Sunday, January 22, 2012

இந்தியத் திருநாட்டின் சமுதாய மறுமலர்ச்சியில் பெண்கள் - பகுதி - 10



முத்துலட்சுமி ரெட்டி (1886 - 1968)


டாக்டர் முத்துலட்சுமி 1886 ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை , ஒரு இரு பாலர் பள்ளியிலும், பள்ளி இறுதித் தேர்வை தன் தந்தையின் கற்பித்தலின் மூலம் கற்றுத் தேர்ந்தார். மிக வைதீகமான குடும்பத்தில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, தங்கள் சமூக வழமைக்கு எதிராக புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல் பெண் மாணவியாக உள்ளே நுழைந்த பெருமையும் இவருக்கு உண்டு. 1907 ஆம் ஆண்டில் முதல் மற்றும் ஒரே மருத்துவ மாணவி இவரே! அரசாங்க மருத்துவ மனையின் முதல் பெண் மருத்துவரும் இவர்தான். அது மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர், 1937 இல் சென்னை கார்ப்பரேஷனின் முதல் பெண் துணை மேயர் என்று இப்படி பல முதல் இடங்களைப் பிடித்தவர்.


அக்காலத்திய ஒரே பெண் மருத்துவராக இருந்த காரணத்தினாலேயே இவருடைய சேவையின் தேவையும் மிக அதிக அளிவிலேயே இருந்தது. டாக்டர் சுரேந்திர ரெட்டி என்பவரை மணந்து , இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயானார். மகாத்மா காந்தியடிகள் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் ஆகியோரின்பால் ஈர்க்கப்பட்ட காரணத்தினால், வாழ்க்கையின் மற்றொரு கோணத்தை ஊடுறுவதன் மூலம், தன்னுடைய முழு நேரம் மற்றும் சக்தியையும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட முடிவு செய்தார். பொது வாழ்விற்கு பெண்கள் முன் வருவது என்பது மிக அரிதாக இருந்த காலம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். இடைவிடாத மருத்துவப் பணி மற்றும் குடும்பப் பொறுப்புகளின் இடையிலும் அவர் நலிந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொண்டாற்ற நேரம் ஒதுக்கினார். இங்கிலாந்தில் மேற்படிப்பிற்காகச் சென்று திரும்பியவுடன்,1926ல் பாரிஸ் சர்வதேச பெண்கள் காங்கிரசுக்கு முக்கிய விருந்தாளியாக அழைக்கப்ப்பட்டார். தன்னுடைய மருத்துவப் பணியையும் விட்டு, சென்னை சட்டமன்ற பேரவை உறுப்பினரானார்.முழுமனதாக தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முத்துலட்சுமி 1917லிருந்து இந்தியப் பெண்கள் கூட்டமைப்பில் இணைந்திருந்தார். அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தினால் ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடைகள் மற்றும் கல்வி கிடைக்க வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்தார். 1930ல் அவ்வை இல்லம் என்ற பெயரில் இலவச தங்கும் விடுதியும் ஆரம்பித்தார். இன்றளவிலும் அந்நிலையம் பல ஆதரவற்ற பெண்களுக்கு கல்வியும், தொழிற்பயிற்சியும் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சமுதாய முன்னேற்றத்திற்கான அவருடைய படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘சட்டமன்ற உறுப்பினராக என் அனுபவங்கள்’ என்ற அவருடைய நூல் சட்டமன்றத்தின் அவருடைய சேவைகள் அனைத்தையும் தெளிவாக பதிவிட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் மகளிர் பாதுகாப்பு, கைக்குழந்தைகளுக்கான சத்தான உணவுப் பழக்கம், சிசு மரணத்திற்கான காரணங்கள், இந்தியப் பெண்களின் வாக்குரிமை, குழந்தைகள் பாதுகாப்பு நலம், பால்ய விவாகத்தின் கேடுகள், புற்று நோயின் தன்மைகளும், அதைத் தடுக்கும் முறைமைகள் குறித்தும் , ஏன் இந்து கோவில்களில் தேவதாசி முறைகளை ஒழிக்க வேண்டும்? , மகளிர் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் என்று இப்படி பல நூல்கள் இயற்றியுள்ளார். தம் சுயசரிதையை ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். இந்திய மாதர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘ஸ்திரிதர்மா’ என்ற இதழின் ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களின் பொறுப்பாசிரியராக 1931 முதல் 1940 வரை பதவி வகித்தார்.


சென்னை, திருவல்லிக்கேணியில் இயங்கும் தாய்- சேய் நல விடுதியான அன்னை கஸ்தூரிபா மருத்துவமனை, ஒரு சிறப்பான சட்டம் இயற்றியதன் மூலமாக இன்றளவும் ஒரு நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது. அப்போதைய அரசாங்கம், மகப்பேறு மருத்துவமனையில் , குழந்தைகள் மருத்துவப் பிரிவும், செயல்பட வேண்டும் என்ற இவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டனர். அனைத்து நகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைத் திட்டங்களைச் சிபாரிசு செய்தார்.

ஒவ்வொரு முறையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஏதோவொரு சட்டத்தை பரிந்துரை செய்யும் போதும், பொது மக்களின் பேராதரவைத் திரட்டி அதன் மூலம் அச்சட்டத்தை நிறைவேறச் செய்தது சிறப்பான செயல். அக்காலத்தில் கோவில்களில் நாட்டியமாடும் தேவதாசிகள் என்றொரு பிரிவு இருந்தது. பெண்களை இழிவுபடுத்தக் கூடிய இந்த முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டி இவர் எடுத்த முயற்சி, இவருடைய சாதனைகளின் மகுடம் எனலாம். இதற்காக பெருந்திரளானப் பெண்களை இவர் திரட்டிக் கொண்டு அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டார். காரணம் அப்போதைய பல காங்கிரசு கட்சி உறுப்பினர்கள்கூட இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதே நிதர்சனம். அவ்வளவு பெருந்திரளான பெண்டிரைத் தன் சட்டத்திற்கு ஆதரவாக ஒன்று திரட்டி , அவர்களை சட்டமன்றத்திற்குள் அழைத்துச் செல்லும் முயற்சியில் அவர் மூளை ஒரு கணிணியாகவேச் செயல்பட்டது என்கின்றனர் அவரைப்பற்றி நெருக்கமாக அறிந்த திருமதி சரோஜினி வரதப்பன் போன்றவர்கள்.


அகில இந்தியப் பெண்கள் மகாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றார். மாநில சமுதாய நலஆலோசனைக் குழு உருவாகுவதற்கு காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். 1930 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சுய மரியாதை மாநாட்டில் பெண்கள் பிரிவிற்கு தலைமைப் பொறுப்பேற்றார். 1937 முதல் 1939 வரை சென்னை மாநகராட்சியில் , நியமனக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். 1933 முதல் 1945 வரை இந்திய மாதர் சங்கத்தின் தலைவியாக இருந்தார். மீண்டும் 1947 முதல் 1949 வரையிலும் அதே பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். இக்காலகட்டத்தில்தான் மாதர் சங்கக் கிளைகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டது. பல பெண் பிரமுகர்களை தன் சங்கத்தில் இணைக்கும் பெரு முயற்சியும் மேற்கொண்டார். திருமதி ருக்மணி இலட்சுமிபதி, சரோஜினி வரதப்பன், வே.இராமதாஸ், இராதாபாய் சுப்பராயன், அம்மு சுவாமிநாதன், எழுத்தாளர் வசுமதி ராமசாமி, போன்றவர்கள் அம்மையாருடன் இணைந்து பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 1926ல் இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தையும் நிறுவினார். இஸ்லாமிய சமுதாயப் பெண்களுக்கான ஒரு விடுதியும் , தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கான உதவித் தொகையையும் தன் தொடர்ந்த பெரு முயற்சியால் பெற்றுத் தந்தார். இவருடைய பரிந்துரையில்தான் 1928 ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது முறையே 21 மற்றும் 16 ஆக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.


திருமதி முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 1949 ஆம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண நிதி அமைப்பு அமைத்ததன் பிண்ணனி ஒரு துயரமான நிகழ்வாகும். ஆம், புற்று நோய்க்கான சரியான வைத்திய முறை இல்லாத காலகட்டமது. அம்மையாரின் இளைய சகோதரி சுந்தராம்பாள் என்பவர் தன்னுடைய 23 வது வயதில் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு பெருந்துன்பத்தில் அவதிப்பட்டார். இச்சமயத்தில்தான் இக்கொடுமையான நோய்க்கான நிவாரணம் பெற வேண்டுமென உறுதி பூண்டார். இந்திய மாதர் சங்கம் மூலம் நிதி வசூல் செய்தார். தி.க.சண்முகம் குழுவினர் ஔவை நாடகம் நடத்தி அதன் மூலம் நிதி வசூல் செய்தனர். 12 படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சிறிய மருத்துவமனைக்கு தமிழக அரசு ஒரு இலட்ச ரூபாய் நிதி அளித்ததோடு 1952ல் இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். இன்று இந்தியாவில் முதன்மையான புற்று நோய் ஆராய்ச்சிக்கான தேசீய மையமாகச் சிறந்து விளங்கும் இம்மருத்துவமனைதான் தென் இந்தியாவில் புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தின் முதல் முயற்சி. 2004 ஆம் ஆண்டு இம்மருத்துவமனையின் பொன் விழாவை அப்போதைய ஜனாதிபதி மாண்புமிகு டாக்டர் அப்துல்கலாம் துவக்கி வைத்தார். இப்போது பல நாடுகளிலிருந்தும் , நேபாளம், மலேசியா போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்காக அவ்வை கிராமப்புற மருத்துவக்கூடத்தையும், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் ஆகியோருக்கான சிறிய குடியிருப்புகளையும் தன்னுடைய நகைகளை விற்று கட்டி முடித்தார். மேலை நாடுகளில் புற்று நோய் பற்றிய முதுகலை படிப்பு படித்து முடித்த இவரது இரண்டாவது புதல்வர் டாக்டர் எஸ். கிருட்டிணமூர்த்தி என்பவர் அவ்வை மருத்துவ நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சேவா கிராமில் பயிற்சி பெற்ற இவரது மருமகள் திருமதி மந்தாகினி கிருட்டிணமூர்த்தியும் அவ்வை இல்லத்தில் பொறுப்பிலுள்ளார்.


1956 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அம்மையாருக்கு ,’பத்ம பூசன்’ விருது வழங்கப்பட்டது. அடையார் புற்று நோய் மருத்துவமனைக்காக அரசாங்கத்திடமிருந்து போராடி ஒரு சிறு நிலத்தைப் பெற்றார். காரணம் அப்போதைய சுகாதார அமைச்சர் , சரி செய்ய முடியாத புற்று நோய் போன்ற வியாதிகளுக்காக நிதியை வீணடிக்க வேண்டியதில்லை என்ற கருத்தைக் கொண்டவராக இருந்தார். ஆனாலும் அவரிடம் பலத்த விவாதங்களின் மூலமாகவே காந்தி நகரில் ஒரு துண்டு நிலத்தைப் பெற்றார். பெருத்த சவால்களுக்கிடையே அம்மருத்துவமனையின் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.


காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கையில் அவருக்கு ஆதரவு கொடுத்ததோடு ,அனைத்து அரசு விடுதிகளிலும் கல்வி நிலையங்களிலும் இக்கொள்கை செயல்படுத்த வேண்டியும் போராடினார். மதுவிலக்கு, கதர் உபயோகம் , தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றிற்காகப் போராடினார். ஏராவாடா சிறையில் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்து , அவர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்காக தொழுகைக் கூட்டம் நடத்த அம்மையார் முற்பட்டபோது, காவல் துறை அதிகாரிகள் தடை விதித்த போதும், அதை மீறி அவர் கொடியேற்றி தொழுகை நடத்தி தம் நாட்டுப் பற்றையும், துணிச்சலையும் காட்டினார். 1966 ஆம் ஆண்டில் அனைத்து மகளிர் நிறுவனங்களும் இணைந்து அம்மையாருக்கு அவர்தம் 80 வது வயது பிறந்தநாளை ராஜாஜி ஹாலில் கொண்டாடி அவரைக் கௌரவித்தனர். முதியோர் இல்லம் அமைக்கும் விருப்பத்தையும் அச்சந்தர்ப்பத்தில் வெளியிட்டார். தில்லியிலுள்ள அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின், மார்கரெட் கசின்ஸ் நூலகத்திற்கு பல படைப்புகளை வழங்கியிருந்தார்.


மிக எளிமையான தோற்றமும், அன்பான குணமும், தாய்மை உணர்வும், தலைமைப் பண்பும் ஒருங்கே அமையப் பெற்ற உன்னத ஆத்மாவான, அன்னை முத்துலட்சுமி ரெட்டிக்கு, தம் இறுதிக் காலங்களில் கண் பார்வை இழந்த போதும், தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் உன்னிப்பாகக் கவனம் கொண்டிருந்ததோடு, உலகின் எந்த மூலையிலும் பெண்களுக்கான அநீதி இழைக்கப்படுவது அறிய வந்தால் முதல் எதிர்ப்புக் குரல் இவருடையதாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எந்த கட்சியோ, எந்த அரசாங்கமோ, எதைப் பற்றிய அச்சமும் இல்லாமல் துணிச்சலாகத் தம் எதிர்ப்புகளை வெளியிடத் தயங்க மாட்டார்.


தம்முடைய பிள்ளைப்பிராயத்திலிருந்தே, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பல சவால்களை எதிர் கொண்டு, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர். அம்மையாரின் உன்னதமான சேவைகளைப் போற்றும் வகையில் தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு முதல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏழ்மை நிலையில் இருக்கும் கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ 200 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 1968ல் சூலை 22ம் நாள் அம்மையாரின் இன்னுயிர் இப்பூவுலகை விட்டு நீங்கியது.


‘மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் என்றால் அது மிகையாகாது. அனைத்து மகளிர் இயக்கத்தின் முன்னோடியான அம்மையாரின் சேவை என்றென்றும் நிலைத்து நிற்கும் ஒன்று. சாதனை மகளிரின் வரலாறுகளில், முத்துலட்சுமி அம்மையாருக்கென்று ஒரு தனிப்பட்ட இடம் இருப்பதை ஒருவராலும் மறுக்க இயலாது என்பது திண்ணம்!







1 comment:

  1. புல்லரிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள். இவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் வளர்ந்ததற்கு வெட்கப்படுகிறேன்.

    ReplyDelete