Tuesday, April 30, 2013

நிழல் தேடும் நிஜங்கள்



பவள சங்கரி

”ஏம்மா.. யாரும்மா அது, கையுறையும், தலையுறையும் போடாமல் வேலை செய்யிறது வாம்மா.. வெளியில வா… முதலாளி வர நேரத்துல ஏம்மா இப்புடி உசிர வாங்குறீங்க?”

“அண்ணே.. நான் புதுசா இன்னைக்குத்தான் வேலைக்குச் சேந்தேன். லேட்டாத்தான் வந்தேன். அதான்..  சூப்பர்வைசரை பாக்கச் சொன்னாங்க.. யாருன்னு தெரியல.. அதான்..” என்று தலையைச் சொறிந்தாள்.

“பாத்தியா.. இதான் பிரச்சனை. தின்பண்டங்கள் பேக் செய்யுற இடத்துல இப்படி தலையை சொறிஞ்சிக்கிட்டு நின்னா.. பாக்குறவங்க என்ன சொல்லுவாய்ங்க.. போம்மா.. போய் அங்கன ஸ்டோர்சுல நான் சொன்னேன்னு சொல்லி கையுறையும், தலையுறையும் வாங்கி போட்டுக்கிட்டு வா..”

எங்கிருந்துதான் வர்றாய்ங்களோ.. நம்மள டென்சன் பன்றதுக்குனே… என்று முணுமுணுத்துக்கொண்டே  சென்றவன் பின்னாலேயே,


“சார், சார்… ” என்று  சென்ற லட்சுமியை முறைத்துப் பார்த்து, “உனக்கென்னம்மா பிரச்சனை. வழக்கம் போல பர்மிசனா.. இன்னைக்கெல்லாம் டெலிவரி நிறைய இருக்கு.. போம்மா, போய் வேலையைபபாரு. முதலாளி அம்மா வந்திருக்காய்ங்க. எந்த நேரமும் ரவுண்ட்ஸ் வருவாய்ங்க.. “ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார். பேக்கிங் செக்‌ஷனில் எப்பவுமே ஆள் பற்றாக்குறைதான். அதனாலேயே  டூட்டி மாத்தி, மாத்தி போடுவாங்க. ஊர்லயே பெரிய ஸ்வீட் கடை. என்பதால் கூட்டம் எப்பவும் நிரம்பி வழியும். நிறைய கல்யாணம் மற்றும் இதர விசேசங்களுக்கான ஆர்டர் வருசம் பூரா குவிஞ்சி கிடக்கும். தலையை தொங்க போட்டுக் கொண்டு வந்த லட்சுமியைப் பார்க்க பாவமா இருக்க,

“என்னக்கா, பர்மிசன் கிடைக்கலியா, சுப்பர்வைசர் நொம்ப எகிறிடிச்சோ.. இவ்ளோ சோகமா வறயே.. அதான் கேட்டேன்” என்றாள் பார்வதி.

“இல்லம்மா.. அது எப்பவும் திங்கற பேச்சுதானே.. அதைப்பத்தி இல்ல.. இன்னைக்கு ரேசன் கடையில பொங்கலுக்கு குடுக்குற அந்த இலவச வேட்டி, சேலைக்கு கடைசீ நாள். அதான் .எப்படியாவது போய் வாங்கிப்புடலாம்னு பாத்தா இப்புடி ஆயிப்போச்சு. இந்தப் பொங்கலுக்கு என் பெண்ணுக்கு தாவணி போட்டுடலாம்னு பாத்தேன். ஒரு சேலை வாங்கினா இரண்டு தாவணி ஆவுமே. சொந்தத்துல விசேசமெல்லாம் போறதுன்னா, பாவாடை தாவணி போடலேன்னா ஒரு மாதிரியா பேசறாளுக.. ஒரே வெசனமா இருக்கு பார்வதி”

“அக்கா, நான் ஒரு ரோசனை சொல்லவா.. நீ நேரா போய் முதலாளி அம்மாகிட்ட உண்மையைச் சொல்லி கேட்டுப்புடு.. பட்டா படுது, திட்டுனாலும் போவுது. முயற்சி பண்ணித்தான் பாரேன். அப்பறமா சூப்பருவைசர்கிட்ட எதையாவது சொல்லி சமாளிச்சிப்போடலாம். போக்கா, போய் கேளு சீக்கிரம். அந்த சூப்பர்வைசர் சிடுமூஞ்சி வந்தா, உன்னைப் போவவும் உடாது.. “

கேபின் கதவு திறந்தே இருந்ததால, “மேடம் “ என்று கூப்பிடப் போனவள், நல்ல வேளையாக போனில் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட, நாக்கைக் கடித்துக்கொண்டு அப்படியே கதவைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள் லட்சுமி. சுற்றும் நாற்காலி பக்கவாட்டில் திரும்பியிருந்ததால் முதலாளி அம்மாவிற்கு இவள் நிற்பது தெரியவில்லை. வேறு வழியில்லாமல் பேசுவதைக் கேட்க வேண்டியதாயிற்று.

மறு முனையில் யாரோ, மேடம் இளைத்து விட்டதாக ஐஸ் வைப்பாய்ங்க போல… அந்தம்மா முகத்துல அப்படி ஒரு பூரிப்பு.

“…….”

“ம்ம்ம்ம் அப்படியா.. குறைஞ்சிருக்கேனா.. டயட்டுலதான் இருக்கேன். ம்ம் ஆமா அரிசியை சுத்தமா தொடறதில்ல.  வெறும் கோதுமை ரொட்டி, புல்கா, இல்லேனா வெஜிடபிள் சூப், ஜூஸ் இப்படித்தான் சேத்துக்கறேன். சின்ன, சின்னதா எனக்காக ஸ்பெஷ்லா இரண்டு ரொட்டி போடச்சொல்லிடுவேன் சமையல்காரம்மா கிட்ட. சக்கரை இல்லாம ஏதாவது ஜூஸ் இல்லேனா உப்பு இல்லாம மோரு. மதியம், சேலட் நிறைய அப்பறம் இரண்டு ரொட்டி, கொழுப்பில்லாத யோகர்ட் அவ்ளோதான். இரவு ஏதாவது பழமும், ஒரு கப் பாலும். மாலையில பசிச்சா மேரி பிஸ்கட் டீயோட 2 சாப்பிடுவேன்.”

இதற்குமேல் அந்த மேடம் பேசியது காதில் விழவில்லை. காலையில் வீட்டில் நடந்தது நினைவிற்கு வந்தது. மாதக் கடைசி என்பதால் மளிகை சாமான, அரிசி எல்லாம் காலியாக ஆரம்பித்து விட்டது. பாக்கெட் மாவு வாங்கி மூத்தவன் பன்னீருக்கு (பன்னீர் செல்வம்) காலேஜீக்கு நாலு தோசை ஊத்திக் கொடுத்துப்பிட்டு, இளையவள் அமிர்தாவுக்கு டப்பாவுல நாலு தோசை மதியம் சாப்பிட ஊத்தி, பழைய சாம்பாரை சுண்ட வைத்து அதையே தொட்டுக்கவும் கொடுத்துப்போட்டு, கணவனுக்கும், தனக்கும் முதல் நாளைய பழைய சோற்றை மோர் ஊத்தி பிசைந்து டப்பாவுல போட்டாள். காலையில சாப்பிட கணவனுக்கு ஊத்தியது போக மாவு ரொம்ப கம்மியாக இருக்க, மகள் ”அம்மா, நீ சாப்பிடலையா” என்று தொணப்புவாளேன்னு, இருந்த ஒரு கரண்டி மாவுல கொஞ்சம் தண்ணி ஊத்தி, அதை குட்டியா இரண்டு தோசையா வார்த்து மகள் முன்னால நன்றாக சாப்பிடுவதாக பாவ்லா பண்ணிவிட்டு கிளம்பியது நினைவிற்கு வந்தது. ‘அட நாமக்கூடத்தான் டயட்டுல இருக்கோம் போல’ என்று எண்ணியபோது தன்னையறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. திடீரென்று யாரோ முதுகில் தட்ட, விலுக்கென்று திரும்பிப் பார்த்தாள். கையில் வைத்திருந்த நீளமான கணக்கு நோட்டினால் சூப்பருவைசர்தான் தட்டியிருக்கார். சைகையால் அந்தப்பக்கம் வருமாறு சொன்னார்.

“ஏம்மா.. அங்கே வேலையைப் போட்டுப்பிட்டு இங்க என்ன பண்றே நீ…. ஒழுங்கா வேலை பாக்கற நினைப்பு இல்லை போலருக்கே.. முதலாளியம்மா பேசறதை ஒட்டு கேட்டுக்கிட்டு நிக்கறயா ….. ?”

“அண்ணே. அப்டீல்லாம் இல்லண்ணே… அவசரமா ஒரு ஜோலிண்ணே. கொஞ்சம் போகணுமிண்ணே, அதான் அம்மாகிட்ட பர்மிசன் கேட்டுப்பாக்கலாமேன்னு…..”

“என் வேலைய தொலைக்கலாம்னு பாக்குறீகளோ… பேசாம வீட்டிலயே இருந்துக்கலாமே நீயெல்லாம் எதுக்கு வேலைக்கு வர….  வாரத்துல மூனு நாளைக்கு பர்மிசன் கேக்கற…. கேட்டா ஆயிரம் காரணம் சொல்லுவே.. இலவசங்களை வாங்குறதுக்குனே அலைஞ்சு திரியற…  இன்னையோட உன் சீட்டை கிழிக்க வேண்டியதுதான் போலயிருக்கு. நீ ஒழுங்குக்கு வரமாட்டே”

“அண்ணே, அபடீல்லாம் சொல்லாதீங்கண்ணே. எம் பையன் கடைசீ வருசம் படிக்கிறான். இந்த வ்ருசம் டிகிரி முடிச்சவுடனே, இங்கதான் கூட்டிக்கிட்டு வரலாம்னு இருக்கேன்..  கொஞ்சம் கருணை காட்டுங்கண்ணே.. என்றற ஊட்டுக்காரவிகளும் தச்சு வேலைக்கு காலைலை வெள்ளனே போனா, இராத்திரி லேட்டாத்தான் சுயநினைவே இல்லாம வருவாக… சம்பாதிக்கிற காசு பாதி டாஸ்மாக்கு கடையில குடுத்துப்போட்டுத்தான் வருவாரு. ஊட்டுல உலை பொங்குறதே, எம்பட இந்த வருமானத்துலதானுங்க அண்ணே.. என்ன பண்றது ரேசன்ல போடுற இலவச அரிசிக்காக அன்னைக்கு பர்மிசன் கேட்டேன். இன்னைக்கு பொங்கலுக்கு குடுக்குற சேலைக்காக போகணும் அண்ணே.. கொஞ்சம் மனசு வையுங்க..”

“இங்கபாரு, உன் பாட்டை இங்க ஆரம்பிக்காதே, இன்னைக்கு மதியம் பூரா இப்படியே அலையிறே நீ… வேலையே பாக்க்லை. அரை நாள் லீவு கொடுக்கிறேன் போயிட்டு வா.. “
என்று சொல்லிவிட்டு நிக்காமல் போனவரிடம் அதற்குமேல் பேச ஒன்றுமில்லாமல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அரை நாள் சம்பளம் போன வெசனத்தோடு வேகமாக கிளம்பியவளை செக்யூரிட்டியில் நிற்கும் பெரியவரின் குரல் தடுத்து நிறுத்தியது.

“ஏம்மா.. உன் பையன் காலேஜூலதானே படிக்கிறான். ஒழுங்கா படிக்கிறானான்னு பாக்குறீங்களா..?”

“ஏண்ணே, என்ன ஆச்சு..?”

கிளம்புகிற அவசரம் அவளுக்கு.

“நான் நைட் டூட்டி முடிச்சு காலையில வீட்டுக்குப் போற வழியில இருக்குற டாஸ்மாக் கடைக்குள்ள உன் பையன் போறதை நிறையவாட்டி பாத்திருக்கேன். ஏதாச்சும் வேலை செய்யுறானோன்னு நினைச்சு நேத்து அவன்கிட்ட கேட்டேன். கொஞ்சம்கூட மருவாதி இல்லாம உன் வேலையைப் பாத்துக்கிட்டு போ பெரிசுங்கறான். அவன் போக்கு எனக்கு என்னவோ சரியா படலே.. பாத்துக்கோ அவ்ளோதான்”

அதிர்ச்சியில் நா எழவில்லை லட்சுமிக்கு. பையன் சீக்கிரம் காலேஜு படிப்பை முடிக்கப்போறானே.. இந்தப் போராடடத்துக்கு ஒரு விடிவு வரும்னு பார்த்தா, இந்த செய்தி தலையில் இடியாய் இறங்கியது. நேரமானதால், ஒன்றுமே பேச முடியாமல் ஆயிரம் எண்ணங்களைச் சுமந்தபடியே ரேசன் கடை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் லட்சுமி. இதயக்கூட்டில் ஓராயிரம் சம்மட்டி கொண்டு அடித்தாற்போல ஒரே வலி. கொஞ்ச நாட்களாகவே இப்படித்தான், ஏதாவது சின்ன அதிர்ச்சி என்றாலும் நெஞ்சில் பளிச்சென்று அப்படி ஒருவலி. அரசாங்க ஆஸ்பத்தியில போய் மணிக்கணக்கா நிக்க ஏது நேரம். என்னமோ வாழ்க்கை ஓடுற மட்டும் ஓடட்டும்.

இரவு மணி எட்டாகியும், காலையில் காலேஜுக்குப் போவதாகச் சொல்லிச்சென்ற மகனை இன்னும் காணவில்லையே என்று வாசலிலேயே உட்கார்ந்திருந்தாள்  லட்சுமி.

“அம்மா, ஏம்மா. வாசல்லயே உக்காந்திருக்கே.. இன்னும் அப்பா வ்ரலியா”? என்றான்.

ஏனோ மகனைப் பார்த்தவுடன், அன்பான அவனுடைய பேச்சைக் கேட்டவுடன், அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கம் காட்டாற்று வெள்ளமாக பீறீட்டுக்கொண்டு வந்தது கண்டு நடுநடுங்கிப் போனான் பன்னீர் செல்வம். அவள் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டு, “என்னம்மா, என்னாச்சு” என்றான் படபடப்பாக.

“எங்கப்பா போயிட்டு வரே.. இவ்ளோ நேரமா.. பசங்க கூட படிச்சுட்டு வரேன்னு பொய் மட்டும் பேசாதே… “

அம்மாவின் முகத்தைப் பார்த்தவுடன் விபரீதம் புரிந்தது  மகனுக்குத் தன் கண்களை நேரடியாகப் பார்க்கும் தைரியம் இல்லாத போதே லட்சுமியும் புரிந்து கொண்டாள்.

“ஏன் இப்படி செய்தே… வீட்டு நிலைமை உனக்குத் தெரியாதா..உங்கப்பன் செய்யுற அதே தப்பை நீயும் செய்யலாமா….  மெதுவாக ஆரம்பித்த அவள் கோபம் சுற்றுப்புறம், சூழல் என அனைத்தையும் மறக்கச் செய்ய வெறி பிடித்தவள் போல கையில் கிடைப்பதெல்லாம் தூக்கி எறிந்ததோடு, கண்டபடி திட்டவும் ஆரம்பித்துவிட்டாள். இனிமேல் தாயிடம் பேசிப் பலனில்லை என்பதை உணர்ந்தவனாக ஒன்றும் பேசாமல் பசியுடன் போய் சுருண்டு படுத்துவிட்டான்.

மகனை பசியுடன் படுக்கச் செய்துவிட்ட விசனம் ஒரு புறமும், எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கோணும், ஒருவார்த்தை இனிமேல குடிக்க மாட்டேம்மா நீ கவலைப்படாதேன்னு, சொல்லுகிற கரிசனம் கூட இல்லையே என்கிற ஆத்திரம் ஒரு புறமும் அலைக்கழிக்க, தானும் விசும்பிக்கொண்டே படுத்து விட்டாள். மனது கேட்காமல் பன்னீர் மீண்டும் வந்து அம்மாவின் அருகில் உட்கார்ந்து தலையை நீவிக்கொடுத்து,

“அம்மா.. அம்மா.. வாம்மா, சாப்பிடலாம். வயிறு பசிக்குதும்மா.. “ என்றான். ஆனால் தீராத கோபமும், உடல் அலுப்பும், அவளை எழுந்திருக்கவிடவில்லை. அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தாலும், தூக்கத்திலாவது தாய்க்கு நிம்மதி கிடைக்கட்டுமே என்று சற்று நேரம் அந்த பரிதாபமான முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தானும் பக்கத்திலேயே படுத்து உறங்கிப் போனான்.

அசதியில் வெகு நேரம் தூங்கிப் போயிருந்தது புரிய வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தவள், மகன் கிளம்பிப் போயிருப்பது தெரிந்து மேலும் வேதனை பிடுங்கித்திங்க, ஓடிப்போய் சமையலறையில் பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள். இரவு வைத்த சாப்பாடு குறைந்திருந்தது பார்த்து  ஒரு வேளை மகன் சாப்பிட்டிருக்கக் கூடும் என்று நிம்மதி பெருமூச்சு விடப்போனவள், கீழே இறைந்து கிடந்த சாப்பாடும், எச்சில் வட்டிலும் பார்த்து இது கணவனின் வேலை என்பதைப் புரிந்து கொண்டபோது மகன் காலையிலும் சாப்பிடாமலே சென்றுவிட்டது வேதனையின் உச்சமாகிப்போனது. தனக்கும் சமைக்கவும் பிடிக்காமல், சாப்பிடவும் தோன்றாமல் இருக்கிற சாப்பாட்டை அப்பாவிற்கும், மகளுக்குமாகப் போட்டுக் கொடுத்துவிட்டு வேலைக்குக் கிளம்பினாள். நல்ல வேளையாக குடிகாரக் கணவனாக இருந்தாலும், சாப்பாட்டிற்கு தண்ணீர் ஊற்றி வைத்தானே, சாப்பாடு கெடாமல் காப்பாற்றினானே என்று நினைத்துக் கொண்டாள்.

லட்சுமியின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டாள் பார்வதி, ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று. சூப்பர்வைச்ர் அந்தப் பக்கம் போகட்டும் என்று காத்திருந்தவள் அவசரமாக “ஏங்க்கா.. என்னாச்சு, வீட்டில ஏதும் பிரச்சனையா, இவ்ளோ டல்லா வந்திருக்கே, சாப்பிடலையா..?” என்றாள்.

யாரிடமாவது மனம் திறந்து கொட்டினால் தேவலாம் என்று காத்திருந்தவளுக்கு பார்வதியின் அன்பான கேள்வி ஆதரவாக இருந்தது. இரவு நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் கொட்டித் தீர்த்தாள்.

“தப்புப் பண்ணிப்புட்டயேக்கா.. வயசு பசங்ககிட்ட அப்படியா நடந்துக்குவாய்ங்க.. அவிங்க என்ன முடிவு வேணா எடுப்பாய்ங்களே. நாமதானே சாக்கிரதையா இருக்கோணும். சமாதானமா சொல்லித் திருத்தாம இப்படியா நடந்துக்குவே. பாரு நீயும் சாப்பிடாம வந்திருக்கே. சரி சீக்கிரமா என்னோட சாப்பாட்டுல நாலு வாயாவது எடுத்து போட்டுக்கிட்டு வா..மயக்கம் போட்டு உழுந்துப்பிடாதே..” என்றாள் அக்கறையாக.

“இல்ல பார்வதி இன்னும் செத்த நேரத்துல டீ கொடுப்பாங்கல்ல.. அது போதும். மத்தியானமா கேண்டீன்ல எதுனாச்சும் வாங்கிக்கறேன்” என்றாள்.

மதியம் கேண்ட்டீனில் பட்டை சாதம் ஒரு பொட்டலம் வாங்கியவள் மகன் சாப்பிட்டானோ இல்லையோ என்ற நினைவு வாட்ட அப்படியே வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளை பார்வதிதான் திட்டி சாப்பிட் வைத்தாள். ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணிவிட்டு வேலைக்குத் திரும்பியவள், கொஞ்ச நேரத்திலேயே, செக்யூரிட்டி வந்து, “ஏம்மா லட்சுமியம்மா, எங்கம்மா இருக்கே.. “ என்ற சத்தமான குரல் கேட்டு, “இதோ இங்கத்தான் இருக்கேண்ணே, சொல்லுங்க” என்று ஓடினாள்.

மகன் பன்னீர் செல்வத்தை யாரோ நன்கு அடித்துப்போட்டதால் குற்றுயிரும், குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், உடனே வரும்படியும் போன் வந்திருப்பதாக செக்யூரிட்டி சொன்னது முழுவதும் காதில் விழும் முன்னேயே மயங்கிச் சரிந்துவிட்டாள், லட்சுமி. அருகில் இருந்த பார்வதி அப்படியே தாங்கிப் பிடித்ததோடு, சூப்பர்வைசரிடம் சொல்லிவிட்டு அவளைக் கூட்டிக்கொண்டு ஆட்டோவில் அரசாங்க மருத்துவமனை நோக்கி ஓடினார்கள்.

அங்கு போனவுடன் தான் தெரிந்தது, காலையிலேயே டாஸ்மாக் கடையில் ஆரம்பித்த பிரச்சனை பெரிதாக வெடித்து கல்லூரியில் மதியம் சாப்பாட்டு இடைவேளையில் வாக்குவாதம் வளர்ந்து சில மாணவர்கள் சேர்ந்து பன்னீர் செல்வத்தை ஆன மட்டும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் என்று. இதைக்கேட்ட லட்சுமி தலை,தலையாக அடித்துக் கொண்டு, “பாவிப்பய, எவ்ளோ சொல்லியும் கேக்காம, அப்பனாட்டமே குடிகாரனா ஆகிப்போயி, இன்னைக்கு அடிதடி தகராறுன்னு இப்படி சாவக்கடக்கிறானே, கடவுளே.. இப்புடி ஒரு பையனப் பெத்ததுக்கு என் வவுத்துல பெரண்டையத்தான் வச்சிக்கட்டோணும்.. போய்த் தொலைடா..நாயே.. நீ எனக்கு வாணாம்..” என்று அலறினாள்.

இவள் அலறுவதைக் கேட்டு பண்னீர் செல்வத்தின் தாய் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு சிலர் அருகில் வந்து, “அம்மா, இங்க பாருங்க, நீங்க நெனக்கிற மாதிரி உங்க பையன் மோசமானவன் இல்ல… தங்கமான புள்ளையத்தான் பெத்துயிருக்கீங்க, மகராசி நீங்க” என்று சொல்லிவிட்டு அங்கு நடந்ததைக் கூறினர்.

பன்னீர் செல்வம் தனக்கும், தங்கைக்கும் படிப்பு செலவிற்காக பணம் சம்பாதிக்க வேண்டி டாஸ்மாக் கடையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்ததால், கல்லூரி நேரம் போக கிடைத்த நேரமெல்லாம் அங்கு வேலை செய்திருக்கிறான். சக மாணவர்கள் பலர் வந்து குடித்து சீரழிந்துப் போவதை அறிவுரை சொல்லி திருத்தியும் இருக்கிறான். அதில் ஒரு மாணவன் எவ்வளவு சொல்லியும் திருந்தாமல் மற்ற மாணவர்களையும் கூட்டிக்கொண்டு வந்து மது வாங்கிக் கொடுத்து கெடுத்துக் கொண்டிருந்தது பொறுக்காமல் வேறு வழியில்லாமல் கல்லூரி பிரின்சிபாலிடமும், அவனுடைய பெற்றோரிடமும் போய் சொல்லிவிட்டு வந்துவிட்டான். இதனால் கல்லூரி முதல்வர் அவனை கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அந்த ஆத்திரத்தில் சில கூலிப்படைகளின் உதவியுடன் பன்னீர் செல்வத்தை கொலை வெறியுடன் தாக்கியிருக்கிறான். அந்த மாணவனின் பெற்றோர் லட்சுமியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க இதைக் கூறிவிட்டு, மகனை இனிமேல் தாங்கள் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வதாகவும், எத்தனை இலட்சம் ஆனாலும் பன்னீர் செல்வத்தைக் காப்பாற்றுவதாகவும் உறுதி கூறியதோடு போலீசிடமும் கேஸ் கொடுக்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

தன் மகன் குடிகாரன் அல்ல, நல்லது செய்யப்போய்த்தான் இப்படி அடிபட்டு வந்திருக்கிறான் என்பதை அறிந்த அடுத்த நொடி புத்துயிர் பெற்றவளாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். இறைவன் நல்லவர்களை சோதிப்பானேத் தவிர ஒருநாளும் கைவிட மாட்டார் என்று பக்கத்தில் யாரோ சொல்லிக் கொண்டிருக்க லட்சுமியும் அதே நம்பிக்கையில், தம் மகன் சத்தியமாக நல்லபடியாக திரும்பி வருவான் என்று காத்திருக்கிறாள்.
நன்றி : திண்ணை வெளியீடு

2 comments:

  1. எதோ நினைத்தேன்... முடிவு எதிர்ப்பார்க்கவில்லை...

    /// இறைவன் நல்லவர்களை சோதிப்பானேத் தவிர ஒருநாளும் கைவிட மாட்டார் ///

    100% உண்மை...

    ReplyDelete
  2. அன்பின் திரு தனபாலன்,

    தங்களுடைய வாசிப்பிற்கும், கருத்துரைக்கும் நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...