Friday, March 20, 2015

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ மேடை!இனிய வணக்கம் நண்பர்களேசமீபத்தில் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உலகப் புகழ் பெற்ற, நம் இந்தியாவை உலக மேடையில் பிரகாசிக்கச் செய்த உரை நிகழ்ந்த இடத்தைப் பார்க்க சென்றபோது அவருடைய சுவாசம் அங்கும் உலவுவதை உணர முடிந்தது என் ஆழ்ந்த ஈடுபாடு கூட காரணமாகவும் இருக்கலாமோ.. நம்பிக்கைதானே வாழ்க்கை.. 
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி,  அமெரிக்கா -  சிகாகோ நகரில் நடைபெற்ற‍  உலக ஆன்மீக மகாநாட்டில்  சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. எனது அருமை அமெரிக்க‍ சகோதரிக ளே! சகோதரர்களே! என்று தொடங்கி அமெரிக்க மக்களின் மனதில் நிரந்தரமாக குடியேறினார்.  அந்த ஒற்றை வரிக்கு அமெரிக்கர்கள் அகமகிழ்ந்து, நீண்ட நேரம் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்த‍னர். அவருடைய அன்றைய உரையின் சில முக்கியமான குறிப்புகள்....  அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


 உலகத்தின் மிகப்பழமையான துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்துள்ள கோடிக் கணக்கான எம் இந்துப் பெருமக்களின் சார்பில் நன்றி கூறுகிறேன்.


பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளையும் உலகிற்குப் புகட்டிய  அற்புதமான மதத்தைச் சார்ந்தவன்  என்பதில் பெருமை அடைகிறேன். 

பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

“எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!”

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன.  உலகை இரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தையும் அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு  உயர்நிலையை  எய்தியிருக்கும்!


4 comments:

  1. மிகவும் அருமையான அழகான நினைவலைகளைப் பிரதிபலிக்கும் இனிய கட்டுரை. பாராட்டுக்கள்.

    இன்றைய என் பதிவினில் தங்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
    http://gopu1949.blogspot.in/2015/03/5.html இது ஓர் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete