Tuesday, November 26, 2013

நம்ப முடிகிறதா உங்களால்?





புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டிப் பெண் ஒரு சாதனையாளர் தெரியுமா? மரணத்தை வென்ற மகாசக்தி என்று அந்த வயதிலேயே பாராட்டைப் பெற்று தினசரிகளில் தலைப்புச் செய்தியானவள்..  இவளோட கதையைக் கேளுங்களேன்..

இவளோட தாத்தா சேலத்தில் ஒரு பிரபலமான வக்கீல். கணேச சங்கர் என்று சொன்னால் இன்றும் கூட பழைய தலைமுறையினருக்கு தெரிகிறது.  உயர்நீதி மன்ற கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், எப்பொழுதும் வீட்டில் தாத்தா இருக்கும் நேரம் யாராவது வருவதும், போவதுமாகத்தான் இருப்பார்கள். பெரிய குடும்பம்.  6 மகன்கள், 3 மகள், இரண்டு மனைவிகள் (தாத்தாவின் முதல் மனைவி 9 குழந்தைகளை பெற்றுவிட்டு, கேன்சர் நோய் வந்து இறந்துவிட, இரண்டாவதாக, தாத்தா தானே விரும்பி மணம் முடித்துக் கொண்ட இரண்டாவது பாட்டியின் கதை மிகவும் சுவையானது.. பின் ஒரு நாளில் சொல்கிறேன். தான் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இந்த 9 குழந்தைகளை தன் குழந்தைகளாக கண்ணும், கருத்துமாக இறுதி வரை காத்து வந்த உத்தமி)
..

வீட்டில் மூத்த மகனின் முதல் குழந்தை என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம்.. சித்தப்பாக்கள், சித்திகள், அத்தைமார்கள் என அனைவரும் சேலம் மரவணேரியில் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் கொண்டாட்டமாக வாழ்ந்த மகிழ்ச்சியான காலகட்டம் அது! அத்தனைப் பேரின் பாசமும் ஒரு சேர ஒரு குழந்தைக்கு கிடைப்பது என்பது எத்தனை வரம் .. நினைத்துப்பாருங்கள் இந்த குழந்தை எத்துனை வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்?  அனைவரும் தலையில் வைத்து கொண்டாடினார்கள் என்றால் அது மிகையில்லை.. அடுத்தடுத்து குழந்தைகள் வந்து கொண்டிருந்தாலும் இவளுக்கான பாசம் பங்கிடப்படவில்லை என்பதுதான் அவளுக்கான வரம்! 

சரி விசயத்திற்கு வருகிறேன். அன்று வீட்டில் கட்சிக்காரர்கள் கூட்டம். முன் வராண்டா தாத்தாவின் அலுவலக அறை. மிகப்பெரிய மேசையும், அருகில் பெரிய சுற்றும் அலமாரி - சட்டப்புத்தகங்களுடன் இருக்கும். அருமையான தேக்கு மரத்தினால் ஆன அந்த மேசையும், சுற்றும் புத்தக அலமாரியும் இன்றும் கண்களில் காட்சியாக விரிகிறது! உள்ளே பாட்டியின் அதிகாரம் தூள் பரப்பிக் கொண்டிருக்கிறது. பாட்டி அப்படித்தான். அத்தனை பேரும் பாட்டியின் ஒரு பார்வைக்கு பம்பரமாக சுழலுவார்கள். அவர் அந்த காலத்திலேயே நர்சு வேலைக்குப் படித்து, ஒரு பிரபலமான மருத்துவமனையில் பணிபுரிந்தவர். எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வந்தவர். வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம். தாத்தா நீதிமன்றத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்ததால், சமையல் வேலை நடந்து கொண்டிருந்தது. அம்மா, சித்தி எல்லாம் சுழன்று கொண்டிருந்தார்கள். தாத்தா பூஜை ஒரு மணி நேரம் செய்வார். பூஜை முடித்து வெளியே வந்தவுடன் காபி சாப்பிட்டுவிட்டு, கட்சிக்காரர்களை சந்தித்துவிட்டு உள்ளே வரும்போது அவருக்கு சாப்பாடு தயாராக இருக்க வேண்டும்.. இல்லையென்றால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்..  (அவரோட படம் ஸ்கேன் செய்ய வேண்டும்.. )  அன்று இப்படி பரபரப்பாக இருந்தபோது, இந்த குட்டிப் பெண் சித்தப்பாவிடம் போய் மிட்டாய் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறாள். தாத்தா கிளம்பியவுடன் வாங்கித் தருவதாக எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்ததால் அப்போதைக்கு சமாதானம் செய்வதற்காக சித்தப்பா அவள் கையில் 10 பைசா காசு ஒன்றை கொடுத்திருக்கிறார். 

எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சமயம், (தாத்தாவின் ஷீவிற்கு பாலிஷ் தினமும் போட வேண்டும்) இந்த சுட்டிப் பெண் காசை எடுத்துக் கொண்டு தானே கடைக்குச் செல்ல கிளம்பிவிட்டாள். யாரும் கவனிக்கவில்லை. அப்போது தாத்தா வீடு மரவனேரி எனும் இடத்தில் தெரு முகனையில் மிகவும் பரபரப்பான சாலையில் இருந்தது. அருகில் டவுன் ரயில் நிலையம். வீட்டின் முகனையில் சற்று தூரத்திலேயே தெருவில் தண்டவாளம் குறுக்கே வரும். அதனால் போக்குவரத்து அடிக்கடி நெரிசல் ஏற்படும். பேருந்துகள் பஸ் நிலையம் செல்லும் முக்கியமான சாலை அது. காலை நேரம் என்பதால் நெரிசல் சற்று அதிகம்தான். காசை தூக்கிக் கொண்டு தேன் மிட்டாய் வாங்குவதற்காக ஓடியவளுக்கு முதன் முதலில் தனியாக சென்ற அனுபவம் என்பதால், தெருவைக் கடப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. தெருவைக் கடந்து சற்று தூரத்திலேயே பெட்டிக்கடை. அந்த ஆவலில், தேன் மிட்டாய் உடனே சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் அவள் பாட்டிற்கு தெருவை கடக்க முயற்சி செய்திருக்கிறாள்..  பெரிய அரசு பேருந்து கடந்து கொண்டிருக்கிறது. இவளும் உள்ளே நுழைந்துவிட்டாள்.. பேருந்து ஓட்டுனர் அதிர்ச்சியில் உறைந்து ஐயோ என்று கத்தியவாறு தீடீர் பிரேக் போட்டு நிறுத்திவிட்டார்.. தெருவில் கூட்டம் கூடிவிட்டது.. குழந்தை கட்டாயம் அடியில் சட்னியாகி இருக்கும் என்று அனைவரும் நடுங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் செய்தி போய் அலறி அடித்துக்கொண்டு தாத்தா முதல் அனைவரும் ஆஜர் ஆகிறார்கள். அதற்குள் பேருந்தின் அடியில் இருந்து அந்த பெண் முழுவதுமாக ஒரு அடி கூட படாமல் மண்டி போட்டு வெளியே வந்து, திரு திரு வென விழித்துக்கொண்டு நிற்பதை ஆச்சரியத்தில் வாயடைத்து அத்தனை கூட்டமும் பார்த்துக் கொண்டிருந்தது.. வேறு என்ன அன்று தினசரிகளில் தலைப்பு செய்தியானது. பஸ்ஸில் பூந்து வெளியே வந்த பெண் என்று.. அதற்காக எடுத்த போட்டோதான் இது..  ஒன்றும் புரியாமல் திரு திருவென விழிக்கும் இவள் பார்வையின் காரணம் இதுதான்.. பல நாட்கள் பஸ்ஸில் பூந்து வெளிவந்த பெண் இதுதான் என்று பலரும் அடையாளம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.. இது வேறு யாரும் அல்ல நான் தாங்க.. பாருங்களேன் அந்த வயசிலேயே எமனை ஏமாற்றிவிட்டு, பை சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.. இன்றுவரை அது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. பலர் இதை பல நாட்கள் ஆய்வு செய்தார்கள். பேருந்தினுள் நுழைந்து எப்படி ஒரு சிறு காயம் கூட இல்லாமல் அப்படி உயிருடன் வெளியே வர முடியும் என்று. என் தாத்தா மட்டும் ‘என் அப்பன் முருகன் தான் காப்பாற்றினான்’ என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்!


10 comments:

  1. இந்தப் படத்துக்குப் பின்னால் இப்படியொரு கதை இருக்கிறதா:)? அபூர்வக் குழந்தைதான்! ஆச்சரியமான நிகழ்வு. அழகான பகிர்வு.

    ReplyDelete
  2. ஐயோ என்று இருந்தது... அப்பாடா...! முடிவில் நிம்மதி... வாழ்த்துக்கள்...

    ஓம் சரவணபவ...

    ReplyDelete
  3. ‘என் அப்பன் முருகன் தான் காப்பாற்றினான்’ என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்!//
    உண்மைதான். முருகன் தான் காப்பற்றினார். அழகாய் இவ்வளவு அறிவுடன் பதிவுகள் எழுத ஆசி பெற்று இருக்கிறீர்கள் முருகனிடம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம். தங்களுடைய வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  4. முழிக்கிற முழியப் பார்த்தாலே புரிகிறது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஏக்கம் நெஞ்சுக்குள் :) இருந்தாலும் சாதனை படைத்த பெண்மணி தான் நீங்கள் .சிறு வயதினிலேயே பிரபலமாகி விட்டீர்கள் :)) அன்று கடவுளின் கருணையால் தப்பித்தது நீங்கள் மட்டுமா ?..தாத்தாவும் தான் :)) வாழ்த்துக்கள் அம்மா என்றுமே
    அதே கடவுளும் தங்களுக்குத் துணையாகவே நிற்கட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம். மிக்க மகிழ்ச்சி. தங்கள் வாழ்த்திற்கு நன்றி.

      Delete
  5. //பல நாட்கள் பஸ்ஸில் பூந்து வெளிவந்த பெண் இதுதான் என்று பலரும் அடையாளம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.. இது வேறு யாரும் அல்ல நான் தாங்க.. பாருங்களேன் அந்த வயசிலேயே எமனை ஏமாற்றிவிட்டு, பை சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.. இன்றுவரை அது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. பலர் இதை பல நாட்கள் ஆய்வு செய்தார்கள். பேருந்தினுள் நுழைந்து எப்படி ஒரு சிறு காயம் கூட இல்லாமல் அப்படி உயிருடன் வெளியே வர முடியும் என்று. என் தாத்தா மட்டும் ‘என் அப்பன் முருகன் தான் காப்பாற்றினான்’ என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்!//

    மிகவும் ஆச்சர்யமான விஷயமாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. வை. கோ.

      Delete