Wednesday, December 28, 2011

சிலம்பும், பெரிய புராணமும் - பகுதி - 3

பூசலார் நாயனார்

நீதி,நேர்மை போன்ற நற்குணங்கள் கொண்டபெருங்குடிமக்கள் வாழ்கின்ற தொண்டைநாட்டில்,திருநின்றவூர் என்றொரு கிராமம். அங்கு நம்பி ஆரூரர், “ மன்னிய சீர்மறை நாவல் நின்றவூர் பூசல்என்று போற்றிப் புகழ்ந்த மகான் பூசலார் என்பார் வாழ்ந்து வந்தார். ஆன்மார்த்த பூசையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சிவபெருமானுக்கு பெரும் ஆலயம் எழுப்ப ஆவல் மேலிட அதற்கான நிதி வசூல் செய்ய முற்பட்டு, அது நடவாமல் போக மனம் நொந்த பூசலார்,மறையோனுக்கு உள்ளத்திலேயே ஆலயம் எழுப்ப எண்ணி, நிதி வசூலும் பெற்று, கட்டிடம் எழுப்புவதற்குத் தேவையான சகல பொருள்களும் வாங்கி ,மனத்திலேயே, அடித்தளமும் அமைத்து,உயரமாக ஆலயமும் எழுப்பி விட்டார். அதேசமயம் பல்லவ மன்னன், காடவர்கோன், காஞ்சி மாநகரில், கைலாயநாதர், ஆலயம் கட்டி முடித்திருந்தார். குடமுழுக்கு செய்வதற்கான நல்ல நேரமும் குறித்தார். ஒரு நாள் சிவபெருமான் பல்லவ மன்னனின் கனவில் தோன்றி,

நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்று நீ டால யத்து நாளைநாம் புகுவோம்; நீஇங்(கு)
ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய்என்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண்டருளப் போந்தார்.

உறக்கம் தெளிந்த மன்னன் பேராச்சரியம் கொண்டு, பூசலார் நாயனாரின் ஆலயம் நாடிச் சென்றார். ஊரெல்லாம் விசாரித்தும் ஒருவரும் அக்கோயில் பற்றி அறிந்திலர். பூசலாரைத் தேடி அவர் இருக்கும் இடம் சென்றடைந்து அவரை வணங்கி அவர் ஆலயம் இருக்கும் இடம் குறித்து வினவினார். மன்னன் பணிந்து கேட்பதைக் கண்டு அஞ்சி , தனக்கு ஆலயம் எழுப்ப நிதி வசதி இல்லாதலால், சிவபெருமானின் பேரருளால், உள்ளத்திலேயே ஆலயம் அமைத்ததை எடுத்துரைக்க,ஆச்சரியம் கொண்ட பேரரசன், பூசலாரின் பக்தியைக் கண்டு பேரானந்தம் கொண்டு நெடுஞ்சான்கிடையாக அவர் தாமரை மலர்ப் பாதம் தொட்டு வணங்கினார்.

அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம் பெருமையிற் பலநாட் பேணிப்
பொன்புனை மன்று ளாடும் பொற்கழல் நீழல் புக்கார்.



இளங்கோவடிகள், இசைப்பாட்டு வகைகள், உரைப்பாட்டு மடை, நாட்டிய சாத்திரம், கனா நூல், களவு நூல், சிற்ப சாத்திரம், சோதிடம் போன்று பல்வேறு பகுதிகளை தீவிரமாகவும், மிகவும் நுணுக்கமாகவும், எடுத்தாண்டிருந்தாலும், பத்தினி தெயவ வரலாறு என்பதற்கு இக்காப்பியத்தில் ஒரு மேன்மையான இடம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கணவன் , பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பினால், கொலையுண்டபோது, கோபாவேசத்தில் மதுரையை தீக்கிரையாக்கியபோது....


கண்ணகிக்குக் கடவுள் மங்கலம் செய்தல்

மதுரை மூதூர் மாநகர் கேடு உற
கொதிஅழல் சீற்றம் கொங்கையின் விளைத்து,
நல்நாடு அணைந்து நளிர்சினை வேங்கை

பொன் அணி புதுநிழல் பொருந்திய நங்கையை
அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினி கோட்டத்து.

இமையவர் உறையும் இமையச் செல்வரைச்
சிமைய சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வத்து படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றுஇழை நன்கலம் முழுவதும் பூட்டிப்

பூப்பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து
கடவுள் மங்கலம் செய்க என ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறுஎன்.




பல்வகைப் பிறவியினும், தவம் செய்து பெற்றது மனிதப் பிறவி என்பர் பெரியர். அவ்வரியப் பிறவியை அறிந்து கொள்வதில் செலவிட்டு அறிய வேண்டியதை அறிவதே அறிவார்ந்த செயலன்றோ? ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு பாடிவைத்துச் சென்ற, வேடிக்கைப் போன்ற இந்த வினயப் பாடலைக் காணும் போது, இக்காலத்திற்கும் அது பொருந்துவதாகவே அமைந்திருப்பது, வியப்பாயினும், மானுட மனம் நிலையானதோ , காலத்திற்கேற்ற மாற்றம் அடிப்படை குணத்திற்கு பொருத்தமற்ற ஒன்றோ என்றும் எண்ணத் தோன்றுகிறது!

நந்தவ னத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

கொண்டு வந்தானொரு தோண்டி - யதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

என்ற பாடல் இன்றைய மனிதருக்கும் பொருந்துவதைப் பாருங்கள்!

ஒலிக்கும் கீதங்களே மக்களின் மனநிலையை பிரதிபலிக்கக் கூடிய ஒன்றல்லவா? அந்த வகையில், வேத ஓசை, வீணை, தேவர் துதி, பெண்களின் ஆடலிசை, முழவு இசை என இவையனைத்தும் ஒருங்கே ஒலிக்கும் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலையைக் கூறவும் வேண்டுமா?

சிலப்பதிகார காலத்தில் , மக்கள் புலம் பெயரத் தேவையில்லாத வகையில்,பொதிகை,இமயம் போன்று நாட்டில் அனைத்து வளங்களும் நிறைந்திருந்ததாம். அனைத்துத் துறை வல்லுநர்களும் அங்கு கூடியிருந்ததால், பழங்குடிகள் சுகமாக வாழ்ந்த புகார் நகருக்கு என்றும் அழிவென்பதே இல்லை என்று அறுதியிட்டுக் கூறுவதும் சிறப்பு.

நீர்நிலைகளின் பெருமைகளைக் கூறும் போது காவிரி நதியை அடியவர்களுக்கு ஒப்புமை கூறுவது குறிப்பிடத்தக்கது. புனிதமான நதிகளும், ஆறுகளும் நறுமணமுடைய மலர்களைக் கொண்டு இரு கரையிலும் உள்ள அனைத்து ஆலயங்களையும் அணைத்து வழிபடுதலால் அவைகள் அடியவர்களுக்குச் சமம் என்று எடுத்துக் கொண்டு வாழ்ந்த காலமாதலால் மக்களிடையே பிரிவினை பேதமற்று, ஆண்டவன் படைத்த நீர் அனைவருக்கும் பொது என்ற மனப்பான்மையுடன் இருந்ததால் அமைதி நிலவிற்று!

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பார்கள். மனுநீதி சோழர் காலத்தின் ஆட்சியாளரின் நேர்மையும், நீதியும் மக்களைக் காத்ததோடு ஆண்டவனையும் வரவழைத்தது.

தவறான தீர்ப்பு வழங்கிய மன்னனால், மதுரை மாநகரே தீக்கிரையானதும் அதனால் பல்லுயிர்களும் அழிந்ததுமே இதற்கான சான்று!

ஆண்டவனே ஆனாலும் நீதியின் முன் அனைவரும் சமம் என்று உணர்த்திய காலம் சேக்கிழார் பெருமான் வாழ்ந்த காலம். நம்பி ஆரூரர் வாழ்ந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மூலவோலையோடு, படியோலையும் இருந்ததாகவும் அறிய முடிகிறது.

பதிவிரதைகளின் பதிபக்தியை தெள்ளென விளக்கிய காரைக்கால் அம்மை மற்றும் கண்ணகியின் வரலாறுகள்.

ஆயினும் அந்த காலத்திலேயே, தன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கும் மனைவியை ஒரு கணவனால் ஏற்றுக் கொள்ள இயலாமல் போயிருக்கிறது, புனிதவதியார் நிலையைப் போன்று!

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்ற நிலையும் கண்ணகி வரலாற்றின் மூலமாக தெளிவாகிறது!

துறவறம் பூண்ட நிலையிலும் இளங்கோவடிகள் , தம் காப்பியத்தில் பெண்களின் அங்க வர்ணனைகளை அத்துனை ஆழமாக அனுபவித்து எழுதிய பாங்கு, அக்காலத்திய துறவு நிலையின் அளவு கோல் சற்று பரந்து பட்டுதான் இருந்திருக்கும் என்ற எண்ணமும் தோற்றுவிக்கிறது. சேக்கிழார் பெருமானின் வர்ணனைகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதற்கு பூம்பாவையின் எழிலைப் பற்றிய வர்ணனையே சான்று.

உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்! ஆண்டவன் திருமுன் வறியவன், எளியன்,செல்வந்தன், சாமான்யன், அரசன் என்றெல்லாம் பாகுபாடில்லாமல் அனைவரும் சமம் என்று தெளிவாகக் கடைபிடிக்கப்பட்ட வழமை கண்கூடு.

பதிபக்தியில் சிறந்து விளங்கிய பெண்டிரை தெய்வமாகத் தொழுத காலமாதலால்,பெய்யெனப் பெய்யும் மழையாக நாடு சிறப்பாக இருந்ததும் சத்தியம்.


முற்றும்.

சிலம்பும், பெரிய புராணமும் - பகுதி - 2


இறையாண்மையும், நீதி வழுவாமையும் இரண்டையும் உயிராய் மதிக்கும் உத்தம சோழ மன்னனாம் மனுநீதிச் சோழனின் வரலாறு எக்காலத்தும் மறக்கவொண்ணா காப்பியமன்றோ?அம்மட்டும் , ஐந்தறிவு சீவனான ஒரு கன்றைத் தவறுதலாகத் தேர்க்காலில் பலியிட்ட அரசிளங்குமரனை , நீதி கேட்டு வந்த தாய்ப்பசுவிற்கு நீதி வழங்கும் வண்ணம் தம் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னனின் நீதியும், தம் இறையாண்மையின் வல்லமைக்குக் கிடைத்த பெரும் பரிசாக , சிவபெருமான் நேரில் தோன்றி , இறந்துபோன தம் மகனையும்,கன்றையும் உயிர்ப்பித்துக் கொடுக்க வானோர்கள் பூமாரி பொழியும் பேரதிசயமும் நடந்தது.

தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா தாகி
முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின்பொற் கோயில் வாயிற்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினாற் புடைத்த தன்றே.

வளவ! நின் புதல்வ னாங்கோர் மணிநெடுந் தேர்மே லேறி
அளவிறேர்த் தானை சூழ வரசுலாந் தெருவிற் போங்கால்
இளையாவான் கன்று தேர்க்கா லிடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறு மித்தாய் வந்து விளைத்ததித் தன்மையென்றான்.

ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான்
தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்;
அருமந்த அரசாட்சி அரிதோ? மற் றெளிதோ? தான்

சேக்கிழார் பெருமானின் பார்வையில் ஒரு நல்ல ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய தன்மைகளைக் காண்போம்:

மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால்
ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ?”

இவ்வாறு சேக்கிழார் பெருமான் நேர்மை, நீதி ,நியாயம் , தர்மம் , இறையாண்மை அனைத்தும் சோழ மன்னர்கள் கடைபிடித்தொழுகியதை நயம்பட எடுத்துரைத்தார். இது போன்றதொரு காட்சியை சிலப்பதிகாரம் யாத்த இளங்கோவடிகள் எடுத்துரைத்த விதமும் காண்போம்.....

பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பினால், கோவலன் கள்வன் என்று முடிவெடுத்து கொலையுண்டபோது , அதை அறிந்த கற்புக்கரசி , சிலம்பின் நாயகி, கண்ணகி,

ஈர்வது ஓர் வினை காண்; ஆ! இது! என உரையாரோ?
கண்பொழி புனல் சோரும் கடு வினையுடையேன்முன்
புண்பொழி குருதியிராய்ப் பொடி ஆடிக்கிடப்பதோ?
மன்பதை பழிதூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
உண்பது ஓர் வினை காண்; ஆ! இதுஎன உரையாரோ?

என்று பதைபதைத்து, கோபாவேசமாக மன்னன் முன் நின்று நீதி கேட்கிறாள் தலைவிரி கோலமாக!

அரசன் வினாவும் கண்ணகி விடையும்

நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்!
யாரையோ நீ? மடக் கொடியோய்! என
தேரா மன்னா! செப்புவது உடையேன்

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்;

பெரும்பெயர்ப் புகார் என் பதியே; அவ்ஊர்
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெரும்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப,
சூழ்கழல் மன்னா! நின்நகர்ப் புகுந்து, இங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என்பெயரே என -

மன்னன் முன் கோபாவேசமாக நீதி கேட்கிறாள்....நீதி தவறிய மன்னனின் கதி என்ன?

தாழ்ந்த குடையான்: தளர்ந்த செங்கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன்! யானே கள்வன்!

மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன்
கோப்பெரும் தேவி குலைந்தனள் நடுங்கி
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணைஅடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி

அம்மட்டும் ஒரு கன்றிற்காக தம் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டிய மனு அவதரித்த சோழ வள நாட்டில் பிறந்து, ஊழ்வினை உறுத்து வந்து பாண்டிய நாட்டிற்குத் துரத்தியடிக்க, அங்கோ மன்னனின் அநீதியால் கணவனை இழந்த கைம்பெண்ணாக கோபாவேசமாக மதுரையம்பதியைத் தீக்கிரையாக்கிவிட்டு, சேர நாட்டில் வந்து தெய்வமாகிப் போனாள் இளங்கோவடிகளின் சிலம்பின் நாயகி கண்ணகி!


அழகிய கயல்விழி மங்கையர் வாழும் திருமுனைப்பாடி எனும் நாட்டில் ஆணையின் வழி அவதரித்த ஆலால சுந்தரர் ,உலக வழியில் செல்லாது,அருள் வழியில் சென்று நமக்கு வழிகாட்டியாக விளங்கச் செய்யும் வண்ணம் இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்ட விதத்தைக் காண்போம்! மணமேடையில் மணப்பெண்ணின் வரவை நோக்கி ஆவலாய் காத்திருக்கும் வேளைதனில்,மணப்பெண்ணவளும் பரியிலிருந்து இறங்கி மணமேடை நோக்கி வர, மங்கல நாதம் முழங்க, திடீரென அங்கு தோன்றிய சிவபெருமான்

பிஞ்ஞகனு நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையு நின்னிடையு நின்றவிசை வால்யான்
முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயறிஎன்றான்.

அதற்கு ஆதாரமாக ஓர் ஓலையைக் காட்ட அதையும் கிழித்த சுந்தரருக்கு உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனின் , மனத்தினால் உணர்தற்கெட்டா மாயை என்றாயிற்று .

ஆட்சியி லாவ ண்ததி லன்றிமற் றயலார் தங்கள்
காட்சியின் மூன்றி லொன்று காட்டுவாயென்ன, ‘முன்னே
மூட்சியிற் கிழித்த வோலை படியோலை; மூல வோலை
மாட்சியிற் காட்ட வைத்தேனென்றனன் மாயை வல்லான்.

மூலவோலையில் அப்படி என்னதான் வாசகம் இருந்தது? அந்நாளில் நீதிமன்றத்தில் இது போன்று ஆவணங்களை வாசிக்கும் நீதிமன்ற சேவகனான காரணத்தானும் அவ்வோலையை உரியவாறு தொழுது வாங்கி, உறையை நீக்கி, சுருளோலையை விரித்து, வாசிக்கலானான்...

அருமறை நாவ லாதி சைவனா ரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக் கியானு மென்பால்
வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை
இருமையா லெழுதி நேர்ந்தே நிதற்கிலை யென்னெ ழுத்து “.

இதுவே அவ்வோலையில் இருந்த வாசகம். நீதிமன்றத்தால் அவ்வோலையில் இருந்த கையெழுத்துகள் பரிசோதனை செய்யப்பட்டு சரியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டு, நீதி முறைப்படி இனி செய்ய வேண்டியது வேறு ஒன்றுமில்லை என்பதால் நீதிபதிகள் தீர்ப்பையும் வழங்கினர்.

நான்மறை முனிவ னார்க்கு நம்பியா ரூரர் தோற்றீ
பான்மையி னேவல் செய்தல் கடனென்று பண்பின் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி விதிமுறை யிதுவே யாகில்
யானிதற் கிசையே னென்ன விசையுமோவென்று நின்றார்.

வென்று நின்றவரின் பின்னால் சென்ற ஆலால சுந்தரர், திருநாவலூர் ஆலயத்தினுள் சென்று ஆங்கு மறைந்த மறையோன் தன்னை ஆட்கொள்ள நடத்திய திருவிளையாடலை எண்ணி பேரானந்தம் கொண்டார்.

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டனென்னு நாமம்
பெற்றனை; நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகு, மாதலான் மண்மே னம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயான்.

அந்த நொடியிலிருந்து நம்பி ஆரூரர், ஆண்டவனை ,

பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணை நல்லூரருட் டுரையுள்
அத்தாவுனைக் காளாயினி அல்லேனென லாமே.

என்று தேவாரப் பதிகம் பாட ஆரம்பித்தார்.


தலையில் நடந்து கையிலை அடைந்து ஐயனை வழிபட்டதோடு,அந்த சிவபெருமானே அம்மையே என்று அழைத்த ஒரே சீவன் என்ற மாபெரும் பேறு பெற்ற காரைக்கால் அம்மையாரும்,கண்ணகியைப் போன்று வணிகர் குலத்தில் உதித்த பேதைதான். புனிதவதி என்ற பெயரில் காரைக்கால் எனும் நகரில் 4 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர், புனிதமான ஒரு மாங்கனி அவர்வாழ்க்கையையே மாற்றியமைத்தது. நம்பி ஆரூரர் தம்முடைய திருத்தொண்டத் தொகையில், “பெரு மிழலை குறும்பனார்க்கும் பேயார்க்கும் அடியேன்என்றே அம்மையாரைக் குறிப்பிடுகிறார்.

சேக்கிழார் பெருமான் பண்டைக்காலத்தில் பத்தினிகள் வாழ்ந்த வாழ்க்கை முறைமைகளையும், பதி பக்தி கொண்ட தமிழ் மகளிரின் வரலாறுகளையும் வெளிப்படுத்தும் விதமாக, காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை 65 பாடல்களில் அழகுற விளக்கிய பாங்கு குறிப்பிடத்தக்கது. பொங்கிய பேரழகுமிகு புனிதவதியார் என்று போற்றப்பட்ட அம்மையார், பதி பக்தியில் சிறந்து விளங்கிய காரணத்தால், தம் பதி பரமதத்தன் விருப்பத்துடன் வேண்டிய மாங்கனியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற்றுக் கொடுத்தார். அதனைக் கண்ட கணவனோ, மனைவியை தம் குலதெய்வம் எனக் கருதி இனியும் அவருடன் வாழும் தகுதி சாமான்யனான தனக்கு இல்லை என ஊரை விட்டே போய் மறுமணமும் செய்து கொண்டு , அதனால் பிறந்த குழந்தைக்கும் புனிதவதி என்று நாமகரணம் சூட்டி,மனைவி மகளுடன் வந்து காலில் விழுந்து வணங்க அந்த நொடியே,

ஈங்கிவன் குறித்த கொள்கை இது: இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடி(வு) அடியேனுக்குப்
பாங்குற வேண்டும்என்று பரமர்தாள் பரவி நின்றார்.

அம்மையின் வேண்டுதலுக்கு செவி மடுத்த ஐயனின் அருளினாலே, “மெய்யில் ஊனடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பே யாக, வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய் வடிவம் ஆனார்.

அம்மையே என்று விளித்த ஐயனை, ‘அப்பாஎன்று பங்கயர் செம்பொற்பாதம் பணிந்து வீழ,வேண்டும் வரம் கேட்க, அம்மையாரும்,

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்.
பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான்
மகிழ்ந்து பாடி, அறவா! நீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்கஎன்றார்.


இளங்கோவடிகள், தம் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பதிபக்தியைக் காட்டும் முகமாக, ஈராறு அகவை நிரம்பிய வணிகர் குலப்பேதையை மணந்து, மூன்றாண்டுகள் அவளுடன் மண வாழ்ககையும் மேற்கொண்டு, கனிகையர்குல மாதான மாதவியின்பால் மையல் கொண்டு,குன்றனைய பெருஞ்செல்வம் அனைத்தும் இழந்து, திரும்ப கண்ணகியை நாடி வந்து,

கோவலனும், பாடுஅமை சேக்கையுள் புக்குத் தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, “யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்
குலம் தரு வான் பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுந் தரும் எனக்கு என்ன...

பதிபக்தியில் சிறந்த கண்ணகியோ மறுமொழியாக,

நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்பு உள கொண்ம் எனச்...

சொல்லி கணவனின் குறிப்பறிந்து சற்றும் அவன் மனம் கோணாமல் நடந்த பாங்கு குறிப்பிடத்தக்கதாம்.


திருத்தொண்டர் புராணத்தின் மற்றொரு மணி மகுடம் ,சேக்கிழார் பெருமானின் , அழகு தமிழ அமிழ்தின் வர்ணனை மொழிகள்.

மயிலை வாழ் சிவனேசன் என்னும் வணிகத் தொழில் புரியும் சிவனடியார், சிவபெருமானின் பொற்பாதங்கள் மட்டுமே நிலையானதென்ற ஆணித்தரமான எண்ணம் கொண்ட பக்தர். சிவனடியார்கள் மீதும் அளவிலா அன்பு கொண்டவர். தம் செல்வ மகளான பூம்பாவை எனும் கன்னியை, அபிராமி அன்னையிடமே ஞானப்பால் பருகி, ஆண்டவன் திருநாமம் ஒன்றையே சிந்தையில் கொண்டு வாழ்ந்து வரும் சிவனடியாராகிய திருஞானசம்பந்தர் வசம் ஒப்படைக்க வேண்டி சீரும், சிறப்புமாக வளர்த்து வருங்கால், ஓர் நாள் தந்தையின் வழிபாட்டிற்காக மலர் கொய்யும் பொருட்டு, நந்தவனம் சென்ற போழ்து ஆங்கே ஓர் நாகம் தீண்டி, இன்னுயிர் இழக்க,இறந்த உடலை எரியூட்டி சாமபலையும், எலும்புகளையும் ஒரு சட்டியில் இட்டு அது சம்பந்தரின் சொத்து, என்று அவரைச் சந்திக்க நேருகிறதோ அன்று அவர் வசம் ஒப்படைப்பதே தம் கடமை என அதற்கு ஆடை ஆபரணங்கள் அணிவித்து , ஒளியூட்டி, வழிபாடும் செய்து வந்தார். ஒருநாள் ஞானசம்பந்தப்பெருமான் திருவொற்றியூர் எழுந்தருளியுள்ளது அறிந்து, அவரைக் காண ஓடோடிச் சென்று அவர் திருப்பாதம் தொட்டு வணங்கி மயிலை வரும்படி அழைக்க, அவரும் கபாலீசுவரரை தரிசிக்கும் பொருட்டு உடன்வர, அங்கு கபாலீசுவரரை வணங்கி, பூம்பாவையின் புனித சாம்பல் இருந்த கலயத்தைக் கொணரும்படி பணித்தார். ஆலயத்தில் வெளியில் ஆண்டவரின் திருமுன் நின்று,

மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
உண்மை யாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.

அவ்வண்ணம் ஆண்டவர் திருமுன் சில பாடல்கள் பாடிப் பரவவும், குடம் உடைந்து, தாமரை மொட்டவிழ்ந்தது போன்று அழகுற விரிந்தெழுந்த பாவையவளின் அழகின் வர்ணனையைக் காண்போம்;

கன்னிதன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க கெல்லாம் மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா மரையினிற் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற குழல்போல் இருண்டு தோன்ற.

மண்ணிய மணியின் செய்ய வளரொளி மேனி யாள்தன்
கண்ணினை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய கயலிரண் டொத்து லாவ

இங்கனம் 17 பாடல்களில் அம்மங்கையின் எழிலை வர்ணித்த பாங்கு ,கவிநயம் அனைத்தும் செந்தமிழின் எழிலைச் சுவைபட சுட்டியதற்கு ஓர் காட்டாம்.


அரசிளங்குமரனான இளங்கோ, துறவறம் பூண்டு, இளங்கோவடிகள் ஆன பின்பு, தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தின் நாயகியின் அழகை வர்ணிக்கும் அழகைக் காண்போம்:

கண்ணகியின் நெற்றி,புருவம்,இடை, கண் இவைகளைப் புகழ்தல்

குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
பெரியோன் தருக திருநுதல் ஆக, என;
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழ்ங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவு இலாளன் ஒருபெரும் கருப்புவில்
இரு கரும்புருவம் ஆக ஈக்க;
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்

தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்க, அதன் இடைநினக்கு இடைஎன,
அறுமுக ஒருவன் ஓர்பெறு முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே

அம்சுடர் நெடுவேல் ஒன்று நின்முகத்துச்
செம்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது;

கண்ணகியின் சாயலும் நடையும் மொழியும்

மாஇரும் பீலி மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம் நல்நுதால்! மெல் நடைக்கு அழிந்து

நல்நீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மடநடைமாது! நின் மலர்க்கையின் நீங்காது

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின ;

கோவலனின் ஐம்புலன்களுக்கும் இன்பம் தந்ததைப் பாராட்டல்

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!

பெரும்குடி வாணிகன் பெரு மடமகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இரும் கூந்தல் தையால்! நின்னை என்று

உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழிநாள்


தொடரும்

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...