Friday, May 18, 2012

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (5)

20ம் நூற்றாண்டில் பெண்ணிய இயக்கங்கள் நாட்டின் பல பாகங்களிலும், உயர்வான நிலையில்,உறுதி வாய்ந்ததாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலுமே பரவிக்கிடக்கிறது..

உலக அரங்கில் இந்திய பெண்களின் நிலையில் இரு முரண்பாடான கோணங்களிலான பார்வையே இருக்கிறது. அதாவது ஒரு கோணத்தில் இந்திய பெண்கள் சுதந்திரப் பறவைகளாகவும், மற்றொரு கோணத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் நோக்கம் கொண்டதாக இருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. 18 ஆண்டுகள் ஒரு பெண் பிரதமர் பதவி வகித்த காலத்திலேயே அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிறைய நடந்து கொண்டுதானிருந்தன. நூற்றுக்கணக்கான பெண்கள் மும்பை போன்ற பெரு நகரங்களில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள், செவிலியர்கள் , விஞ்ஞானிகள் என்று பதவியேற்றிருந்தாலும், அந்நாளைய செய்தித்தாள்கள், பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், கொலை போன்ற பல குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டுதான் இருந்தன.. மிக உயரிய பதவிகளில் அலங்கரிக்கும் வாய்ப்பு பெற்றாலும், இது போன்ற வன்முறைகளால் அலைக்கழிக்கப்படதும் மிக சிக்கலான இருமுனைப் போராட்டமாகவே இருந்தது.


அனகோல் (Anagol) என்ற ஆய்வாளரின் கருத்துப்படி, இந்திய மகளிரின் வரலாற்றுப்பணி மூன்று முக்கிய பிரிவுகளில் அடங்குவதாகக் குறிப்பிடுகிறார். அதாவது, காலனியச் சட்டங்களின் தாக்கமும் மற்றும் மகளிரின் வாழ்க்கையின் மீது அதிகாரம், ஆணாதிக்கத்தின் மறு கட்டமைப்பு மற்றும் அதிகாரவர்கத்திலிருந்து விடுபட்ட பெண்களின் வாழ்க்கை நிலைகள் என்பதாக. காலனிய சட்டங்களின் பாடமும், பெண்களை அடக்கி ஆண்ட ஆணாதிக்கமும் பெண்களின் சுயசிந்தையை ஒடுக்கக்கூடியதாகவே இருந்தது என்கிறார். மூன்றாவது பிரிவில் வரும் பெண்கள் தங்கள் பேச்சுகள, செயல்களையும் வெளிக்கொணரும் வாய்ப்பு பெற்றிருந்தாலும், அது சபையேற முடியாத நிலையே இருந்ததாகக் கூறுகிறார். அதாவ்து, சகமனிதர்களின் ஆதரவும் சரியாக கிடைக்காத நிலையே இருந்திருக்கிறது. மகளிரை மையமாக வைத்து, அதாவது அவர்கள் பேச்சு, எழுத்து, மற்றும் சமுதாயத்தில் அவர்களின் மேலாதிக்க சொற்பொழிவுகள் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்தது.

இந்திய மகளிரின் முக்கிய பிரச்சனைகள் என்று எடுத்துக் கொண்டால் :முதன் முதலில் வருவது சத்து குறைபாடு. பொதுவாகவே இந்தியாவில்,நடுத்தர மற்றும், கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பப் பெண்கள், வீட்டில் உள்ள அனைவரும் உண்டு முடித்தபின் இறுதியாக எஞ்சியிருக்கும் மிச்சம், மீதியை உண்ணும் வழக்கமே கொண்டிருக்கிறார்கள்.. ஏழை குடும்பங்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.. தியாக தீபங்களாக ஒளிவீசுவது குடும்பத் தலைவிகளே. 1996இன் UNICEF அறிக்கையில், உலகின் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தெற்கு ஆசிய நாடுகளில்தான் பெண்களின் நலனில் சரியான அக்கரை எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, அதன் காரணமாக பெண்கள் சத்துக் குறைபாடு அதிக அளவில் உள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சத்து குறைபாடு, பெண்களுக்கு இரத்த சோகையையும் ஏற்படுத்துவதோடு முழுமையான வளர்ச்சியையும் அடைய முடியாமல், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற குழந்தைகளாகவே இருப்பது வருத்தத்திற்குரியது.

பெண் குழந்தை பிறந்தவுடனேயே, அடுத்து ஆண்குழந்தை பிறக்க வேண்டும் அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்த குழந்தையைக்கூட சரியாக கவனிக்க முயற்சி எடுப்பதில்லை சத்து குறைபாடு அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது. வளர, வளர ஆண் குழந்தைக்கு கிடைக்கும் எந்தவிதமான சலுகைகளும் பெண் குழந்தைக்கு கொடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, தன்னிச்சையாக எந்த ஒரு சின்ன முடிவும் அவள் எடுக்க முடியாது. தான் தனியாக வெளியில் செல்லக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை. எங்கு சென்றாலும், ஆண் துணை இல்லாமல் தனியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இது போன்ற காரணங்களே பெண்கள் தங்கள் நலன் பற்றி சிறிதும் அக்கரை கொள்ளாமல் போனதற்கு காரணமானது.

உலகிலேயே, இந்தியாவில் மட்டுமே பேறுகால இறப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் பெண்களுக்கு சரிவர கொடுக்கப்படாத கவனம் மட்டுமே. இளம் பருவத்திலேயே திருமணம் முடிப்பதனால் அப்பெண்ணின் உடல் நிலை ஒரு குழந்தையை சுமப்பதற்கு தயாராக ஆகாத நிலையில் இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது போன்ற பிரச்சனைகள் அந்த இளம் தாயின் இறப்பில் சென்றும் முடிவடைகிறது.

இதே போன்று இந்திய பெண்களுக்கு கல்வியறிவு கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. இடைக்காலத்தில் இந்திய பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இக்காலங்களில், பெண்களுக்கு வீட்டு வேலைகள் பழகினால் போதும் என்ற மனநிலையே நிலவியது. இன்றும் கிராமங்களில் இது போன்ற நம்பிக்கைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு வீட்டு வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு கல்வியறிவை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லை. மாறாக ஆண் குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியம் என்றும் கருதப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டங்களில் பெண்கள் உயர்கல்வி கற்கவும் முடிகிறது என்று மகிழ்ச்சியடைந்தாலும், பெரும்பாலான கிராமப்புறங்களில் இன்றும் இடைக்கால நிலையே நிலவி வருகிறது. கிராமப்புற மக்களால், பெண்களாய் பிறப்பதே பாவம், அவர்களுக்காக அனாவசியமாக செலவு செய்வதும் வீண் என்றுகூட கருதப்பட்டது,அக்கால்ங்களில். எவ்வளவு விரைவாக திருமணம் செய்து கொடுக்க முடியும் என்ற எண்னமே பிரதானமாக இருந்தது.

மிக மோசமான பொருளாதார நிலையே இதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. என்பதே உண்மை. அடுத்த காரணம் கல்விக்கூடங்கள் வெகு தொலைவில் இருப்பதால் பெண் தனியே போனால் ஒழுக்கம் பாதிக்கப்பட்டு, அதனால் திருமண வாழ்க்கையும் பாதிக்கப்ப்டும் என்ற அச்சமும் இருப்பது.ம்தான். அதுமட்டுமல்லாமல் ஆண் ஆசிரியர் மற்றும் இருபாலர் கல்வி முறையும் பிரச்சனையாக இருந்தது.

இந்த கல்வியறிவு குறைபாடே பல பெரிய பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருந்தது. கல்வியறிவில்லாத ஒரு தாய் தம் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. காரணம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தான வியாதிகள் பற்றிய விழிப்புணர்வுகூட அவர்களுக்கு இருப்பதில்லை. இதனால் குழந்தைகளின் ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுகாதாரம் பற்றிய அறிவும் இருப்பதற்கான வாய்ப்பின்மையும் குடும்ப ஆரோக்கியத்தையே பாதிக்கச் செய்துவிடுகிறது.

இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிக அளவில் நடக்கின்றன. மனதளவிலும், உடலளவிலும் பலவிதமான பாதிப்புகளுக்கு பெண்கள் ஆளாக நேரிடுகிறது. சமுதாயத்தில் மிக அதிகமாக உழைக்கும் வர்கமாக இருந்தபோதிலும், ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அவர்களுக்கு அமையவில்லை என்பதே வேதனையான விசயம். மணிக்கு ஒரு பலாத்காரமும், 93 நிமிடங்களுக்கு ஒரு வரதட்சணை கொடுமை தீக்குளிப்பும் நடந்து கொண்டுதானிருக்கிறது. 1955இன் இந்து மத திருமணச்சட்டம், 1956இன் இந்து வாரிசு உரிமைச் சட்டம், 1856இன் இந்து விதவை மறுமணச் சட்டம், 1937இன், இந்துமதப் பெண்களின் சொத்துரிமைச் சட்டம், 1961இன் வரதட்சணை தடைச்சட்டம் போன்ற பல சட்டங்கள் பெண்களைக் காப்பதற்காக இயற்றப்பட்டு, தண்டனைகளும் கடுமையாக வழங்கப்படிருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனை விகிதம் இந்தியாவைப் பொறுத்த வரையில் மிகவும் குறைவாக இருக்கிறது.

இந்திய பெண்கள் ஆண்களைவிட மிக அதிகமாகவே உழைத்தாலும், அவர்களுடைய திறன் வெளிப்பாடு குறைவாக இருப்பதனால் அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. வீட்டில் செய்யும் வேலைகளோ, அல்லது கணவருடன் சேர்ந்து வயலில் செய்யும் வேலைகளோ கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. 1986இல் ஆந்திர பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், விவசாய அறுவடை மற்றும் பயிரிடும் காலங்களில் ஒரு பெண் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் உழைப்பதாகவும், அதே காலங்களில் ஒரு ஆண் ஏழு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவில் பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கையின் முக்கிய முடிவுகளைக்கூட சுயமாக நின்று எடுக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். ஒவ்வொரு சிறிய விசயத்திற்கும் ஆண்களின் அனுமதி வேண்டி காத்து நிற்க வேண்டியவர்களாகவே இருக்கின்றனர். குடும்பத்தின் முக்கிய முடிவுகளில் அவர்கள் கலந்தாலோசிக்கப்படுவதில்லை. தங்கள் சொந்த திருமணத்தில்கூட முடிவெடுக்கும் உரிமை பெறுவதில்லை. கிராமங்களிலும், சிற்றூர்களிலும் இன்றும் பெரும்பாலான இடங்களில் இது போன்ற நிலைகள் நீடித்துக்கொண்டுதான் உள்ளது. அதாவது, மணப்பெண்ணை கலந்தாலோசிக்காமல் கூட அவள் திருமணத்தை முடிவு செய்கிறார்கள். அவளுடைய எதிர்காலம் அவளுக்கு வாய்க்கும் கணவனின் கைகளில்தான். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று இருக்க வேண்டும். மரியாதைக்குரியவராக ஒரு கணவன் நடந்துகொள்ளாவிட்டாலும், அவனுடைய கையே அக்குடும்பத்தில் ஓங்கி இருக்கும். அதற்கு அவனுக்கு வரதட்சணையும் கொடுத்து பெண்ணையும் கொடுக்க வேண்டும். இந்த பெண் ஏதாவது மாறாக நடந்தாலோ, எதிர்த்துப் பேசினாலோ அவள் பாவம் செய்தவளாக கருதப்படுகிறாள்.

வரதட்சணை பிரச்சனை என்பது பெருங்கொடுமையாக இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இடைக்கால்ங்களில் இக்கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை தீக்கிரையானதும் உண்மை. சீதனம் என்ற பெயரில் நிறைய சொத்து, பத்துகள் கொண்டுவந்த பெண்களுக்கு மட்டுமே குடும்பத்தில் மரியாதை கிடைக்கும், அல்லது கொடுமைதான் மிஞ்சும்.

பிற்காலத்தில் ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும்ஒரு பெண்ணின் வாழ்க்கை அக்குழந்தை பிறந்தவுடனே அது வாழ வேண்டுமா அன்றி சாக வேண்டுமா என்று கூடி முடிவெடுத்து அதன்படி செயல்படுத்தப்படுகிறது. பெண்ணாய்ப் பிறப்பதே பாவம் என்ற உறுதியான மனோபாவம் கொண்டவர்களாகவே இன்றும் பல சமுதாய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் பலவிதமான துன்பங்கள் அனுபவிக்க வேண்டிவரும் என்று தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு சிசுவாக இருக்கும் போதே கள்ளிப்பாலோ, அல்லது கழுத்தை நெறித்தோ கொன்று போட்டுப்போய் விடுகிறார்கள். ஆதிகாலங்களில் ராஜஸ்தானில், சில ராஜபுத்திர வம்சத்தினர், பெண்ணாய்ப் பிறந்த சிசுவை பால் நிறைந்த பெரிய பாத்திரத்தில் மூழ்கடித்து கொன்றுவிடுவார்களாம். ஆனால் தொழில்நுட்பமும் மக்களின் விஞ்ஞான அறிவும் வளர வளர தற்போது மிக எளிதாக கருவிலேயே பெண் குழந்தையை அழிக்கும் வல்லமையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். பெற்ற தாய்க்கு அதைத்தடுக்கும் எந்த உரிமையும் வழங்கப்படுவதில்லை.

திருமண முறிவு காரணமான விவாகரத்து என்பது மேலை நாடுகளைவிட நம் நாட்டில் மிகவும் குறைவு என்று பெருமைபட்டுக் கொள்ளும்படி இல்லை. காரணம் பல சமுதாயங்களில் தனக்குப் பிடிக்காத மனைவியை வெகு எளிதாக தள்ளி வைத்துவிட்டு மறுமணத்திற்கு தயாராகிவிடுகின்றனர். இஸ்லாமிய சமூகத்தில் ‘தலாக்’ என்று மூன்று முறை சொன்னால் போதும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக. ஆனால் ஆணிற்கு இதுபோன்று நிர்பந்தம் கிடையாது. சமீபத்தில் இஸ்லாமிய சட்டம் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கியிருக்கிறது. விவாகரத்து பெற்ற பிறகு அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப ஜீவனாம்சம் கொண்டு தம் குழந்தைகளை அவள் வளர்த்து கரைசேர்க்க வேண்டும்.

உலகளவில், பெண் சிசுக்கொலை, சத்து குறைபாடு, பெண் குழந்தைகளின் ஆரம்பக்கல்வியே மறுப்பு, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பு, அதனால் இறப்பு போன்றவைகள் மற்ற நாடுகளைவிட நம் நாட்டில்தான் மிக அதிகமாக உள்ளது. ஆனால் இத்தனையும் மீறி தங்களுடைய உரிமைகளுக்காகவும், சுயசிந்தனைகளுக்காகவும், தங்கள் தனித்திறமைகளை நிரூபிக்கும் பொருட்டும் போராட என்றுமே தயங்குவதில்லை பெண்குலம். ஃபீனிக்ஸ் பறவை போன்ற சாம்பலிலிருந்தும் உயிர்த்தெழும் அந்த மன உறுதி மட்டுமே பெண்களை இன்று சகல் துறைகளிலும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. உடை விசயங்களிலும் தங்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஆடை அணியும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பொழுதுபோக்கு என்றால், தம் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடுதலிலே பெரும்பாலும் கழிக்கப்படுகிறது.

பெரும்பாலும், உரிமையும், தலைமைப் பதவியும் எடுத்துக் கொள்ளத் தயங்கும் மனோநிலையிலேயே ஆரம்பம் முதல் வளர்க்கப்பட்டுவிடுகிறார்கள் நம் இந்தியப் பெண்கள். இயற்கையிலேயே போராடும் குணமும், குடுமபத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகவே இருந்தாலும், அடக்கி ஆளப்பட்டு வந்த காரணத்தினால் அவை வெளிப்படாமல் இருந்தது. 1857ஆம் ஆண்டில், பிரித்தானிய ஆட்சியில் கவர்னர் டல்ஹவுசிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தம் வீரத்தினால் பிரித்தானிய அரசாங்கத்தையே தலைகுனியச் செய்த வீராங்கனை ராணி இலக்குமிபாய் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

இன்று நம் இந்தியாவில், பெண்களின் நிலை பல வகையிலும் உயர்ந்திருப்பதற்கு ஆதாரம், உலகிலேயே மிக அதிகமான, மருத்துவம், மற்றும் அறுவை சிகிச்சை வல்லுநர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பொறியியலாளர்கள், அணு விஞ்ஞானிகள் என அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பதே. பெண்களின் மீது திணிக்கப்பட்ட பலவிதமான சமுதாயக்கட்டுப்பாடு குறித்து, ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர்சந்தர் வித்யாசாகர், மகாத்மா காந்தியடிகள், பாலகங்காதர திலகர், சுவாமி தயானந்த சரசுவதி, மகாத்மா ஜோதிராவ் கோவிந்தராவ் புலே, போன்றவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால் பெண்கள் மெல்ல மெல்ல தங்களுடைய திறன் மற்றும் தகுதி குறித்து உணர்ந்து, அதன் மூலம் இன்று சாதித்துக்காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. 1980களில் பெண்கள், ஆசிரியர், செவிலியர் போன்ற பணிகளை பாதுகாபபானது என்ற எண்ணம் கொண்டு அதன் மூலம் வெளியே வர ஆரம்பித்தனர். 1990களில் பெருமளவில் மாற்றங்கள் வந்தன. இஸ்ரேல் நாட்டில் பெண்கள் இராணுவத்திலும் அனுமதிக்கப்பட்டனர்.

பெண்கள் இன்று நுழையாத துறையே இல்லை எனலாம். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று ஒதுக்கி வைத்திருக்கும் பல துறைகளிலும் இன்று பெண்களும் அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையிலேயே ஆழந்த ஈடுபாட்டுணர்வும், உறுதியான எண்ணமும், கடுமையாக உழைக்கும் மனோபாவமும், கொண்டவர்கள் கல்வியிலும் சிறந்து இன்று அவர்கள் நுழையாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், இலக்கியம், விளையாட்டு, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு என்று அனைத்துத் துறைகளிலும் தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் துறையில் இன்று பெருமளவில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தவர்கள், சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், சுசேதா கிருபளானி போன்றவர்கள். திருமதி விஜய லட்சுமி பண்டிட், இந்திய மந்திரி சபையில் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பேறு பெற்றவர். சோவியத் யூனியன், அமெரிக்கா, மற்றும் கிரேட் பிரிட்டனுக்கு தூதராக பணியாற்றியதால் இவருக்கு சர்வதேச அளவில் பாராட்டுதல்களும் கிடைத்தது..சரோஜினி நாயுடுவின் மகளான பத்மா நாயுடு மேற்கு வங்க மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். ஹன்ஸா மேத்தா எம்.எஸ்.பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்ற முக்கியத்துவம் பெற்றார்.

அண்மைக் காலங்களில் தம் ஆட்சித் திறமையால் உல்கையே திரும்பிப் பார்க்கச் செய்த இரும்புப் பெண்மணி இந்திராகாந்தி. நம் சுதந்திர இந்தியாவின் முதல் பெண் பிரதமர். அதற்குப் பிறகு சோனியா காந்தி, ஷீலா தீக்‌ஷித், உமா பாரதி, ஜெயலலிதா, வசுந்தரா ராஜி, மம்தா பேனர்ஜி போன்ற பலரும் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விளையாட்டுத்துறையில் ஹாக்கி, கிரிக்கெட், போன்ற எந்த துறையையும் விட்டுவைக்கவில்லை. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தை வென்று வந்தது. பி.டி.உஷா, (அத்லெடிக்ஸ்), டயானா எடுல்ஜி (கிரிக்கெட்), சானியா மிர்ஸா (டென்னிஸ்), குஞ்சராணி தேவி (எடை தூக்கும் வல்லமை) கர்ணம் மல்லேசுவரி, போன்ற பலரும் பல்வேறு விளையாட்டுகளில் சாதித்துக் காட்டியுள்ளனர்.

கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று எடுத்துக் கொண்டால், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, கவிக்குயில் லதா மங்கேஷ்கர், ஆஷா பான்ஸ்லே, மது பாலா, மற்றும் ரேகா, ஐஷ்வர்யா ராய், போன்ற பலரையும் குறிப்பிடலாம்.

இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் அருந்ததி ராய், அனிதா தேசாய், கிரண் தேசாய், ஷோபா டே, ஜம்ப்பா லாஹிரி போன்றவர்கள் உலகளவில் பிரபலமாகியுள்ளார்கள். 1997இல் "God of Small Things" என்ற தன்னுடைய படைப்பிற்கு புக்கர் பரிசை வென்றார், அருந்ததி ராய். கிரண் தேசாய் 2006ம் ஆண்டின் புக்கர் பரிசை வென்றார். ஜம்ப்பா லாஹிரி புலிட்சர் பரிசை வென்றுள்ளார்.

தொழில்துறையிலும் பல பெண் சாதனையாளர்களைக் காண முடிகிறது. கிரண் மஜும்தார் ஷா, பயோகான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், இவர்தான் இந்தியாவின் மிகப்பணக்காரப் பெண்மணி. மிகச் சிறந்த தொழிலதிபர் என்று சாதனை படைத்திருப்பவர். மருத்துவம் பயில ஆசைப்பட்டு அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் மனம் தளராமல் தொழில்துறையில் நுழைந்து அங்கேயும் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். இது போன்று, வித்யா மோகன் சப்பாரியா (ஜம்போ குரூப்ஸ்), நைனாலால் கித்வாய், சுல்லாஜியா ஃபிரோடியா மோத்வானி, மல்லிகா ஸ்ரீனிவாசன் என்று பலர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அருணா ராய், மேதா பட்கர், நர்மதா பச்சாவ் அந்தோலன், போன்ற சமூக நலனில் அக்கரை கொண்டு தம் சுயநலமற்ற சேவைகளை, மக்களூக்காக அர்ப்பணிப்பவர்களும் இருக்கிறார்கள்..

முதல் இந்திய விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, கொலம்பியா விண்கல மையத்தின் உறுப்பினராக பணியில் இருந்தவர், தம் உயிரைப் பணயம் வைத்து சாதித்துக்காட்டியவர். தம் பெயரை அகில உலகமே அறியும் வண்ணம் பொன்னேட்டில் பொறித்து வைத்துச் சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் இரண்டாவது பெண்மணியாக சர்வதேச விண்வெளிக்குழுவில் இணைந்துள்ளார். அதற்குப் பிறகு பல பெண்கள் இன்று சாதனை புரிந்து கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே.

இந்தியப் பெண்கள் இப்படி அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய கனவு முழுமையாக நிறைவேற இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்!

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...