” என்று ஆர்வமாகக் கேட்டார்.
தன் மகனைப் பற்றிக் கேட்டவுடன், கண்களில் மின்னல் தீப்பொறியாய் பிரகாசிக்க, பெருமை பொங்க, ” சிங்கம் போல என் ஒரே மகன் வீரேந்திரன். நம் இந்திய இராணுவத்தின்
கமாண்டரா பணிபுரிந்து கொண்டிருந்தான். கார்கில் போரில் அவனுடைய பங்கும் இருந்தது. கார்கிலில்
முதன்முதலில் நம் நாட்டு தேசியக் கொடியை நட்டது வீரேந்திரன் தான்! அதற்குப் பிறகு பீகார்ல
நடந்த நக்சலைட் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு
தலைமை தாங்கிச் சென்றபோது, அங்கு நடந்த போரில் தன்னுடைய
இன்னுயிரை இழக்க வேண்டிவந்தது. அந்த இறுதி நேரத்திலேயும், தம் ஆயுளை முழுமையா நாட்டிற்கு அர்ப்பணிக்க முடியலையே, அதற்குள்ளாக இறப்பு வந்துவிட்டதேன்னு வேதனைப்பட்டானாம் என் சிங்கக்குட்டி.
தான் பெற்ற குழந்தையைக்கூட சரியாத் தூக்கி கொஞ்ச முடியலயேங்கற வேதனையைவிட நாட்டிற்குத்
தன்னுடைய சேவையை முழுமையா அர்ப்பணிக்க முடியலையேன்னு நொந்து போனதோட, தன் மகனையும் இராணுவப் பள்ளியில் சேர்க்கணும்னு சொல்லியிருக்கான்.
என் பேரன் பரத்தும், என் மகனுக்குக் கொஞ்சமும்
சளைத்தவன் இல்லை. அத்தனை சூட்டிப்பு. அத்தனை தேசபக்தி. அப்படியே அப்பாவைக் கொண்டு பிறந்திருந்தான்.
பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையில் இருக்கும்போது, எதிரிகளின் தாக்குதலால்,
பல உயிர்களைக் காக்கும்
பொருட்டு தம் இன்னுயிரைக் கொடுத்தவன். தன்னுடைய
குழந்தைக்கு இரண்டு வயசாக இருக்கும் போதுதான் அவன் கடைசியாப் பார்த்தது. தம்
மகனை இராணுவத்தின் ஒரு உயர் அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் பேரனுடைய
தீராத ஆசை. அதை நிறைவேத்த வேணும்னுதான் ஆண்டவன் என்னை இன்னும் வச்சிருக்கான் போல.
பேரனை விரைவில் டேராடூனில் உள்ள இராணுவப் பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து
கொண்டிருக்கிறோம்”
இதைச் சொல்லும்போது அந்தப்
பெரியவரின் முகத்தில் துளியும் அச்சமோ, வேதனையோ இல்லை. மாறாக தாய்நாட்டிற்காக, பிறந்த மண்ணிற்காகத் தங்கள் கடமையைச் செவ்வனே செய்கிறோம் என்ற
பெருமிதம்தான் தெரிந்தது.
ராமச்சந்திரனின் உள்ளத்தில்
சொல்லொணா பலவிதமான எண்ணங்கள் சூழ்ந்துகொண்டு இருக்கையில் உட்காரவும் முடியாமல் எழுந்தவர், செய்வதறியாமல் மனைவியை அழைத்துக்
கொண்டு வந்து அந்தப் பெரியவரின் கால்களில் விழுந்தபோது பாரதமாதாவின் கால்களில் விழுந்து
ஆசி பெற்றது போன்றதொரு உணர்வில் புளங்காகிதம் அடைய அவர் கைகளைப் பிடித்து தம் கண்களில்
ஒற்றிக் கொண்டபோது, ஏற்பட்ட பரவசம் சாட்சாத் அந்தப்
பெருமாளையேத் தீண்டிய இன்பம் பெற்றது போல உணர்ந்தார்..
நன்றி : வல்லமை
No comments:
Post a Comment