Thursday, July 18, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (19)


பவள சங்கரி
“ஒருவரை விடுவிக்க வெறுமனே அவருடைய சங்கிலிகளை உடைத்தெறிவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிப்பதோடு அதை மேம்படுத்தும் வகையில் வாழ்வதில்தான் இருக்கிறது. 
_நெல்சன் மண்டேலா


அறியாததை அறிந்து, தெரியாததற்குள் காலடி வைக்கலாமா?
நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு வாளாவிருக்கலாமா? அல்லது நம்மை மீறி நடப்பவைகளை எதிர்த்து நின்று போராடலாமா? அல்லது விட்டுவிலகி வேறு பாதையை நாடலாமா?
சமீபத்தில் என் நண்பர் ஒருவரை வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர் சமீபத்தில் மிகப்பெரிய வியாபார காந்தமாக மாறிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். உண்மையில் அவரை எனக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கும் பெருமையாக இருந்தது. காரணம் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து உழைப்பினால் மேல் நிலைக்கு வந்தவர். அன்று அவரைப் பார்த்தபோது என் கற்பனைக்குச் சற்றும் எட்டாத நிலையில் மிகவும் வேதனையாகக் காணப்பட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய வியாபார பங்குதாரர் தன்னை ஏமாற்றிவிட்டு பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்று புலம்பினார். இத்தனைக்கும் அந்தக் கூட்டாளி இவருடைய நெருங்கிய நண்பர். தான் ஏமாற்றப்பட்டதால், வேதனையிலும், கோபத்திலும் உழன்று நொந்து போயிருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் இன்னும் அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தன் வேதனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் முகமாக, இந்த ஏமாற்றத்திற்கு தர்க்கரீதியான ஒரு காரணத்தைத் தேடி தன் மூளையை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறார். எப்படியாவது அதை அறிந்தே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்.

ஆம், அவர் இன்னும் ஓராண்டுக்கும் மேலாக எவ்வளவுதான் உறுதியாக முயன்றாலும், அதற்கான விடை என்னவோ மேலும் விரக்தியான நிலைதான். எவ்வளவு அதிகமாக அதனை அறிய முற்படுகிறாரோ அவ்வளவு குழப்ப நிலைக்குத் தள்ளப்படப்போகிறார் என்பதே நிதர்சனம். அகத்தின் அழகு முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடிக்க, இனி எவரையும் தன் வாழ்நாளில் நம்பவே கூடாது என்ற எண்ணத்தில் சுற்றிச் சுற்றி வருகிறார். இறுதியில் மனமாற்றத்திற்காகத் தன் ஆன்மீகக் குருவைச் சந்தித்தவர், ஓரளவு சமாதானம் அடைந்தவுடன், எல்லாம் தன் துரதிருஷ்டம் என்ற முடிவோடு, யதார்த்தமான நிலைக்குத் திரும்பினார். சில விசயங்கள் ஏன் நடக்கிறது என்று நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத நேரத்தில் அதைவிட்டு விலகிவிடுதல் உத்தமம் இல்லையா. அதை விடுத்து அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு கால விரயமும், மன நிம்மதியையும் இழப்பதைக் காட்டிலும் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை உணர வேண்டும். நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற நிலை வரும்போது அதைக் கடந்த காலமாக ஒதுக்கிவிட்டு, அது எவ்வளவு வேதனையானதாக இருப்பினும் சரி, அடுத்ததை நோக்கி நகர ஆரம்பித்துவிட வேண்டுமல்லவா. இது போன்ற ஏமாற்றுக்காரர்களை, நம்பிக்கை துரோகிகளை, நியாயமும், ஒழுக்கமும் கெட்டவர்களை பணியில் மூழ்கியிருக்கும்போது அறிய முடியாமல் போவதும் இயற்கையே. உலகம் முழுவதும் இது போன்ற ஏமாற்றமான முடிவை ஏற்படுத்துகிற உள்குத்து ஆசாமிகளும், கூட இருந்தே குழி பறிப்பவர்களும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சம்பவத்தில், நண்பர் ஆரம்பத்திலேயே, தான் அறியாமல் அவரிடம் ஏமாந்ததை உணர்ந்து கொண்டு அடுத்து ஆக வேண்டிய காரியத்தில் கவனம் கொண்டிருந்தால் எத்தனையோ காரியங்களை முடித்திருக்கக்கூடும். தன்னை சரியானவன் என்று நிரூபிப்பதற்கு ஒருவர் அதீத முயற்சி மேற்கொள்ள வேண்டியதாகிறது. தான் அதிகம் நேசிக்கும் தம் குடும்பத்தினரைக்கூட விமர்சிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் அதனாலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி வந்துவிடுகிறது.
வேலையைச் செய்வதற்கு மாற்றுத் திறனாளிகள் படும்பாடு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் மனதளவில் பிரச்சனைகளால் முடமாகிப் போனவர்களை பார்த்தவுடன் கண்டுபிடிப்பது அரிது. தங்களுக்குள்ளாகவே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பார்கள். ஒரு கதை படித்தது நினைவிற்கு வருகிறது. காட்டுத்தீ பரவியிருந்த ஒரு பெரிய வனத்திலிருந்து மீட்கப்பட்டு , ஒரு கூண்டின் மூலமாக பயணப்பட்டு வந்து சேர்ந்த ஒரு பெரிய சிங்கம், தேவையான இயற்கை உணவு, அதிகமான நீர் வளம் என அதற்குத் தகுந்த தங்குமிடமாக இருந்தும் அந்தச் சிங்கம் அந்தக்கூண்டை விட்டு வெளிவர மறுக்கிறது. அந்தக் கூண்டிற்குள் இருப்பதே தனக்குப் பாதுகாப்பான சூழல் என்று எண்ணுகிறது. கூண்டின் கதவு பரவலாகத் திறந்த பின்னும் அது வெளியே வர மறுத்து, அந்தக் கூண்டின் ஒரு மூலையில் சென்று முடங்குகிறது. ஒரு சிங்கத்திற்கு கூண்டில் அடைந்து கிடப்பதைக்காட்டிலும் அதிகமாக வேறு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது. ஆனால் கூண்டிற்குள்ளிலிருந்து, தெரியாத புதிய உலகில் அடி எடுத்து வைப்பதைக்காட்டிலும் கூண்டிற்குள்ளேயே இறந்துபட்டாலும் தேவலாம் என்ற முடிவிற்கு வருகிறது. நம்மில் பலர் இந்த சிங்கத்தின் நிலையில்தான் இருக்கிறோம். நம்மைச் சுற்றி நாமே உருவாக்கிக் கொள்ளும் கூண்டில் அடைபட்டு வெளிவரத் தயங்குகிறோம். குறிப்பாக திருமண வாழ்க்கையில் தோல்வியுற்ற பல பெண்கள் அடுத்து வரும் நல்ல வாழ்க்கையைக்கூட ஏற்கத் தயங்குகின்றனர். வாழ வேண்டிய காலம் கடந்த பின்பு, உள்ளார்வமும், இழந்த இளமையையும் எண்ணி ஏங்கிப் போகின்றனர்.

வலி நிறைந்த சூழலை விட்டு விலகி அதீதமான சுதந்திரம் பெறுவதற்கான வழி, முதலில் அந்தக் கூண்டை ஒப்புக் கொண்டு அதில் ஏறி வந்தாலும், விரைவில் அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயல்படத் துவங்கிவிட வேண்டும். ஆனால் கூண்டில் அடைபட்டுக் கிடந்தால் பாதுகாப்பற்ற சூழலும், துன்பத்திலிருந்து தப்பிக்கும் உபாயமும் கிடைக்காது. மாறாக துன்பச் சுமை கூடிக்கொண்டேதான் போகும். பழக்கப்பட்ட கூண்டைவிட்டு வெளியே வர வேண்டுவதெல்லாம், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆர்வம் மற்றும் புதிய சூழலை எதிர்கொள்ளும் துணிச்சலும் மட்டுமே!
பரந்த உலகில் அறிந்த கூண்டிற்குள் அடைபட்டு சித்திரவதைபடுவதைக் காட்டிலும், அறியாத புதிய சூழலை துணிவுடன் எதிர்கொண்டு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்வதே வெற்றிப்பாதை அல்லவா!
தொடருவோம்
 படங்களுக்கு நன்றி ;
நன்றி : வல்லமை

1 comment:

  1. ஏமாற்றுக்காரர்களை, நம்பிக்கை துரோகிகள், ஒழுக்கம் என்பதே அறியாதவர்கள், (இன்னும் பல ) அதிகம் உள்ளார்கள்... இன்றைக்கு அதிகம்...! அவர்களை சந்திக்காமலும் இருக்க முடியாது... அதனால் ஏற்படும் விளைவுகளை உடனே களைத்தெறிய வேண்டும்... (சிரமம் தான்...) முடிவில் உள்ள வரிகள் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...