Saturday, July 25, 2015

எத்தனை நாளுக்கோ?


பவள சங்கரி


ஆமாம்
தாங்கொணா துயரம்தான்
தீர்ந்துபோவதை
தவிர்க்க முடியவில்லைதான்
கண்ணீர்மல்க
காலிசெய்வதை ஏனென்று
கேட்காதீர்கள்
தீர்ந்த கணக்கின் சொச்சமும்
முற்றும் தீரும் சாபம்
கடந்தவை கரைசேர வாய்ப்பில்லை
விசும்பலை மூடிமறைக்க
காரணமுமில்லை.
சிறகொடிந்த புள்ளிற்கு சீவன்
சிதறிய சிற்பமாயினும்
மனமறிந்து வீசியெறியும் துரோகமும்
 தவிர்க்க முடியாதே?
நம் எல்லோருக்கும் இச்சுவை
வேண்டித்தானே இருக்கிறது?
தொட்டுக்கொள்ளவும் கட்டு
கட்டிச்செல்லவும்
சப்புக்கொட்டவும் குளிரூட்டவும்
குறைசொல்லவும் காலமுண்டு.
எத்தனை சொன்னாலும்
எப்படியிருந்தாலும்
இதற்கிணை வையத்திலில்லை
இனியொருநாளும் இருக்கப்போவதுமில்லை.
இருப்பதை யுகத்துக்கும் பாதுகாக்கவும்
சாதனமேதுமில்லை.
பட்டுக்கரம் பரிவுடன் பகிர்ந்தளித்த
மாதா ஊட்டாத சோறிது!
விட்டுத்தர வினைதீருமா
சுட்டபழத்தின் சுவையின்னும்
எத்தனை நாளுக்கோ?
கட்டிக்காக்க காவலன் யாருமுளரோ?
வெட்டவெளியில் காய்ந்தாலும்
சுக்காகி சூனியமாகிடுமே?
எத்தைத்தின்றும் பித்தம் தீரப்போவதில்லை
வித்தையேதும் கற்றதுமில்லை.
காயமே இது பொய்யடா வெறும்
காற்றடைத்த பையடா எனும்போது
கட்டிக்காக்கும் இப்பூவுடலே ஓர்நாள்
புழுத்துப் போகுமெனும்போது
தாய்ப்பாசம் மட்டுமே உயிர்மூச்சானவள்
ஓர்நாள் அதையும் துறந்து
பூவுலகம் செல்லும் பயணகதியில்
பரிவுடனே எமக்காக போட்டுவைத்த
பச்சை மாவடுவும் மாவிஞ்சியும்
பச்சைமிளகும் மாவளிங்கிழங்கும் மட்டும்
பரலோகம் ஏகாமல் நித்தியமாய்
வாழுவது சாத்தியமா என்ன?
குக்கரின் கூக்குரல்தாண்டி எங்கோ
சுற்றும் எண்ணங்கள்!
அம்மா.. அம்மா.. என்னம்மா ஆச்சு?
எந்த உலகில் மிதக்கிறாய்
சிலிர்த்து எழ திகைத்து நகர
எல்லாமே யதார்த்தமாச்சு!
ஆ..  ஆ... சூடுபட்ட பூனைதான்!


1 comment:

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...