Friday, July 26, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (20)


பவள சங்கரி

துக்கத்தை சுமையென ஒதுக்க முடியுமா?



“தோல்வி, வேதனை , போராட்டம், இழப்பு, அதள பாதாளங்களிலிருந்தும் மீண்டு வரும் வழி போன்றவற்றை அறிந்தவரே, நாம் அறிந்தவர்களிலேயே மிக அழகான மனிதர்கள். இந்த மனிதர்களே,  பாராட்டு, உணர்திறன் மற்றும் கருணை, கனிவு, ஆழமான அன்பு போன்றவைகள் நிறைந்ததொரு  புரிதலான வாழ்க்கையை வாழ்பவர்கள். அழகான மக்கள் சட்டென்று தோன்றுவதில்லை”.
எலிசபெத் குப்ளர் ராஸ்



‘துக்கம்’ என்ற அந்த வார்த்தையே நம் ஒவ்வொருவரையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. நாம் அறிந்த  ஒருவருக்கு அந்த சோகம் நிகழும் போதே நம் மனமும் கடந்து துடிக்கிறது. சில நேரங்களில் அதிலிருந்து முழுமையாக விலகிவிடவும் தோன்றும்.  அந்த நேரத்தில் இது போன்ற நிலை நமக்கும் ஒரு நாள் வரக்கூடும், நம்மைச் சேர்ந்த, நாம் உயிராய் மதிக்கிற ஒருவர் நம்மைப் பிரியும் தருணமும் வாய்க்கலாம் என்று அறிவு அறிந்தாலும், உணர்வு அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கி தப்பி ஓடவே பார்க்கிறது. சில காலம் முன்பு என் நெருங்கிய தோழி, சரியான புத்தகப்புழு என்று பெயர் வாங்கியவள், பலவிதமான புத்தகங்களையும் படிப்பவள். ஒரு நாள்  எலிசபெத் குப்ளர் ராஸ் என்ற உளவியல் ஆய்வாளரின் On Death and Dying என்ற நூலைக் கொடுத்து படிக்கச் சொன்னாள். இருபதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான உளவியல் நூல்களின் ஒன்றான இது, இறப்பு மற்றும் மரணத்தின் வாயிலில் நிற்போர் பற்றிய கருத்தரங்கின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதில் மரணத்தைக் கையாள்வதற்குரிய யோசனைகள் , மறுப்பு மற்றும் தனிமை, கோபம், பேரம், மன அழுத்தம் மற்றும் ஏற்பு  போன்ற ஐந்து நிலைகளில் ஆராயப்படுகின்றன. நேர்காணல் மற்றும் உரையாடல்கள் மூலம், திடீர் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அதற்கான தீர்வு, அந்த மரணத்தினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவை போன்றவற்றை மிக அழகாக எடுத்துரைக்கும் நூல் இது என்றாலும், இதை ஏன் எனக்கு அவள் இப்போது கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும் என்று குழப்பமாகவே இருந்தது. அவளிடமே அதைக் கேட்ட பொழுது அவளும்,  இந்த உலகில் பிறந்த யாராக இருந்தாலும் ஏதோ ஒரு நாள் இது போன்ற ஒரு சூழலைச் சந்திக்காமல் இருக்க முடியாதே. இந்த உலகில் தோன்றியது எதுவும் நிலையாக இருக்கும் என்ற சாத்தியம் இல்லை. என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் அல்லது மாற்றம் பெறும். இது உறவுகளுக்கும் பொருந்தும். என்றோ ஒரு நாள் சந்திக்கப்போகும் அந்த சூழ்நிலைக்கு நம்மை நாம் முன்னரே தயார்படுத்தி வைத்துக்கொண்டால் அதன் பாதிப்பிலிருந்து ஓரளவிற்குத் தப்பிக்கலாமே. அல்லது நமக்கு வேண்டியவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படும்போது அதிலிருந்து அவர்கள் மீண்டுவர உதவலாமே என்றபோது, ‘அடடா, இப்படி ஒரு கோணத்தில் யோசிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று நினைத்ததோடு உடனே அதனை வாசித்தும் முடித்தேன். 



சில நாட்கள் சென்றிருக்கும், எங்கள் தெருவில் சில வீடுகள் தள்ளி வசிக்கும் தோழி ஒருவருக்கு திடீரென்று இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் இவருடைய கணவர் எந்த விதமான நோயும் இல்லாதவர். இவர்களுக்கு பள்ளியிறுதியாண்டு படிக்கும் அன்பான ஒரே மகன். மனைவி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் என்பதால் மகனை எப்படியும் மிக உயர்ந்த மதிப்பெண் பெறச்செய்து, நல்லதொரு பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு படிக்க வைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் காலை அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவர், லேசாக மயக்கமாக இருக்கிறது என்று படுத்தவர் திரும்பவும்  எழுந்திருக்கவே இல்லை. அவசரமாக உடனே மருத்துவமனை எடுத்துச் சென்றபோதும்,   ‘மேசிவ் அட்டாக்’ என்று பெயர் சொல்லி அவரை வெறும் உடலாக திருப்பி அனுப்பிவிட்டார்கள். தன் கணவனும், மகனும் மட்டுமே உலகமாக  நம்பி வாழ்ந்து வந்தவருக்கு அனைத்துமே  சூன்யமாகத் தென்பட  மன அழுத்தத்தின் எல்லைக்கேச் சென்றுவிட்டார். அவ்வப்போது வழியில் பார்க்கும்போதெல்லாம் நலம் விசாரிக்கும் அளவில் எங்கள் பழக்கம் இருந்தாலும் இந்த பேரிழப்பின் காரணமான அவர் நிலையைக்  காணும் போது என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த வீட்டில் மயான அமைதியே நிலவியிருந்தது. அவர் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதும் அவரால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. மகனின் பள்ளியிறுதி தேர்வும் நெருங்கும் சமயம். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு அந்தத் தாய் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியதுதான்.  இதனை எடுத்துச் சொல்லும் துணிச்சல் நெருங்கிய உறவினர்களுக்கு வரவில்லை. அதையும் மீறி ஓரிரு வார்த்தைகள் சொன்னதும் அதுவும் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. வேதனையின் உச்சத்தில் இருந்தவரிடம், “உன் துக்கத்தைப் புதைத்து விடு, அதைப்பற்றியே நினைக்காமல் கவனத்தை திசை திருப்பிக் கொள், உன் துன்பங்கள் மறைந்துவிடும்” என்ற ஒட்டு மொத்த அறிவுரை மேலும் துன்பத்தை அதிகப்படுத்துவதாகவே இருந்தது. இதற்கு பல உதாரணங்களைக் கொடுக்கலாம்.  ‘அவர் நேரம் அப்படி, அவர் போய்விட்டார்’, ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்பது போன்ற ஒரு சில வார்த்தைகள்கூட நன்மைகளுக்குப் பதிலாக  நொந்த புண்ணில் உப்பைத் தூவுவதாகக்கூட அமையலாம். 

தவிர்க்க இயலாத அந்த துக்கத்தை திறந்த மனதுடன், அறிவுப்பூர்வமாக, நட்புரீதியாக, உண்மையாக ஏற்றுக்கொள்வதால் அதிலிருந்து மீண்டுவர வழி பிறக்கும். இந்த வகையில் பேசி பாதிக்கப்பட்ட அந்தத் தாயை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வெகு விரைவில் கொண்டுவர முடிந்தது. இன்று மகன் தான் விரும்பியபடி  பொறியாளராக ஒரு நல்ல அலுவலகத்தில் பணிபுரிய மகனுக்கு மணம் முடித்து தன் கணவனே வந்து பேரக் குழந்தையாகப் பிறந்திருப்பதாக மன நிறைவுடன் இருக்கிறார். நாம் எதிர்பார்த்தோ அல்லது எதிர்பாராமலோ நம்மை அணுகும் துக்கத்தை விட்டு விலகி ஓட நினைக்காமல் அதை, அதன் இயல்புடன் நின்று, இதயப்பூர்வமான துணிவுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். நடைமுறைக்கு உதவக்கூடிய ஒரு சுமுகமான உறவை அந்த துக்கத்துடன் ஏற்படுத்திக் கொள்வதே அதிலிருந்து மீண்டுவர சிறந்த வழியாகும்  என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். மனித மனங்களின் இயற்கை குணங்களின் முக்கியமான ஒன்று ஏதேனும் ஒன்றை உறுதியாகப் பிடித்துக் கொண்டு வாழ்வது, குறிப்பாக நாம் அதிகமாக நேசிக்கும் உறவுகளை. இதனாலேயே நம் ஆன்றோர்கள் தாமரை இலைத் தண்ணீர் போன்றே நம் உறவுகளை நெருங்க வேண்டும் என்றனரோ? ஆனால் சிலர் நீண்ட காலங்களுக்கு பிடியைத் தளர்த்த மனமில்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பிரிவின் துயரம் சிலருக்கு மரண வேதனை கொடுக்கவும் செய்கிறது. சிலர் அந்த வலியை ஏற்றுக் கொண்டு அந்த ரணத்திலிருந்து மீண்டுவர முயற்சி எடுத்து வெற்றி பெறுகிறார்கள். 

வேதனையில் இருக்கும் போது, கண்ணீரைத் துடைக்கும் அன்பான கரங்களை நாடுங்கள். தன்னைப் போலவும், அதற்கு மேலும் வேதனைப்படுபவர்கள் இந்த உலகில் பலர் இருக்கின்றனர் என்பதையும் உணருங்கள். மனம் ஆறுதல் பெற்று பணியில் நாட்டம் கொண்டு, வெற்றிக் கனியைப் பறிக்க வழிகாட்டும். 

* மீன்கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் மூழ்குகின்ற போது, சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும் .வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் அந்த நீரும் அகன்றுவிடும். அதுபோல உலகியலில் ஈடுபட்டாலும் பற்றற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 
-ராமகிருஷ்ணர் 


சுகமும், துக்கமும் இணைந்ததுதான் முழுமையான வாழ்க்கை அல்லவா?

“ஆசை அறுமின், ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்!”

தொடருவோம்

நன்றி : வல்லமை

படங்களுக்கு நன்றி:

5 comments:

  1. சுகமும், துக்கமும் இணைந்ததுதான் முழுமையான வாழ்க்கை அல்லவா?//

    ஆம், நீங்கள் சொல்வது உண்மை.
    எங்கள் குடும்பத்தில் உணர்ந்த வலிகள்.(என் அப்பா, என் அண்ணன் அவர்களின் திடீர் மரணம்)
    காலம் தான் ரணங்களை ஆற்றியது. என் அம்மாவும், அண்ணியும் குழந்தைகளுக்காக மீண்டு வரும் தெம்பை கொடுத்தது.
    நல்ல தன்னபிக்கை தரும் பதிவு.
    வல்லமையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆற்று வெள்ளம் போன பின்னாலே...
    அமைதி கொள்ளும் வெண்மணல் போலே...
    நேற்று துன்பம் நாளை விலகும்...
    நெஞ்சம் முழுதும் நிம்மதி ஆகும்...

    சிரிப்பு பாதி அழுகை பாதி...
    நெருப்பு பாதி நீரும் பாதி...
    நிறைந்ததல்லவோ உலக நீதி...
    சிரிப்பு பாதி அழுகை பாதி...
    சேர்ந்ததல்லவோ மனித ஜாதி...

    நல்லதொரு ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. தன்னம்பிக்கை தரும் பதிவு அருமை...!

    ReplyDelete
  4. குறிப்பாக நாம் அதிகமாக நேசிக்கும் உறவுகளை. இதனாலேயே நம் ஆன்றோர்கள் தாமரை இலைத் தண்ணீர் போன்றே நம் உறவுகளை நெருங்க வேண்டும் என்றனரோ?

    எதிலும் அதிகம் பற்று வைக்காமல் வாழ்வது நல்லது..!

    ReplyDelete
  5. கனமான கட்டுரை.
    மிகுந்த சோகம் கலவரம் துக்க வயப்படும் காலங்களில் நாம் செய்ய வேண்டியதை அறிவு மறைத்து விடுகிறது என்பதும் இங்கே கவனிக்க வேண்டியதாகும். மகிழ்ச்சியை உற்றவர் மற்றவருடன் பகிர்ந்து கொள்வது எளிது - சோகங்கள் அப்படியல்ல, தனிமையை தேட வைக்கிறது. துரதிர்ஷ்டம்.

    ReplyDelete