Tuesday, March 29, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை : பகுதி - 2.-2




எண்ணம் போல் வாழ்வு என்பர் பெரியோர். இதையே எமர்சன்,

The happiness of your life depends upon the quality of your thoughts 

என்று அழகாகச் சொல்லுவார். உண்மையல்லவா. நாம் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், நம் எண்ணம் தானே அந்தச் சூழலுக்கே உயிரூட்டுகிறது.ஆகவே நாம் நம் எண்ணத்தால் உயர்ந்து நிற்போமே! அதாவது, வெளித் தோற்றமானாலும்,[ நிமிர்ந்த நன்னடை] மனதளவிலும், ஆன்மீக நிலையிலும் உயர்ந்து நிற்போமேயானால், தன்னம்பிக்கையோடு, மன அமைதியும், அதன் மூலம், வாழ்க்கைப் பாதையில் நாம் சந்திக்கக் கூடிய இன்னல்கள் அது எத்தகையதாயினும், சமாளிக்கும் பக்குவமும் வந்துவிடுமல்லவா ?  மன்னிக்கவும், அதிக பிரசங்கம் பண்ணி விட்டேனோ.....எல்லாம் காசிவாசம் கொடுத்த பக்குவ நிலைதான்.

சரி, விசயத்திற்கு வருவோம். விசாலாட்சி அம்மையின் அழகுத் திருமேனி தரிசனம் பெற்ற அதே இன்ப நிலையுடனேயே, கங்கா ஆரத்தி கண்டு களித்தோம் என்பதை விட, புளங்காகிதம் அடைந்தோம் என்பதே சரியாக இருக்கும். வார்த்தைகளால் வருணிக்க முடியாத ஒரு பரவசம்......
                                                                
                                                                    DSC00090.JPG

காசி மகாத்மியம் என்ற நூலில், நான்காவது அத்தியாயத்தில், யாக்ஞவல்க்யர், ”தோஷமற்ற விஸ்வநாதருடைய காசி நகரத்தில் யார் உயிர் துறக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிட்டும்” என்கிறார்.

ஆம், காசியில் பிரம்ம சுவரூபமான ஆயிரக் கணக்கான லிங்கங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஜோதி லிங்கமாக இருக்கும் விசுவநாதர். இவரை தரிசிப்பதனால் மோட்சம் நிச்சயம் உண்டாகும்.  
                                                     DSC00107.JPG 

விசுவநாதர் கோவில் அருகிலேயே, உள்ள தண்டிவிநாயகர், அண்ணபூரணி, விசாலாட்சி ஆகிய திருமூர்த்தங்கள் நடந்து சென்று தரிசிக்கும் வகையிலேயே இருப்பதால், ஒரே நாளில் அந்தக் கோவில்களெல்லாம் பார்த்தாகிவிட்டது. அதுமட்டுமல்ல, நாங்கள் தங்கியிருந்த ஸ்ரீ காசி நாட்டுகோட்டை நகர சத்திரம் கோவிலுக்கு மிக அருகிலேயே இருப்பதால், நினைத்த நேரம் ஓடி, ஓடி ஆண்டவனின் தரிசனம் செய்ய மிக வசதியாக இருந்தது.கங்கா ஆர்த்தி பார்ப்பதற்கு தயாரான போதே, மாலை கங்கையின் அனைத்துப் படித்துறைகளையும் தரிசித்தோம்.
                                                                                         
கங்கை கரைகளில் படிகள் கட்டி, மகா ராஜாக்கள் அந்தப் படித்துறைகளில் சிறு கோவில்கள் கட்டி வைத்துள்ளனர். லலித கரையில், நேபாளத்து அரசர் ஒருவர் ஒரு சிவன் கோவிலை, மரக்கட்டையினால் கட்டி இருக்கிறார்.
                                                        DSC00101.JPG            

அரிச்சந்திரா கரை : 64 கங்கை கரைகளில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு இடுகாடு ஆகும். அரிச்சந்திர மகாராசன், விதி வழியே சென்று உண்மைக்காக்ப் போராடி நொந்து போன தருணமதில், இந்த இடுகாட்டில்தான் பணிபுரிந்திருக்கிறார். இவர் மனைவி சந்திரமதியும் தங்கள் மகன் லோகிதாசனை தகனம் செய்ய எடுத்து வந்ததும் இந்த இடுகாடுதான்.

சிந்தாகாட் கரை ; இக்கரை காசி நகரத்தின் நடுவில் கங்கை கரை ஓரத்தில் அமைந்துள்ளது.இதனை இந்தோர் மகாராணி அகலியாபாய் கட்டினார்.
                                                     
                                                                   DSC00085.JPG

தசாஸ்வேமேத்காட்,அசிஸ் காட், மணிக்கர்னிகா காட், பஞ்ச் கங்கா காட், வருணா சங்கமம் ஆகியவைகள் குறிப்பிடத்தக்கக் கரைகளாகும். அதில் தசாஸ்வேமேத் காட் மிகவும் புகழ் பெற்ற கரையாகும். காரணம், திவோதாஸ் காசி அரசன் இந்தக் கரையில் அஸ்வ மேத யாகம் நடத்தியுள்ளார். 

மணிகர்ணிகா காட் : இதுவும் இரு இடுகாடு. இங்கிருந்துதான், உயிர்களை சுவர்கத்திற்கு அனுப்பி வைப்பதாக சிவ பெருமான் விஷ்ணு பகவானுக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பன்ஞ் கங்கா காட் : இக்கரையில் ஆலம்கிரி மசூதி கட்டியுள்ளார். இக்கரையில்,கார்த்திகை மாதத்தில் அனைவரும் வந்து நீராடிச் செல்கிறார்கள். 

படகில் சென்று அனைத்துக் கரைகளையும் தரிசித்துவிட்டு, வரவும் கங்கா ஆரத்திக்கு தயாராகவும் சரியாக இருந்தது. வெகு கோலாகலமாக கங்கா ஆரத்தி நடந்தது. அது முடிந்தவுடன், அவசரமாகச் சென்று இரவு அர்த்த சாம பூசையிலும் கலந்து கொண்டோம்.


-இரவு பூசை முடிந்து வர வெகு நேரம் ஆகிவிட்டது. அடுத்த நாள் காலை விடியலில் கயை கிளம்புவதாகத் திட்டம். கயை சென்றுத் திரும்பியவுடன், உள்ளூரில் இருக்கும் மற்ற முக்கியமான தலங்கள் செல்லலாம் என்றிருந்தோம். படுக்கையில் சென்று விழுந்ததுதான் தெரியும்.அப்படி ஒரு அமைதியான ஆழ்ந்த நித்திரை. அதுகூட ஒரு தியானம் போல்தான் இருந்தது. 


அடுத்த நாள் விடியலில் கயை செல்வதற்கு தயாராகி விட்டோம்.நாங்கள் தங்கியிருந்த சத்திரத்திலேயே, வாடகைக் கார் ஏற்பாடு செய்து தருகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட சரியான வாடகை ,- குறித்த நேரத்தில் கிளம்பி, சரியான நேரத்தில் திரும்பி வந்து சேரும் எளிதான பயணம். கயை செல்வதற்கான முக்கிய நோக்கமே, தத்தம் மூதாதையர்களுக்கு சிரார்த்தம் செய்ய வேண்டித்தான். மற்றும் அருகில் அவசியம் தரிசிக்க வேண்டிய தலமான புத்த கயாவும் உள்ளது. 

பொதுவாக உலக வாழ்க்கையின் ஆதாரமே நம்பிக்கைதானே. நம அனைத்துச் செயல்களும் அதன் அடிப்படையில்தானே நிகழ்கிறது. அந்தவகையில் முன்னோர்களுக்குச் செய்யக் கூடிய இந்த சிரார்த்தம், அதாவது, சிரத்தையோடு [ நம்பிக்கை] செய்யக்கூடிய இக்காரியம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

’அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’, என்பது நீதி மொழி.அன்னையும், பிதாவும் இப்பூவுலகை விட்டு நீத்தாலும், தம் மக்களுக்கு தெய்வமாகவே இருந்து ஆசி கூறுவதாக ஒரு நம்பிக்கை நம் மரபு வழியே இருந்து வருகிறது.
                                                             
கயை செல்பவர்கள் பெரும்பாலும் இந்த சிரார்த்தம் செய்வதற்கும் விஷ்ணு பாதம் தரிசனத்திற்குமே வருகிறார்கள்.காசியிலிருந்து கயை செல்வதற்கு சராசரியாக 6 மணி நேரம் ஆகிறது ,காரில் செல்வதற்கு.விடியற்காலையே கிளம்பியதால், வழியில் பீகார் மாநிலத்தின், ஒரு சிறிய கிராமம்,அங்கிருந்த உணவகத்தில் உணவு அருந்த நிறுத்தினோம். ஆனால் என்னவர் விரதம் இருப்பதாகக் கூறி உண்ண மறுத்து விட்டார். அவர் தன்னுடைய பெற்றோருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி இருந்ததால் விரதம் இருக்க முடிவு செய்து, பச்சை தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார். நானும், ஓட்டுநரும் உணவருந்தினோம். ரொட்டியும், சப்ஜியும், சாலடும் மறக்கவே முடியவில்லை. அவ்வளவு சிறிய உணவகம். கச்சோரி, பூரி, ரொட்டி, அனைத்தும் இருந்தது. அது போன்ற சுவை அமைவது அபூர்வம் என்றுதான் சொல்ல வேண்டும். விலையும் அத்தனை மலிவு....................

தொடரும்.

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...