Sunday, March 8, 2015

சர்வதேச மகளிர் தினம் – தடைக்கற்களும் படிக்கற்களே!


பவள சங்கரி


சுட்டும் விழிச்சுடர்!

womens-day5
நாடு விடுதலை பெற்றது – பெண் விடுதலை பெற்றாளா? – பாரதி கண்ட புதுமைப் பெண் உருவாகியிருக்கிறாளா?

சுட்டும் விழி
p86இந்த வினாவிற்கான முழுமையான விடை இன்னும் நமக்குக் கிடைத்தபாடில்லை. சமுதாய மறுமலர்ச்சியின் ஊடே, பெரும் போராட்டங்களின் மத்தியில் தன்னை எப்பாடுபட்டேனும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று துடிக்கும் மகளிர், இன்றுவரை அதற்கான எல்லையை அடைந்திருக்கிறார்களா என்பதே ஐயம்தான். பெண்ணை விளம்பரப் பொருளாக்கும் வியாபாரிகளும், விற்பனைப் பொருளாக்கும் பத்திரிக்கைகள், அழகுப் பதுமைகளாகக் காட்சிப்படுத்தும் படைப்பாளர்கள், கவர்ச்சிப் பதுமைகளாக்கும் ஊடகங்கள், எப்படியேனும் அடக்கியாண்டு, அடிமைப்படுத்தத் துடிக்கும் ஆண் வர்க்கம், இவையனைத்தையும் உணர்ந்தும், வெளிவர மனமில்லாமல் பொன் விலங்கில் புத்தொளி வீசுவதாக கற்பனையில் உழன்று அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணினம், இப்படி பட்டியல் இன்னும் நீண்டு கொண்டுதான் உள்ளது. கல்வியறிவு பெறுதல் மட்டுமே இந்த விலங்கை உடைக்கும் சம்மட்டியாக செயல்படும் என்பதை அழுத்தமாகப் பதிவிட்ட பாரதியின் கனவு, இன்று ஓரளவிற்கேனும் கல்வியறிவு பெற்ற மகளிரின் எண்ணிக்கை கூடிய பின்பும் நிறைவேறியுள்ளது என்று கூற முடியாத நிலையில்தானே உள்ளது. பெண்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளாத ஆண்களின் போக்கும், பெண்களை பெண்களே தவறாகப் புரிந்துகொள்வது, ஒரு பெண்ணே பெண்ணிற்கு எதிரியாய் நிற்பது, காழ்ப்புணர்ச்சி கொள்வது என்பது போன்ற நிலைகளும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கத்தான் செய்கிறது. பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், பொது மேடைகளிலும், தம் எழுத்துக்கள் மூலமாகவும் மட்டம் தட்டிப்பேசும் ஆண்கள் என்று தடைக்கற்களின் மீதான போராட்டங்களே வாழ்க்கையாகும் நிலையே உள்ளது.
ஒரு வேளை, 1897 ஆம் ஆண்டு, ஜூலை 29 இல் சுவாமி விவேகானந்தர் சகோதரி நிவேதிதா அவர்களுக்கு ஒரு கடிதத்தில் எழுதியதைப் போன்று இல்லாமல் இன்று சற்றே மாற்றம் இருக்கக்கூடும். “இந்தியா சிறந்த பெண்மணிகளை உருவாக்கும் நிலையில் இல்லை. மற்ற நாடுகளிலிருந்து கடன் பெறும் நிலையில்தான் உள்ளது. உங்கள் கல்வி, நேர்மை, தூய்மை, ஆழ்ந்த அன்பு, குறிக்கோள் மற்றும் அனைத்திற்கும் மேலாக துடிப்பான இரத்தம் போன்ற அனைத்தும் பெண்களுக்குத் தேவை” என்று கூறியபடி இன்று இல்லை என்பது வெள்ளிடைமலை. இன்று பல சகோதரிகள் பல்வேறு துறைகளில் தங்கள் வல்லமையைப் பறைசாற்றியவண்ணமே உள்ளனர்.
இதற்காக தம் வாழ்வையே பணயம் வைத்து போராடியப் பெண்மணிகள் எண்ணற்றோர். அவர்பட்ட துயரங்களும் கொஞ்சமல்ல. நம் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பேறு பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று உறுதியுடன் இருந்த காலகட்டத்தில் ஒரு பெண் மருத்துவப்படிப்பு படிப்பதென்பது அத்தனை எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை. உடன் பயிலும் பல ஆண் மாணவர்களுடன் ஒரு பெண் படிப்பதால், அந்த மாணவர்களின் கவனம் சிதறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்ற காரணம்காட்டி அவரை மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நல்லெண்ணம் கொண்ட, அச்சமயத்தில் துறை முதல்வராக இருந்த ஐரோப்பியர் ஒருவர், வெகு நிதானமாக, ‘கவனம் சிதறக் கூடியவர்கள் படிக்க வரவேண்டியதில்லை, இந்த ஒரு மாணவி கற்றால் போதும்’ என்று உறுதியோடு சொல்லியிருக்கிறார். அந்த ஒரு பெண்ணின் மன உறுதி இன்று எத்தனையோ முத்துலட்சுமிகளை உருவாக்கியுள்ளது.
பெண்ணை சக்தியின் அம்சமாகப் பார்க்கும் நம் மண்ணில்தான் அவள் போகப் பொருளாக மட்டும் பார்க்கப்படும் கொடுமையும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் வழியாகத் தோன்றும் ஒரு ஆண், அப்பெண்ணை வெறும் உடலாக மட்டும் பார்க்கத் துணிவது மனிதமற்ற செயல். ஆயினும் தடைக்கற்கள் அனைத்தையும் படிக்கற்களாகக் கடந்து, வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருப்போரும் ஏராளம்.
சில காலம் முன்பு வரை திருமணம் ஆன பெண்கள் பணிக்குச் செல்வது பல காரணங்களினால் அரிதாகவே இருந்தது. ஆனால் இன்றைய பொருளாதார நிலையில் திருமணமாகாத பெண்கள் மட்டும் பணிக்குச் சென்று கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. குடும்ப வளர்ச்சி, அடிப்படை வாழ்வாதாரங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களுக்காக திருமணமான பெண்களும் வேலைக்குப்போக வேண்டிய சூழல் உருவாகிறது. தங்கள் கல்வி, வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் பரவலாக இருக்கின்றன. சில பெண்கள் குழுமங்களாகச் சேர்ந்து அதற்கான வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கும் வல்லமையும் பெற்றிருக்கிறார்கள். குடிசைத் தொழில் என்ற பெயரில் ஏற்றுமதிக்கு ஏற்றவாறு தரமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. அரசாங்கத் திட்டங்கள் மற்றும் வங்கியின் மூலம் கிடைக்கும் உதவிகள் போன்ற தேவையான பொது விசயங்களிலும் விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நம் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களில் பங்கு இன்று கணிசமாக உயர்ந்து வருவதைக் காண முடிகிறது.
மேலைநாட்டுப் பெண்களைப் போன்று நம் இந்தியப் பெண்கள் உடற்பயிற்சிக்குத் தேவையான முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற கூற்றிலும் உண்மை இருக்கிறது. இதற்கான நல்ல ஆரம்பங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் வாய்க்கப் பெற்றாலும், பணி மற்றும் குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் கூடும்போது தன்னுடைய உடல் நலம் என்பதற்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்மை. ஆனாலும் பொதுவான ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவைகள் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது ஆறுதலான விசயம். பண்டை காலத்திலிருந்து, சென்ற நூற்றாண்டு வரை பெண்கள் புகையிலை, சுருட்டு போன்ற ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் பழக்கங்கள் கொண்டிருந்தது, இன்று மிக மிக அரிதாகியுள்ளது. சில பின் தங்கிய கிராமங்களில் மட்டும் இது விதி விலக்கு. மேலைநாட்டு நாகரீகங்களான புகை பிடிப்பது, ஆணும், பெண்ணும் கலந்து நடனம் ஆடுவது போன்ற பழக்கங்கள் சில நவநாகரீக வட்டாரத்தில் தவிர்த்து, ஏனைய பெண்களின் நிலையில் சுய கட்டுப்பாட்டில் உள்ளது என்றே சொல்ல முடிகிறது. ஒரு காலத்தில் தனித்து இயங்கவே முடியாத நிலையில் இருந்தவர்கள் இன்று கடைவீதிக்குச் செல்வது, மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களுக்கும், தேவையான போது வெளியூர் பயணங்களும் செல்வதற்கும் தயக்கம் காட்டுவதில்லை. என்றாலும் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள் பெண்களை அச்சமூட்டத்தான் செய்கிறது. இதற்காக அரசாங்கம் இன்னும் முனைந்து திட்டங்கள் தீட்டவேண்டிய தேவையும் உள்ளது.
நம் தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்கு, நம் வருங்காலச் சந்ததியினர் அதைத் தொடரும் வகையில் காலத்திற்கு ஏற்ற அர்த்தமுள்ள நவீனத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்கும் வல்லமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். காரணம் இன்றைய நாகரீக உலகில், சுத்தம், சுகாதாரம், என அனைத்தையும் பேண வேண்டியதற்கான முக்கியத்துவமும் அதிகமாகிறது. காலத்திற்கேற்ற சில மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டிய அவசியமும் ஏற்படத்தான் செய்கிறது. அதனை உணர்ந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதும் இன்றைய தேவை.
ஈரோடு தந்தை பெரியார் அவர்கள், மறுமணம் என்கின்ற, விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய மிகப் பெரிய தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தினார். வெறும் உபதேசமாக மட்டும் இல்லாமல் தானே முன்னோடியாக இருந்து, தம் சிறு வயதிலேயே, தம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிற்கு மறுமணம் செய்துவைத்து வழிகாட்டினார். திருமணத்திற்குப் பிறகும் அப்பெண்னிற்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும் வகையில், ஈரோடு தங்கவேலனார் போன்றோரின் முயற்சியால் கன்னிகாதான முறையும் ஒழிக்கப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியால், இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் இலட்சுமி எனப்படும், இலட்சுமி சேகல் போன்ற ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களுடைய பங்களிப்பைக் கொண்டு வருகின்றனர்.




ஒரு காலத்தில் அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடிக்கொண்டிருந்தது. ஆனால் இன்று ஒபாமா அமெரிக்காவின் தலைமைப் பதவியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இதிலும் ஒரு பெண்ணின் பங்களிப்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா…. ஆம், அப்பெண் ‘ரோசா பார்க்ஸ்’ என்ற கருப்பினப் பெண். அந்நாட்களில் கருப்பினத்தவருக்கென்று பேருந்தில் கூட தனிப்பட்ட இருக்கைகளே ஒதுக்கப்பட்டு வந்தன. ஒரு முறை ரோசா பார்க்ஸ், பேருந்தில் கருப்பின மக்களுக்கான இருக்கைகள் காலியாக இல்லாததால், மற்ற இருக்கையில் சென்று அமர்ந்திருக்கிறார். ஓட்டுனரோ அவரை அந்த இருக்கையில் அமர அனுமதிக்காமல் தகராறு செய்திருக்கிறார். அப்பெண்ணும் பிடிவாதமாக இருந்ததால், ஓட்டுநர் பேருந்தை காவல் நிலையத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். ரோசா சிறை வைக்கப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் தலைமையில் போராட்டம் வலுப்பெற்றது. முன்னூற்றி என்பத்தி இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. அந்நாட்கள் முழுவதும் கருப்பினத்தவர் பேருந்துகளை புறக்கணிக்கின்றனர். ஆனால், அதன் பிறகு பெரும் மாற்றம் ஏற்படுத்திய இப்போராட்டம், ஒபாமா அவர்களை தலைமைப் பொறுப்பேற்பதில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்த சம்பவம் இது. 1996இல் குடியரசுத் தலைவர் கிளிண்டனிடம், ஜனாதிபதியின் சுதந்திரப் பதக்கமும், 1999இல் காங்கிரசு தங்கப் பதக்கமும் பெற்றார். ஆயினும் தம் இறுதிக் காலங்களிலும் இனவெறி முழுமையாகத் தீரவில்லையே என்ற வேதனையிலேயே இருந்தார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மரியாதையான, தலைநகரில் இறுதி ஓய்விற்கான இட ஒதுக்கீடு பெற்ற, அமெரிக்க வரலாற்றின் ஒரே பெண் மற்றும் இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கர் ரோசா பார்க்ஸ் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்வோ வாகனமோ சுமை அதிகமானால் சக்கரம் மண்ணில் புதையத்தான் செய்யும். சுமைகள் ஏறாமல் தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ளும் துணிவும் மகளிருக்கு அவசியமாகிறது. சில அற்ப விசயங்களுக்காகவும், அடுத்தவரின் அனாவசியமான விமர்சனங்களுக்கு செவிசாய்ப்பதன் மூலமாகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் அவலங்களும் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற சிறிய பின்னடைவுகளைத் தாண்டி வரும் கலையை பயில வேண்டும். நம்முடைய சின்னச் சின்ன சாதனைகளையும் பட்டியலிட்டு, அதை முன்னுதாரணமாகக்கொண்டு இன்னும் பெரிய சாதனைகளைச் செய்ய முனைய வேண்டும். நல்ல விசயங்கள் எவரிடம் இருந்தாலும் அதைக் கற்கத் தயங்கக்கூடாது. உலகில் அனைத்தும் அறிந்த மேதாவிகள் என்று எவரும் இலர் என்பதே நிதர்சனம் இல்லையா!
படங்களுக்கு நன்றி.

2 comments:

  1. இன்னும் மாற வேண்டும்... மாற்ற வேண்டும்... என்பதை அருமையாக சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //நம்முடைய சின்னச் சின்ன சாதனைகளையும் பட்டியலிட்டு, அதை முன்னுதாரணமாகக்கொண்டு இன்னும் பெரிய சாதனைகளைச் செய்ய முனைய வேண்டும். நல்ல விசயங்கள் எவரிடம் இருந்தாலும் அதைக் கற்கத் தயங்கக்கூடாது. உலகில் அனைத்தும் அறிந்த மேதாவிகள் என்று எவரும் இலர் என்பதே நிதர்சனம் இல்லையா!//

    தடைக்கற்களும் படிக்கற்களே!

    என்ற தலைப்புக்கு ஏற்ற இந்த இறுதி வரிகள் மிகவும் அருமை.

    சர்வ தேச மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...