Friday, February 18, 2011

காவிரிக் கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 5.


காவிரிக் கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 5.

நாம் அனைவரும் பெரும்பாலும் மாற்றத்தை நேசிக்கக் கூடியவர்களாகவே இருக்கிறோம். நம் உலகம் மிக அமைதியானதாகவும் அன்பு நிறைந்ததாகவும், பொறுமை, பெருந்தன்மை மற்றும் மன்னீக்கும் பக்குவம் இவையனைத்தும் கொண்டதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம் கண்ணில் படுகிற சிறிய தவறுகளைக்கூட பூதக் கண்ணடி கொண்டு பார்த்து, வெறுப்பை உமிழ்கிறோம். நியாயமே இல்லாமல், அவ்ர்கள் மாற வேண்டும் என்று முடிவு செய்கிறோம்.நம்மிடம் இல்லாத பொறுமை, சுய விருப்பு, அல்லது பெருந்தன்மை இன்மை ஆகியவைகளை உணராமலேயே, வருத்தம் என்கிற மன நிலையில் நாமே சென்று விழுகின்றோம். மற்றவர்களை ஆள் காட்டி விரல் நீட்டிகுறை சொல்லும் போது, மற்ற மூன்று விரல்கள் நம் இதயத்தை நோக்கி குறி பார்ப்பதைக் காணத் தவறி விடுகிறோம்.

“ Be the change we want to see", என்ற மகாத்மா காந்தியின் சத்திய நெறியை கடைப்பிடிப்பவராக இருந்தால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் சாத்தியம் தென்படும். மிக அமைதியான உலகம் நமக்கு வேண்டுமானால், முதலில் நாம் அமைதியாக இருக்கப் பழக வேண்டும். நியாயமான உலகம் நமக்கு வேண்டுமானால், நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இது போன்று அடிப்படை தர்மங்கள் கடைப்பிடித்தோமானால், நம் பயணம், அது வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும் சரி திருக்கூட்டப் பயணமாக இருந்தாலும் சரி மன நிறைவைத் தரக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த நிகழ்ச்சிகள் பற்றிய உரையில், திருப்பெருந்துறை என்பெருமான் ஆத்மநாதரின் திவ்ய தரிசனத்தின் மகிமையை போற்றிவிட்டு, அடுத்து நாங்கள் செல்லப் போகும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் பற்றி ஒரு சில விளக்கங்களும், அங்கு நாங்கள் சென்றடையப் போகும் பின் இரவு நேரத்தையும், அங்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சத்திரம் குறித்தும், அடுத்த நாள் நிகழ்வுகள் குறித்த முன்னுரையும் இப்படி அனைத்தையும் சொல்லிவிட்டு, இறுதியாக, இன்னும் 30 நிமிட பயணத்தில் வரக்கூடிய ஒரு திருமண மண்டபத்தில் அடியார்களுக்கு, அமுது படைக்க ஓர் அன்பர் காத்திருக்கிறார். அங்கு மகேஸ்வர பூசை நடைபெறும் என்று இறுதியாக அறிவித்தார். அப்பாடி, ஒரு வழியாக நான் எப்படிக் கேட்பது என்று தயங்கிக் கொண்டேயிருந்த விசயத்திற்கு பதில் கிடைத்தது.

மகேஸ்வர பூசை என்பது , அடியவர்களுக்கு அமுது படைப்பது. அழகாக இலையில் உணவுகளைப் பறிமாரி, ஒவ்வொரு இலையின் முன்பும் ஒரு சிறு கற்பூரம் வைத்து அடியவர்களை அந்த இலையின் முன்பு அமரச் செய்து, மகேஸ்வர பூசை செய்யும் குடும்பத்தினர் நடுவில் நின்று, கற்பூர தீபாரதையுடன், வணங்கி அமுது படைப்பார்கள். கண் கொள்ளாக் காட்சியாக இது இருக்கும். குழந்தைகள் கூட வழிபாடு முடியும் வரை இலையின் முன்பு பொறுமையாக அமர்ந்து காத்திருப்பார்கள். திவ்யமாக அறுசுவை உணவு முடிந்து 4 மணியளவில் கிளம்பினோம். பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் உண்ட களைப்பு தீர அருமையான உறக்கம். பிறகு அந்தி மயங்கும் வேளை...........சத் சங்கம்..........அவரவர் ஐயங்களைத் தெளிவு பட விவாத்தித்தோம்.........பல தகவல்கள்,கோவில்களின் வரலாறு, சிறு தெய்வவழிபாடு குறித்தசுவையான தகவல்கள், இப்படி எத்தையோ விசயங்கள் செவிக்குணவானது. திரும்ப இரவு நெருங்க ஆரம்பிக்க, பல மணி நேர பேருந்துப் பயணம் உடல் அலுப்பைத்தர, கட்டையை சாய்க்க அனைவரும் ஏங்குவது புரிந்தது............

ஒரு வழியாக ராமேஸ்வரம் எல்லையை வந்து சேர்ந்து விட்டோம். பேருந்தை, ஊரின் எல்லையிலேயே நிறுத்தி விட்டார்கள். ஊருக்குள் பெரிய தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. காரணம், நடமாடும் மக்கள் கூட்டத்தில் இது போன்ற பெரிய வாகனங்கள் சிரமமேற்படுத்தும் என்பதால்தான். அங்கிருந்து அரசாங்க பேருந்து மட்டும் அனுமதிக்கப் படுகிறது. என்ன கொஞ்சம் புளி மூட்டையாக அடைத்துக் கூட்டி வந்தார்கள்.......அதுவும் ஒரு அனுபவம் தான்.......

ஸ்ரீராமநாதசுவாமி கோவில், தீவின் கிழக்குப் புறம், கடல் எல்லைக்கு மிக சமீபத்தில் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த்த் தீவு ஒரு அழகிய ரயில் பாலம் மூலம் மண்டபத்தின் பிரதான பகுதியை இணைக்கிறது. ஆதிகாலத்தில் இக்க் கோவில், கூரை வேய்ந்த ஒரு குடிலாகவே இருந்துள்ளது. ராமநாதபுரப் பகுதியை பல தரப்பட்ட மன்னர்கள், பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி புரிந்து உள்ளனர். 15 ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மனனர்களும், பிற்காலங்களில் 17 ஆம் நூற்றாண்டுகளில், விஜய நகர சாம்ராஜ்ய நாயக்கர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.அதற்குப் பிறகு சேதுபதிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் தான் வரைகலை மற்றும் கட்டிடக்கலைகளுக்கு தாராளமாக செலவு செய்து ராமேஸ்வரத்தை பளபளக்கச் செய்துள்ளனர்.அதில் குறிப்பிடத்தக்கவர்கள், உதயன் சேதுபதி,திருமலை சேதுபதி, ரகுநாத சேதுபதி முத்துராமலிங்க சேதுபதி போன்றவர்கள். இவர்களின் சிலை வடிவங்கள்
கோவிலிக்குள் நிறுவப்பட்டுள்ளன.

நாங்கள் கோவிலுக்கு மிக அருகில் உள்ள சத்திரத்தில் தங்குவதாக ஏற்பாடு. இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தோம். நல்ல பசி நேரம் அனைவருக்கும். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எளிமையாக வெண் பொங்கலும், இட்லியும் சட்னி, சாம்பாரும் அனைத்தும் சுடச்சுட தயாராக இருந்தது. மொத்தம் நாங்கள் 80 பேர் இருந்தோம், உணவு பறிமாரும் நபரோ ஒரே ஒருவர்தான். எல்லோரும், உடல் அசதியின் உச்சத்தில். அவரவர்களும் சாப்பிட தயாரானோமேத் தவிர பறிமார ஒருவரும் முன்வராத சூழலில், ஒரு பள்ளி ஆசிரியை சூழலை உணர்ந்தவராக தான் முதலில் வந்து பறிமார ஆரம்பிக்கவும், அதற்குப் பிறகு மற்றுமிரண்டு இளைஞர்கள் உணவு விநியோகம் செய்ய முன்வந்தனர். ஒரு
வழியாக உண்டு முடித்தாகி விட்டது.

உணவு உண்பதற்கு முன்பே படுக்கை போட அனைவரும் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் படுக்க ஏற்பாடு. பல முறை ஏற்கனவே திருக்கூட்டத்துடன் பயணம் செய்தவர்கள், சூழலை நன்கு உணர்ந்தவராக இருந்தகாரணத்தினால், சாமர்த்தியமாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் இடம் பிடிக்கும் வேட்டையில் இறங்கி விட்டனர். பக்கத்திலேயே இரண்டு தங்கும் விடுதிகள் இருந்தன. சரி போய் தங்கிக் கொள்ளலாம் என்றால், அதற்கு அனுமதி கிடையாது என்றார்கள். ஆம் இது போன்று திருக் கூட்ட பயணத்தின் நோக்கமே அதுதானே. மனப்பக்குவம் அடையும் மார்கமும் இதுதானே?

ஆம், இந்த திருக்கூட்ட பயணத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள், பங்களா வாசிகள், குளிர்சாதன வசதியுடன், வேலைக்காரர்கள் வேலை செய்ய, ஆனந்தமாக வாழ்பவர்கள். ஆனாலும், யாத்திரை வருபவர்கள் தனிப்பட்ட முறையில் தங்குவதற்கு அனுமதியில்லை. இருக்கும் இடத்தில், அதாவது ஒருவர் கிடக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க என்ற ஆழ்வார்களின் நிலை போன்று இராது, அதைவிட சற்றே தேவலாம் போல அனைவரும் கிடக்க இடம் உண்டு. ஆண்களுக்கு ஒரு குளியல் அறை, பெண்களுக்கு ஒரு குளியல் அறை. காலை 4 மணிக்குத் தயாராகிவிட வேண்டும் என்று அறிவித்து விட்டு தலைவர் ஒரு மூலையாக படுத்து விட்டார்.

மணி இரவு 11.30. காலை 4 மணிக்குள் சுமாராக, 45 பெண்கள் அந்த ஒரே குளியல் அறையில் குளித்து விட்டு வர வேண்டும். இதை நினைத்த்வுடன், தூங்கும் எண்ணமே போய்விட்டது. கடலில் சென்று குளிப்பவர்கள் செல்லலாம். ஆனால் எப்படியிருந்தாலும், 4 மணிக்கு அனைவரும் தயாராகி விட வேண்டும். கடலுக்குச் சென்று குளிப்பது என்று முடிவு செய்த தாய்மார்கள், கவலையே இல்லாது, ஆனந்தமாக அடித்துப் பிடித்து இடம்பிடித்து, சயனம் கொண்டு விட்டார்கள். என்னவரும் தன் அண்ணன் அருகில் போய் ஒரு ஓரமாக பள்ளி கொண்டுவிட்டார். அனைவரும் எப்படியோ படுத்து விட்டனர். நானும் இன்னும் இருவரும், திருதிருவென விழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தோம். சரி இனி படுத்தால் நேரம் போவது தெரியாமல் தூங்கி விடுவோம் என முடிவு செய்து, குளியல் அறை காலியாக இருக்கும் போதே குளித்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து ஒருவாறு சென்று குளித்து விட்டு வந்து, பிறகு சிறுது நேரம்
ஓய்வெடுத்தோம்.

கடலுக்குக் குளிக்கப் போகலாம் என்று முடிவெடுத்தவர்கள் 3 மணியளவில் எழுந்து அவசர அவசரமாக கடல் நோக்கிச் சென்றவர்கள், சென்ற வேகத்திலேயே பாதி பேர் திரும்பி வந்துவிட்டனர். எப்போதும் மிக சாந்தமாக ஓடிக் கொண்டிருக்கின்ற கடல் அன்னை அன்று ஆக்ரோஷமாக ஆர்பரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து பயத்தில் குளிக்காமல் திரும்பி வந்துவிட்டனர். இங்கு வந்தால் கோவிலுக்கு செல்ல நேரம் ஆகிவிட்ட படியால், குளியல் அறைக்கு முட்டி மோதி குளிக்க வேண்டிய கட்டாயம். நல்ல வேளை நாங்கள் முன்பே குளித்து விட்டது கவலையைப் போக்கியது. இதற்குள் அவரவர்கள், தனக்கு வேண்டியவர்களையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது பார்க்கவேவேடிக்கையாக இருந்தது.............அந்த ஒரு நாள் ஒரு சிறு வசதிக் குறைவைக் கூட தாங்கிக் கொள்ள இயலவில்லையே நம்மால், காலம் முழுவதும் தங்க இடம் இல்லாமல் தெரு ஓரத்திலும், பிளாட்பாரத்திலும் தங்கிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களே அவர்களும் நம்மைப் போல ரத்தமும், சதையும் உள்ள மனிதர்கள் தானே!. ஆண்டவன் எவ்வளவு கருணை உள்ளவன் நம்மை இவ்வளவு சொகுசாக நிழலில் வாழ வைத்தானே, எத்துனை நன்றி சொல்ல வேண்டும் அந்த பரமாத்வாவிற்கு. வெயிலில் இருந்தால் தானே நிழலின் சுகம் தெரிகிறது?

காலையில் சொன்ன படி அனைவரும் 4.30 மணிக்கெல்லாம் கோவிலில் ஆஜராகிவிட்டோம். சிறப்பு தரிசன சீட்டு பெற்றுக் கொண்டு அதற்கே வரிசையில் 1.30 மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. ஸ்படிக லிங்க பூசை திவ்யமாக பார்க்க முடிந்தது. மணி தரிசனம் என்று அழைக்கப்படுகிற இந்த பூசை அன்றாடம் காலை வேளைகளில் மட்டும் நடக்கும். பூசை முடிந்து கோவில் பிரகாரம் சுற்றி வந்தோம். பணிரண்டு சோதிலிங்கங்களில் ஒன்று இங்கிருக்கின்றது.

தென் இந்தியாவின் மிகச் சிறந்த கட்டிடக் கலையின் வடிவமான , இந்தியாவிலேயே மிகப் பெரிய கோவில் பிரகாரம் கொண்ட கோவில் இது. 22 வித்தியாசமான சுவையுடன் கூடிய நீரை உடையக் கிணறு இங்கு பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவிலின் பிரதான அம்சமே, 1219 மீட்டர் தூண்கள் கொண்ட பிரகாரம், அழகாக செதுக்கப்பட்ட 3.6 மீட்டர் உயரமுள்ள கிரானைட் தூண்கள் ஆகும்.
புராண சாத்திரங்களின்படி, ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் இலக்குவணுடன், முனிவரின் உபதேசப்படி, தங்களுடைய பிரம்மஹத்தி தோசம் தீர்வதற்காக சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம்.

சேதுக்கரை என்பது ராமேஸ்வரத்திற்கு 22 கி.மீ. முன்பாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அங்கு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து 7 மணியளவில் கிளம்பினோம். அடுத்து உத்திரகோச மங்கை. அங்கு திருவாசக முற்றோதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்த தொடரில் அந்த சுவையான நிகழ்வைப் பற்றிக் கூறுகிறேன்.

தொடரும்.



4 comments:

  1. அருமையான பகிர்வு - பயண குறிப்பு.

    ReplyDelete
  2. உங்க கூடவே பயணம் வந்து கொண்டிருக்கிறேன்....

    ReplyDelete
  3. நன்றி மனோ, வாங்க போகலாம்.

    ReplyDelete