Monday, September 22, 2014

அமர காவியம்!



பவள சங்கரி


காதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல
உன்  தனித்தன்மையை உணரச் செய்து
உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ
எவருடன் நீ நீயாகவே இருக்க முடிகிறதோ
எவரால் உன் வாழ்க்கையில்  மாற்றம் ஏற்படுகிறதோ
எவரால் அப்படியொரு காதலை உணர்த்த முடிகிறதோ
அந்த ஒருவருக்கே உரித்தானது அது!
வானத்தில் எழுதிவைத்தேன் உன் பெயரை
மேகம் வந்து மறைத்துவிட்டது.
கடலோரத்தில் மணல்மேட்டில் எழுதிவைத்தேன்
அலைவந்து மொத்தமாக அடித்துச்சென்றது.
இருதயத்தில் பொரித்து வைத்தேனதை
இரும்பாக நிலைத்து நிற்கிறது அங்கே!
வண்ணமயமான ஒரு காகிதத்தில் கண்ணைக்கவரும் வகையில் கருத்தாய் கவிதைகள் எழுதி எவரோ தவறவிட்டுப்போன அது தன் கையில் ஏன் கிடைத்தது என்று சிந்திக்க முடியாத அளவிற்கு ஒரு கணம் அதன் கருத்தில் இலயித்துப்போனாள் மரியா.

ஆடித்தள்ளுபடித் திருவிழா.  கடைவீதியெல்லாம் எள்ளு போட்டால் இறங்க முடியாத அளவிற்குக் கூட்ட நெரிசல். ஏதோ இலவசமாகக் கிடைப்பது போல அலைமோதும் மக்கள் வெள்ளத்தில், துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்களின் பாடு திண்டாட்டம்தான். மூச்சு விடும் நேரம் கூட அசந்தால் எதையாவது யாராவது திருட முயன்றால் தீர்ந்தது. கண்கொத்திப் பாம்பாக கேமராப் பதிவை பார்த்துக்கொண்டிருப்பவர் சூப்பர்வைசரிடம் போட்டுக் கொடுத்தால் போதும். வேறு வினையே வேண்டாம். அவர் பேசுகிற பேச்சு காது கொடுத்து கேட்க முடியாது. மரியா சற்று பயந்த சுபாவம் உடையவள். மென்மையான அவள் பேச்சும், மருண்ட விழிகளும், சதாசர்வ காலமும் முகத்தில் குடிகொண்டிருக்கும் சோகமும், அவள் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், அதற்காகவெல்லாம் எந்த தாட்சண்யமும் கிடைக்காது அவளுக்கு, காலை 9 மணிக்கு கடைக்குள் வந்தவள், இரவு மணி 9.30 ஆகியும் வீட்டிற்கு அனுப்ப மனம் வராமல்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தார் அந்த சூபர்வைசர். மாலை 5 மணிக்கு ஒரு கப் டீ கொடுத்தார்கள். மதியம் சாப்பாடும் கொண்டு வராததால் பசி வயிற்றைக் கிள்ளியது. கூட வேலை பார்க்கும் சாரதா கட்டாயப்படுத்தி ஒரு இட்லி கொடுத்ததை சாப்பிட்டிருந்ததால் கொஞ்சமாவது தாங்க முடிந்தது.  ஒரு வழியாக அந்த நரகத்திலிருந்து வெளியே வந்து, நடையை எட்டிப் போட்டாள். மாதக் கடைசி என்பதால் ஷேர் ஆட்டோவிற்குக்கூட காசு இல்லை. குறுக்கு சந்தில் போனால் முப்பது நிமிடத்தில் வீடு போய் சேரலாம்தான். ஆனாலும், இரவு நேரத்தில் அந்தப் பக்கம் செல்லுவது பாதுகாப்பு அல்ல.
வீடு நெருங்க, நெருங்க ஒடிந்து விழும் உடம்போடும், ஒட்டிய வயிறும், குழிந்த கண்களும் கொண்ட அம்மாவின் உருவம் கண் முன்னால் வந்தது. மூட்டைத் தூக்கி சம்பாதித்தாலும், ஓரளவிற்கு அப்பாவின் வருமானம் குடும்பத்திற்குப் போதுமானதாக இருந்தது. கட்டிட வேலைக்குப் போய்க்கொண்டிருந்த அம்மா சில நாட்களாக ஆஸ்துமா அதிகமாகி, அரசாங்க மருத்துவமனைக்கு நடப்பதே வேலையாகிவிட்டிருந்தது.
“சேசுவே, தாங்க முடியலயே, நஞ்சுப்போன இந்தத் தேகத்துனால என்ன பிரயோசனம்.. பூமிக்குப் பாரமா இருக்குறதோட நீயே எடுத்துக்கோ இந்த உசிரை” என்று அம்மா பொழுதுக்கும் புலம்ப ஆரம்பிச்சப்ப தன் கையாலாகாத்தனம் சித்திரவதை செய்தது மரியாவை. ஒவ்வொரு முறையும், டாக்டரும் இனிமேல்  கட்டிட வேலைக்குப் போக வேண்டாம் என்று எச்சரித்துதான் மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பினார்கள். ஆனாலும், மரியாவையும், அவள் தம்பி சூசையையும் எப்படியும் படிக்க வைத்து ஒரு ஆபீசு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது அந்தப் பெற்றோரின் ஆசையாக இருந்தது. முனிசிபல் பள்ளியில் பத்தாம் வகுப்பு நன்றாகப் படித்துக் கொண்டிருந்தாள் மரியா. பரீட்சையில் 80 சதவிகித மதிப்பெண் வாங்கியிருந்த மகளை எப்படியும் மேல் படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற அந்தத் தகப்பனின் ஆசையை ஒரு நாள் ஈவு இரக்கமே இல்லாமல் உயிரோடு சேர்த்து நோய் அள்ளிக் கொண்டு போய்விட்டது. ஆம் பணக்காரர்களுக்கே உரித்தான அந்த மாரடைப்பு மூன்று ஜீவன்களின் ஆதாரச் சுருதியாக இருந்த இந்த பரிதாபப்பட்ட ஏழைத் தொழிலாளியை ஏன் தேர்ந்தெடுத்ததோ தெரியவில்லை.
பின்னோக்கிய நினைவுகளின் வேகமும்  அதன் ரணமும் நடக்கும் தூரத்தைக் குறைத்துத்தான் விட்டிருந்தது. வீட்டில் நுழையும் போதே ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் தொழுதவாறே சென்றாள். அம்மா எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையில். ஒரு மூலையில் கயிற்றுக் கட்டிலில் ஒடுங்கியபடிக் கிடந்தாள் அம்மா. சூசை ஓடிவந்து,
“அக்கா, அக்கா அம்மாவுக்கு மருந்து வாங்கியாந்தியாக்கா. பாவம் மதியமெல்லாம்  ரொம்ப கஷ்டமாயிடிச்சி. இழுப்பு அதிகமாயிடிச்சி. நல்ல வேளையா பழைய மாத்திரை ஒன்னு கிடச்சதுக்கா. அதைப் போடவும் கொஞ்சம் தேவலாம் போல இருக்குது. ஆனா இன்னும் எவ்ளோ நேரத்துக்கு இந்த மாத்திரை தாக்குப்பிடிக்கும்னு தெரியலையேக்கா. ஒரு வேளை திணறல் அதிகமாச்சுதுன்னா ஆசுபத்திரிக்கி கூட்டிட்டுப் போய்தான் ஆக்சிஜன் வைக்கணும்” என்றவனின் முகம் சோகத்தில் மூழ்கியது. பிளஸ் டூ படிக்கும் சூசைக்கு எப்படியும் தான் ஒரு டாக்டராகிவிட வேண்டும் என்ற ஆசை உண்டு.
அம்மா வேலைக்குப்போயி ஒரு மாசம் ஆகிவிட்டது. நான்கு நாட்களாக சமையல்கூட செய்ய முடியவில்லை. நாளுக்கு நாள் உடல் நிலை மோசமாகிக்கொண்டு வருவது தெரிந்தாலும், நல்ல வைத்தியம் பார்க்க வழியில்லாமல்தான் வேதனையைச் சுமக்க வேண்டியதாகிறது.  அன்றுதான் முதன் முதலில் ரங்கனைப் பார்க்கிறாள் மரியா. அம்மா வேலை செய்யும் கட்டிடத்தின் தலைமை மேஸ்திரியின் மகன் அவன். மரியாவின் அம்மா அமலோர்ப்பவம் என்ற அமலி வேலைக்கு வரவில்லையே என்று பார்த்து வரச் சொல்லியிருந்ததால் வந்திருந்தான். அன்று ஞாயிற்றுக் கிழமை என்றதால் மரியாவும் வீட்டில் இருந்தாள். ரங்கன் எடுத்த எடுப்பில்,
“யக்கா, யக்கா என்னக்கா இது இப்படி சோர்ந்து போய் கிடக்கறயே..  டாக்டராண்ட போனியா இல்லியா நீ.. அப்பா உன்னைய பாத்துட்டு வரச் சொன்னாரு. அவுரு சொன்னப்பவே நான் நெனச்சேன். அனாவசியமா லீவு போடற ஆளு இல்லியே நீயின்னு. இங்க வந்து பார்த்தாதானே தெரீது நீ இருக்குற நிலமை.. அருகில் இருந்த சூசையைப் பார்த்து, “ஏம்ப்பா தம்பி, வீட்டில நீ மட்டும்தான் இருக்கியா. அம்மாவை ஆசுபத்திரிக்கு ஏன் இன்னும் கூட்டிட்டுப் போகாம இருக்கீங்க..” என்றான்.
சூசை தயங்கியவாறு ஏதோ சொல்ல வாயெடுக்க முற்பட்டபோது, அதுவரை உள் அறையில் கதவின் பின்னால் இருந்து அவனை கவனித்துக் கொண்டிருந்த மரியா சட்டென்று வெளியில் வந்து, “அம்மாவுக்கு மருந்து வாங்கிக் குடுத்திருக்கேன். இன்னும் இரண்டு நாள்ல இந்த மாச சம்பளம் வந்துடும். அம்மாவை பெரிய ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் வைத்தியம் பார்த்துடுவேன்” என்றாள் அவசரமாக.
அவளுடைய தன்மானம் அவனுக்கு அவள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. கபடமற்ற அந்தச் சிறிய பெண், குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமப்பதை ஒரு வரமாக நினைப்பது போலத் தெரிந்தது. அவன் சட்டென்று, “உங்க அம்மாவை நீங்களே பார்த்துக்கணும்கற அக்கறை நல்லா புரியுதுங்க. ஆனாலும் ஒண்டி ஆளா நீங்க தம்பி படிப்பு, சாப்பாடு இதெல்லாம் சமாளிக்கறதே சிரமம்.  இதுல அம்மாவின் உடல் நிலையையும் கவனிக்கறது ஈசி இல்லை. அதுவும் அமலியக்கா, எங்க அப்பாருகிட்ட ரொம்ப வருசமா வேலை பாக்குது. அதனால அக்காவுக்கு ஒரு கஷ்டம்னா உதவி செய்யுற கடமையும் அவுகளுக்கு இருக்கில்ல. அதனால நீங்க மல்லுகட்டாம  அப்பாரு குடுத்துவிட்ட இந்தப் பணத்தை வாங்கிக்கிடுங்க. அது அவுகளுக்குச் சேர வேண்டிய பணம்தான்” என்று கட்டாயப்படுத்திச் சொன்னதும் தான் வாங்கிக் கொண்டாள். மனதிலிருந்த ஏதோ ஒரு பெரிய பாரம் இறங்கியது போல இருந்தது. சூசையைப் பார்த்து தன்னுடைய கைப்பேசி நம்பரைக் கொடுத்து, அம்மாவுக்கோ, இல்ல வீட்டில ஏதாவது பிரச்சனையின்னாலோ எனக்கு போன் பண்ணு. என்னால முடிஞ்ச உதவியைச் செய்யுறேன்” என்றபோது ஒரு முறை திரும்பி அவள் கண்களை நேரடியாகப் பார்த்தான். ஆயிரம் கதைகள் சொல்லியது போல இருந்தது அந்தப் பார்வை.
சில நேரங்களில் உணர்வெல்லாம் மரத்துப்போன இதயங்களில் கூட எங்கோ ஒரு மூலையில் ஒரு துளி இன்பம் ஊற்றெடுக்கத்தான் செய்கிறது. அதற்கு காதலோ, கத்தரிக்காயோ எந்தப் பெயரையும் வைக்கலாம்தான். ஒரு பார்வையில் எப்படி அப்படி உயிரை வளைத்துப்போடுமோ என்று ஆச்சரியமே மேலிடும் வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு. உயிரில் கலந்தவர்களுக்கோ சுற்றமும், சுற்றுப்புறமும் துச்சம்தான். இப்படி ஒரு நிலை தனக்கும் கூட ஏற்படும் என்று ஒருநாளும் நினைத்தவளில்லை மரியா. அதற்குப் பிறகு  துண்டு, கர்ச்சீப் என்று ஏதோ ஒன்றை வாங்கும் சாக்கில் அவள் வேலை பார்க்கும் கடைக்கு அடிக்கடி வந்து போனான்.
ஒரு நாள் திடீரென்று அம்மாவிற்கு உடம்பு சீரியசாகிப் போக சூசை பக்கத்திலிருந்த பப்ளிக் பூத்திலிருந்து ரங்கனுக்கும், அக்கா வேலை செய்யும் ஜவுளிக் கடைக்கும் போன் போட்டான். ஆனால் மரியா கிளம்பி வருவதற்குள் சூசை மொபட்டில் வேகமாக வந்தவன் ஒரு ஆட்டோ பிடித்து அம்மாவை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றான். ஆனாலும், நான்கு நாட்களுக்கு மேல் அவர்களால் அந்த உயிரை நிறுத்தி வைக்க முடியவில்லை.  அக்காவும், தம்பியும் அனாதையாகிவிட்ட அதிர்ச்சியில் பிரமை பிடித்தார்போல இருந்த நேரத்தில் ரங்கன் வீட்டின் முத்த பிள்ளையைப் போல அனைத்து கடமைகளையும் செய்து அம்மாவின் இறுதிச் சடங்கையும் நல்ல முறையில் முடித்து வைத்தான். அந்த நேரத்தில் அவர்கள் இருவருக்கும் ரங்கன் தெய்வமாகவே காட்சியளித்தான். சூசை, “அண்ணா” என்று வாஞ்சையுடன் கட்டிக்கொண்டான் ரங்கனை.
சூசை பிளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கியிருந்தான்.  வீட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தபோதும் படிப்பில் அவன் கவனம் சற்றும் சிதறாமல் பார்த்துக்கொண்டதால் நல்ல மார்க் வாங்கிவிட்டான். எப்படியும் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு, வெறும் கற்பனையாகவே ஆகிவிடுமோ என்று வேதனையுடன், கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தான். இதையறிந்துகொண்ட ரங்கன் தன் முதலாளியிடம், அமலோர்ப்பவத்தின் மகன் என்று அறிமுகப்படுத்தி அவன் நிலையை எடுத்துக் கூறியவுடன், முதலாளியும், தங்கள் டிரஸ்ட் மூலமாக ரங்கனை மருத்துவப் படிப்பு படிக்க வைக்க ஒப்புக் கொண்டது இன்ப அதிர்ச்சிதான். எப்படியிருந்தாலும் சூசைக்கு தங்கும் செலவும், சாப்பாட்டுச் செலவும் கனிசமாகக் கட்ட வேண்டிவரும். அதை மரியா எப்படியும் சமாளிக்கலாம் என்றிருந்தாள்.
இந்த நேரத்தில்தான் தங்கள் முதலாளியின் சிநேகிதர் சென்னையில் ஒரு 11 மாடி குடியிருப்புக் கட்டிடம் கட்டிக் கொண்டிருப்பதாகவும், அங்கு இருக்கும் பொறுப்பாளர்கள் சரிவர கவனிப்பதில்லை என்பதால் ரங்கன் போல ஒரு பொறுப்பான ஆள் அங்கு இருந்தால்  தேவலாம் என்று கேட்டுக்கொண்டதால் ரங்கன் சென்னை கிளம்ப வேண்டியதாகியது.
சூசையும் மதுரையின் சிறந்ததொரு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்துவிட்ட நிலையில் ரங்கனும் சென்னைக்குச் செல்லப்போவது அறிந்து நொந்து போன மரியாவிற்கு, அப்போதுதான் ரங்கன் எப்படி தன் வாழ்க்கையுடன் ஒன்றிப் போயிருக்கிறான் என்பது புரிந்தது. தன்னைப் போல அவனுக்கும் இப்படி ஒரு நினைவு இருக்குமா தெரியவில்லையே.. ஒரு பெண்ணாய்ப் பிறந்துவிட்டு, தன் மன உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியாதே என்று வேதனைப்பட்டாள். ஒரு வேளை தான் சொன்ன பின்பு அவன் தன்னிடம் அப்படி ஒரு எண்ணத்தில் பழகவில்லை என்று கூறிவிட்டால் தன் நிலை எப்படியிருக்கும் என்பதை அவளால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. உள்ளுக்குள் வைத்துப் புழுங்க ஆரம்பித்திருந்தாள். ரங்கனும் சில நாட்களாக தன்னைப் பார்க்க வராததால் தான் நினைத்தது சரிதான் என்று மனதை தேற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
அன்று மாலை வேலை முடித்து அலுத்துப் போய் வீடு நோக்கி வந்தாள். தம்பியும் தன் சிநேகிதனை சந்திப்பதற்காகச்  சென்றிருந்தான். வீட்டில் தனியாக இருக்கப் போகிறோம் என்ற நினைவே அவளை முடக்கிப் போட்டது! ஏதோ திக்குத் தெரியாதக் காட்டில் தனித்து விடப்பட்ட குழந்தை போல மருட்சியில் இருந்தாள். கைப்பையை வீசிவிட்டு அம்மாவின் கட்டிலில், அம்மாவின் சேலையை எடுத்துப் போர்த்திக்கொண்டு அம்மாவின் வாசனையை, ஒரு பூனைக்குட்டியைப்போல மூக்கைச் சுருக்கி,  ஆழ, ஆழ உறிஞ்சித்  தேடியவாறு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். கதவு தட்டும் ஓசை கேட்டு, ஒரு கணம் தடுமாறியவள், மெல்ல எழுந்துபோய் கொஞ்சமாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். ரங்கன் நிற்பதைப் பார்த்தவுடன் ஒரு வேளை கண்களுக்குள்ளேயே இருந்த அந்த உருவத்தின் மாயத் தோற்றமோ என்ற சந்தேகம் வர அமைதியாக இருந்தாள். அதற்குள் ரங்கன், “கதவைத் திற மரியா.. என்ன யோசனை” என்றபோது முதல் முறையாக அவன் தன்னை ஒருமையில் அழைத்ததை கவனிக்கத் தவறவில்லை. அந்தப் பார்வையில் இருந்த கனிவும், வார்த்தைகளில் இருந்த நெருக்கமும், சட்டென்று அவளுக்கு எதையோ உணர்த்த, அடுத்த நொடி அவனைக் கட்டியணைக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு கண்ணீர் மல்க நின்றாள். அவனுக்கும் அப்படி ஒரு உணர்வுதான் இருக்கும் என்பதை சிவந்த அவனுடைய கண்களும், துடிக்கின்ற அந்த இதழ்களும் வெளிப்படுத்தின. சற்று மனம் திறந்து பேசவும் முற்பட்டான் அவன்.
ஆனால், ரங்கனுக்கு ஏற்கனவே வீட்டில் தன் அக்காள் மகளை பேசி வைத்திருந்ததால் அப்போதைக்கு தங்கள் விசயம் வெளியே தெரிய வேண்டாம் என்றும், அடுத்த முறை வந்து எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு அவளை மணமுடித்து உடன் அழைத்துச் செல்வதாகவும் கூறிச் சென்றான். இருவர் கண்களிலும் நிறைந்த கண்ணீர் பார்வையை மட்டுமா மறைத்தது, பாதையையும்தான்.
சில வாரங்கள் கடந்திருந்தது. மரியாவின் தனிமைச் சோகம் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது. சூசையும் கல்லூரிக்குச் சென்றுவிட்டான். ஒரு கட்டத்தில் அதற்குமேல் தாங்க முடியாது என்ற நிலையில், ரங்கனைச் சென்று சந்திப்பது என்ற முடிவில் அவன் ஏற்கனவே கொடுத்த முகவரியுடன் சென்னைக்குச் செல்லும் பேருந்தில்  ஏறிவிட்டாள். ரங்கன் போரூரில் ஒரு பதினொரு மாடி குடியிருப்புக் கட்டிடத்தில்  மேஸ்திரியாக வேலை செய்து கொண்டிருந்தான். நான்காவது மாடியில் சுற்றுச் சுவருக்கு பூச்சு வேலை செய்து கொண்டிருந்தான். முகவரியைச் சரியாகக் கண்டுபிடித்து வந்தவள், கட்டிடத்தில் மற்ற ஆட்களிடம் விசாரித்து ரங்கன் நான்காவது மாடியில் இருப்பதை அறிந்து அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக எதுவும் சொல்லாமல் நேராகப் போய் நிற்க வேண்டும் என்ற முடிவில் அவன் முன்னால் போய் நின்றாள். ஒரு நிமிடம் தன் கண்களையே நம்ப முடியாதவன், இது கனவா, நினைவா என்ற ஆச்சரியத்தில் கிள்ளிப் பார்த்துக் கொண்டவன், “மரியா எப்படா வந்தே.. இப்படி சொல்லாம கொள்ளாம வந்து இன்ப அதிர்ச்சி குடுக்கறியே” என்று சொல்லிக் கொண்டிருந்தவன், திடீரென தன் பக்கத்தில் இருந்த சுவர் ஆட்டம் காணுவதை உணர்ந்து, மரியா மீது விழுந்துவிடப் போகிறது என்ற அச்சத்துடன் அப்படியே அவளை அணைத்து அந்தப்புறம் இழுத்துவிடலாம் என்று எத்தனித்த அதே வேளை மரியாவும் எதையும் உணராதவளாக வெட்கத்தில் பின்வாங்க, அடுத்த சில நொடிகளில், சீட்டுக்கட்டு போல மேலே இருந்த அத்தனை கட்டிடமும் பொலபொலவென சரிந்துவிழ, நடப்பது என்னவென்றே புரியாமல் இருவரும் அப்படியே சிலையாக நின்ற வாக்கிலேயே உயிரை விட்டு காவியமாகியிருந்தார்கள்!

5 comments:

  1. மிக அழகான கதை .... கடைசியில் என்னை அழ வைத்த கதை ..... !

    >>>>>

    ReplyDelete
  2. //காதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல. உன் தனித்தன்மையை உணரச் செய்து உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ எவருடன் நீ நீயாகவே இருக்க முடிகிறதோ
    எவரால் உன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறதோ எவரால் அப்படியொரு காதலை உணர்த்த முடிகிறதோ அந்த ஒருவருக்கே உரித்தானது அது!//

    நான் மிகவும் ரஸித்த வரிகள். :)))))

    >>>>>

    ReplyDelete
  3. //“கதவைத் திற மரியா.. என்ன யோசனை” என்றபோது முதல் முறையாக அவன் தன்னை ஒருமையில் அழைத்ததை கவனிக்கத் தவறவில்லை. அந்தப் பார்வையில் இருந்த கனிவும், வார்த்தைகளில் இருந்த நெருக்கமும், சட்டென்று அவளுக்கு எதையோ உணர்த்த, அடுத்த நொடி அவனைக் கட்டியணைக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு கண்ணீர் மல்க நின்றாள். //

    இந்தக்கதையில் மிகவும்உருக்கமான உணர்வு பூர்வமான இடம். :)))))

    >>>>>

    ReplyDelete
  4. //அடுத்த சில நொடிகளில், சீட்டுக்கட்டு போல மேலே இருந்த அத்தனை கட்டிடமும் பொலபொலவென சரிந்துவிழ, நடப்பது என்னவென்றே புரியாமல் இருவரும் அப்படியே சிலையாக நின்ற வாக்கிலேயே உயிரை விட்டு காவியமாகியிருந்தார்கள்!//

    கலங்க வைத்த முடிவு.

    உண்மையான காதல் எப்போதும் நிறைவேறுவது இல்லை என்பதே உண்மையாக உள்ளது.

    அதேசமயம் நிறைவேறிய எதுவும் உண்மையாகவும் இருப்பது இல்லை.

    அருமையான ஆக்கத்திற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. மிக்க நன்றிங்க சகோ. வை.கோ. அன்பான, ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...