Wednesday, February 29, 2012

5 பதிவர்களுக்கு விருது + எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள்


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொப்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை - குறள் 789

அன்பு நண்பர் பதிவர் வீடுதிரும்பல் versatile Blogger (பலதுறைகளிலும் திறமையுடைய வலைப்பதிவர்) என்கிற தனக்குக் கிடைத்த விருதை நால்வருக்கு பகிர்ந்தளித்திருக்கிறார். அதிலும் என்னையும் கருத்தில் கொண்டு சேர்த்திருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள். இந்த விருதிற்கு தகுதியுடையவளாக இனிமேலாவது என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஊக்கமளித்திருக்கிறார். அவருடைய அன்புக்கட்டளையை சிரமேற்கொண்டு, எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள் + ஐந்து வெர்சடைல் பிளாகர் பற்றி எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால், குடும்பம், குழந்தைகள் என்ற முழு சிந்தையில் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் இந்த எழுத்தும் , வலைப்பதிவர்களின் ஆக்கங்களை இரசிப்பதுவும், அந்த ஊக்கங்களினால் என்னை நானே மேம்படுத்திக் கொள்ள போராடுவதுமே என் ஓய்வு நேர பொழுது போக்காக இருக்கும் போது எனக்கும் பிடித்த அதாவது எனக்கே எனக்காகப் பிடித்த விசயங்கள் என்று கேட்ட போது..... ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருந்தது என்பதுதாங்க உண்மை!

அடுத்தவர் நிலையில் இருந்து நம்மைப்பற்றி நாம் சிந்திக்கும் போதுதாங்க பல விசயங்கள் நமக்கே புதிதாகத் தெரிகிறது.... அட, பரவாயில்லையே இவ்ளோ நல்ல விசயங்கள் உனக்குப் பிடிக்கிறதா என்று என்னை நானே பாராட்டிக் கொள்ளவும் தோணுது... அதே சமயம் நம்மைப் பிடிக்காதவர்களின் நிலையிலிருந்து நம்மையே பார்க்கும் போது நம்முடைய தவறுகளும், நம் மீது அதிருப்தியைக் காட்டுபவர்களின் பக்கம் உள்ள நியாயங்களும் புரிகிறது. ஆக, எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையில் இது போன்று தற்சோதனை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது வரம்... இதன் காரணகர்த்தாவை அறிய விருப்பம்... இந்த சங்கிலித் தொடர் நல்லபடியாக அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்! சரி விசயத்திற்கு வருகிறேன். எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள் இதோ......

Inline image 2
(1) என்னை எப்பொழுதும் கொள்ளை கொள்ளும் இயற்கை அன்னைக்கே அந்த முதல் இடம். அந்த இயற்கை அழகில் அப்படியே கரைந்து நின்று விடுவேன். மனமும், உடலும் இளகி அப்படியே வானில் பறப்பது போன்று தோன்றும். வண்ண வண்ண அழகிய மலர்களும், அதைச் சுற்றிச் சுற்றி நாட்டியமாடும் வண்ணத்துப் பூச்சிகளும், சல்சலப்பில்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் தெளிந்த நீரோடையும், தென்னை மரங்களும், நெல் வயல்களும், சுவர்க்க பூமிதான்... என் இளமைக் காலங்களில் பாட்டியுடன், விடுமுறை நாட்களில் அப்படி ஒரு சுவர்க்க பூமியில், கழித்த மறக்க முடியாத நாட்கள்... கற்பனையில் மட்டுமே இப்போது சாத்தியம்... அப்படி என்னையே மறந்து, அதனுள்ளேயே கரைந்து, மறைந்து போய்விட மாட்டோமா என்று பித்தாகி, ஏங்கி நின்ற ஓர் இயற்கை அதிசயம் என்றால் அது நயாகரா நீர்வீழ்ச்சிதான்.... மெய்மறந்து, கரைந்துறுகி, கண்ணில் நீர் மல்க, வைத்த கண் வாங்காமால், இரசித்த அனுபவம்... ஆடலரசரின் திருநடனத்தையேக் கண்டு களித்தது போன்று ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். அருமையான தியானம்!

Inline image 4
(2) அன்றாடம் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை துணிந்து நின்று எதிர் கொள்ளும் நல்ல நண்பர்களை மிகவும் பிடிக்கும்... அடுத்தவர் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காதவர்கள், தானே ஓடி வந்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் வலிய உதவி செய்பவர்கள்.... பலரைச் சொல்ல முடியும். ஆனால் சிலரை மறந்து விட்டு விட்டால் அவர் மனம் புண்படுமே என்று எவரையும் குறித்து சொல்லவில்லை.. ஆனால் அவர்களெல்லாம் கட்டாயம் புரிந்து கொள்வார்கள்.

(3). எனக்கு அதிகம் பிடித்த என்று சொல்வதை விட, நான் அதிகம் நேசிக்கும், அதாவது தெய்வத்திற்கு சமமாக வழிபடும் அன்பே சிவங்கள்..... ஆம் தெய்வக் குழந்தைகளின் பெற்றோர். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பலவிதமான இன்னல்களையும், சவால்களையும் சந்திக்கக் கூடியவர்கள்... தங்களுடைய, இன்பம், உல்லாசம் என அனைத்து சாதாரண விசயங்களைக்கூட தியாகம் செய்யும் பெற்றோர். நான் அறிந்த ஒரு தம்பதியர் ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் பல கோவில்களும், விரதங்களும் மேற்கொண்டு போராடிப் பெற்ற குழந்தை ஹைபர் ஆக்டிவ் பாதிப்பினால் தங்கள் வாழ்க்கையில் அனைத்தையுமே தியாகம் செய்து அக்குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதற்காகவே இந்த 11 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருப்பவர்கள்... நடமாடும் தெய்வங்கள்!

(4) நல்ல உணவு சமைப்பதும், அதை ருசித்து சாப்பிடுவதும் ரொம்ப பிடிக்கும். இண்டர்நேஷனல் உணவு வகைகளை சுவைப்பதில் மிகுந்த விருப்பம.. ஆனால் சைவ உணவு வகைகள் மட்டுமே.. சில வருடங்கள் முன்பு சுத்த சைவமாக மாறிவிட்டேன்... சைனீஸ் உணவு வகைகளும், தாய்லாந்து உணவு வகைகளும் மிகுந்த விருப்பம் உண்டு...இனிப்பு வகைகள் என்றால் கேட்கவே வேண்டாம்...
Inline image 5

(5) பயணம்:

பயணம் செல்வது மிக பிடித்தமான விசயம். அது தொலைதூர நீண்ட விமானப் பயணமாக இருந்தாலும், ரயில் அல்லது பேருந்து , உல்லாச உந்து இப்படி எதுவானாலும் கொண்டாட்டம்தான்.... பலவகையான மக்களையும், அவர்தம் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும் பற்றி அறிந்து கொள்வதிலும், அங்குள்ள இயற்கை அழகையும் ரசிப்பதிலும் தனி சுகம்தான்.
Inline image 6

(6) சுகமான சுமைகள்:

என் பலமும் இதுதான்..... பலவீனமும் இதுதான்.....

சுழன்று சுழன்று சூறைக் காற்றாய் சுற்றியடிக்கும் பாசம்!
நெருக்கி நெருக்கி திணறச் செய்யும் பாசம்!
நெருங்கி நெருங்கிச் செல்ல வழுக்கிச் செல்லும் பாசம்!
பிரித்து, பிரிந்து பேரிடர் செய்யும் பிரிய பாசம்!
பழித்து, கிழித்து இதயம் பிளக்கும் பாசம்!
சிரித்து, சிறைப் பிடித்து சித்தம் கலக்கும் பாசம்!
மறைத்து, மறைந்து மனதை மயக்கும் பாசம்!
கொடுத்து, பிடுங்கி கொடுமையாய் கும்மாளமிடும் பாசம்!
அடித்து, அணைத்து அசட்டையாய் அன்பு பொழியும் பாசம்!
நெருங்கினால், பிரிந்து, பிரிந்தால் நெருங்கி சாலம் காட்டும் மாயம்!
[அந்த பாசம்]

(7) இன்ப கானம்:

ஜேசுதாஸ், எஸ்.பி.பி. சித்ரா, இவர்களின் மெலோடி பாடல்கள் கண்களை மூடி மெய்மறந்து இனிமையா இரசிக்கப் பிடிக்கும். குறுக்கில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது... ஆயிரம் முறை கேட்டாலும் சரி முதல் முறை கேட்பது போல ஆரம்பத்திலிருந்து , இறுதி வரை எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக கேட்க வேண்டும். பயண நேரங்களிலும், இரவு நேரங்களிலும், நிசப்தமாக கேட்கப் பிடிக்கும்..... எம்.எஸ் அம்மாவின் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்றும் என் விருப்பத் தேர்வு.... அன்பே சிவம் பாடல் தொடர்ந்து பல முறை கேட்டாலும் அலுக்காதது... பணி நேரங்களில் பாட்டு கேட்பது பணியை பாதிக்கும்... அதனால் பணி நேரத்தில் பணி மட்டும், பாட்டு கேட்பதற்கு அதற்கான தனி நேரம்...சில நண்பர்களின் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.எளிய நடையில் படித்தவுடன் புரிய வேண்டும்...

ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் நாலு பேருக்கு நல்லது செய்தோம் என்று இருக்க வேண்டும். கண்களை நிரந்தரமாக மூடிய பின்னும் நமக்காக நாலு பேர் உண்மையாக நாலு சொட்டு கண்ணீர் விடவேண்டும், சற்று பேராசைதான் என்றாலும், அதுவும் ஒரு குறிக்கோளாய் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை!

ஐந்து பேருக்கு விருதைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் அல்லவா..? நிறைய பேர் ஏற்கனவே விருது பெற்று விட்டார்கள் போல் உள்ளது... இப்போது நான் குறிப்பிடப் போகிறவர்களும் ஏற்கனவே பலப்பல முறைகள் பலப்பல விருதுகள் வாங்கியிருக்கக் கூடும். இருப்பினும் என் திருப்திக்காக கொடுக்கிறேன்...
Inline image 7

சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் என்று அறிவுத் தேடலில் திளைத்திருப்போருக்கான ஒரு வலைப்பூ...என்.கணேசன் அவர்களின் வலைப்பூ...

தெள்ளுதமிழ் நடை, மனம்கவர் கவிதைகள், என்று பிரம்மிப்பேற்படுத்தும் இவர் வலைப்பூ.... நேசமித்திரன் கவிதைகள்.

மிகச்சுவையான ஒரு வலைப்பூ. சமீபத்தில் வம்சி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்.... பல விசயங்களை அனாவசியமாக அலசுபவர். திரு அப்பாதுரை அவர்களின் மூன்றாம் சுழி....

வாழ்க்கையின் எளிய பக்கங்களை மட்டும் பார்ப்பது ஒரு சிறந்த தவம்... அதாவது சீரியசான விசயங்களைக் கூட மிக எளிதாக நகைச்சுவையாக சொல்ல வல்லவர்.. Scribblings வித்யா.

சிறுகதை, கவிதை என்று கலக்குபவர். இரண்டு பிளாக் வைத்திருக்கிறார். கவிச்சோலை மற்றும் பாகீரதி என்று......... நிறைய எழுதிக் கொண்டிருந்தவர், இப்போது பணியில் பிசி என்கிறார். விரைவில் நிறைய எழுத வாருங்கள் எல்.கே..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

14 comments:

  1. எல் கேFeb 29, 2012 04:04 PM
    விருது கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி எல்.கே. அவசியம் தொடருங்கள்.

      Delete
  2. Replies
    1. அன்பு நண்பர் திரு கணேசன்,

      நன்றி. அவசியம் இந்தப்பதிவை தொடருவீர்கள் என்று நம்புகிறேன்.

      Delete
  3. விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துகள் !

    நினைவிருத்தி விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி தோழமையே !

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு நேசமித்திரன். தங்களுடைய ஏழு விருப்பத் தேர்வுகளும் தெள்ளுத் தமிழ் நடையில் அளித்தால் சுவைக்கலாமே..

      Delete
  4. மிக மகிழ்ச்சி மேடம். நீங்கள் குறிப்பிட்ட பிடித்த விஷயங்கள் அருமை. குறிப்பாக " தெய்வ குழந்தைகளின்"
    பெற்றோர் குறித்து நீங்கள் சொன்னது நெகிழ்த்தியது

    பயணம் ,பாட்டு போன்றவை எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்

    மிக தகுதியானவர்களுக்கு விருது தந்துள்ளீர்கள். இது தான் ரொம்ப சந்தோசம். பாகீரதி மட்டும் எனக்கு புதிது வாசித்து பார்க்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு மோகன் குமார். மகிழ்ச்சி.

      Delete
  5. ரொம்ப நன்றி மேடம்!!!

    விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்..

    அப்புறம் ரொம்ப நாளா நம்ம ரெசிபி கார்னரக் காணோமே. ஆவண செய்யவும்:)

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வித்யா,

      அவசியம் விரைவில் ஒழுங்காக தொடருகிறேன். நீங்களும் விரைவில் இந்தப்பதிவை தொடருங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      Delete
  6. விருதுக்கு வாழ்த்துகள்.. உங்களுக்கும் உங்க கிட்டேயிருந்து வாங்கினவங்களுக்கும் :-)

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அமைதிச்சாரல்,

      மிக்க நன்றி.

      Delete
  7. பிடித்த ஏழும் ரசனையுடன் பகிர்ந்துள்ளீர்கள். 3-வது நெகிழ்வு.

    தங்களுக்கும் தங்களிடமிருந்து விருதினைப் பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. விருதுக்கும் அறிமுகங்களுக்கும் மிகவும் நன்றி. vidhyascribbles இப்பத்தான் அறிமுகம். அசந்து போனேன்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete