Monday, July 8, 2013

கேத்தரீனா




                                           
பவள சங்கரி

 “சபேசா, இன்னைக்கு பொண்ணு பாக்க வறோம்னு சொல்லியிருக்கு, சாயங்காலம் 5 மணிக்கு போகணும். மணி மூனு ஆவுதுப்பா. சீக்கிரம் தயாராகிடுப்பா..”

அம்மா.. ஏம்மா.. இப்படி சொன்னா புரிஞ்சிக்காம அடம் புடிக்கறீங்க. என் வாழ்க்கைய என்னை வாழவிடுங்க. எனக்கு பிடிச்சப் பொண்ணைகல்யாணம் செய்துக்க உடமாட்டேன்னு நீங்கதான் அடம் புடிக்கறீங்க. முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை, அதுவும் கிராமத்துப் பொண்ணை கட்டிக்கிட்டு அமெரிக்காவுல போய் எப்படி குடும்பம் நடத்த முடியும். நாலு வார்த்தை சேர்ந்தா மாதிரி இங்கிலீஷ் பேச முடியாது, புரிஞ்சிக்கவும் முடியாது. அங்க போய் ரொம்ப கஷ்டப்படணும்மா. சொன்னா புரிஞ்சிக்கோங்க. இவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவெல்லாம் எனக்கும் நேரம் இருக்காது. மொழி தெரியாம, நான் ஆபீசு போன நேரத்துல  ஏதாச்சும் பிரச்சனைன்னா என்ன பண்ணுவா.. தேவையாம்மா இதெல்லாம்? எனக்கு கல்யாணமே வேண்டாம். ஆளை உடுங்க


ஆமாப்பா, இப்படி சொல்லிப்புட்டு அங்க அந்த வெள்ளைக்காரி, கதலீயாவா காத்தாயியா, எவளோ ஒருத்திக்கூட புள்ளையப் பெத்துக்கிட்டு  வந்து நிக்கலாம்னு பாக்குதியா... அதெல்லாம் சரியில்லப்பா.. நாங்க அப்பறம் நாண்டுகிட்டுதான் சாவணும். சொந்த பந்தத்துல தலை தூக்க முடியாது. என்ன பண்ணுவியோ தெரியாது. இந்த தபா, கண்ணாலம் முடிக்காம போனியானா அடுத்த தபா நீ வரும்போது, ஆத்தா, அப்பன்னு  கூப்பிட உனக்கு யாரும் இருக்கமாட்டாக பாத்துக்க.. இதை சொம்மா மிரட்டறதுக்கு சொல்றதா மட்டும் தப்புக் கணக்கு போட்டுப்பிடாத .. ஆமா.. சொல்லிப்புட்டன்

ஏம்மா.. என்னை இப்படி சாவடிக்கிறீங்க. கேத்தரீனா ரொம்ப நல்ல பொண்ணும்மா. அவ வெள்ளைக்காரியா பொறந்ததைத் தவிர ஒரு தப்பும் செய்யலையேம்மா. நம்ம இந்தியக் கலாச்சாரத்துல அவளுக்கு இருக்கற ஈடுபாட்டோட, எங்க காதல் மேல இருக்குற ஈடுபாடு ரொம்ப கம்மி. நம்ம ஊரு பொண்ணுங்ககூட அவ அளவுக்கு நம்ம பண்பாடு, பாரம்பரியத்தின் மீது மதிப்பும், மரியாதையும் வச்சிருக்காங்களான்னு சொல்ல முடியாது. அவ்ளோ கட்டுப்பாடா இருக்குறவம்மா. தவறிப்போயி அமெரிக்காவுல பொறந்துட்டா. நான் இந்தியன்கற ஒரே காரணத்துக்காகவே என்னை லவ் பண்ணினவ.. அவகிட்ட எந்த குறையும் இல்லை.. குறையெல்லாம் உங்க பார்வையிலதான். உங்க இரண்டு பேரையும் தெய்வமா மதிக்கிறவ அவ...  அவளைப் பத்தி புரிஞ்சிக்கிட்டீங்கன்னா உங்களுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். நீங்க சொன்னா அவளை உடனே கிளம்பி இங்க வரச்சொல்றேன். நேரில பார்த்துட்டு உங்க முடிவைச்  சொல்லுங்க

அப்பா, சாமி இதுக்கும் மேல அந்தக் கெரவத்தைப் பத்தி இங்கனப் பேசாத.. உங்க அப்பாரு காதுல உழுந்தா போதும், ரணகளமாயிடும் பாத்துக்க

கணினி வல்லுநரான சபேசன் ஹட்சன் கம்பெனியில்   உயர் பதவியில் இருப்பவன். ஒரு பிராஜக்டிற்காக சென்னையிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று இரண்டு ஆண்டுகளாக தங்கியிருப்பவன். காத்தரீனா, பரத நாட்டியம் குறித்த ஆய்விற்காக இந்தியா வந்தவள் என்பது முதன் முதலில் தன் நண்பனின் கட்டாயத்தின் பேரில் பரத நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றபோது அறிந்து கொண்டான். நம் இந்தியக் கலாச்சாரங்களின் மீது அவளுக்கு இருந்த அதிகமான ஈடுபாடும், விகல்பமில்லாத குழந்தைத்தனமான அவளுடைய பேச்சும் வெகு எளிதாக முதல் பார்வையிலேயே அவனை ஈர்த்துவிட்டதுஅமெரிக்கா திரும்பும்போது அவளுடன் பயணம் செய்ய அமைந்த வாய்ப்பினால் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அடிப்படையில் பல விசயங்களில் இருவருக்கும் ஒத்த கருத்து இருந்தது அவர்களை மிகவும் நெருக்கமாகச் செய்தது.   தன்னுடைய கம்பெனியிலேயே அவளும் பணிபுரிவதை அறிந்து உள்ளம் பூரிப்படைந்தது. அது விரைவாக  காதலாகவும் மாறிவிட்டது. தமிழ்நாட்டு மருமகளாக வாழ்வதையே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்தவள், சபேசனின் ஒழுக்கமும், அன்பாகப் பழகும் தன்மையும் மிகவும் பிடித்துப்போக, அவனிடம் தன் மனதைப் பறிகொடுத்தவள், அத்தோடு நிற்காமல்தன்னை அவன் முழுமையாக ஏற்றுக்கொள்ளுவான் என்று நம்பி தன் பெண்மையையே  பறி கொடுத்தாள். இருவரும்  கணவன், மனைவியாகவே ஆறு மாதமாக வாழ்ந்து கொண்டிருப்பதை  பெற்றவர்களிடம் சொல்லும் துணிச்சல் இல்லாமல், காதலி என்று மட்டும் சொன்னதற்கே வீட்டில் இத்தனை கலாட்டா.

பெண் வீட்டில் சொல்லிவிட்டதால் போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்ற தந்தையின் கட்டளையை மீற முடியாமல், மௌனமாக சென்று நின்றுவிட்டு வந்தான். பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை அவனால். சாந்தமான, வெகுளியான அந்த முகமும், என்னை வேண்டாம் என்று சொல்லிவிடாதே என்ற கெஞ்சல் நிறைந்த பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அந்த  கண்களும், பதிலேதும் பேசாமல் மௌனமாக வரச் செய்துவிட்டது. ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் ஒரேப் பிடியாக பெற்றோர் இருவரும் அவனைக் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்துவிட்டனர். இறுதியான அஸ்திரமான, தன்னால் திருமணத்திற்கு நிற்கும் தன் தங்கையின் வாழ்க்கையும் பாதித்துவிடும் என்பது வேலை செய்ய ஆரம்பிக்க மன பாரத்துடனே கோகிலாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டு அமெரிக்கா அழைத்து வந்துவிட்டான்.

இரண்டு நாட்கள் விடுமுறையில் இருந்து திரும்பி வந்த கேத்தரீனாவிற்கு விசயம் தெரிந்தவுடன் அதிர்ச்சியில் பாவம் உறைந்துதான் போய் விட்டாள். தன்னுடைய அடுத்த கேபினில் இருப்பவளை நொடிக்கொரு தரம் கண்டு களித்து இன்பத்தை பரிமாறிக் கொண்டவளை இன்று ஏறெடுத்துப் பார்க்கவே அஞ்சி  குற்ற உணர்வில் மாய்ந்து போனான். ஆனால் கேத்தரீனாவோ முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் பதுமையாக வந்து போய்க் கொண்டிருந்தவள் சில நாட்களிலேயே வேறு ஒரு பிரிவிற்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வெகு தூரமான டெக்ஸாஸ் மாநிலத்திற்குப் போய்விட்டதாக  அவளுடைய நண்பர்கள் மூலமாகத் தெரிந்துகொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தான்.

கோகிலா, தன்னுடைய அன்பான உபசரிப்பு, அதிகமான அக்கறை மற்றும் வெகுளியான போக்கினாலும் வெகு எளிதாகக் கணவனைக் கவர்ந்துவிட்டாள். விரைவிலேயே அவனுடைய குழந்தையைச் சுமக்கும் பாக்கியமும் பெற்றவுடன் சபேசன் மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு கோகிலாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்க ஆரம்பித்துவிட்டான். அவளுக்கு நல்லதொரு கணவனாக நடந்து கொண்டாலும், அவ்வப்போது கேத்தரீனாவின் யார்ட்லி செண்ட் மணமும், மென்மையான அவளுடைய அணைப்பின் சுகமும், நாணமில்லாத, வெளிப்படையான அந்த உறவும், அழுத்தமான  முத்தமும் நினைவில் வந்து அவனை கிறங்கச் செய்து கொண்டிருந்ததும் உண்மைதான். அவளை முழுமையாக மறக்க முடியாமல் தடுமாற்றமும் இருந்து கொண்டுதானிருந்தது.

தாய் நாட்டிற்கு விடுப்பில் சென்றிருந்த அவனுடைய பிராஜக்ட் மேனேஜர் ரிஷவன்அங்கிருந்து கொண்டும் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்ததால், சபேசன் வெகு சுறுசுறுப்பாக இரவு பகல் பாராது பிராஜெக்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். ரிஷவனும் இரவு வெகு நேரம் தூக்கம் விழித்து பிரச்சனைகளை சரி செய்ய வேண்டியிருந்தது. ரிஷவனின் வேகத்திற்கு ஈடு கொடுப்பது சபேசனிற்கு சற்று சிரமமானதன் காரணம் இணையத் தொடர்புதான். வீட்டின் இணைப்பு மிகவும் வேகம் குறைவாக இருந்ததால் வேறு என்ன செய்வது என்று யோசிக்கும் வேளையிலேயே ரிஷவன் மிகவும் அவசரப்படுத்தியதால் ஆபீசிலேயே போய் வேலை செய்வது தேவலாம் போலிருந்தது. இந்த கடும் குளிரில் கனமான உடைகளையும், காலணிகளையும் அணிந்து கொண்டு .. காரின் மீது பனிக்கட்டிகள் மலையெனக் குவிந்து கிடக்குமோ? அதையும் சுத்தம் செய்ய வேண்டுமே.. இந்த கடுங்குளிரில் தெருவில் நடமாட்டமும் சுத்தமாக இருக்காது. தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது. அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் மனைவி கோகிலாவை எழுப்ப மனம் வரவில்லை. விடிந்ததும் போனில் கூப்பிட்டு சொல்லிக் கொள்ளலாம் என கிளம்பினான். சலனமில்லாமல் நிம்மதியாக உறங்கும் அவளுடைய முகத்தை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. பேரழகி என்று சொல்லும் அளவில் இல்லாவிட்டாலும், அந்த இரவு நேர மெல்லிய ஒளியிலும் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது அவளுடைய முகம்திரும்பவும் ரிஷவன் அவள் அருகில் இருக்கும் போது போன் செய்தால் அவள் தூக்கமும் கலைந்துவிடும். மசக்கையில் துவண்டு கிடப்பவளை சிரமப்படுத்த வேண்டாமே என்று சத்தமில்லாமல் வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினான்.

ஏனோ இந்தக் குளிர் இன்று மிக பூதாகரமாகத் தெரிந்தது. தெருவெங்கும் இரு மருங்கிலும் மலையென குவிந்து கிடந்த பனிக்கட்டிகள் ரொம்பத்தான் இன்று பயமுறுத்தி தண்டுவடமே சில்லிடச் செய்தன. என்னதான் அமெரிக்காவாக இருந்தாலும், நம்ம ஊரின் சுகம் இங்கே எங்கு இருக்கிறது என்ற எண்ணமும் வராமல் இல்லை. அம்மா, அப்பாவின் நினைவுகள் பயண நேரத்தை குறைத்துவிட்டது. ரொம்பவும் வெறிச்சோடிக்கிடந்த அலுவலகத்தை நெருங்கியவுடன், வேகம் தன்னால் வந்துவிட்டது. ரிஷவன் காத்திருப்பானே என்று, செக்யூரிட்டி அறையைத் தட்டி அவனை எழுப்பி, தன் அடையாள அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். பகல் நேரத்தில் பரபரப்பாக இயங்கும் அலுவலகத்தின் நிசப்தம் வித்தியாசமாக இருந்தது. இதற்கு முன்பும் ஓரிரு முறை இப்படி வந்து வேலை பார்த்திருக்கிறான் என்றாலும் இன்று என்னவோ மனதில் கிலி பிடித்தது போன்று இருந்தது . ரிஷவனின் போன் கால் அடுத்த நொடி வேலையின் உள்ளே இழுத்துவிட்டது. இணையம் நல்ல வேகமாக இருந்ததால் பிரச்சனைகளை உடனுக்குடன் சரிசெய்ய முடிந்தது. இரவு பத்து மணிக்கு உள்ளே நுழைந்தவன் வேலை மும்முரத்தில் நேரம் போனதே தெரியவில்லைதிடீரென முதுகில் ஒரு சில்லிப்பு. பின்னால் யாரோ நிற்கிறார்களோ.. திரும்பலாமா வேண்டாமா.. தினமும் வந்து பழகிப்போன இந்த இடம் ஏனோ இன்று புதுமையாகத் தெரிந்தது. யாரோ மெலிதாகக் கூப்பிடுவது போல இருந்தது. திரும்பித்தான் பார்க்க வேண்டும். செக்யூரிட்டி நின்றிருந்தார். ‘என்னஎன்பதுபோல புருவம் உயர்த்திப் பார்த்தான் சபேசன். இன்னும் எவ்வளவு நேரம் வேலை செய்வதாக இருக்கிறான் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால், அவனும் தூங்கிக் கொள்ளலாம் என்று நிம்மதியாக தன் அறைக்குள் சென்று அடைந்துவிட்டான். சுவர் கடியாரத்தை அப்பொழுதுதான் பார்த்தான். மணி 12 அடிக்க 5 நிமிடங்களே இருந்தது.. சே.. இப்பபோய் இந்த கடிகாரத்தை பார்த்திருக்க வேண்டாமோ..  வேலையை சீக்கிரம் முடித்துவிட்டுக் கிளம்ப வேண்டும்.. கோகிலாவின் நினைவு வந்தது. ஒரு வேளை விழித்துக்கொண்டு தேடிக்கொண்டிருப்பாளோ.. பாவம் பக்கத்தில் தான் இல்லாமல் பயந்து விடுவாளோ என்று நினைத்து, எதற்கும் போன் செய்து பார்க்கலாமா.. தூக்கத்தைக் கலைக்க வேண்டாமே என்று தோன்றினாலும், மனசு கேட்காமல் போனை எடுத்து சுழற்ற ஆரம்பித்தான். போன் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஏதோ நீண்ட ஒரு சத்தம் வித்தியாசமாக வந்தது. அலுவலக தொலைபேசியிலிருந்து கூப்பிட முயன்ற போதும் ஆச்சரியமாக அதே சத்தம் வந்தது. கோகிலாவே கட்டாயம் கூப்பிடுவாள் என்று நினைத்த போது, ஒரு வேளை அவளுக்கும் இணைப்பு கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் வந்ததால் அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை அவனுக்கு. உடனே கிளம்ப வேண்டும் என்று தோன்றினாலும், இன்னும் சில வேலைகள் பாக்கியிருப்பதை முடித்துவிட்டு ரிஷவனிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தான். ஆச்சரியமாக ரிஷவனின் போன் மட்டும் தெளிவாகக் கேட்டது!

அற்புதமான ஒரு செண்ட் மணம். யார்ட்லி செண்ட் மணம் போலவே இருக்கிறதே ... தன்னைச் சுற்றி ஒரு வளையமாக சுற்றிக் கொண்டிருப்பது போலத் தெரிந்த ஏதோ ஒன்று தன் உடல் முழுவதையும்  ஆக்கிரமித்துக் கொண்டது போல ஒரு உணர்வு..  ஒரு சுகமான அனுபவமாகவே இருந்தது அது. சற்று தூரத்தில் பின்புறம் தெரிய யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அட இந்த அறையில் வேறு யாரோ ஒருவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே. இவ்வளவு நேரம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே.. செக்யூரிட்டியும் ஏதும் சொல்லவில்லையே.. குறுக்கே இருந்த கேபின்கள் காட்சியை சற்றே மறைத்திருந்தது. சரி அருகே சென்று பார்ப்போம். பேச்சுத் துணைக்காவது ஆள் கிடைத்ததே என்று அருகே செல்ல ஆரம்பித்தான். நெருங்க, நெருங்க அது ஒரு பெண் என்பது புரிந்தது. ரொம்ப தூரம் போய்க் கொண்டிருப்பது போலத் தெரிகிறதே ....

ஹாய்... ஆர் யூ வொர்க்கிங் ஹியர்தன் வாயிலிருந்து சத்தம் வந்தது ஏனோ காதில் விழவில்லையே..  ஒரு வேளை பேச்சே வரவில்லையோஅவள் திரும்பி பதில் சொல்லக் காத்திருக்கும் வேளையில் அந்த வாடை மீண்டும் நாசியை மட்டுமல்லாமல் உடலின் உள்ளே ஊடுறுவிச் சென்று ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியது. திடீரென்று கேத்தரீனாவுடன் கழித்த அந்த இன்பமான பொழுதுகள் நினைவிற்கு வந்தது.. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தன் உடல் தன் வசம் இல்லையென்பது மட்டும் புரிகிறது. எங்கோ அப்படியே மிதப்பது போல ஒரு சுகம்.. குளிருக்கு இதமான அணைப்பாக இருந்தது.. மனம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிந்தாலும் அதைத் தடுக்கத் தோன்றவில்லை.. இருக்கட்டுமே.. என்ன வேண்டுமானாலும் ஆகட்டுமே.. திடீரென்று தூக்கி வீசப்பட்டது போல ஒரு உணர்வு..  உடம்பிலுள்ள இரத்தம் மொத்தம் உறிஞ்சப்பட்டுவிட்டது போல ஒரு பலகீனம்.. எழுந்திருக்க முடியவில்லை.. யாரோ கை கொடுத்து தூக்கிவிடுகிறார்களோ.. யார் அது.. அட இந்த பஞ்சுப் பொதி போன்ற ஸ்பரிசம்.. கேத்தரீனாவா.. ஆகா திரும்பவும் அந்த சுகமா...

ஹாய்.. கேத்தீ.. ஹவ் ஆர் யூ..  ஹவ் கம் யூ ஹியர்? ஐயாம் சாரி ஸ்வீட் ஹார்ட்..’ ஆனால் அவள் ஒன்றுமே பேசாமல் திரும்பிக் கொண்டாள். ரொம்பவும் கோபமாக இருப்பாளோ.. இவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமில்லையே. எந்த நேரமும் பிரிவை எதிர்பார்த்தே வாழுபவர்களாயிற்றே.. ஆனாலும் நம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிக்கிடப்பவளான இவள் கொஞ்சம் வித்தியாசப்படுவாளோஇனி என்ன செய்ய முடியும்.. மன்னித்துவிட்டாள் போல இருக்கேஆனாலும் இப்படியே இந்த நட்பை தொடருவது சரியா வருமா.. கோகிலாவுக்கு செய்யற துரோகமில்லையா அது..? இன்னும் முகத்தைக்கூட சரியாகாக் காட்டாமல்தானே இருக்கிறாள் கேத்தி. முழுசா கோபம் இன்னும் தீரலை போல இருக்கே.. சரி மெல்ல மெல்ல சமாதானம் ஆவட்டும். இல்லாட்டியும் சமாதானம் பண்ணிப்போடலாமே..  கேத்தியின் அண்மையில் எங்கோ புதுமையான ஒரு உலகிற்கு பயணிப்பது போல ஒரு மயக்கம் எப்போதுமே உணருவான்.. இன்று அது ரொம்பவும் அதிகமாகியிருந்தது.

ரிஷவன் சபேசனின் பதிலுக்காகக் காத்திருந்தான். ரொம்ப நேரமாக அவனிடமிருந்து பதில் இல்லையே என்று தொலைபேசியில் அழைக்க முயன்றான். பச்சை விளக்கு அவனுடைய பெயரில் மினுக்கிக் கொண்டிருப்பது அவன் இணைய உலகில் இணைந்தே இருப்பதை உறுதிப்படுத்தியது. என்ன செய்கிறான் இவன்.. தூங்கிவிட்டிருப்பானோ.. இப்படி யோசித்துக் கொண்டே விடாமல் மணியடித்துக் கொண்டிருந்தான்.

கேத்தரீனாவின் பின்னால் மந்திரித்துவிட்டது போல அப்படியே செல்பவனைப் பார்த்த செக்யூரிட்டி ஆச்சரியத்தில், இந்த அம்மா இந்த நேரத்தில் இங்கே எப்படி வந்தது.. டெக்ஸாஸ் பிராஞ்சில் இல்ல இருக்கிறது, அதுவும் என்னை மீறி ஒன்றும் சொல்லாமல் கூட எப்படி உள்ளே போயிருக்க முடியும் என்று குழப்பத்துடனே பார்த்துக் கொண்டிருந்தவனால் உடனே பேச முடியாமல் கொஞ்சம் தாமதமாக , ‘ஹே..... எங்கே போறீங்க.. வேலை முடிந்துவிட்டதா.. ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டுப் போங்கஎன்று அத்தனை சத்தமாகக் கேட்டதுகூட காதில் விழாமல் அவள் பின்னாலேயே சென்று கொண்டிருந்தான்இருவரும் சபேசனின் காரில் ஏறும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் ரெஜிஸ்டரில் அதனை அப்படியே பதிவிட ஆரம்பித்தான்.

பனியில் முற்றிலும் உறைந்து கிடக்கும்  கனெக்டிக்கட்டின் பிரதான சாலை. சில மணி நேரங்கள் முன்பு இராட்சச இயந்திரம் மூலம் அதனை வழித்தெடுத்து சாலையோரத்தில் குன்றாக குவித்து வைத்திருந்தார்கள். தரையில் மீண்டும் பனி படர்ந்து கிடந்தது. அப்போதுதான் கேத்தியின் முகத்தைப் பார்க்க முடிந்தது.. பளபளப்பு.. தெளிவாக முகம் தெரியாத அளவிற்கு கண்ணைக் கூசுகிற பளபளப்புஇதுவரை கண்டிராத புதுமையாக இருந்தது என்றாலும் ஆராய்ச்சி செய்து காலவிரயம் செய்யத் தோன்றவில்லை சபேசனிற்கு. எந்த முயற்சியும் இல்லாமல் கார் தன்னிச்சையாக கட்டுப்பாடற்ற வேகத்தில், யாருமில்லாத சாலையில் சருக்கிக் கொண்டு போனாலும் துளியும் அச்சமே இல்லை அவனுக்குசருக்கிக் கொண்டே போன வேகத்தில் வண்டியே நெட்டுக்குத்தலாகப் போவதுகூட இரசிக்க முடிந்ததோ...

விடியலில் விழித்து, கணவன் அருகில் இல்லாமல், போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது பதிலில்லாமல் அடித்து ஓய்ந்து போனதால் அச்சம் கொண்டு,   தந்தைக்குப் போன் செய்து கதறியிருக்கிறாள் கோகிலா. செய்வதறியாது திகைத்தவர், மொழி தெரியாத மகளின் இக்கட்டான இந்த சூழ்நிலையைச் சமாளிக்கும் வழி தெரியாமல் குழப்பத்தில் இருந்தவர், சட்டென்று தன் தூரத்து உறவினரின் மகன் அமெரிக்காவில் இருப்பது நினைவு வந்ததால் கொஞ்சம் நிம்மதி வந்ததுஉடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு, அவர் மூலம் அவருடைய மகனின் தொடர்பு எண்ணை வாங்கிசெய்தியைச் சொல்லி விசாரிக்கச் சொன்னார். நல்ல வேளையாக அலுவலகம் கிளம்பிப் போகாமல் இருந்ததால் உடனே பரபரவென காரியத்தில் இறங்கினார் அவர்போலீசுக்குத் தகவல் கொடுத்ததால், அடுத்த நொடி சபேசனின் அலுவலகத்தில் செக்யூரிட்டியைச் சுற்றி போலீசாரின் முற்றுகை. அவன் கொடுத்த தகவல்களைக் கொண்டு தேடல் ஆரம்பித்தது. அலுவலகத்தின் உள்ளே சபேசனின் இருக்கையில் அவன் வந்து சென்றதன் அடையாளமாக அவனுடைய கணினி விழித்துக் கொண்டிருந்ததோடு, சென்ற முறை தாயகம் சென்றிருந்தபோது அவன் அம்மா அவன் கையில் கட்டிவிட்டிருந்த அந்த சிகப்பு வண்ண காசிக் கயிறு அறுந்து விழுந்து கிடந்தது. அதைத்தவிர கேமராவிலும் வேறு எதுவும் பதிவாகவில்லை.. கேத்தரீனா வந்து சென்றதற்கான அடையாளம் ஏதும் இல்லாதலால், செக்யூரிட்டி சொன்னதில் சந்தேகம் வலுத்தது. காவல் துறையினரின் படு வேகமான நடவடிக்கைகளால், அடுத்தடுத்த சோதனைகளில், சபேசனின் கார் பனிச் சறுக்கலில் சிக்கி, ஒரு சிறிய பள்ளத்தில் உருண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெரிதாக அடி எதுவும் படாவிட்டாலும், நெற்றிப்பொட்டில் ஒரு சிறு காயம் இருந்தது. உயிரற்ற சடலமாக அவன் உடல் மீட்கப்பட்டது. நான்கு நாட்கள் முன்பு கேத்தரீனா என்ற இளம் பெண்ணின் கார் விபத்துக்குள்ளாகிஅவள் உயிர்விட்ட அதே இடத்தில் இன்று சபேசனின் கார் விபத்து! எல்லாம் முடிந்து போயிருந்தது!

நன்றி : திண்ணை


1 comment: