பவள சங்கரி
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்
பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதை நீயே செய்.
மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.
நாம் எல்லோருமே மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அன்பும், கருணையும், பெருந்தன்மையும், பொறுமையும், மன்னிக்கும் மனமும் நிறைந்த அமைதியான உலகைக்காணவே விரும்புகிறோம். குற்றங்களும், தவறுகளும் மலிந்து கிடக்கிற மக்களின் செயல்கள் நம்மைக் கோபமூட்டி, ‘இவர்களெல்லாம் எப்பொழுதுதான் திருந்தப் போகிறார்களோ’ என்று எண்ண வைக்கிறது. நேர்மையற்ற வியாபாரிகள், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், பொறாமை நிறைந்த சமூகம், சுயநலம் நிறைந்தவர்கள், கருணையும், அன்பும் துளியும் இல்லாதவர்கள் என்று பலவகையான மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் உலகம் இப்படி கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிவிட்டதே என்று நொந்து போகிறோம். இப்படி அடுத்தவரிடம் குறை காண ஒவ்வொரு முறையும் நம் ஆள்காட்டி விரலை நீட்டும் அதே சமயம் நம்முடைய மற்ற மூன்று விரல்களும் நம்மையே குறிபார்ப்பதைக் காணத் தவறிவிடுகிறோம். அடுத்தவரின் தரத்தை எடை போடும் அந்தக் கருவி தமக்கென்று வரும்போது தம்மையறியாமலே நியாயத்தை விட்டு விலகிப்போய்விடுகிறது. தமக்கான தீர்ப்பும் பாரபட்சமாகவே ஆகிவிடுகிறது.
உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கக்கூடிய நாம் அதற்கேற்றார்போல முதலில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அன்பு, கருணை, நேர்மை, அமைதி, சுயநலமின்மை போன்ற அனைத்திலும் அடுத்தவரிடம் எதிர்பார்க்கிற அந்த தரத்தை நம்மிடம் முதலில் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா? அப்படி இருக்கும்போது நாமே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவும் முடியும். செய்த தவறுகளை துணிச்சலாக ஒப்புக்கொள்ளும்போது மட்டுமே நம்மால் அதைத் திருத்திக்கொள்ளவும் முடியும். நேர்மையான பார்வையுடன் நம்மை நாமே உணர ஆரம்பிக்கும்போதே நன்மையும், தீமையும் கலந்ததுதான் மனித மனம் என்பது விளங்கும். நம்முள் சக்தியும், பலவீனமும் சரிவிகிதத்தில் இருப்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ள ஆரம்பித்தாலே அடுத்தவரைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டமும் கபடமற்ற முறையில், மன்னிக்கும் மனோபாவத்துடன் இருக்க ஆரம்பித்துவிடும். முள்ளை முள்ளால் எடுக்க முடிவது போல வெறுப்பை, வெறுப்பால் நீக்க முடியாது. புத்தர்பிரான் சொல்வது போல, வெறுப்பை அன்பு கொண்டு மட்டுமே கைப்பற்றமுடியும் என்பதே மாறாத சட்டம். மன்னிக்கும் மனம் மட்டுமே என்றுமே அமைதி காண இயலும். மன்னிக்கும் குணம் மட்டுமே அன்பின் உச்சம். முழுமையாக மன்னிக்கும் மனம் மட்டுமே மகிழ்ச்சியையும், நிம்மதியையும் பெற வல்லது. இந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் மட்டுமே நம்மை வெற்றிப் பாதையில் வழிநடத்தக்கூடியது.
ஓய்வில்லாத மனம்
வெகு நாட்களுக்குப் பிறகு வெளி நாட்டிலிருந்து வந்த என் தோழி திடீரென்று தொலைபேசியில் அழைத்து கோவைக்குச் செல்லும் வழியில், மதிய உணவிற்கு வருவதாகச் சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். இரண்டு மணி நேரம் இருக்கிறதே, எத்தனையோ செய்யலாமே என்று ஆர்வக் கோளாரில் இனிப்பு, காரத்துடன், அவளுக்குப் பிடித்த காளான் பிரியாணி, தயிர் சேமியா, ஆந்திரா ஸ்டைல் பகாலாபாத், பன்னீர் மஞ்சூரியன் என அனைத்தையும் செய்ய ஆயத்தமானேன். நான்கு அடுப்பும் ஒரே நேரத்தில் ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருக்கிறது. பரபரவென ஒவ்வொன்றாக நறுக்கி தாளித்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆகிவிட்டது. அவள் அவசரமாகச் செல்வதால் வெகு நேரம் காக்க வைக்க முடியாது. இந்த பரபரப்பில், காளான் பிரியாணியில் ஊற்ற வேண்டிய தேங்காய்ப்பாலை பிசிபேலாபாத்திலும், பிசிபேலாபாத்தில் போட வேண்டிய மசாலாவை காளான் பிரியாணியிலும் போட்டுவிட்டேன். குழப்பம் அதிகமாக இரண்டையும் அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, தயிர் சேமியாவை முதலில் பொறுமையாகச் செய்து முடித்தேன். அடுத்து அன்னாசிப்பழக் கேசரியும் அருமையாக வந்துவிட்டது. பிசிபேலாபாத்தை மீண்டும் வேறு பாத்திரத்தில் பொறுமையாகச் செய்து முடித்தேன். அவள் சொன்னபடியே குறித்த நேரத்திற்கு வந்தாள் குடும்பத்துடன். சுவையான விருந்து என்று மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுவிட்டுச் சென்றாள். எனக்கும் மன நிறைவாக இருந்தது. இதை ஆரம்பத்திலேயே நிதானமாக முடிவெடுத்துச் செய்திருந்தால் இரண்டு பதார்த்தங்கள் வீணானதைத் தவிர்த்திருக்கலாம். 'Mearsure twice, cut once' என்ற ஆங்கிலப் பழமொழிதான் நினைவிற்கு வந்தது. இருக்கக்கூடிய நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு, முடிந்ததை மட்டும் நிதானமாகச் செய்திருந்தால் இன்னும் அதிக தரத்துடன், சக்தி, காலம், பணம் என அனைத்து விரயத்தையும் தவிர்த்திருக்கலாம்.
மனதின் அதிகப்படியான பணி நெருக்கடிச் சுமை குறிந்த விழிப்புணர்வைக் கொண்டோமானால் நம்முடைய வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான பெரும் மாற்றங்களைச் சந்திக்க முடியும். தத்தம் சக்தியின் அளவை அறிந்து அதற்கேற்றவாரு பணி நிர்ணயம் செய்யும் பழக்கம் மன அமைதியையும், மகிழ்ச்சியையும், நம்ப முடியாத அளவிற்கு நல்ல பலாபலன்களையும் தரவல்லது. பலவிதமான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி குழப்பம் ஏற்படுத்துவதைக் காட்டிலும் ஒவ்வொருப் பணியாக எடுத்துக் கொண்டு அதில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்தி செயல்படும்போது அதன் பலன் மிகத்தரமானதாக ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்பதே நிதர்சனம். மற்றவர்களைக்காட்டிலும் அதிகமான உழைப்பைப் போடுவதான தோற்றம் அளித்தாலும், நம்முடைய சக்தி ஒழுங்கில்லாமல் தன் வழியில் சென்று இறுதியில் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. மனதிற்குள் மட்டுமன்றி வீட்டிற்குள்ளும் அளவிற்கு அதிகமான பொருட்களை அடைக்கும் போது, அது எத்துனை அழகான பொருட்களாக இருந்தாலும் ஒரு கசகசப்பை ஏற்படுத்தி அழகைக் கெடுத்துவிடும். சுத்தம் செய்வதற்கும் சிரமமாகவும் இருக்கும். எந்த நேரத்தில் எந்தப் பணியைச் செய்ய வேண்டும், எதை முதலில் செய்ய வேண்டும் என்று நிதானமாகத் திட்டமிடல் மட்டுமே வெற்றிக்கான பாதையை அடையும் வழி. இது போன்ற தெளிவான திட்டமிடல், குழப்பமானதொரு இருண்ட மனக்குகையிலிருந்து பளிச்சென்ற சூரிய ஒளி நிறைந்த பகுதிக்குள் வந்தது போன்றதொரு சுதந்திரமான நிலையை உருவாக்கும். இந்தச் சுதந்திர நிலையே வெற்றிக்கான ஆதாரம்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா!
நன்றி : வல்லமை
//Mearsure twice, cut once' என்ற ஆங்கிலப் பழமொழிதான் நினைவிற்கு வந்தது. இருக்கக்கூடிய நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு, முடிந்ததை மட்டும் நிதானமாகச் செய்திருந்தால் இன்னும் அதிக தரத்துடன், சக்தி, காலம், பணம் என அனைத்து விரயத்தையும் தவிர்த்திருக்கலாம். //
ReplyDeleteமிகவும் அருமையான அழகான பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
தெளிவான ஆக்கம்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...
ReplyDelete